Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 6

6

” இப்படி சொல்லாமல் , கொள்ளாமல் வெளிநாட்டில் போய் உட்கார்ந்து கொண்டால் எப்படி …? ” மறுநாள் வேலைக்கென உள்ளே நுழைகையில் யாரைப் பற்றியோ வேதா …அம்ருதாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் .

அதானே இப்படி திடீரென சைனாவில் போய் உட்கார்ந்து கொண்டால் எப்படி …? தன் கைப்பையை தோளிலிலிருந்து  எடுத்து வைத்துவிட்டு , வேலைக்கு தயாரானபடி நினைத்துக் கொண்டாள் வைசாலி .

” ஷ் …வேதாக்கா அவருக்கு என்ன வேலையோ …? விடுங்க ….என்ற அம்ருதா , ” நான் தயார் வைசாலி ” என  சாய்ந்து அமர்ந்தாள் .

” அதுதான் விரலோடு விரலாக ஒட்டிக் கொண்டு வைத்திருப்பாரே ..அந்த போனில் ஒரு நிமிடம் பேசி தகவல் சொல்ல முடியாதாமா …? “




” அவசர பயணத்தில் அப்படி போன் பண்ணக் கூட நேரமில்லாமல் போயிருக்கும் .நாடு விட்டு நாடு போகும் போது ..இப்படி நினைத்த இடத்தில் ..நினைத்தபடி போன் பண்ணுவது கஷ்டம்தானே வேதாக்கா …” அம்ருதாவின் முகத்தை மேக்கப்பிற்கு தயார் செய்தபடி பதில் சொன்ன வைசாலியை இருவருமே ஆச்சரியமாக பார்த்தனர் .

” யாரை் பற்றி சொல்கிறாய் வைசாலி …? அம்ருதா கேட்டாள் .

” அது …அது ..நான் சும்மா …நீங்கள் பேசியதற்கு பதிலாக ….” திணறினாள் .

” என்ன நினைப்பில் இருக்கிறாய் …? ” கூர்மையாக அவளை பார்த்தபடி கேட்டாள் வேதா .

தனது முட்டாள் தனத்தை நொந்தபடி ” இல்லை மேடம் ..நீங்கள் யாரோ ..சொல்லாமல் வெளிநாடு போனதாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தீர்களே …அது …அப்படி போகும் போது …தகவல் ..போனில் என்றாலும் …கஷ்டம்தானே …அதுதான் …நான் …” வார்த்தைகளை கடித்து துப்பினாள் .

” எல்லாம் தெரிந்தவள் மாதிரி ஏன் எல்லா விசயங்களிலும் தலையிடுகிறாய் …? ” எரிச்சலாக கேட்டாள் வேதா .

” அக்கா ..அவள் நான் வருத்தத்தில் இருக்கிறேனென சமாதானத்திற்காக சொல்லியிருக்கிறாள் .விடுங்க “

அம்ருதா சொல்லவும் சிறு குற்றவுணர்வு வைசாலிக்கு .இது அம்ருதாவை சமாதானப்படுத்த சொன்னதில்லையே , அவளுக்கே அவளே மன சமாதானமாக சொன்னதாயிற்றே …உதட்டை கடித்துக் கொண்டு தனது வேலையில் கண்ணானாள் .

” இப்படி திடீரென வெளிநாட்டிற்கு வேலையென பறப்பவர்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் அளவு …இவள் பெரிய ஆளா …? ” வேதா குத்தலாய் கூறினாள் .

ஆமாம் ..என்று கூறி மனோகரனை பற்றி இப்போது இவளிடம் சொன்னால் இவள் முகம் எப்படி மாறும் …? மனதிற்குள் எழுந்த இந்த நினைவு இதழ்களுக்கு புன்னகை கொடுக்க , ரோஜாவாய் இதழ் மலர ” முகம் மிகவும் வறண்டு தெரிகிறது மேடம் .ஒரு பத்து நிமிடம் ..ஒரு பேக் போட்டு விட்ட்டுமா …? பிறகு மேக்கப்பை ஆரம்பிக்கலாம் ,” என்றாள் .

வழக்கமாக இவளை இது போல் மட்டம் தட்டினால் அப்படியே சுடுமணல் போல் முகத்தை மாற்றி எரிப்பாள் .இன்று என்ன அப்படியே முகம் மலராக மலர்ந்து கிடக்கிறது .ஆழமாக வைசாலியை நோட்டமிட்டபடி ” என்ன வைசாலி இன்று ரொம்ப சந்தோசமாக இருக்கிறாய் ..? ” என்றாள் வேதா .




” பேக் போட்டுவிட்டே ஆரம்பி வைசாலி . நானும் ரிலாக்சாக ஒரு பத்து நிமிடம்  படுத்துக் கொள்கிறேன் .வேதாக்கா ..அவளை வேலை பார்க்க விடுங்க .தொண தொணக்காதீர்கள் ” அம்ருதா .

குலைத்து வைத்திருந்த வாழைப்பழத்துடன் தேனை கலந்து எடுத்துக் கொண்டு , வேதா பக்கம் திரும்பாமல் அம்ருதாவின் முகத்தில் தடவ ஆரம்பித்தாள் வைசாலி .

” இன்று உன் முகத்திற்கு எதுவும் விசேஷமான பேக் போட்டாயா ..வைசாலி .நாலு எல் .இ. டி பல்புகளை ஒன்றாக சேர்த்து போட்டது போல் அவ்வளவு பிரகாசமாக இருக்கிறதே உன் முகம் ” கேலி போல் கேட்டபடி அவள் முகத்தை கூர்ந்து பார்த்தாள் வேதா .

” அட காலையிலேயே குளித்து விட்டாயா …? ரொம்ப பிரஷ்ஷாக தெரிகிறாயே வைசாலி ..” என அன்று அதிகாலை விஜயா கேட்டது நினைவு வர , அப்படியா …என் முகம் மாறிவிட்டது என நினைத்தபடி தலையை கவிழ்ந்து கொண்டாள் .

” என்னை மாதிரி பேக் , பவுண்டேசன் , மேக்கப் என்று எதுவும் வைசாலிக்கு தேவையில்லை வேதாக்கா .அவள் இயற்கையிலேயே அழகு ” என்றாள் அம்ருதா .

” மேடம் …” என கூச்சத்துடன் ஆட்சேபித்தாள் வைசாலி.

” நிஜம்தான் வைசாலி .நீயெல்லாம் நடிக்க வேண்டுமென நினைத்து விட்டாயென்றால் நான் மூட்டை கட்டிக் கொண்டு ஆந்திராவுக்கே போய் விட வேண்டியதுதான் .என்றாள் .அம்ருதாவின் சொந்த ஊர் ஆந்திராவில்தான் இருக்கிறது .

” ஐய்யோ சும்மாயிருங்க மேடம் .ஏதாவது சொல்லிக்கொண்டு…”  என நிமிர்ந்தவள் வேதாவின் குரோத பார்வையை சந்தித்தாள் .

” நடிக்க வேண்டுமென்று வேறு நினைப்பாயா நீ …? “

இந்த கேள்வியில் துணுக்குற்று ” சீச்சி ..இல்லை …” என அவசரமாக கூறிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள்.

” அதுதானே இந்த சாக்கடைக்குள் விழ வேண்டுமென்று இந்த சந்தனத்திற்கு என்ன தலையெழுத்து …? ” என்றாள் அம்ருதா .

” சாரி மேடம் …”

” எதுக்கும்மா சாரி .என் தொழிலை எனக்கு தெரியாதா …? “

ஆனால் இந்த பதிலால் திருப்தியுற்ற வேதா அங்கிருந்த நாற்காலியை சாய்வதற்கு வசதியாக சாய்த்து வைத்து , அதன் மீது ஏறி படுத்துக் கொண்டு ” நேற்று யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாயே …? யார். வைசாலி அது ..? ” என்றாள் .

நெஞ்சில் திக்கென ” அது …என் ..அம்மாவிடம் …” என்றாள் .

” அப்படியா ..? கூப்பிடக் கூப்பிட காது கேளாமல் ஒரு மாதிரி பிரமை பிடுத்தவள் போல் இருந்தாயா …அதுதான் கேட்டேன் .அம்மாதானா …? ” துருவினாள் .




” அட அப்படியா …? என்ன வைசாலி ..யார் அது …? ஏதாவது நல்ல செய்தி இருக்கிறதா என்ன ….? ” அம்ருதாவும் சேர்ந்து கேட்க திணறினாள் வைசாலி .

” ஐயோ அதெல்லாம் இல்லை மேடம் .வேதாக்கா சும்மா ஏதோ சொல்கிறார்கள் “

” இல்லை அம்ரு …நிஜம்தான் வைசாலியிடம ஏதோ ரகசியம் இருக்கிறது ” என்றாள் வேதா .

” இல்லை வேதாக்கா .அவள் குடும்ப நிலைமையை பற்றி நம்மிடம் சொல்லியிருக்கிறாளே .வைசாலி நல்ல பெண் .அப்படியெல்லாம் மனதினை விட மாட்டாள் ” என்றாள் அம்ருதா .

ஒரு கணம் அசைவற்று நின்ற வைசாலியின் கரங்கள் மீண்டும் இயங்க தொடங்கிய போது , அதில் ஒரு உறுதி தெரிந்த்து .

” ஆமாம் மேடம் …” என்ற போது அவள் வார்த்தைகளில் ஒரு தெளிவிருந்த்து .கண்கள் லேசாக கைப்பையிலிருந்து வெளியே எடுத்து வைத்திருந்த போனின் பக்கம் பாய்ந்து மீண்டன .

நேற்று போல் இன்றும் போன் போடுவானா …என்ற எண்ணத்தில் போனை ஆப் பண்ணாமல் ‘ ஆன் ‘ னிலேயே வைத்திருந்தாள் .

” இன்றும் உனக்கு போன் வருமா வைசாலி …? ” அவள் பார்வையை கவனித்து விட்டு கேட்டாள் வேதா .

இவளென்ன இப்படி கவனிக்கிறாள் ….? என்றெண்ணியபடி ” இல்லை …” என அவள் மறுத்துக் கொண்டிருந்த போது போன் மணி ஒலித்தது .மனோகரன்தான் .வைசாலியின் உடலில் ஒரு மாதிரி பரபரப்பு சேர்ந்து கொண்டது .

நேற்று இன்னமும் தாமதமாகத்தானே அழைத்தான் …? இன்று  ஏன் அதற்குள் …?ஆனால் முன்பே அழைத்திருந்தானே …அப்போதே பாவம் இரவு இரண்டு மணி என்றானே….ஒரு நிமிடத்தில் ஓராயிரம் எண்ணங்கள் மனதில் வலம் வந்த்து .கைகள் போனை எடுக்க துடித்தன.

வைசாலியை முந்திக்கொண்டு போனை எடுத்து விட்ட வேதா நம்பரை பார்த்துவிட்டு ” பேசு …” என ஒரு மாதிரி முக பாவத்துடன் அவளிடம் கொடுத்தாள் .வைசாலி போனை வாங்கி கட் பண்ணினாள் .காட்டனை நீரில் நனைத்து அம்ருதாவின் கண்களின் மேல் வைத்தாள் .

” ஒரு பத்து நிமிடம் அப்படியே இருங்கள் மேடம் ” என்றாள் .

” சரி ..நீ போன் பேசிவிட்டு வா “

போவதா …? வேண்டாமா ..? என வைசாலி தடுமாறி நின்ற போது ” போ …போய் பேசு ” தனது சிறுத்த இமைகளை மேலும் இடுக்கியபடி கூறினாள் வேதா .

இல்லை மனதினை அலை பாய விடக்கூடாது .இனி இப்படி போன் பண்ணாதே என அவனிடம் கூறிவிட வேண்டுமென நினைத்தபடி வெளியே வந்து அவனுக்கு போன் செய்தாள் .முதல் ரிங்கிலேயே போன் கட் செய்யப்பட்டு பின் மீண்டும் ஒலித்தது .




” ஹேய் சாலி ..இன்று நம்ம கம்பெனிக்கு பெரிய ஆர்டர் ஒன்று பிடித்து விட்டேன் தெரியுமா …? இதில் நமக்கு நல்ல லாபம் .அத்தோடு இதற்கு அக்ரிமென்ட் வேறு பதினைந்து வருடங்கள் .வருடா வருடம் லாப விகிதம் கூடிக் கொண்டே போகும் ..ஐ ஆம் சோ ஹேப்பி டா .இன்னமும் அப்பாவிற்கு கூட சொல்லவில்லை .முதலில்  உனக்கு சொல்ல வேண்டும் போல் இருந்த்து .அதனால் உடனே அழைத்துவிட்டேன் .வேலையாக இருந்தாயாடா …? ” எதிர் முனையில் குழந்தையாய் குதூகலித்தான் மனோகரன் .

அவனது மகிழ்ச்சி மாயம் போல் இவளுக்கும் தொற்றிக் கொள்ள ” வாழ்த்துக்கள் பா …இப்போதுதான் மேடத்திற்கு ஒரு பேக் போட்டுவிட்டு வந்நிருக்கிறேன் .பத்து நிமிடத்தில் போக வேண்டும் ” என்றாள் .

” சரி நீ போய் வேலையை பார் .திரும்ப எப்போது ப்ரீயாவாய் …? எப்போது அழைக்கட்டும் ….? “

” தெரியவில்லையே .நானே போன் பண்ணுகிறேனே ” என வைசாலி பதில் சொன்னபோது , இவனை இனி போன் பண்ணாதே என சொல்லிட வேண்டுமென்று சற்று முன் வைசாலி செய்த முடிவு அவளுக்கு மறந்தே போனது .

” ஓ.கேடா …பை …நான் அப்பாவுடன் பேச போகிறேன் …” என்றான் .

” ஹா…ரொம்ப லேட்டாயிடுச்சுன்னா எனக்காக வெயிட் பண்ணாதீங்க. தூங்கிடுங்க ” நேற்று உன்னுடன் பேசுவதற்காகவே இரண்டு மணி வரை விழித்திருந்தேன் என்றானே …பாவம் இன்று வேலை வேறு அதிகமாக இருந்திருக்கும் .ஓய்வெடுக்கட்டும் என்ற எண்ணத்தில் இதனை கூறினாள் .

” ம்ஹூம் …அப்படியா ….? தூங்கிவிடவா …? ம் …உன்னிடம் பேசாமலா …?  …தூக்கம் வருமா …? சாலி சொல்லுடா….” அவனது குரல் குழைய தொடங்க , வைசாலிக்கு முகம் சிவந்த்து .

” ஏய் …என்னடா பதிலையே காணோம் …? ” மீண்டும் சீண்டினான் .

இவன் ஒருத்தன் அங்கே உட்கார்ந்து கொண்டு இங்கே உள்ளவர்களை இஷ்டம் போல் ஆட்டுவிப்பான் என நினைத்தபடி ” பத்து நிமிடமாயிற்று .நான் போகிறேன் ” என்றாள் .




” சரி போ …ஆனால் திரும்ப பேசும் போது இந்த கேள்விக்கு பதில் ரெடி பண்ணிக் கொண்டு வா .அப்போது இதே கேள்வியைத்தான் முதலில் கேட்பேன் ” என்று திரும்பவும் பேசப் போவதை உறுதி செய்துவிட்டு போனை கட் செய்தான் .

கண் மூடி நின்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் வைசாலி .மிஞ்சிப் போனால் பத்து  முழு நிமிடங்கள் அவனோடு பேசியிருக்க மாட்டாள் ஆனால் அதற்கு இவ்வளவு பாதிப்பா….? அதெப்படி …இப்படி மின்சாரம் போல் உடல் , மனமெங்கும் பரவுகிறான் .

உண்மையிலேயே மெல்லிய மின்சாரம் பாய்ந்தது போல்  ஒரு மாதிரி சுருசுருவென சிலிர்த்திருந்த கைகளை தேய்த்து விட்டபடி , அவள் மேக்கப் அறையினுள் வந்தபோது ,” ஏன் வேதாக்கா …நான் இதையெல்லாம் விட்டு விட்டு நிம்மதியாக   செட்டிலாவதில் உங்களுக்கு கொஞ்சம் கூட  சந்தோசம் கிடையாதா ….? ” என கேட்டபடி அழுது கொண்டிருந்தாள்  அம்ருதா .

What’s your Reaction?
+1
9
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!