Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 4

4

 

குட்டை குட்டையாய் பரந்து விரிந்து குற்றுச்செடி போல் தோற்றம் தந்த அந்த முந்திரி மரங்களை ரசித்தபடி காரை செலுத்திக் கொண்டிருந்தாள் ஜீவிதா .ஒவ்வொரு மரத்திலும் சிவப்பாய் கொத்து கொத்தாய் காய்கள் தொங்கியபடி இருந்தன .சில மரங்களில் பழுக்காத காய்கள் பச்சையாகவும் , பழுக்க தொடங்கியிருப்பவை பசும் மஞ்சள் கலந்தும் இருந்தன .காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினாள் .முந்திரி தோப்புக்குள் நுழைந்தவள் மெல்ல இறங்கி மரங்களை பார்த்தபடி நடக்க துவங்கினாள் .

இந்த வருடம் வெயில் அதிகமானதால் முந்திரி விளைச்சலும் அதிகமாகவே இருந்த்து . செம்மண் தரையும் , குறைந்த தண்ணீரும் , வெயிலுமே இந்த முந்திரி விளைச்சலுக்கான தேவைகள் .கொத்து கொத்தாய் சிவந்து தொங்கிய பழங்கள் ஆசையூட்ட கையுயர்த்தி ஒரு பழத்தை பறித்தாள் . முந்திரியாய் நீட்டி நின்ற கொட்டையை பிய்த்தாள் . இதை இப்படியே சாப்பிட முடியாதே ….உடைக்க வேண்டுமே




.முந்திரிக்கொட்டையை உடைத்து பிரிப்பது கடினமான வேலை .எப்படி உடைக்க கண்களால் சுற்றுமுற்றும் அலசியபோது , வெண்மையாய் முத்துக்கள் போல் முழுதாகவும் , உடைத்தும் இருந்த முந்திரிப்பருப்புகள் இருந்த சிறு கிண்ணம் அவள் முன் நீட்டப்பட்டது .

” இதை சாப்பிடுங்க்க்கா ….” நீட்டியபடி நின்றவள் ஜெயந்தி .

” ஏய் ஜெயந்தி இங்கே என்ன பண்ற …? ” ஆவலுடன் முழு பருப்பு ஒன்றை எடுத்து வாயில் போட்டு மென்று கண் மூடி ” ம் …டெலிசியஸ் ” என்றாள் .

” பருப்பு உடைச்சிட்டிருக்கேன்கா .அம்மா கூட வந்தேன் …”

” ம் …ஒரு நர்ஸ் சிரிஞ்சை விட்டுட்டு சுத்தியலை எடுத்து பருப்பு உடைக்கிறதா …? “

” இதுதானேக்கா எங்க பேமிலி ஜாப் .இந்த நர்ஸ் பதவி …உங்களை மாதிரி உதவி பண்ணுற மனநிலை உள்ளவங்களால் வந்த்து …”

” ஜெயந்தி …சும்மா ரெண்டு தடவை உனக்கு டெர்ம் பீஸ் கட்டினதுக்காக என்னை அன்னை தெரசா ரேஞ்சுக்கு பேசாதடி ….” செல்ல மாய் கடிந்து கொண்டாள் .

ஜெயந்தியின் தாய் , தந்தை ஜீவிதாவின் முந்திரி தோப்பில் வேலை செய்பவர்கள் .ஜெயந்தியின் படிப்பு செலவை ஜீவிதா ஏற்றுக்கொண்டதை அடிக்கடி நன்றியுடன் நினைவு கூர்வாள் அவள் .

” உன் அம்மா எங்கே ஜெய் ….? பார்த்து ரொம்ப நாளாச்சு . ஒரு ஹாய் சொல்லி வைக்கிறேன் …”

ஜெயந்தி முகம் மலர்ந்தாள் .முதலாளியம்மா தொழிலாளியை சந்திக்க ஆசைப்பட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சிதானே .

” அங்கே கொட்டை உடைச்சிட்டிருக்காங்க்க்கா .இருங்க கூட்டிட்டு வர்றேன் …”

” இரு ..்இரு .நானே வர்றேன் .எல்லோரையும் பார்த்த மாதிரி இருக்குமில்லை …”

வெயிலுக்காக போடப்பட்டிருந்த அந்த தகர ஷெட் இன்னமும் அதிக வெக்கையாக இருந்த்து .ஒரு புறம் இரும்பு வாணலியில் வறுபட்டுக் கொண்டிருந்த கொட்டைகள் வேறு இன்னமும் அந்த இடத்திறகு அனலூட்டிக் கொண்டிருந்தன .அந்த வெப்பத்தினுள் அமர்ந்தபடி வறுத்து தட்டப்பட்டிருந்த கொட்டைகளை சிறு சுத்தியல் வைத்து லேசாக தட்டி , லாவகமாக பருப்பை பிரித்தெடுத்துக் கொண்டிருந்தனர் நிறைய பெண்கள் .




திடுமென உள்ளே நுழைந்த முதலாளியம்மாவை பார்த்ததும் பதறி எழுந்த பெண்களை ” உட்காருங்க .வேலையை பாருங்க .நான் சும்மா உங்களை பார்க்கலாம்னுதான் வந்தேன் …” அமைதிப்படுத்தினாள் ஜீவிதா .

நல்லாயிருக்கீங்களீம்மா …இந்தப் பக்கமே வராமல் இருந்துட்டீங்களே …எங்களை மறந்துட்டீங்களே …கலவையாய் ஒலித்த நல விசாரிப்புகளுக்கு பொறுமையாய் பதில் சொன்னாள் .

அந்த வருட விளைச்சல் , பழங்களின் விலை விபரம் என சில தொழில் விசாரணைகள் செய்தாள் .பாட்டி சௌந்தரம் அடிக்கடி வந்து இந்த முந்திரி தோப்பை பார்வையிடுவார் .அப்போதெல்லாம் ஜீவிதாவும் அவருடன் ஒட்டிக்கொண்டு இங்கே வந்திருக்கிறாள் .சிவபாலன் வந்த பிறகு அவனும் இவர்களுடன் வருவான் .

” நல்லா பார்த்துக்கோடா சிவா . இதெல்லாம் உனக்கு வந்து சேரப் போற சொத்துக்கள்தான் .இப்போதிருந்தே இதை பராமரிக்கிற முறையை தெரிந்துக்கோ …” சௌந்தரம் அப்போதே பேரனை அந்த முந்திரி தோப்புகளுக்கு சொந்தக்காரன் ஆக்கினாள் .

” இது ஜீவாவோட சொத்துக்கள் பாட்டி …” சிவபாலனின் பதிலுக்கு …

” இருக்கட்டுமே .அதில் உனக்கு உரிமையில்லையா என்ன …? ஏன்டா பாப்பு உன் சொத்தை உன் அத்தானுக்கு தரமாட்டாயா நீ …? ” சௌந்தரம் ஜீவிதாவிடம் கேட்பாள் .

” நம்ம பாலாதானே பாட்டி .தருவேனே …” பாட்டி , பேரன் பேச்சுக்களின் உள்ளர்த்தம் புரியாமல் குழந்தையாய் பேசுவாள் ஜீவிதா .கை நிறைய முந்திரி பருப்புகள் இருக்கும் .வாய் அசை போட்டபடி இருக்கும் .

சிவா என்று சொல்லாதே என சௌந்தரம் சொல்ல , அப்போ பாலான்னு கூப்பிடுறேன் என தானாகவே அவனுக்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டாள் ஜீவிதா.

சிவபாலனை அத்தான் என கூப்பிடாதே என சௌதாமினி அவளுக்கு புகட்டி வைத்திருந்தாள் . மகளுக்கு அப்படி ஒரு உறவுமுறையாக சிவபாலன் வருவதை அவள் விரும்பவில்லை .அம்மாவை எதிர்க்க முடியாமல் …அதே சமயம் சிவபாலனை தள்ளவும் முடியாமல் குழந்தைத்தனமாக இந்த முடிவை எடுத்திருந்தாள் ஜீவிதா .

வயதுக்கான மரியாதை கூட இல்லாமல் அதென்ன முகத்திற்கு நேராக பெயர் சொல்வது




…சௌந்தரத்தின் ஆட்சேபத்தை சிவபாலன் அடக்கினான் .” இருக்கட்டும் பாட்டி .என்னை இதுவரை யாரும் இப்படி அழைத்ததில்லை .இந்த பெயர் எனக்கு பிடித்திருக்கிறது .ஜீவா அப்படியே கூப்பிட்ட்டும் …” என முடித்துவிட்டான் .சௌதாமினி மகள் அவனை பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்த திருப்தியோடு விலகிவிட்டாள் .

” எவ்வளவுதான் தின்பாய் போதும் .வயிறு வலிக்க போகிறது …” அடுத்து கொத்தாய் ஒரு கை முந்திரியை அள்ளியவளை அதட்டினான் சிவபாலன் .

” பாருங்க பாட்டி இந்த பாலாவை ..என்னை தின்க விட மாட்டேங்கிறார் …”

” இப்படியே தின்னுட்டே இருந்தீன்னா பலூன் மாதிரி பெரிசாயிடுவ …” அவன் கைகளை விரித்து காட்ட , ஜீவிதாவிற்கு அழுகை வர ஆரம்பித்து விட்டது .சும்மாவே அவள் உறவினர்களால் குண்டு பெண் என மறைமுகமாக சொல்லப்பட்டு வருபவள் .அவளென்ன செய்வாள் …சௌந்தரமும் , சௌதாமினியும் , சபாபதியுமாக ஒரே செல்ல பெண்ணென அவளுக்கு வெண்ணெயும் , நெய்யுமாக கரைத்து ஊற்றி வளர்த்து வந்தார்கள் .அதனால. திமுதிமுவென வளர்ந்திருந்தாலும் …இன்னமும் குழந்தை மனதுடன்தான் இருந்தாள் .

” அவளை விடுடா சிவா .சின்னபுள்ள சாப்பிட்டு போகட்டும் …” சௌந்தரம் சொல்ல …

” நீங்கதான் பாட்டி உங்க பேத்தியை கெடுத்து வச்சிருக்கீங்க .எப்படியும் இன்னைக்கு மட்டும் இரண்டு கிலோ பருப்பாவது தின்றிருப்பாள் ….” அன்றைய அவன் குரல் இப்போது போல் காதிற்குள் ஒலிக்க தன்னையறியாமல் மென்னகை பூக்க நின்றாள் ஜீவிதா .இந்த முந்திரி தோப்பு பழைய நினைவுகளை வெகுவாக கிளறுமென்று அவளுக்கு தெரியும் .வர வேண்டாமென்றுதான் அவளும் நினைத்திருந்தாள் .ஆனால் அவளது கார்தான் தானாக இந்த இடம் தேடி வந்துவிட்டது .

தோப்புகளை பார்க்க என தனக்கு தானே ஒரு சமாதானத்தை உருவாக்கிக் கொண்டாள்  .இப்போது  சபாபதி தினமும் வந்து பார்க்கும் தொழில்தான் .சௌதாமினி இது போல் இறங்கி வந்து தொழிலாளிகளிடம் பேசுவதையெல்லாம் கௌரவக் குறைச்சலாக கருதுவாள் .அதனால் இந்த வேலை செய்யும. பெண்களிடம் ஒரு பெண்ணாய் பேசுவது அவர்களுக்கு நல்லதாக இருக்குமென எண்ணினாள் .அது சரியே போல் சில பெண்கள் தங்கள் உடல் உபாதையை அவளிடம் பகிர்ந்து கொண்டனர் .அவள் டாக்டர் என்பதில் ஏக பெருமை அவர்களுக்கு .மிக இயல்பாக தங்கள் தாயிடம் போல் அவளிடம் தங்களது சில அந்தரங்க உடல் நோவுகளை சொல்லினர் .

ஜீவிதா ஜெயந்தியை உனக்கு இதெல்லாம் தெரியாதா …என்பது போல் பார்க்க …” தெரியும்கா .மருந்து சொல்லியிருக்கிறேன் .மாத்திரை தந்திருக்கிறேன் .என்னதானிருந்தாலும் நான் நரஸ் .நீங்கள் டாக்டர் .உங்கள் வைத்தியம் இவர்களுக்கு பெரிதாக தெரிகறது …” சிரித்தபடி சொன்னாள் .

அந்த பெண்களின. பெரும்பாலான உடல் உபாதைகளுக்கு சூடுதான் காரணமாக இருந்த்து .அந்த வெயிலில் இது போன்ற வெப்ப சூழ்நிலையில் உட்கார்ந்தவாறே வேலை செய்வதே உடல் நோய்களை கொடுத்தது .மிகத் தீவிர வலியிருந்தவர்களை வீட்டிற்கு வந்து பார்க்க சொன்னாள் .மற்றவர்களுக்கு மாத்திரை சொன்னாள் .அவர்களுக்கு மருந்துகளை அளிக்கும் பொறுப்பை ஜெயந்தியிடம் கொடுத்தாள் .




” ரெகுலர் ட்ரீட்மென்டில் இந்த பெயினெல்லாம்  சரியாகிவிடுமே ஜெயந்தி .இவர்கள் ஏன் ஹாஸ்பிடல் போக மாட்டேனென்கிறார்கள் …? ” இருவருமாக வெளியே வந்து பேசியபடி தோப்பிற்குள் நடந்தனர் .

” முதலில் பணம் வேணும்கா .அப்புறம் சோம்பேறித்தனம் …”

” நம் ஊரில் ஜி .ஹெச் உண்டே …அங்கே போகலாமே …? “

” அதுதான் சோம்பேறித்தனமென்றேன் .அத்தோடு அங்கே லேடி டாக்டர் கிடையாது .ஒரே ஒரு ஜென்ட்ஸ் டாக்டர்தான் .அவரிடம் இவர்கள் எப்படி பேசுவார்கள் .வேறு ஹாஸ்பிடல் போக வேண்டுமானால் பஸ்ஸேறி அரியலூர்தான் போகவேண்டும் .அதற்கு வருத்தப்பட்டுக் கொண்டு …இப்படியே உடல் வலியோடே ஓட்டி விடுகிறார்கள் …”

ஜீவிதா மௌனமாக நடந்தாள் .அந்த ஊரின் நிலைமை அதுதானென அவளுக்கு தெரியும் .அதனால்தான் அவளை டாக்டருக்கு படிக்க சொல்லி சிவபாலன் வற்புறுத்தினான் . படித்துவிட்டு இங்கேயே தொழிலும் பார்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தான் .அன்று அவன் சொன்னதினாலேயே ஒப்புக்கொள்ள கூடியதாய் இருந்த அந்த வேலை இன்று அவன் சொன்னதினாலேயே மறுக்க கூடியதாய் தோன்றியது .

” நீங்கள் அந்த டாக்டர் சாரிடம் வேலை பார்க்க போகப் போகிறீர்களா அக்கா …? “

” யாரிடம் …? “

” உங்க ப்ரெண்ட் …கைலாஷிடம் …”

கைலாஷ் … அந்த பெயரை இதோ இப்போது இவள் உச்சரிக்கும் வரை , ஜீவிதா மறந்து போயிருந்தாள் .

” சிவ..சிவா  …கைலாஷை மறந்தே போனேனே …வந்து சேர்ந்த்தை கூட அவனிடம் சொல்லவில்லை …அவனும் போன் பண்ணவில்லையே …”

”  என்னிடம் பேசினார் அக்கா .உங்களை விசாரித்தார் .இத்தனை நாட்கள் கழித்து உங்கள் உறவினர்களை சந்திக்க வந்திருக்கறீர்கள் .அதனால் உங்களை தொல்லை செய்ய விரும்பவில்லை .நீங்களாக போன் செய்யும் வரை காத்திருப்பதாக சொன்னார் ….”

” சரிதான் நம் ஊரிலும் என்னை வேவு பார்க்க உன்னை நியமித்துவிட்டானா …? “

” வேவு பார்ப்பது போல் இல்லை அக்கா .அவர் ரொம்ப நல்லவராக உங்கள் மேல் உண்மையான அக்கறை உள்ளவராக தெரிகிறார் அக்கா …”

” ம் ..தெரியும் ….”

” நீங்கள் அவரிடம் வேலை பார்க்க போகிறீர்களா அக்கா …? “

,” அப்படி உன்னை தூது அனுப்பினானா அவன் …? “

” அவர் சொன்னாலும் நான் அதை செய்வேனா அக்கா ்எனக்கு உங்களை தெரியாதா …? ” ஜெயந்தியின் குரலில் மெல்லிய வருத்தம் தெரிந்த்து .

” ஏய் ஜெய் நான் சும்மா சொன்னேன் .உன்னை தெரியாதா எனக்கு ..? “

” நம் ஊருக்கு ஒரு லேடி டாக்டர் ரொம்ப தேவை போலவே ஜெய் …? ” ஜீவிதாவிற்கு ஜெயந்தி பதில் சொல்லவில்லை .




கொஞ்சநேரம் கழித்து ” வேண்டாம்கா நீங்க சென்னைக்கே போயடுங்க .உங்க ப்ரெண்ட் ஹாஸ்பிடலிலேயே சேர்ந்துக்கோங்க .இங்கே வேண்டாம் ்உங்கள் மனது தாங்காது …” என்றாள் .

” என் டாக்டர் படிப்பே நான் இங்கே தங்கி வைத்தியம் பார்க்க வேண்டுமென்றுதான் ஆரம்பமானது ஜெய் ….”

” அந்த ஆரம்ப நிலை இப்போது இல்லையே அக்கா . நீங்கள் சென்னைக்கே போய்விடுங்கள் …”

” நீ என்ன செய்யபோகறாய் …? “

” உங்கள் பின்னால் வருவேன் …” கேள்வி முடியும் முன்பே பதிலளித்திருந்தாள் ஜெயந்தி .

” இந்த படிப்பே நீங்கள் கொடுத்ததுதானே .நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்களோ …அதே ஹாஸ்பிடலில் நர்சாக நான் இருப்பேன் அக்கா …” ஜீவிதா பிரியத்துடன் அவள் கைகளை பற்றக் கொண்டாள் .

” இது நாம் தீர்வு காண முடியாத பிரச்சனை போல ஜெய் .இன்னைக்கு ஈவினிங் தயாராக இரு .நம்ம சிவன்கிட்டயே போய் கேட்டுட்டு வந்திடலாம் .”

” எந்தக் கோவிலுக்குக்கா …? “




“கங்கை கொண்ட சோழபுரம் …ஐந்து மணிக்கு வந்துடுவேன் .தயாராக இரு …”

ஜீவிதாவிற்கு மிகப் பிடித்த கோவில் கங்கை கொண்ண சோழபுரம் .நான்கு வருடங்களாக பார்க்காத அந்தக் கோவிலை இப்போது பார்க்கும் விருப்பத்துடன் தான் அங்கே செல்லும் ப்ரோகிராம் வைத்தாள் .கோவிலுக்கு போனாள் மனது லேசாகும் என்று எண்ணினாள் .மாறாக அவள் மனது இரும்புக் குண்டாய் மாறி கனத்தது .

அங்கே …கோவிலில் அவள் சித்தப்பா குடும்பத்தை சந்தித்தாள் .சேதுபதி , சசிகலா , அவர்கள் மகள் சுகன்யா , அவள் கணவன் சிவபாலன் , அவர்கள் குழந்தை தான்யா …அனைவரையும் சந்தித்தாள் .சீக்கிரமே …வெகு சீக்கிரமே அந்த ஊரை விட்டு போய் விட வேண்டுமென்ற முடிவையும் அப்போது எடுத்தாள் .

What’s your Reaction?
+1
5
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!