Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 5

5

 

போவதாகவே முடிவெடுத்து விட்டாயா …? ” தன் பின்னால் கேட்ட சௌதாமினியின் குரலுக்கு பதில் சொல்ல விருப்பமற்று தான் சென்னைக்கு கொண்டு போக நினைக்கும் துணிகளை பீரோவிலிருந்து எடுத்து வைத்தாள் ஜீவிதா .இவ்வளவு நேரமாக தந்தையை சமாதானம் செய்திருக்கிறாள் .முழுவதும் சமாதானமடையாமலேயேதான் புலம்பியபடியே அப்போதுதான் அறையை விட்டு வெளியேறி இருந்தார் சபாபதி .இப்போது இவள் வந்து நிற்கிறாள் .

” நான்கு வருடமாக எங்களை தண்டித்து விட்டாய் பாப்பு .இன்னமும் ஏன் சோதிக்கிறாய் …? “




” நீங்கள் ஆசையாக என்னை டாக்டருக்கு படிக்க வைத்தீர்களே அம்மா .அந்த படிப்பிற்குரிய வேலை சென்னையில்தானே இருக்கிறது . நான் அங்கேதானே போகவேண்டும் …” குத்திக் காட்டினாள் .

” நிச்சயமாக ஆசையாகத்தானடி படிக்க வைத்தேன் .தன் பிள்ளையை டாக்டராக்க வேண்டுமென ஒரு தாய் அக்கறைப்படுவதில்  தவறு இருக்கிறதா …? “

” அதே  அக்கறை தஞ்சம் தேடி வந்த நாத்தனார் பையனிடம் இல்லாமல் போனது ஏனம்மா …? ” இது நெடுநாட்களாக ஜீவிதாவை உறுத்திக் கொண்டிருந்த கேள்வி .இன்று கேட்டுவிட்டாள் .

அன்று சௌதாஈமினி சிவபாலனின் டாக்டர் படிப்பிற்கு தடை சொல்லாமல் இருந்திருந்தால் அவன் டாக்டராகி இருப்பான் .ஜீவிதாவும் அதே படிப்பை படித்து டாக்டராகி இருப்பாள் .டாக்டருக்கு டாக்டர் இணை என இருவரும் திருமணம் செய்து கொண்டிருப்பார்கள் .அதனை கெடுத்தவள் சௌதாமினிதானே .அவள் சிவபாலனை கீழ்படியில் இருத்திவிட்டு , தன் மகளை மேல்படியில் சிம்மாசனம் அமைத்து அமர வைக்க நினைத்தாள் .எப்போதுமே சிவபாலன் தன் மகளை ” ஆ” வென ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்க வேண்டுமென நினைத்தாள் .

அப்போதுதானே இருவருக்கும் திருமணம் முடித்து விட வேண்டுமென்ற சபாபதி , சௌந்தரத்தின் ஆசைகள் நடக்காமல் போகும் ….இதனை மனதில் வைத்தே சிவபாலன் மிக ஆசைப்பட்ட டாக்டர் படிப்பு அவனுக்கு கிடைக்காமல் தடுத்தாள் .அதனை மகள் சுட்டிக்காட்டவும் திணறினாள்  “நடந்த்தை மறக்க மாட்டாயா பாப்பு …”

” எதையும் மறக்க முடியலையேம்மா ….” அரற்றிய மகளின் தீனக்குரலில் தவித்தது தாய்மனம் .பாவி இந்த அளவு அவன் மீது அன்பு வைத்திருப்பாளென தெரியாமல் போனேனே.இவர்கள் இருவரின் திருமணத்தை பற்றியே அடிக்கடி பேசிய மாமியார் , கணவன் மீது முழுக்கவனத்தையும் வைத்திருந்தவள் மகளின் மன நெகிழ்வை கவனிக்காமல் விட்டு விட்டாளே .

” இங்கே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துடுவேன்மா …” சௌதாமினி பதறி வந்து மகளை அணைத்துக் கொண்டாள் .




” வேண்டாம் பாப்பு .நீ சென்னை போயிடு .செய்த தவறுக்கான தண்டனையை நான் மட்டுமே அனுபவித்து விட்டு போகிறேன் …” அழுத்தமாய் அணைத்திருந்த அன்னையை உதறவில்லையே தவிர , அவளது அணைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையென தன் உடல் மொழியில் உணர்த்தினாள் ஜீவிதா .

பெருமூச்சு டன் மகளை விட்டு விலகியவள் ” சென்னையில்  எங்கே தங்க போகிறாய் …? வேலை எங்கே …? இடத்தை சொல்லு .நானும் அப்பாவும் வந்து பார்த்து விட்டுத்தான் உன்னை அங்கே விடுவோம் .இவ்வளவு நாட்களாக காலேஜ் ஹாஸ்டலில் இருந்தாய் .பிரச்சனை இல்லாமல் போனது .இனி உன்னை அப்படி உன் இஷ்டம் போல் விடமுடியாது.அத்தோடு முன்பு போல் உன்னை பார்க்க வரக்கூடாது என்ற கட்டளையெல்லாம் செல்லாது .நீ வரவில்லையென்றாலும் நாங்கள் உன்னை பார்க்க வந்து கொண்டுதான் இருப்போம் …” உடனடியாக அதிர்விலிருந்து வெளிவந்து சட சடவென அடுத்த வேலைகளை யோசிக்க ஆரம்பித்த தாயை சிறு பொறாமையாக பார்த்தாள் .இது போல் தன்னால் பட்டென எதிலிருந்தும் வெளி வர முடியவில்லையே …

” இன்னமும் நானே முடிவு செய்யவில்லை. முதலில் ஹாஸ்டலில் தங்க போகிறேன் .பிறகுதான் வேலையை யோசிக்க வேண்டும் ….” சொன்னபடியே ஜீவிதா இன்னமும் கைலாஷின் ஹாஸ்பிடலில் சேர்வது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை .அவனுக்கும் எந்த தகவலும் தரவில்லை .

” சரி அந்த ஹாஸ்டலுக்கு நாங்களும் கூட வந்து உன்னை விட்டு விட்டு வருகிறோம் ….” சௌதாமினி ஙெளியேறினாள் .

கீழே ஹாலில் தளர்ந்து அமர்ந்திருந்த கணவரை பார்த்தாள் .மகளின் பிரிவு தந்த தளர்வு இது. அம்மாவின். மரணத்திற்கு பிறகு , ஜீவிதா வீட்டிற்கு வராமல் ஹாஸ்டலில் தங்கி விட்ட பிறகு மனைவியிடம் பேசுவதையே விட்டிருந்தார் சபாபதி .மகளை நினைத்தபடியே அந்த பெரிய வீட்டில் ஆளுக்கொரு மூலையில் வாழ பழகியிருந்தனர் இருவரும் .இப்போது மீண்டும் அதே நிலை ..காலவரையற்ற நீட்டலுடன் .

” இங்கே இருந்தால் செத்துடுவேங்கிறா …இதற்காகவா  அவளை  பெற்று , அருமையாக வளர்த்தோம் …? அவள் எண்ணம் போல் கொஞ்ச நாள் அங்கே இருக்கட்டும் .பிறகு அவளுக்கு நல்ல இடம் பார்த்து திருமணம் முடித்து விட்டால் சரியாகி விடும் ….” தூணில் சாய்ந்தபடி எதிர்புற சுவரை பார்த்தபடி பேசி முடித்தாள் .




” ஆமாம் நல்ல இடம் பார்த்து திருமணத்தை முடிக்க வேண்டியதுதான் . அதுதானே உன்னுடைய வாழ்க்கை லட்சியம் ….நீ பார்க்கும் இடத்திற்கு உன் மகள் கழுத்தை நீட்ட வேண்டுமென்ற உன் ஆசை மட்டும் நிறைவேற கூடி வருகிறது பாரேன் .சனியன் ….” வசவுடன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு சபாபதி வெளியேற அழக் கூட தோணாமல் உறைந்து நின்றாள் சௌதாமினி .

இனி கணவன் , மகளென பழைய கலகல வாழ்வு தனக்கு சாத்தியமா …துயரத்துடன் அந்த தூணிற்கடியிலேயே சரிந து உட்கார்ந்து விட்டாள் .அன்றைய இரவு வெறுப்பான இருள் சூழ்ந்து அந்த வீட்டினுள் பரவிக் கிடந்த்து .மாறாக பளீர் வெளிச்சமும் , சிலீர் உற்சாகமுமாக விளங்கிய பக்கத்து வீட்டை வெறித்து பார்த்தபடி தன் அறை ஜன்னலில் நின்றாள் ஜீவிதா .

அன்று கோவிலில் குடும்பத்தோடு அவனை பார்த்தது நினைவில் பூரானாய் ஊர்ந்த்து . தரிசனத்தை முடித்து விட்டு கோவிலிலிருந்து ஜீவிதாவும் , ஜெயந்தியும் வெளியேறிய போது , வாசலில் அந்த பெரிய பாரின் கார் வந்து நின்றது .படபடவென இறங்கிய டிரைவர் முதலாளிக்கு கார் கதவை திறந்து விட அரக்கு நிற புல் ஹேன்ட் சர்ட்டும் , க்ரீம் நிற பேன்ட்டுமாக இறங்கிய சிவபாலன் அடர்ந்த தனது தலை முடியை கோதிக்கொண்டான் . பிறகு பின் சீட் கதவை திறந்து விட்டான் .அவன் மனைவி சுகன்யா இறங்க கை கொடுத்தான் . கீழிறங்கி நின்ற பின்னும் அவன் கைகளை விடாமல் பற்றியபடி நின்றாள் சுகன்யா .

காரின் மறுபக்கத்திலிருந்து சசிகலா குழந்தையுடன் இறங்கி வந்தாள் .போகலாமென கோவில் பக்கம் அவன் கை காட்ட இன்னமும் அவன் கையை விடாமலேயே நடக்க துவங்கிய சுகன்யா  கல் தட்டியதாலே என்னவோ சிறிது தடுமாற , சிவபாலன் ஆதரவாக மனைவியின் தோள் அணைக்க …அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் ஓடி வந்து தன் காருக்குள் விழுந்தாள் ஜீவிதா .

நெற்றியை பற்றி குனிந்தபடி  வேக மூச்சுக்களெடுத்துக் கொண்டிருந்த ஜீவிதாவை கொஞ்ச நேரம் அப்படியே விட்ட ஜெயந்தி , பிறகு பக்கத்தில் இருந்த  கடையிலிருந்து ஒரு சோடா வாங்கி வந்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தாள் .




” நாம் சென்னை போயிடலாம்கா ….”

ஜீவிதாவிற்கும் அதுவே உத்தமென்று பட்டது .இதே ஊருக்குள் இருந்து கொண்டு இவன் அவன் பொண்டாட்டி , பிள்ளையோடு கொஞ்சி குலவி குடும்பம் நடத்துவதை பார்க்கும் தைரியம் தனக்கில்லை எனபதை அவள் உணர்ந்தாள் .உடனடியாக சென்னை செல்லும் முடிவிற்கு வந்தாள் .

” அம்மா …அம்மா ….” மெல்லியதாக எங்கோ யாரோ கூப்பிடும் குரல் கேட்க , உணர்வின்றி அதை கவனியாமல் இருந்தவள் திடுமென காலிங்பெல் அலற திடுக்கிட்டாள் .அந்த நடு இரவில் அந்த திடுக் சத்தம் உடலெங்கும் ஒரு அதிர்வை செலுத்த , ஏதோ விபரீதமென மனம் சொல்ல அவசரமாக கீழே ஓடிவந்தாள் .அதற்குள் சபாபதி வாசல் கதவை திறந்திருக்க வாசல் முன் சிறு கும்பல் ஒன்று நின்றது .

அந்த கூட்டத்தின் நடுவே ஒரு பதினேழு வயது மதிக்கத்தக்க இளம்பெண் மயங்கி கிடந்தாள் .அவள் வாயில் எச்சில் நுரையாய் வழிந்திருப்பதை பார்க்கவுமே நடந்த்தை ஊகித்த ஜீவிதா வேகமாக அந்த பெண்ணை நெருங்கி நாடி பார்க்க ஆரம்பித்தாள் .

” பாவி மக …ஒரு வார்த்தை அதிகமா பேசிட்டேன்னு அரளி விதையை அரைச்சு முழுங்கிட்டாம்மா .என் பிள்ளையை காப்பாத்துங்கம்மா …” காலை பற்றிய அந்த பெண்ணின் தாயை அதட்டி விலக்கினாள் .

” இப்போ வரை ஹார்ட் பீட் சரியாக இருந்த்துக்கா .இப்போதான் குறைய ஆரம்பிச்சுருக்கு .நான் வர்ற வழியிலும் செக் பண்ணிட்டுத்தான் வந்தேன் ….” ஜெயந்தி அவர்களுடன் வந்திருந்தாள் ்அவள்தான் இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும் .

கும்பலாக சூழ்ந்திருந்தவர்களை சத்தம் போட்டு விரட்டிய ஜெயந்தி , வீட்டிற்குள் போய் ஜீவிதாவின் மெடிக்கல் கிட்டை எடுத்து வந்தாள் .இருவருமாக உள்ளறை பெஞ்சில் அந்த பெண்ணை படுக்க வைத்து டரீட்மென்டை ஆரம்பித்தனர் .மூன்று மணி நேர தீவிர போராட்டத்திற்கு பின் அந்த பெண்ணின் வயிற்றிலிருந்த விசத்தை முழுவதுமாக வெளித் தள்ளினர் .மெல்ல அவள் கண் திறந்தாள் .

மீண்டும் அந்த பெண்ணின் தாயும் , தந்தையும் கால்களில் விழ , அவர்களை தடுத்து எழுப்பி மகளை ஒழுங்காக கவனிக்கும்படி அதட்டி அனுப்பி வைத்தாள் .உடல் அலுப்பும் , மன அயர்வுமாக படுக்கையில் சாய்ந்த ஜீவிதாவிற்கு உறக்கம் இப்போது சுகமாக வந்த்து .இது போன்ற உயிரை காக்கும் தருணங்கள் ஒரு டாக்டரின் வாழ்வில் மகத்தானவை .தான் படித்த படிப்பின் அருமையை அனுபவித்தபடி இதழ்களில் மெல்லிய புன்னகை நெளிய தூங்கிப் போனாள் ஜீவிதா .

———————–

” நீங்க இந்த ஊரை விட்டு போவதை அனுமதிக்க மாட்டோம்மா ….” உறுதியாக கூறி நின்ற அந்த ஊர் பெரிய மனிதர்களை அலட்சியமாக பார்த்தாள் ஜீவிதா .அந்த ஊர் பச்சாயத்து போர்டு தலைவரும் , பிரசிடென்டும் ஊர் மாரியம்மன் கோவிலில் அவசர கூட்டமொன்றை கூட்டியிருந்தனர் .ஜிவிதா இந்த ஊரிலேயே டாக்டராக இருக்க வேண்டுமாம் .சரியான டாக்டர் இல்லாத ஊரில் அந்த ஊரில் பிறந்து வளர்ந்த அவள் இருக்காவிட்டால் வேறு எந்த டாக்டர் வருவார்கள் …என நியாயம் கேட்டனர் .




முந்திரி தோப்பிலும் , சிமெண்ட் ஆலைகளிலும் வேலை செய்யும் அந்த எளிய மக்களோ , அவளை விட்டால் தங்களுக்கு வேறு கதியில்லை என்றனர் .அவள் இங்கேயே க்ளினிக் ஆரம்பித்தே ஆக வேண்டுமென மறைமுகமாக மிரட்டினர் .

இதில் அவள் வீட்டு ஆட்களின் பங்கும் இருக்கிறது .அவள் மெடிக்கலில் சேர்ந்த முதல் வருடத்திலிருந்தே அவள் இதே ஊருக்கே டாக்டராக வரப் போகிறாளென அவள் பாட்டி , அப்பா , சிவபாலன் என அனைவரும் பரப்பி வைத்திருந்தனர் .அவளுக்கான க்ளினிக்காக சபாபதி தனது தோட்ட வீட்டை கூட அப்போதே தயார் படுத்தி  வேறு வைத்திருந்தார் .

இப்போது முதல் நாளிரவு போகப் போன உயிரை ஜீவிதா தடுத்து காப்பாற்றியதும் அவளது படிப்பின் வல்லமையை தெரிந்து கொண ட ஊர் ஜனங்கள் அவளை சென்னைக்கு ஏற்றி விட தயாராக இல்லை .அவர்களை பொருட்படுத்த ஜீவிதாவும் தயாரில்லை .அவர்கள் அனைவரின் விதம் விதமான கேள்விகளுக்கும் , கோரிக்கைகளுக்கும் அவளது ஒரே பதில் முடியாது என்பதாகத்தான் இருந்த்து .

” போகட்டும் விடுங்க ….” திடுமென தனித்து ஒலித்த குரல் உடலில் ஊடுறவ திரும்பிப் பார்த்தாள் .அவன்தான் சிவபாலன் .அப்போதுதான் வந்து கொண்டிருந்தான் .அவனை பார்த்ததுமே ஊர் பெரிய மனிதர்கள் கூட எழுந்து வணங்கி வரவேற்றதை ஆச்சரியமாக பார்த்தவள் …ஓ …இப்போது இவனும் இந்த இந்த ஊரில் பெரிய மனுசனோ …கசப்பாய் நினைத்தாள் .

வேக நடையுடன் அவளருகில் வந்து நின்றவன் ” வேறு ஒரு டாக்டரம்மாவை இங்கே வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். அவர்கள் சாதாரண எம்.பி.பி.எஸ் கிடையாது எம் .எஸ் படித்தவர்கள் .அதாவது இந்த அம்மாவை விட அதிகமாக படித்தவர்கள. .அதனால் நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் . அடுத்த வாரமே அந்த டாக்டரம்மா வந்து விடுவார்கள் .அதனால் …இவர்கள் போகட்டும்  …” என்றவன் இவள் புறம் குனிந்து …

” ஊரை விட்டு ஓடிடு …இங்கே இருக்காதே ….” குரல் தாழ்த்தி உறுமினான் .

தன்மானம் உறுத்த நிமிர்ந்த ஜீவிதா ” நான் இங்கேதான் இருக்க போகிறேன் …” ஊராரிடம் அறிவித்தாள் .

What’s your Reaction?
+1
7
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!