pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சைமலை பூவு – 7

7

உலகின் உன்மத்தங்கள் எல்லாம்

கை கட்டி நிற்கிறது உன்னருகில், 

உலவும் தென்றலுக்குள்ளும்

உளறலாய் உன் ஓசை , 

சதா வில்லேந்தி  திரியும் நீ 

வேந்தனா…? வேட்டுவனா …? 




அறை எண்ணை  சரிபார்த்துக் கொண்டு கதவை தட்டினாள் தேவயானி .இரண்டாவது தட்டில் கதவை திறந்து எட்டி பார்த்த மனிதரின் முன் மண்டை பளபளப்பாய் மின்னியது.

” யாரம்மா நீ  ? ” ஐம்பத்தியைந்து வயது இருக்கலாம் என்று கணித்துக்கொண்டு, 

” சசிதரன் சார் அனுப்பி வைத்தார் சார் . என் பெயர் தேவயானி ” கைகளை குவித்து வணங்கிவிட்டு சசிதரனின் கார்டை நீட்டினாள்.




உடன் மகா சலிப்பு தெரிந்தது அவனிடம் .” உள்ளே வா ” கதவை திறந்து வழி விட்டதில் வேண்டா வெறுப்பு தெரிந்தது .அவள் நீட்டிய கார்டை கையில் வாங்கும் எண்ணம் கூட  இல்லை.

” அப்படி உட்கார் ” உள்ளே நுழைந்ததும் இருந்த ஒரு சிறு பிளாஸ்டிக் ஸ்டூலை காட்டினான் .

” சந்திரசேகரன் சார் நீங்கள் தானே  ? ” சந்தேகத்தை பூர்த்தி செய்து கொள்ள  கேட்டாள்.

” என் கழுத்தில் நேம் போர்டு மாட்டிக்கொண்டு நின்றால்தான் நம்புவாயா ? ” அவன்  எரிந்து விழ அந்த கோபத்திற்கு காரணம் தெரியாமல் திகைத்தாள் தேவயானி.

” சாரி சார் ” உடனடியாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள் அவன் எரிந்து விழுவதற்குக் காரணம் தெரியாமலேயே…

” சார் என்னுடைய படிப்பு விஷயமாக சசிதரன் சார் …” அவளை அமர வைத்ததை மறந்து விட்டது போல் அந்த சந்திரசேகர் ஏதோ பைலைப் பிரித்துப் பார்வையிட ஆரம்பித்துவிட தேவயானி தயக்கத்துடன் இதை கேட்டாள்.




” ஏன்மா ஒரு வேலை  பார்க்க விட மாட்டாயா ? நீ வந்துவிட்டாய் என்று உடனேயே உன்னை கவனித்து விட வேண்டும் நான் ? ” 

மீண்டும் சாரி சொன்னாள் . அவளுக்கு சந்திரசேகரின் எரிச்சலுக்கான காரணம் புரியவில்லை .ஒரு கட்டாக தன் முன்னால் பைலை அடுக்கி வைத்துக்கொண்டு அதனை பிரிப்பதும் பார்ப்பதும் ஏதோ உதடு அசைத்து தனக்குள்  புலம்புவதுமாக சந்திரசேகர் இருக்க பாவம் அவருக்கு ஏதோ ஒரு வேலை டென்ஷன் போலும் என நினைத்து அமைதி காத்தாள்.

” என்ன படிக்க ஆசைப்படுகிறாய்  ? “பைலிலிருந்து  கண் எடுக்காமலேயே சந்திரசேகர் கேட்டான்.

” ஐஏஎஸ் சார் .அது சம்பந்தமான கோச்சிங் கிளாஸ் விபரம் கேட்கத்தான் வந்தேன் ” 

” எவ்வளவு பணம் கொடுப்பாய்  ? ” தனது கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு சந்திரசேகர் அவளை கூர்மையாக பார்க்க தேவயானிக்கு திக்கென்றது..

கோச்சிங் சென்டரில் சேர்வதற்கும்  பணம் கொடுக்க வேண்டுமா…?  இருக்கும் அவளுடைய நண்பர்கள் இரண்டு பேர் ஒரு லட்சத்திற்கும் மேல் இந்த  கோச்சிங்கிற்கு செலவழிப்பதை அவள் அறிவாள் .ஆனால் இது சசிதரன் சொல்லிவிட்ட ஆள் என்பதால் செலவு இருக்காது என்று நினைத்திருந்தாள்.

” சார் கோச்சிங் சென்டர் நீங்கள்தான் நடத்துகிறீர்களா ? ” 




” யார் நடத்தினால் நீ பணம் தருவாய் ? ” 

 அந்த நேரத்தில் கல்வி இப்படி விலைக்கு விற்கப்படுவதை நினைத்து மிகவும் மனம் நொந்தாள் தேவயானி.

” சாரி சார் கோச்சிங்கிற்கு என்று ஒரு நியாயமான தொகையைத் தவிர ஒரு ரூபாய் கூட அதிகமாக என்னால் கொடுக்க முடியாது. அது யார் கோச்சிங் சென்டர் நடத்திக் கொண்டிருந்தாலும் …” தெளிவாக தன் நிலைமையை சொன்னாள் .

சரியாகச் சொல்வதானால் அவளது நிலைமையும் அதுதான். அவர்களது தம்பி கேசவன் தஞ்சாவூரில் மெடிக்கல் படித்துக் கொண்டிருக்கிறான் . அவனது படிப்புக்கான பணத்தையே சுனந்தாவின் பெரும் சலிப்பிற்கிடையே சமாளித்து சுந்தரேசன் கொடுத்துக்  கொண்டிருக்கிறான் .இப்போது தேவயானி படிப்பிற்கு என லட்சக்கணக்கில் செலவழிப்பதென்றால் சுனந்தா நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டாள்.




இவற்றையெல்லாம் மனதில் வைத்திருந்தே தனது கனவு படிப்பை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தாள் தேவயானி .அவளுடைய நிலைமை ஓரளவு அவர்களது பசுமைகுடில் வாடிக்கையாளர்களிக்கு தெரியும் என்பதினால் , சசிதரன் பணச்செலவு அதிகம் இல்லாத இடத்தை தான் தனக்கு காட்டி இருப்பான் என்றே நம்பி இங்கே வந்தாள .ஆனால்…

” இங்கே பாரும்மா கலெக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது .கையில் கொஞ்சம் பசையும் இருக்க வேண்டும் .சாதாரணமாக ஒருவருக்கு இரண்டிலிருந்து இரண்டரை வரை வாங்குவோம். நீ சசிதரன் சார் சொல்லி வந்தவள் .அதனால் உனக்கு ஒன்று வரை என்னால் குறைக்க முடியும். இரண்டரையில் ஒன்று போனால் ….” விரலை அசைத்து தனக்கு தானே கணக்குப் போட்டுக் கொண்டு  ” நீ ஒன்றரை வரை கொடுக்க வேண்டியிருக்கும். இப்போது ஒரு ஐம்பது   கொடுத்துவிடு .கோச்சிங் சென்டர் உள்ளே நுழையும் போது ஒரு ஐம்பது கட்டவேண்டும். பிறகு ஒரு ஐம்பதிற்கு  இரண்டு  மாதம் டயம் எடுத்துக்கொள் .மெல்ல கட்டினால் போதும்…” 

தேவயானி விரிந்த விழி சுருங்காமல் சந்திரசேகரை பார்த்தபடியே இருந்தாள் .” நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் தொகைகள் லட்சங்களும் ஆயிரங்களுமா சார் ? ” 

சந்திரசேகருக்கு மீண்டும் கோபம் வந்துவிட்டிருந்தது.”  ஆமாம் ஒன்னரை லட்சம் .கிண்டர்கார்டன் பிள்ளைபோல கேள்வி கேட்கிறாயே … நீ எல்லாம் கலெக்டருக்கு படித்து என்ன கிழிக்க போகிறாய் ? ” 

எவ்வளவு அநியாயம் …தேவயானியின் மனம் குமுறியது .இந்த ஆளை  இப்போதே ஒரு வழி பண்ண வேண்டுமே வேகத்துடன் அவள் வாய் திறந்தபோது அறைக்கதவு தட்டப்பட்டது.

” ஏய் ஏன் என் மூஞ்சியை பார்த்து கொண்டு உட்கார்ந்து இருக்கிறாய் ?  போய் யார் என்று பார்  ” சந்திரசேகர்  ஏவ தேவயானி திகைத்தாள்.

இவருக்கு எதற்காக நான் ஏவல் செய்ய வேண்டும்.. மனக்குமுறலுடன் போய் கதவை திறந்தவள் இன்னமும் மனம் நொந்தாள் .அங்கே நின்று கொண்டிருந்தவன் அந்த மகிஷாசுரன்.

” நீ வரவில்லை ஏஞ்சல் …நானே உன்னை தேடி வந்து விட்டேன் ” மென் குரலில் உதடசைத்தவனிடம் வழக்கமான புன்னகை .

நடக்கும் சம்பவங்களை புரிந்து கொள்ள முடியாமல் தேவயானி திகைத்து நின்றபோது ”  இடித்த புளி மாதிரி அப்படியே நின்று கொண்டு இருக்கிறாயே எதற்கு ? யார் வந்திருப்பது …? வாயை திறந்து சொல்ல மாட்டாயா  ? ” கத்தியபடி வந்த சந்திரசேகர் வாசலில் நின்று கொண்டிருந்தவனை பார்த்ததும் ஒருவித பதட்டத்திற்கு உள்ளானான்.

” சார் …சார்… நீங்களா …வாங்க… வாங்க உள்ளே வாங்க ” சந்திரசேகரின் பதட்டமான வரவேற்பிற்கு தேவயானி தானாகவே பின்னடைய அவன் அறைக்குள் வந்து மேஜை முன்னால் இருந்த குஷன் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

” என்னய்யா இங்கே ஒரே சத்தமாக கேட்கிறதே …என்ன  விசயம் ? ” கேட்டபடி ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.

தேவயானிக்கு இப்போது வரை அந்த சந்திரசேகர் மேல் பெரிதான அபிப்ராயம் எதுவும் கிடையாது .ஆனாலும் வயதில் மூத்தவரை அவன் இப்படி மரியாதை இல்லாமல் பேசுவது அவளுக்கு பிடிக்கவில்லை .அதனால் ஒருவித முறைப்புடனேயே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.




” சார் இது சும்மா சார் …ஏதோ கோச்சிங் கிளாஸ் சேர்த்து விட வேண்டுமாம் .பாவம் தர்மத்துக்கு படிக்கிற பிள்ளை போல .கையில் காசு இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்தது ” 

சந்திரசேகரின் விவரிப்பில் வாயடைத்துப் போனாள் தேவயானி. இந்த ஆளுக்கு நாக்கு எப்படி எல்லாம் வளைகிறது…?

அவன் இது எதையும் கவனிக்கவில்லை ” யோவ் ஏதோ கையெழுத்து வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாய் போல ” 

” சார் ஆமாம் சார்… வேண்டும் சார்.

 நீங்கள் கையெழுத்து போடுகிறீர்களா சார் ? நிறைய சேர்ந்து போய்விட்டது சார்  ” பரபரப்புடன் டேபிள் மேலிருந்த பைல்களை அவன் முன்னால் பிரித்து வைக்க தொடங்கினான் சந்திரசேகர்.

” முதலில் அந்த பெண்ணை அனுப்பி வைத்துவிட்டு வாய்யா . பிறகு  போடுகிறேன் ” சிகரெட் புகையை அறையின் விதானத்திற்கு ஊதினான்.

சந்திரசேகர் வேகமாக தேவயானி பக்கம் திரும்பினான் .” இங்கே பாரும்மா இதுதான் கோச்சிங் சென்டர் அப்ளிகேஷன் .நீ இதை இப்போது புல்  பண்ணி கொடு  ” அவன் நீட்டிய அப்ளிகேஷனுக்கு ஆச்சரியப்பட்டபடி பத்தே நிமிடத்தில் அதனை நிரப்பி  கொடுத்தாள் தேவயானி.

பட படவென அவள் கோச்சிங் சென்டரில் சேர்ந்து இருப்பதற்கான படிவத்தை  அவளிடம் நீட்டிய சந்திரசேகர் ” எப்போது சேர வேண்டும் என்று உனக்கு தகவல் வரும்மா . இப்போது நீ போகலாம் ” என்றான் .

சற்றுமுன் மலையாக அவள் முன் நின்ற பிரச்சனை சடுதியில் உதிர்ந்து அவள் காலடி மண்  ஆனதை நம்ப முடியாமல் பார்த்தாள் தேவயானி .ஆச்சர்யமாக அவன் பக்கம் திரும்ப அவன் ”  ஓகே தானே  ? ” என்று இதழ் அசைத்தான் .தேவயானிக்கு குப்பென்று வியர்த்துவிட்டது.

இந்த சந்திரசேகரை இவனால் கட்டுப்படுத்த முடியுமா ? எனக்காக தான் இதெல்லாம் செய்தானா ? இது சம்பந்தமாக மேற்கொண்டு யோசிக்க அவளுக்கு பயமாக இருந்தது.

” ரொம்ப நன்றி சார் ” நன்றியை சந்திரசேகருக்கு சொல்லியபடி ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க அவன் உதடு பிதுக்கினான். எதற்கோ… இவனுக்கு நன்றி சொல்வேன் என்று நினைத்தான் போல… அலட்சியமான விழி அசைவு ஒன்றுடன் தேவயானி வெளியேறி விட்டாள்.

” அந்தப் பெண்ணை நல்லபடியாக அனுப்பி வைத்துவிட்டேன் .இப்போது கையெழுத்து போடுங்கள் சார் ”  சந்திரசேகர் விரித்து வைத்த பைலை அலட்சியமாக ஒற்றை விரலால் தள்ளினான் அவன். இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி சோம்பல் முறித்தான்.

” சார்….”  சந்திரசேகர் அழாத குறையாக அவனை பார்க்க ”  ஐத்து நிமிடம் முன்னால் கூட எனக்கு கையெழுத்து போடும் மூட் இருந்தது .இப்போது ஒற்றை எழுத்து கூட எழுதும் மூட் இல்லை . யோவ் சந்திரா நீர் ஒன்று செய்யும் …இந்த பைலை எல்லாம் மூட்டை கட்டி அதோ அந்த லாப்ட்  மேல் போட்டு வையும் .இன்னும் இரண்டு நாட்களில் கையெழுத்து போட முடியுமா என்று பார்க்கிறேன் ” 




சந்திரசேகருக்கு கண்கள் கலங்கிவிட்டன .” சார் உங்கள் கையெழுத்து இல்லாமல் நிறைய வேலைகள் அப்படி அப்படியே கிடக்கிறது சார் .உங்களிடம் கையெழுத்து வாங்காவிட்டால் என் வேலைக்கு ஆபத்து வந்துவிடும் சார் . ப்ளீஸ் சார் ஒரே ஒரு பைலிலாவது கையெழுத்து போடுங்கள் ” 

” வேலை போனால்தான் என்னய்யா ?  நீ தான் கைவசம் வேறு தொழில் வைத்திருக்கிறாய் போலவே …இதோ இப்படி பணம் வாங்கிக் கொண்டு கோச்சிங் கொடுப்பதைத்தான் சொல்கிறேன் ” 

“ஐயோ இல்லை சார.  இது என்னுடைய சித்தப்பா பையன் வைத்திருக்கும் கோச்சிங் சென்டர் .அவனுக்கு ஆள்  சேர்த்து விட்டால் எனக்கு கொஞ்சம் கமிஷன் கொடுப்பான். அதனால் நான் இந்த கோச்சிங் சென்டர் பற்றி எல்லோரிடமும் சொல்லி வைப்பேன். இதில் எனக்கு ஒன்றும் பெரிதாக வருமானம் கிடையாது சார் ” 

” சரி அதை விடும் . எனக்காக இன்னொரு வேலை செய்கிறீரா ? ” 

” சொல்லுங்கள் சார் .உடனே செய்கிறேன் .கையெழுத்துப் போட்டு விடுவீர்கள் தானே ? ” 

” ம் ….ம் …இதோ இப்போது வந்துவிட்டுப் போகிறாளே அந்த ஏஞ்சலைப் பற்றிய ஏ டூ இசட்  விவரங்கள் எனக்கு வேண்டும் .தெரிந்து கொண்டு வந்து எனக்கு சொல்லு ” 




சந்திரசேகரின் முகம் மாறியது .” எனது தொழிலையே  மாற்றுகிறீர்களே சார் ” 

” யோவ் கமிஷன் வியாபாரம் பார்ப்பவன் தானே நீ . இதில் மட்டும் உனக்கு என்ன குறைச்சல்?  இதற்கும் நான் கமிஷன் கொடுப்பேன் .நிறையவே கொடுப்பேன்.

போ போய் சொன்ன வேலையை பார் ” 

சர்ரென்று அமர்ந்திருந்த நாற்காலியை பின்னால் தள்ளிவிட்டு எழுந்தான்.

” சார் எனக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் சார் .இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னை செய்ய சொல்கிறீர்களே ? “

வெளியேறிக் கொண்டு இருந்தவன் விழி விரிய மீண்டும் அமர்ந்துவிட்டான்.” யோவ்  சந்திரா நீ சொல்வது உண்மையா ?  உனக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்களா ? அதுவும் இரண்டு பேர் …சூப்பர்யா .சொல்லு சொல்லு அவர்களுக்கு எத்தனை வயதிருக்கும் ? பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள்  ? கொஞ்சம் பார்க்கும்படி இருப்பார்களா இல்லை உன்னை போல் தான் இருப்பார்களா ? உன்னைப்போல் இருந்துவிட்டால் சகித்துக்கொள்ள எனக்கு கொஞ்சம் கஷ்டம் ” 

அவனுடைய விசாரணையில் சந்திரசேகரின் முகம் வெளுத்தது ”  சார் என்னை விட்டு விடுங்கள் சார். நான் நீங்கள் கேட்ட விவரங்களை எப்பாடுபட்டாவது சேமித்துக் கொடுத்து விடுகிறேன் .இப்படி எல்லாம் பேசாதீர்கள்  ” கையெடுத்துக் கும்பிட்டான். 

” சரி பிழைத்துப் போ .நான் சொன்ன வேலையை மட்டும் மறந்து விடாதே .இன்னும் இரண்டு நாட்களில் அவளை பற்றிய முழு விவரங்களும் எனக்கு வேண்டும் “சொல்லிவிட்டு அவன் வெளியேற சந்திரசேகர் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.

—————– 




தான் வந்த வேலை இவ்வளவு எளிதாக முடியும் என்று தேவயானி எதிர்பார்க்கவில்லை. அதுவும் அந்த சந்திரசேகரை பார்த்த பிறகோ நிச்சயம் தனது தேவை நிறைவேறப் போவதில்லை என்றே நினைத்திருந்தாள். சசிதரன் மூலமாக வந்திருப்பதால் , நான் பணம் கொடுக்கமாட்டேன் என்பதாலேயே  சந்திரசேகர் முதலிலிருந்தே தன்னிடம் சிடுசிடுப்பாக பேசி இருக்கிறான் என்று இப்போது உணர்ந்து கொண்டாள்.

அவள் இப்போது உணர்ந்ததை அவன் அப்போதே உணர்ந்து இருக்கிறான் .அதாவது அவள் சந்திரசேகரின் பெயரைச் சொன்னபோதே… அதனால்தான் அறை வரை  தேடி வந்து அவளுக்கு உதவி ….நிறுத்து  நிறுத்து அவளுடைய மனசாட்சி அவள் எண்ண ஓட்டத்தை தடை செய்தது .அவன் வந்தான் என்று என்ன நிச்சயம்  ? அந்த சந்திரசேகருக்கும் இவனுக்கும் வேறு ஏதோ வேலை தொடர்புகள் இருக்கும் போல் தெரிகிறது .அவன் அதற்காகவே வந்திருக்கிறான்… நீயாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதே மனசாட்சி தேவயானியின் மண்டையில் கொட்டியது.

சரி தான் தண்ணி அடித்துக்கொண்டு காட்டுக்குள் பெண்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் இவனைப் போன்ற அரக்கர்களுக்கு இது போன்ற நல்ல எண்ணங்கள் ,  இப்படி திறமையாக காரியம் சாதிக்கும் யுக்திகள்  எங்கிருந்து வரும்  ? காக்கை அமர விழுந்த பனம் பழம் இது… ஒரு வழியாக நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஒரு முடிவிற்கு வந்த தேவயானி தனது அண்ணனின் நம்பரை போனில் அழுத்தினாள்.

எதிர்ப்புறம் முழுதாக ரிங் போய் கட்டானது .அண்ணன் ஏதாவது வேலை பார்த்துக் கொண்டிருக்கலாம் பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் கூப்பிடலாம் என்று நினைத்தபடி அந்த ஹோட்டலின் ரிசப்ஷன் சோபாவிலேயே அமர்ந்தாள்.

” ஏய் ஏஞ்சல் இன்னமும் நீ போகவில்லையா ?  எனக்குத் தெரியும் .உனக்கு என்னை விட்டு போக மனம் வராது என்று .எனக்காகத் தானே காத்துக் கொண்டிருக்கிறாய்  ? ” அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே அவள் எதிர் சோபாவில் வந்து அமர்ந்தான் அவன் .

அலங்காரத்திற்காக ஹோட்டல் வரவேற்பறையில் ஓரமாக வைத்திருந்த பெரிய பித்தளை குவளையை எடுத்து அவன் மண்டையை உடைக்கும் வேகம் வந்தது தேவயானிக்கு .இவனுக்கு மனதில் பெரிய மன்மதன் என்ற நினைப்பு போலும் …எப்போதும் இப்படி தப்பு தப்பாகவே பேசிக்கொண்டு இருக்கிறான்.

” பார்க்கும் எல்லோரிடமும் இப்படித்தான் பேசுவீர்களா  ? ” கோபமாக கேட்டாள்.

” இல்லையே பெண்களிடம் மட்டும். அதுவும் உன்னைப்போல் அழகான பெண்களிடம் மட்டும் இப்படி பேசுவது என் வழக்கம் ” 

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவனை வெறுப்பாக பார்த்தாள் தேவயானி.

” என்ன பார்க்கிறாய் ஏஞ்சல்  ? அழகாகத்தான் இருக்கிறேன் …பிறகு ஏன் என்னை அவாய்ட் பண்ணுகிறாய் ? ” 

இவனிடம் இருந்து தப்புவதற்கு எளிதான வழி உடனே இந்த இடத்தை விட்டு நகர்வது தான் .ஆனால் அப்படி உடனடியாக வெளியேறுவது தேவயானிக்கு முடியாது .இவனுக்கு பயந்து அப்படியே வெளியேறினாலும் இந்த இடத்திற்கு வெளியே இவனைப் போல் எத்தனை சாத்தான்களோ ? 

பார்க்கும் ஆண்களை மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவு தான் அழகு என்பது தேவயானிக்கு தெரியும். பெரும்பாலான ஆண் பார்வைகளை சதைதேடும் பிண்டங்களாக பார்த்து தான் அவளுக்கு பழக்கம் இதோ இவனைப் போல் ….இப்போது இந்த ஒரு சிங்கத்திற்கு பயந்து காட்டு யானை கூட்டத்திற்குள் மாட்டிக் கொள்ள அவள் தயாராக இல்லை.

ஆள் அதிகமான நடமாட்டம் இருக்கும் இந்தப் பகுதியில் இதோ இவனது சிறு இடையூறை எதிர்கொள்ள தயாரானாள் அவள் .யாரோ என்ன வேலைக்கோ  அந்த ஹோட்டலுக்கு வந்த தெருவோடு போகிறவன் …என்ற பாவனையோடு அவனைப் பார்த்துவிட்டு தன் விழிகளை  வரவேற்பில் இருந்த பெரிய மீன் தொட்டியின் மேல் பதித்துக் கொண்டாள்.




குறுஞ்சிரிப்பு ஒன்றுடன் அவளது செய்கைகளை கவனித்துக் கொண்டிருந்தவன் மெலிதாய் கை தட்டினான்.

” பிரமாதம் ஏஞ்சல். என்னை தெரியாதது போன்றே காட்டிக் கொள்கிறாயே ” 

தேவயானி மீன்களின் விளையாட்டில் ஆழ்ந்து போயிருந்ததால் சுற்றுப்புறம் எதுவும் அவள் கருத்தில் பட்டாற் போன்றே தெரியவில்லை .அவன் சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான்.

” அப்படியே வரைந்து வைத்த பார்பி பொம்மை போலவே  இருக்கிறாய்  ” ரசனையுடன் அவன் கண்கள் அவள் உருவத்தை முழுவதுமாக தழுவியது .உடலில் ஓடிய நடுக்கத்தை மறைத்துக்கொண்டு அசையாமல்  அப்படியே அமர்ந்திருந்தாள் தேவயானி.

” நன்றாக யோசித்துச் சொல் ஏஞ்சல் .என்னை தெரியவில்லையா உனக்கு  ? ” தேவயானியிடம் இருந்து சிறு இமை அசைவு கூட இல்லை.

” ம் சரி .எனக்கு வேறு வழி தெரியவில்லை  ” என்று சொன்னபடி எழுந்து நின்றவன் கையில் இருந்த சிகரெட்டை சுண்டி கீழே எறிந்தான் .பிறகு எழுந்து அவளை நோக்கி எட்டு வைத்து வரத் துவங்கினான் .

கயலை கவனித்துக்கொண்டிருந்த தேவயானியின் கயல்விழிகள் படபடத்தன ..தவிப்புடன் அவள் கண் பாப்பாக்கள் உருண்டன .நிதானமாக அவள் எதிரே வந்து நின்றவன் மிக மெதுவாக தனது சட்டையின் பட்டன்களை சுழற்ற துவங்கினான்.




தனது மோன  தவத்தை கலைத்த தேவயானி அலறினாள்.

” மகிஷாசூரா என்ன செய்கிறாய் ? ” 

What’s your Reaction?
+1
0
+1
6
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Anre kathiyil onru pottum unakku innum nambikaiyaa villan…..alagi PanAm iruntaal Ella pengalum kaalil viluvaangalaa dei.ava vivaram terinji enna seiya pogirai.kupidrathu engal paarkire paarvaiyai paar .

jamunarani
jamunarani
4 years ago

Mam இவன் உண்மையாகவே மகிஷாசூரனா?

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!