Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 10

10

நித்தங்கள் நீண்டு கொண்டிருக்க 
நினைவுகளில் உனை கிளறிக்கொண்டிருக்கிறேன் .

                           வீட்டினுள் நுழையும் போதே டிவி முன் சலனமற்ற முகத்துடன் அமர்ந்திருந்த மங்கையர்கரசி தெனபட்டார் .ஏனோ பார்த்த உடனேயே எரிச்சல் சுருசுருவென தேகம் முழுவதும் பரவியது .சை …என்ன பெண் இவர் தன்.பிள்ளை தன், மருமகள் , தன் வீடு…என்ற எந்த எண்ணமும் இல்லாமல் நாளின் இருபத்து நான்கு மணிநேரமும் இப்படியா டிவி முன்பே உட்கார்ந்து இருப்பார் …?




மங்கையர்கரசி எப்போதும் அப்படித்தான் இருப்பாள் .காலை ஏழு மணிக்கு டிவி முன்னால் அமர்பவள் இரவு பதினோரு மணி வரை டிவிதான் .இடையில் குளிக்க , சாப்பிட மட்டும் எழுந்திரிப்பாள் .யாருடனும் ….ஏன் பெற்ற மகனுடனும் கூட சேர்ந்தாற் போல் நாலு வார்த்தை பேச மாட்டாள் ்அவனாக ஏதாவது கேட்டால் ஆமாம் , இல்லை .அல்லது வெறும் தலையாட்டல் .

மங்கையர்கரசியன் இந்த சோம்பேறித்தனத்தால் தான் அமரேசனின் தந்தை , கணவரை இழந்து தவித்து கொண்டிருந்த தன் தங்கை திலகவதியை அழைத்து வந்து தங்களோடு தங்க வைத்து கொண்டதாய் அமரேசன் லேசாக சொல்லியிருந்தான் .இதையே சாமிநாதனும்  இவர்கள்  திருமணத்தற்கு முன்பே   உடம்பு சரியில்லாத   அம்மா என ஏதோ பூசி , மெழுகி சொல்லியிருந்தார் .மங்கையர்க்கரசியின்   இந்த குடும்பத்தோடு   ஒட்டாத தனமையால் , அமரேசன் தனது தினப்படி தேவைகளான சாப்பாடு போன்றவைகளுக்கு அன்னையின் இடத்தில் வைத்து  திலகவதியையே அதிகம் சார்ந்திருக்க தொடங்கினான் போலும் .

இப்படி அமரேசன் வீட்டை பொறுத்த வரை குடும்ப தலைவி இடத்தில் திலகவதி இருந்தாலும் , அன்னையென அவளுக்கு அமரேசன் இடமளித்திருந்தாலும் , அன்னைக்கு அடுத்தான மாமியார் பதவியை திலகவதிக்கு கொடுக்க வேதிகா விரும்பவில்லை .ஏனோ அதற்கு அவள் மனம் ஒப்பவில்லை.

ஏனெனில் திலகவதி கொஞ்சம் சலசல பேர்வழி .எந்த வீட்டினுள்ளும் உரிமையாக அடுப்படி வரை நுழவந்து வடுவாள் .இதோ ..அவர்கள் வீட்டனுள்ளேயே நுழைந்து எளிதாக அடுப்படியை கை பற்றி விடவில்லையா … ? அடுப்படி எனபது ஒரு பெண்ணின் ராஜ்யசபை .அவளது சோகத்தையும் , சுகத்தையும் மட்டுமன்று .அதிகாரத்தையும் , ஆளமையையுமே அந்த அடுப்படிதான் சொலகிறது .என்று ஒரு பெண் வயோதிகத்தை காரணம் காட்டி அடுப்படியை விட்டு வெளியேற்ற படுகிறாளோ , அன்று அவள் ராஜ்ஜியமற்ற ராணியாய் சாதாரண பிரஜையாய் ஆகிவிடுகிறாள் .

ஒரு நடுத்தர குடும்பத்து , சமையல் ,கணவன் , பிள்ளைகளெனும் விதிக்கப்பட்ட வாழ்வு வாழும் பெண்ணின் அரசாங்கம் அடுக்களையில்தான் இருக்கும் .எனவேதான் மருமகள் வந்து பின்னும் மாமியார்கள் அடுப்பை விட்டு தர மாட்டார்கள் .மங்கையர்க்கரசி போல் ஒன்றிரண்டு சோம்பல் பெண்கள் இருக்கலாம் .அப்படி …தனக்கு கிடைத்த வாய்ப்பாக …அங்கே அவள் அண்ணன் வீட்டோடு  நிறுத்தாமல் …இங்கே தன் அம்மா வீட்டிலும் வந்து அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த திலகவதியையும் அவள் வெறுத்தாள. தன் வீடு …தன் உறவென அமரேசனை உரிமை கொண்டாட துடித்து கொண்டிருந்த மௌனிகாவையும் வெறுத்தாள் .




இவர்களால் எப்படி இது போல் டிவி பார்த்துக் கொண்டே இருக்க முடிகிறது …?  தரையில்.  சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு சிறு , சிறு கிண்ணங்களில் பாசி , ஜமுக்கி போன்றவற்றை வைத்துக் கொண்டு அந்த ப்ளவுசில் டிசைனர் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் வேதிகா .சேரில் அமர்ந்து கண்களை அகல விரித்து டிவி திரைக்குள் போய் உட்கார்ந்து கொண்டிருந்த மங்கையர்கரசியை ஓரக்கண்ணால் பார்த்து யோசித்தபடி தன் கை வேலையை செய்து கொண்டிருந்தாள் .

” ஹை …அக்கா …சூப்பர் ப்ளவுஸ் .என்ன அழகான டிசைன் ….! 
” அவள் மடியில் வைத்திருந்த ப்ளவுசை ரசித்தபடி அவளருகே அமர்ந்தாள் மௌனிகா .குழந்தையாய் விழி விரிந்த அவளது ரசிப்பில் புன்னகைத்தாள் வேதிகா .

” இது கல்யாண ப்ளவுஸ் மௌனிகா .அதனால்தான் நிறைய  வேலைப்பாடு …”

” ஓ…பட்டுச்சேலைக்குரியதா ….? ரொம்ப அருமையாய் வேலை செய்கறீர்கள் அக்கா .இதற்கெல்லாம் அதிக பொறுமை வேண்டுமல்லவா …? ” மௌனிகாவின்     கைகள் ப்ளவுஸை ஆவலுடன் வருடியபடி இருந்த்து .

” ம் …மனதுக்கு பிடித்திருந்தால் வேலை அழகாக அமைந்துவிடும் .இது எனக்கு பிடித்தமான வேலை .அதனால் எளிதாக , அழகாக செய்ய வருகிறது …” வேதிகாவின் கைகள் கலை படைத்துக் கொண்டிருக்க , கண்களை மாமியார் மீது பதித்தபடி மௌனிகாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் .

” இது போல் எனக்கு ஒரு சட்டை தைத்து தருகிறீர்களா அக்கா …? ” மௌனிகா ஆசை பொங்க கேட்டாள் .

” ஓ…உன் திருமணத்தின் போது இது போல் தைத்து தருகிறேன் …”

” போங்க்க்கா நான் நிறைய படிக்கனும் .இப்போல்லாம் கல்யாணம் வேண்டாம் .ஆனால் இது போல் சட்டை இப்போதே போட வேண்டும் போல் உள்ளதே ….” மௌனிகாவின் குரலில் என்ன செய்வது என்ற கவலை பெரிதாக வந்து உட்கார்ந்து கொள்ள வேதிகாவிற்கு சிரிப்பு வந்த்து .

” சரி ….சரி …சட்டைக்காகவெல்லாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம் .உனது பட்டு சேலை ஒன்று கொடு .நானே அதற்கேற்ற மேட்சிங் எடுத்து ப்ளவுஸ் தைத்து தருகிறேன் .”

” ஆனால் …என்னிடம் பட்டு சேலையே இல்லையே ….”

” உன் அருமை அக்காவிடமே கேட்டு வாங்கிக் கொள் மௌனி .அவர்கள் இப்போது ரொம்ப பெரிய ஆள் ….” திலகவதியின்நக்கல்  குரல் அடுப்படிக்குள்ளிருந்து ஒலித்தது .வேலையை அங்கே செய்து கொண்டு ,காதுகளை மட்டும் இங்கே ஒட்ட வைத்திருப்பார்கள் போல. வேதிகாவிற்கு எரிச்சல் வந்த்து .

” யார் பெரிய ஆள் சித்தி …? ” இங்கிருந்தே குரல் கொடுத்தாள் .

” அது …உன்னைத்தாம்மா .நீதான் இப்போது பெரிதாக தொழிலெல்லாம் பார்க்கிறாயே …அதுதான் சொன்னேன் …” திலகவதி வெளியே வந்துவிட்டாள் .




” யாரையோ கிண்டல் பேசியது போலிருந்த்து …அதுதான் கேட்டேன் ….” என்னை கேலி பேசுகிறாயா நீ …பார்வை பார்த்தாள் திலகவதியை .அவள் முகம் கறுத்தது .கண்களை கூர்மையாக்கி வேதிகாவின் முகத்தில் அழுத்தினாள் .விழியெடுக்காமல் அவள் பார்வையை சந்தித்தாள் வேதிகா .

” யாரை …யார் கிண்டல் செய்த்து …? ” கேட்டபடி உள்ளே வந்தான் அமரேசன் .

” கிண்டலா ….அப்படி ஒன்றுமில்லையே ….” திலகவதி முதல் ஆளாக பின்வாங்கினாள் .

” காபி போட்ட்டுமா அமரன் …? ” கேட்டபடி அவன் கை பைக்காக கை நீட்டினாள் திலகவதி .

” ஆமாம் அத்தை …நல்ல சூடாக …” என்றபடி பையை வேதிகாவிடம் நீட்டினான் .” பணம் இருக்கிறது .பீரோவில் வை வேதா …” கடுத்த தன் முகத்தை காட்டாமல் உள்ளே போனாள் திலகவதி .வேதிகா பையை வாங்கி போய் பீரோவில் வைத்து பூட்டனாள்.அவள் திரும்ப வந்த போது அவள் வேலை செய்து வைத்திருந்த ப்ளவுஸை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான் அமரேசன் .

” ரொம்ப அழகாக இருக்கறது வேதா .எவ்வளவு நுண்மையான வேலைப்பாடு .எவ்வளவு பொறுமையும் , பொறுப்பும் வேண்டும் இதற்கு …” பாராட்டினான் .

” ஆமாம் இதை பற்றித்தான் இப்போது நானும் மௌனிகாவும் …” என்றபடி திரும்பி பார்த்த வேதிகா ஆச்சரியமானாள் . இந்த பேச்சுக்கும் , தனக்கும் சம்பந்தமில்லாத்து போல் அவள் தள்ளி போய் அமர்ந்து ஏதோ அவள் கல்லூரி சம்பந்தமான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் .இதென்ன அம்மாவும் , மகளும் திடுமென இப்படி கலைகிறார்கள் …யோசித்தபடி அந்த ப்ளவுஸை அள்ளி தன் மடி மேல் போட்டுக் கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள் .

காபி டம்ளருடன் அருகே ஒரு சேரில் அமர்ந்திருந்த அமரேசனின் கண்கள் தன்னையே மொய்த்து கொண்டிருந்த்தை உணர்ந்தவளின் கைகள் கொஞ்சம் தடுமாறியது .அதனால் ஊசி நுனி லேசாக விரலை பதம் பார்க்க , மெல்ல ” ஷ் ” என்றாள் .

” பார்த்து …வேதா .என்ன அவசரம் …? ” ஆதரவாக அதட்டியபடி அவளருகே இறங்கி அமர்ந்து விரலை பிடித்து ஆராய்ந்தான் அமரேசன் .

” இந்த வேலை செய்யிம் போது இது போல் குத்தல்களெல்லாம் சாதாரணம் .இது ஒன்றுமில்லை .” விரல்களை உருவிக் கொண்டு வேலையை தொடர்ந்தாள் .

” எவ்வளவு கடினம் இந்த வேலை …? உனக்கு கஷ்டமாக இல்லையா …? ” சரசரவென வேலை செய்த அவள் விரல்களின் நேர்த்தியை வியந்தபடி கேட்டான் .

” இந்த ப்ளவுஸின் விலை என்ன தெரியுமா …? நான்காயிரம் ருபாய் .இவ்வளவு விலை வாங்க வேண்டுமானால் கொஞ்சம் வேலையும் செய்ய வேண்டுமல்லவா …? ” வேதிகா புன்னகையுடன் பதிலளித்தாள் .

” ம் …நீ சுறுசுறுப்பு வேதா . வேலைக்கு சோம்புவதில்லை …” அமரேசனின் பெருமித குரலில் அவன் அன்னைக்கான செய்தி எதுவும் இருக்கிறதோ …? அவன் முகத்தை பார்த்து விட்டு மங்கையர்க்கரசியை பார்த்தாள் .அவளோ சுற்றிலும் நடக்கும் எந்த விசயத்தையும் அறியாமல் டிவியுனுள்ளேயே இருந்தாள் .




”  இன்று  உன் தொழிலில் தலையிட்டேனென உனக்கு கோபமா வேதா …? ” அமரேசனின் குரல் திடுமென அருகில் கேட்க , திரும்பி பார்த்தபோது அவன் அவளருகிலேயே சுவரில் சாய்ந்துநெருக்கமாக  அமர்ந்திருந்தான் .இவனென்ன இப்படி எல்லோரும் சுற்றி இருக்கையில் இப்படி அருகில் உட்கார்ந்து கொண்டருக்கிறான் .திணறினாள் .

” உனக்காகத்தான் வந்தேன் வேதா .அது பிடிக்கவில்லையைன்றால் இனி வரவில்லை …” மெல்லிய குரலில் அவள் புறம் சாய்ந்து பேசினான் .

      ” ஆமாம் எனக்கு பிடிக்காத்தையெல்லாம் செய்ய மாட்டீர்கள் பாருங்கள.    கொஞ்சம் தள்ளி உட்காருங்கள் .இதெல்லாம் பிறகு பேசலாம் …”

” ம்ஹூம் .பிறகு நீ உன் அறைக்குள் போய்விடுவாய் .அங்கே என்னால் வர முடியாது …” தாபம் தோய்ந்த குரலில் முணுமுணுத்தான் .

வேதிகாவிற்கு தவிப்பாக இருந்த்து .மங்கையர்கரசியோ , மௌனிகாவோ இவர்கள் பேச்சை கவனக்கவில்லையென்றாலும் , நிச்சயம் திலகவதி அடுப்படியினுள் இருந்து கொண்டே கவனிப்பாள் . என்னதான் குரலை குறைத்தி பேசினாலும் இவன் பேச்சின் ஒன்றிரண்டு வார்த்தைகளேனும் அவள் காதில் விழாமல் போகாது .இவன் என்னவென்றால் இப்படி காதல் வசனம் பேசி வைக்கிறானே என்றிருந்த்து அவளுக்கு .சட்டென எழுந்து பிரிந்து செல்வதை ஏதோ ஒன்று தடுத்தது . கைகளின் சித்திரை வேலைப்பாட்டில் தலை குனிந்து கொண்டாள் .

” நம் திருமணத்தின் போது நீ இதுபோல் சட்டை தைத்து போட்டுக் கொள்ளவில்லையே .ஏன் வேதா …? ” ப்ளவுசை தொட்டு பார்ப்பது போல் அவள் கைகளில் ஆட்காட்டி     விரலால் நடந்தான் .

அன்று டிசைனர் ப்ளவுஸ் தைத்து போடும் நிலைமையிலா நான் இருந்தேன் …வேதாவின் மனதில் ஒரு வெறுமை மெல்லியதாக படர்ந்த்து .ஊரிலுள்ள பெண்களுக்கெல்லாம் திருமண சட்டை தைத்து தருகிறாள் .ஆனால்.அவள் திருமணத்தன்று    அவளுக்காக ஒரு டிசைன் ப்ளவுசை தைத்து போட்டுக் கொள்ள முடியவில்லை …இதுதான் விதியா …?

” இப்போது இது போல் ஒரு சட்டை தைத்து கொள்ளேன் வேதா .ஏதாவது ஒரு பட்டுச் சேலைக்கு போட்டுக் கொள்ளேன் …” அவள் மனதை உணர்ந்தவன் போல் பேசினான் .

” ம் …தைத்து வைத்திருக்கிறேன் . அகல்யா  திருமணத்திற்கு  போட வேண்டும் …”

” அகல்யாவா …அது யார் …? ” அமரேசனின் குரல் இப்போது சற்று உயந்திருக்க …” அகல்யா என் தங்கை பெண் மாப்பிள்ளை …” என்றபடி வந்தாள் விசாலாட்சி .அவள் கோவிலுக்கு போய்விட்டு அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தாள் .

” ஓ…உங்கள் தங்கையென்றால் சாவித்திரி அத்தையுடைய மகளா …? அவர்களை நான் பார்த்திருக்கிறேனா …? ” கேட்டபடி மாமியார் நீட்டிய பிரசாத்த்தை எடுத்து தன் நெற்றியில் இட்டுக் கொண்டு , வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்பதை காரணம் காட்டி வேதிகாவிற்கு அவனே நெற்றியில் குங்குமம் இட்டு விட்டான் .விசாலாட்சி முகம் மலர்ந்தாள் .

” பார்த்திருப்பீர்கள் மாப்பிள்ளை .உங்கள் திருமணத்தோடு என் பக்கத்து சொந்தம் எல்லோரும் வந்திருந்தார்களே . மறுநாள் சம்பந்தி சாப்பாட்டில் எல்லோரையும் தெரிந்திருக்கலாம் .ஆனால் அதற்குள் …” மேலே தொடர முடியாமல் விசாலாட்சி நிறுத்தினாள் .மறுநாள்தான் சம்பந்தி சாப்பாடு நடப்பதற்கு முன்பே வேதிகா ..இங்கே வந்து விட்டாளே .

” அதனால் என்ன அத்தை .இப்போது தெரிந்து கொண்டால் போயிற்று …என்றைக்கு திருமணம் சொல்லுங்கள் .மாமாவால் போக முடியாது .நானும் வேதாவும் போய் வருகறோம் …” அமரேசனின் சமாதானம் விசாலாட்சியோடு , வேதிகாவையும் குளிர செய்த்து .விசாலாட்சி திருமண நாளை விவரிக்க தொடங்க , வேதிகா மெல்ல எழுந து மாடிக்கு வந்துவிட்டாள் .




பிறகு நீ உன் அறைக்கு போய் விடுவாய் .அங்கே என்னால் வர முடியாது …அமரேசனின்  குரல் காதில் ஒலிக்க , அப்போது இவன் தனக்கு தானே ஒரு கட்டுப்பாடு விதித்து கொண்டு , எனது கண்ணசைவிற்கு காத்திருக்கிறானோ …?  என் விருப்பத்தை மதிக்க கற்றுக் கொண்டிருக்கிறானோ …?

முந்தைய முத்தத்திற்கும் , அன்றைய அவர்களின் கூடலுக்கும் பிறகு , வெகு நாட்கள்  இன்னதென்று உணர முடியா ஓர் வெறுமையுடன் அவள்  தவிர்த்து கொண்டிருந்த மல்லிகை கொடியை நாடி அடியில் அமர்ந்து கொண்டாள் .ஆழ்ந்து மல்லிகை வாசனையை இழுத்து நுரையீரலை நிரப்பிக் கொண்டாள் .இருக்கட்டும் …இன்னும் கொஞ்ச நாட்கள் இவன் காத்திருக்கட்டும் .கைகளை ஆட்டி மலர்ச்சியுடன் தனக்கு தானே பேசிக் கொண்டாள் .

மறுநாள் மாலையே …அவள் அறை வாசலில் வந்து நின்றான் அமரேசன்

What’s your Reaction?
+1
2
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!