pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சைமலை பூவு – 8

8

சித்தம் கலைந்த சித்தன் போல்

சில நேரம் சிதறி நிற்கிறாய் ,

உலகு பற்றி எரிகிறது உனைச் சுற்றி

அயராமல் பிடிலிசைக்கிறாய் ,

உடுக்கை ஆண்டவனோ ?

உளறும் மாயவனோ ?

மொத்தமும் புரிபடவில்லையடா எனக்கு .

 




 ” இதோ இதனை காட்டியாவது உனது ஞாபகத்தை மீட்கலாம் என்று நினைத்தேன் .ஏன் இப்படி கத்துகிறாய்  ? அதட்டலோடு தனது சட்டையின் முதல் இரண்டு பட்டன்களை சுழற்றி விட்டு சட்டையை இடது பக்கம் இழுத்து தோளை  காட்டியபடி நின்றான் அவன்.

”  இதனை பார்த்த பிறகும் உனக்கு ஞாபகம் வரவில்லையா ஏஞ்சல் ? ” அவன் விரல் சுட்டிய இடத்தில் தேவயானி கத்தியால் ஏற்படுத்திய காயம் இருந்தது. மிக நீண்ட கீறல் இல்லை அது. இரண்டு இன்ச் நீளம்தான் இருக்கும். ஆனால் ஆழமாக இருக்கும்போல் தெரிந்தது .இன்னமும் பொருக்கு  தட்டாமல் ரத்தம் கசியும் ஈரத்துடன் நான் புதுசாக்கும் என்ற அறிவிப்போடு கொத தொதவென்று இருந்தது அது.

இவன் இதற்கு மருந்து எதுவும் போட்டுக் கொண்டது போல் தெரியவில்லையே …அந்தக் காயத்தின் நிலையை பார்த்தவுடன் தேவயானியின் மனது லேசாக திடுக்குற்றது . இதனை ஏன் இப்படியே வைத்திருக்கிறான் ? 

கிணற்றடி பூண்டின் இளம் இலைகளை பறித்து நசுக்கி சாற்றை காயத்தில் விட்டு அப்படியே இலையையும் மேலே வைத்து கட்டு போட்டால் நான்கே நாட்களில் ஈரம் காய்ந்து பொருக்கு தட்டி வடு கூட தெரியாமல் ஆறிவிடும். அவளது மூலிகை அறிவு இயல்பாக காயத்திற்கான வைத்தியத்தை முன்மொழிந்தது.

உடனடியாக அந்த மூலிகையை பறிக்க துறுதுறுத்த கைகளை அடக்கிக் கொண்டாள்.

” இந்த காயத்தை நினைவிருக்கிறதா ஏஞ்சல்  ? தேவதைகள் சமயத்தில் கையில் கத்தியும் எடுப்பார்கள் என்று எனக்கு காட்டிய நேரம் இது .நேற்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை தெரியுமா  ? சுருக் சுருக்கென்று ஊசி குத்துவது போல் இங்கே ஒரே வலி ”  என்று சொல்லிக்கொண்டு அவன் தனது பாக்கெட்டில் இருந்து சிறிய விஸ்கி பாட்டிலை எடுத்தான் .அதனை ஒரு மடக்கு வாயில் ஊற்றிக் கொண்டு மீதத்தை அந்த காயத்தின் மேல் ஊற்றினான்.

உஷ் ….அது ஸ்பிரிட்  காயத்தின் மேல் பட்டால் எரியும் தேவயானியின் மனது கூக்குரலிட்டது .என்ன மனிதன் இவன் வலிக்காதா இவனுக்கு  ?தேவயானி முகம் சுருக்கி அவனைப் பார்க்க…

” எரிகிறது ரொம்பவே …” என்றான் .ஆனால் எரிச்சலுக்கான தடம் எதுவும் அவன் முகத்தில் இல்லை .இவன் என்ன மனிதனா ?  மிருகமா  ? இப்படி உணர்ச்சிகள் இல்லாமல் இருக்க தேவயானி அவனை நம்பமுடியாமல் பார்க்க அவன் புன்னகைத்தான்.

” இப்போது சொல் ஏஞ்சல் .இந்த கத்தி காயத்தை நினைவில் வைத்திருக்கிறாய் தானே  ? ” இவன் இன்னமும் என்ன செய்வானோ …ஒரு வித பயத்துடன் மெல்ல தலையசைத்தாள் தேவயானி.

” உங்கள் ரூமுக்கு போய் ஏதாவது மருந்து போட்டுக் கொள்ளுங்கள் ” 




” வாவ் தேங்க்யூ ஏஞ்சல் .உன்னுடைய அக்கறைக்கு நன்றி .ஆனால் கண்ட மருந்தெல்லாம் என் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. எனக்குத் தெரிந்த ஒரே மருந்து இது தான் ” கையிலிருந்த விஸ்கி பாட்டிலை தூக்கி காட்டினான் .அதனை வாயில் கவிழ்க்க அது காலியாக இருந்தது.




” மருந்து காலியாகிவிட்டது இன்னமும் கொஞ்சம் ஏற்றிக் கொண்டு வருகிறேன் ” லேசான தள்ளாட்டத்துடன் அவன் நடந்த போன பகுதி அந்தப் ஹோட்டலின் பார்.

தேவயானி அருவருப்புடன் அவன் சென்ற திசையை பார்த்தாள் .எவ்வளவு மோசமான மனிதன் …பட்டப் பகலிலும் இப்படி குடியில் தடுமாறிக் கொண்டு எந்நேரமும் குடித்துக்கொண்டே இருப்பான் போல… தலையை உலுக்கிக் கொண்டு மீண்டும் தனது போனை எடுத்து அண்ணனுக்கு அழைத்தாள்.

” என்ன…?  ஏன் திரும்பத் திரும்ப கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாய் ? நான் வேலையாக இருக்கிறேன் இல்லையா  ? ” வள் என்று எதிர்முனையில் விழுந்தான் சுந்தரேசன்.

” சாரி அண்ணா எனக்கு இங்கே வந்த வேலை முடிந்து விட்டது .மாலை வரும் பஸ் வரை காத்திருக்க தேவையில்லை உங்கள் வேலை முடிந்தவுடன் உங்களுடனே வந்து விடலாமென்று….” 

” அதுதான் முடியாது என்று காலையிலேயே பேசினோமே…” 

” ஆனால் இப்போது நான் என்ன செய்ய அண்ணா ? மாலை வரை இ….இங்கேயே காத்திருக்க வா  ? ” கேட்கும்போதே தேவயானியின் குரல் நடுங்கியது.  மதிய உணவு நேரம் கூட வந்து இருக்காத நிலையில் மாலை வரை இங்கேயே இருப்பது என்றால் ….அவளுக்கு உள்ளே போன அந்தக் குடிகாரனின் நினைவு வந்தது .இன்னமும் அதிகமாக குடித்துவிட்டு வந்து என்ன கலாட்டா செய்வானோ… ?

” ப்ச்… அங்கேயே இரு .என்ன செய்வதென்று நான் பார்க்கிறேன்  ” மீண்டும் எரிந்து விழுந்து விட்டு போனை கட் செய்தான் சுந்தரேசன்.

அவனிடம் சாமான்கள் வாங்கி வருவதற்காக ஒரு டாட்டா ஏஸ் மினி டிரக் உண்டு .அதில் சுமக்கும் அளவுக்கும்  அதிகமாகவே பாரங்களை ஏற்றி கட்டி விட்டு அதனை டிரைவரிடம் கொடுத்துவிட்டு மிகுதி சாமான்களை தனது பைக்கிலும் முன்னும் பின்னும் என கட்டிக்கொண்டு இருப்பிடம் போய்ச் சேருவான் சுந்தரேசன்.




இவ்வளவு சாமான்களையும் லிஸ்ட் எடுத்துக்கொண்டு மளிகை , காய்கறி , அசைவம் என கடை பார்த்து தரம்பிரித்து வாங்கி வண்டியில் ஏற்றி கட்டி கொண்டு வந்து சேர்ப்பதற்குள்  அலுத்து விடுவான் .சாமான்களை வாங்கிக்கொண்டு இருக்கும்போதுதான் நான்  போன் செய்திருப்பேன் . அந்த எரிச்சலில் தான்  அண்ணா கத்தியிருப்பார் .அவருக்கும் வேலை இருக்கிறதுதானே… என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள் தேவயானி .

சாமான்களை ஏற்றுவதற்கு இன்னும் சற்று பெரிய வேன்  வாங்கலாம் .கூட இருந்து ஏற்றி கட்டுவதற்கு இன்னும் இரண்டு வேலையாட்களை போடலாம் .அவர்களுடைய வருமானத்திற்கு அடங்கி வருவதுதான் இந்த நியாயமான செலவுகள் .ஆனால் சுந்தரேஸ்வரனுக்கும் சுனந்தாவுக்கும் இவையெல்லாம் ஆடம்பரமான செலவுகளாக தெரிந்தன .மிகச் சிக்கனமாக இருப்பதாக பேர் பண்ணிக்கொண்டு அவர்கள்  தங்களோடு சேர்த்து சுற்றத்தையும் வருத்திக் கொண்டிருப்பதாகவே தேவயானிக்கு தோன்றும்.

அண்ணனை திருத்த முடியாது பெருமூச்சுடன் நினைத்துக்கொண்டாள் அவள் . காலையில் கிளம்பும் போதே திரும்ப வருவதற்கான வழியை பேசவந்த அம்மாவை அவள் கண்களாலேயே அடக்கி விட்டு வந்திருந்தாள்.அதனை தான் பார்த்துக் கொள்வதாக அம்மாவிடம் கண் காட்டிவிட்டு கிளம்பியிருந்தாள் . இப்போது விட்டால் இந்த வாய்ப்பு திரும்ப கிடைக்காமல் போய் விடக்கூடும் என்ற மகளின் பயத்தை உணர்ந்துகொண்ட சொர்ணம் பேசாமல் இருந்து கொண்டாள். இப்போது அம்மா அங்கே தன்னை நினைத்து தவித்துக் கொண்டிருப்பார்கள் என்பது தேவயானிக்கு தெரியும்.

எப்படியாவது மாலை வரை காத்திருக்காமல் அண்ணன் உடனேயே சென்றுவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் .அண்ணனை எதிர்பார்த்து மீண்டும் காத்திருக்கத் தொடங்கினாள்.

மேலும் ஒரு மணி நேரம் கடந்த பிறகும் சுந்தரேசனிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை .தானாக போன் செய்து பேசுவதற்கும் தேவயானிக்கு கொஞ்சம் பயமாக இருந்தது .மேலும் பாருக்குள்ளிலிருந்து  அந்த மகிசாசுரன் எந்த நிலைமையில் வெளியே வருவான் என்று தெரியாது .கொஞ்சம் நிதானத்தில் இருந்த நேரங்களிலேயே அவன் கண்டபடி பேசிக்கொண்டிருந்தான். இப்போது முழு போதையில் வந்தானானால் ….தேவயானிக்கு மேலே நினைக்கவும் பயமாக இருந்தது.

அண்ணனுக்கு திரும்ப போன் செய்யலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று சுற்றுப்புறம் பரபரப்பானது. அங்குமிங்குமாக  எல்லோரும் ஒடுவதும் வருவதுமாக இருந்தனர்.






" என்ன ஆயிற்று  ? " அந்தப் பக்கம் போன பேரரை நிறுத்தி விசாரித்தாள் அவள்.

" ஹோட்டலுக்குள் தீ பிடித்து விட்டது மேடம் .அணைக்க போகிறோம்  " என்றபடி அவன் உள்ளே ஓட தேவயானியும் பதட்டத்துடன் அவன் பின்னாலேயே சென்றாள்.

தீப்பிடித்து எரிந்த இடம் ஹோட்டலின் பார் இருக்கும் பகுதி .ஏசி ஹாலான அதில் தீ லேசாக பிடித்ததுமே ஏதோ அதிர்ச்சியில் ஹால் கதவு லாக் ஆகி கொண்டதாக பேசினார்கள் .அப்போது அந்நேரத்தில் உள்ளே முப்பது பேர் வரை இருந்திருக்கிறார்கள் .கதவு மூடிக் கொண்டதால் அவர்கள் பயத்துடன் அங்குமிங்கும் ஓடுவதை கதவை தட்டி கூச்சலிடுவதை வெளியில் இருப்பவர்களால் உணர முடிந்தது.

" ஃபயர் ஸ்டேஷனுக்கு போன் பண்ணு ...ஆம்புலன்சை வரவழை...." என்று ஆங்காங்கே குரல் கேட்க பாரின் வாசல் ...ஜன்னல் கண்ணாடி  கதவுகளை மூடி மறைத்திருந்த கனத்த ஸ்கிரீன்கள் தீயில் கருகி எரிந்து விழுந்தன .இதனால் உள்ளே நடந்துகொண்டிருக்கும் களேபரங்களை வெளியே இருப்பவர்கள் இப்போது பார்க்க முடிந்தது.

உள்ளே இருந்தவர்கள் அங்கும் இங்கும் ஓடி டேபிள் சேர்களை கீழே தள்ளி விட்டு ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்து உருண்டு என தவித்துக் கொண்டிருந்தனர் .வெளியே இருப்பவர்களில் சிலர் ஹாலின் கண்ணாடிக் கதவுகளை உடைக்க நினைத்தனர் .ஆனால் பக்கத்தில் செல்லமுடியாமல் கண்ணாடியையும் தாண்டி வெப்பம் தகித்துக் கொண்டிருந்ததால் அருகில் நெருங்க எல்லோரும் தயங்கிக்கொண்டே நின்றிருந்தனர் .வாளி வாளியாக தண்ணீர் ஊற்றப்பட்டு வெப்பத்தை குளிர்விக்க முயற்சி எடுக்கப்பட்டது.

தன் பங்குக்கு ஒருவரை மாற்றி ஒருவர் என வந்துகொண்டிருந்த வாளி  நீரை தானும் வாங்கி   ஊற்றிக் கொண்டிருந்தாள் தேவயானி .ஹாலின் உள்ளே புகை மூட்டத்தில் சரியாக யாரும் தெரியாமலிருக்க தேவயானியின் கண்கள் ஒரு இடத்தை கூர்ந்தது.

 அதோ அங்கே இருப்பது அவன் தானே அவள் இன்னும் கொஞ்சம் அருகே போய் பார்த்தாள்.

அவன் மகிசாசுரனேதான் ...மர டேபிள் சேர்கள் எல்லாம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருக்க அவன் ஒரு ஜன்னல் ஓரமாக போடப்பட்டிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்திருந்தான். முகத்தில் மிக லேசாக மட்டுமே பதட்டம் தெரிந்தது .மற்றபடி வெகு சாதாரணமாக அவனது வழக்கம் போல் கால்மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு சுற்றுப்புறத்தை , சாவு பயத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்களை , அவர்கள் கூக்குரலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய நிலையில் தேவயானி அதிர்ந்தாள் .இவன் என்ன செய்கிறான் ...இப்படி உயிருக்கு ஆபத்தான ஒரு சூழ்நிலையில் ஒரு சாதாரணமான மனிதனால் இதுபோல் நிதானமாக இருக்க முடியுமா ...? ஒருவேளை அதிக போதை இவனது சிந்தனையை மழுங்கடித்து விட்டதா ...தகித்து உடல் தாக்கிய  வெப்பத்தை பொருட்படுத்தாது முடிந்த அளவு  அவன் உட்கார்ந்திருந்த ஜன்னலருகே போய் கவனித்தாள் .அப்படி ஒன்றும் அளவு கடந்த போதையில் அவன் இருப்பது போல் தெரியவில்லை .கண்களில் சொருகல் இல்லை .அவை தெளிவாகவே சுற்றுப்புறத்தை அலசிக் கொண்டிருந்தன.

 




மற்றவர்களைப்போல் பதட்டத்தில் இல்லாத அவனால் மிக எளிதாக உள்ளே இருந்து தப்பிக்க முடியும் .ஆனால் அவன் ஏன் அதற்கு முயலவில்லை ...?  தேவயானியின் மனம் படபடத்தது .கண்ணெதிரே ஒரு உயிர் போவதை பார்க்க முடியுமா....? அவள் கைகளை அசைத்து அவனை அழைத்து கவனம் ஈர்க்க முயன்றாள் .ஆனால் அந்த புகையிலும் கூக்குரலிலும் அவன் கவனம் தேவயானி புறம் செல்லவில்லை.

அவன் அமர்ந்திருந்த சோஃபாவின் கைப்பிடியில்  இப்போது நெருப்பு பரவியது .தன் அருகே நெருங்கி வந்து கொண்டிருந்த நெருப்பை குனிந்து பார்த்தான் அவன். நெருப்பு மெல்ல அவன் கையின் சட்டையை தொட்டுப் பார்த்து உற்சாகமாக மேலே ஏறியது .அதை பார்த்துக்கொண்டே இருந்தவன் தனது பாக்கெட்டில் இருந்து சிகரெட்  ஒன்றை எடுத்து தன் கையை பொசுக்கிக் கொண்டிருந்த நெருப்பிலேயே  பற்றவைத்து தன் வாயில் வைத்துக்கொண்டான்.

அவனுடைய இந்த செய்கையில் அதிர்ந்த தேவயானி உடலைத் தாக்கிய வெப்பத்தை பொருட்படுத்தாமல் கண்ணாடி ஜன்னலின்  அருகே சென்று கையில் கிடைத்த பித்தளை பூஜாடியால் பலம் கொண்ட மட்டும் ஓங்கி கண்ணாடியை உடைத்தாள். எளிதில் உடையக் கூடிய  ரக கண்ணாடி இல்லை அது .ஆனால் அந்நேரம் தேவயானியின் கைகளுக்கு அசுர பலம் வந்திருந்தது.




அவள் உடைத்த உடனேயே உள்ளிருந்து நெருப்பு ஆசையுடன் வெளியே ஓடி வந்து அவள் முகத்தை தாக்கியது.முகத்தை திருப்பி தள்ளி நின்று தன்னை தற்காத்துக் கொண்டாள் அவள் . கண்ணாடி உடைந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த அவனது விழிகள் இப்போதுதான் பதட்டத்தில் விரிந்தன. 

 




 இரு கைகளையும் வேகமாக ஆட்டினான் " நோ ஏஞ்சல் இங்கே வராதே போய்விடு  " கத்தினான் .அந்த கத்தல் தேவயானியின் காதுகளுக்கு எட்டவில்லை.

அவள் ஜன்னல்வழியாக உள்ளே குதித்து அவனை இழுத்து வர முடிவு செய்தாள் . அவளது முடிவை உணர்ந்துகொண்ட அவன் முகத்தில் தீவிர மறுப்பு தெரிந்தது .வேறு வழி தேடி அவன் கண்கள் அங்குமிங்குமாக பரபரப்பாக அலைந்தன.

அப்போது கண கணவென்ற  மணி ஓசையுடன் வாசலில் தீயணைப்பு வண்டி வந்து நின்றது.

What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!