Serial Stories

நந்தனின் மீரா-33

33

முகாந்திரங்களற்ற உன் முன்கோப பொழுதுகளை
முதிர்ந்த நெல்லென சமனித்து கொள்கிறேன் ,
சலித்துக்கொள்ளாதே சாணக்யா
மணம் கமழும்
உன் தந்திர ஜவ்வாதுகளில்
சலிப்பேற்படுவதேயில்லை என்னுள் .

” என் கணவருக்கும் , என் வீட்டினருக்கும் என் மேல் பிடிப்பில்லாதது போல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க நினைத்தாயே …ஏன் ..? “

” அது ஒன்றும் பொய்யில்லை .உணமைதான் .அத்தை வீட்டில் யாருக்கும் உன்னை பிடிக்காது.எல்லோருமே கடமைக்காகத்தான் உன்னை சகித்துக்கொண்டிருக்கின்றனர் .அத்தான் உட்பட …கடமைக்காகத்தான் உன்னுடன் வாழ்ந்து ஊருக்காகத்தான் உனக்கு குழந்தையை கொடுத்துள்ளார் ….”

தான் கூட ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி நினைத்ததற்கு இப்போது வருந்தினாள் மீரா .

” இல்லை மிருணாளினி …என் வீட்டினர் , என் மாமியார் , மாமனார் , என் நாத்தனார்கள் , என் கொழுந்தன் , என் கணவர் எல்லோரும் எனக்காக என் விருப்பத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் …” ஒவ்வொரு ” என் ” னிலும் அழுத்தம் கொடுத்தாள் .

” இப்படியா நினைத்துக்கொண்டிருக்கிறாய் …? கொஞ்சம் முன்பு உன் கர்ப்ப செய்தியை சொன்னாயே யார் .. ..யாரம்மா உன்னை தலையில் தூக்கி வைத்து ஆடியது …? ” கிண்டலாக கேட்டாள் .

” இது சினிமாவோ , டிவி சீரியலோ இல்லை மிருணாளினி .வாழ்க்கை .சாவு வீட்டிற்குள் தெரிந்து விட்ட என் கர்ப்ப செய்திக்கு எந்த அளவு சந்தோசப்பட முடியுமோ …அதை விட அதிகமாகவே சந்தோசப்பட்டார்கள் என் வீட்டினர் .”

” ஆமாம் பார்த்தேனே ..அத்தான் முகத்தை திருப்பிக்கொண்டு போனாரே ….”

” பிறகு உன்னை வைத்துக்கொண்டு கட்டிப்பிடித்து முத்தமா கொடுக்க முடியும் ..? “

” ஏய் …என்னடி வாய் ஓவராக பேசுகிறாய் …? நான் இப்போது நினைத்தாலும் அத்தையிடம் பேசுகிற விதமாக பேசி உன்னை உன் அம்மா வீட்டிற்கு விரட்டிவிட்டு நான் அத்தானின் மனைவியாக அங்கே வந்து உட்கார்ந்துவிடுவேன் .பார்க்கிறாயா …? ” சவால் போல் கட்டைவிரலை உயர்த்தினாள் .

நிதானமாக அவள் பேசி முடிக்கும் வரை பொறுமையாக பார்த்திருந்து விட்டு ” பிறகு தனசேகரனுக்கு என்ன பதில் சொல்லுவாய் …? ” என்றாள் மீரா .

” த…தனசேகரன் …அ…அவரை …பற்றி உனக்கு …”

” உன் அம்மா ஒருவர் போதும் .மகள் அமெரிக்கா போகிறாள் என அங்கே உட்கார்ந்து பெருமை பேசிக்கொண்டிருந்தார் …உனக்காக வாய்த்திருக்கும் இந்த நல்ல வாழ்க்கையை தொலைத்து விட்டு என் வீட்டில் வந்து உட்காருவாயா நீ …? “

” நிச்சயம் மாட்டேன் …” அழுத்தமாக மறுத்தாள் மிருணாளினி .

” பிறகு ஏன் இப்படி ஒரு நாடகம் …? அத்தானின் மேலுள்ள அளவில்லாத காதல் இப்படி செய்ய உன்னை தூண்டியிருந்தால் ..உனக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கும் இந்த நேரத்திலாவது அதையெல்லாம் மறந்து விடு … “

” அத்தான் மீது காதலா …? அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு தலையாட்டிக்கொண்டிருக்கும் ஒரு ஆண் , இந்த மிருணாளினியின் காதலை பெறும் தகுதியில்லாதவன் .என்றைக்கு அம்மாவிற்காக , அப்பாவிற்காக , பாட்டிக்காக …உன்னை திருமணம் செய்ய சம்மதித்தானோ …அன்றே …அந்த நொடியே அவனை என் மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டேன் ….”

மிருணாளியின் பேச்சில் அயர்ந்தாள் மீரா .




” பிறகு ஏன் இப்படி எங்கள் வாழ்க்கையை கலைக்க நினைத்தாய் …? “

” என் மனதில் ஆசையை உண்டாக்கிவிட்டு பிறகு கலைத்தனரே .அதற்கு தண்டனை தரவேண்டாமா …அந்த வீட்டினர் அனைவருக்கும் .அதற்குத்தான் .உன்னை வீட்டை விட்டு விரட்டி உங்கள் திருமண பந்தத்தை முறிக்க வேண்டும் .நீ பிரிந்து போய்விட்டால்  அத்தான் வேறு திருமணம் செய்து கொள்ளமாட்டார் .அந்த அளவு உன் மீது அவருக்கு காதல் .அவர் தனிமரமாக நிற்பதை பார்த்து வேதனையில் சாக வேண்டும் அந்த குடும்பத்திலுள்ளவர்கள் .இவர்களின் துன்பத்தை  நான் …அமெரிக்காவில் ஒரு உயர்ந்த வாழ்வு வாழ்ந்து கொண்டு பார்த்து ரசிக்கவேண்டும் .”

” அதற்காகவே வந்திருந்த வரன்களையெல்லாம் அலசி ஆராய்ந்து , தட்டி விட்டு …இதோ இந்த பெரிய வரனை பிடித்து வைத்துள்ளேன் .என் எதிர்காலம் வளமாக என் முன் விரிந்திருக்கிறது .நல்லவேளை அந்த நந்தகுமாருடனான வறண்டு போன வாழ்விலிருந்து தப்பிவிட்டேன் ….”

” அவருடன் வாழ்வது வறண்ட வாழ்வா …? உனக்கு தெரியாது மிருணாளினி .அவருடனான வாழ்க்கை எவ்வளவு இனிமையானதென்று .அது எனக்கு மட்டும்தான் தெரியும் ….”

கனவில் சொக்கிய மீராவின் கண்களை எரிச்சலாக பார்த்த மிருணாளினி ….

” வேண்டாம் மீரா .சாதாரணமான இந்த அணைப்பிலெல்லாம் மயங்கிவிடாதே .அத்தான் எந்த நேரமும் அம்மாவிற்கு தலையாட்டிக் கொண்டிருக்கும் தஞ்சாவூர் பொம்மை .எந்த நேரமும் அந்த பொம்மை அம்மா சொன்னாரென  உன்னை தூக்கி எறிந்துவிடும் .
அப்போது தடுமாறி நிற்பதை விட இப்போதே விலகி விடு .குழந்தையை கலைத்து விட்டு ..உன் அம்மா வீட்டிற்கு….” மெல்ல விசம் கலக்க முற்பட்டாள் .”

” மீண்டும் என்னை அறைய வைத்துவிடாதே மிருணாளினி …என் குழந்தை .என் உயிர் ” கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டாள் .

” நல்லதை சொன்னால் கேட்டுக் கொள்ளும் எண்ணமில்லை உனக்கு .எப்படியோ போ …என்றாவது கண்ணை கசக்கிக்கொண்டுதான் நிற்க போகிறாய் பார் …” சாபம் போல் சொன்னாள் .

” நானும் பதிலுக்கு சொல்லுவேன் மிருணாளினி .ஆனால் நீ திருமணமாக போகும் பெண் .என் வாயில் வருவது பலித்து உன் வாழ்வு பாழாகிவிடக்கூடாது .உன் மணவாழ்வு மிக மகிழ்ச்சியாக அமைய வேண்டும் ஏனென்றால் இந்த வாழ்வு உனக்கு என் கணவர் அமைத்து கொடுத்தது ….”

மிருணாளினி திடுக்கிட்டாள் .

” அது எப்படி உனக்கு ….சை இந்த அம்மா ஒரு ஓட்டைவாய் .இப்படியா எல்லாவற்றையும் உளறுவாள் ….? ” என முணுமுணுத்தாள் .

” தன்னால்தான் உன் வாழ்வு பாழாகிவிட்டதென்ற வருத்தத்தில் அதை சீர் செய்ய வேண்டுமென்று எண்ணத்தில் உனது மனது போன்றே ஒரு வாழ்வை தேடி கண்டுபிடித்து உனக்கு அமைத்து கொடுக்க எண்ணினாரே. அவருக்கு நீ செய்யும் நன்றிக்கடன் இதுவா …? “

” என்ன …பாழான என் வாழ்வை சீரமைக்கிறாரா…காரணம் அதுவல்ல .என்னால் அவருடைய இப்போதைய வாழ்வு …அதாவது உன்னோடுடனான காதல் வாழ்வு பாழாகிறது .அதை சரி செய்ய என்னை அப்புறப்படுத்த வேண்டும் .அதனால்தான் இந்த திருமண ஏற்பாடுகள் ….” போட்டு உடைத்தாள் .

” அப்படி அவர் சொன்னாரா …? “

” வெளிப்படையாக சொல்ல வேண்டுமா …? மூஞ்சியை பார்த்தாலே தெரிகிறதே .முதன் முதலில் வாங்கிய கார் .என் மீராதான் உட்கார வேண்டுமென்று சாவியை என் கையிலிருந்து பிடுங்குகிறான் ….” அனல் மூச்சு விட்ட மிருணாளினியை பார்த்து வந்த சிரிப்பை அடக்கினாள் மீரா .




அடக்கிய அவள் சிரிப்பை கண்டுகொண்ட மிருணாளினி கோபத்தோடு அவள் கையை பற்றி இழுத்துக் கொண்டு போய் கண்ணாடி முன் நிறுத்தினாள் .

” பார் உன்னையும் பார் …என்னையும் பார் .யார் அழகு …? என்னை இவ்வளவு அழகான என்னை ஒருவனால் மறுக்க முடியுமா …? இந்த நந்தகுமார் மறுக்கிறானென்றால் அவன் என்ன ஆண் …? என்னுடன் திருமணம் எனும் வரை பழகிவிட்டு உன்னை காதலிக்க எப்படி அவனால் முடிந்தது …? நீயும் உன் மூஞ்சியும் …வடு போல் உன் மச்சமும் ….” பொறாமை அப்பட்டமாக தெரிய புலம்பினாள் மிருணாளினி .

மிருணாளினியால் வெறுக்கப்பட்ட அந்த மச்சம் …கணவனால் மிக விரும்பப்படுவதை …இதமாய் அவன் அடிக்கடி வருடும் ..சமயம் கிடைக்கும் போதெல்லாம் முத்தமிடும் அந்த மச்சத்தை பெருமையாய் வருடினாள் மீரா .

” இந்த மச்சம் என் முகத்திற்கு ரொம்ப அழகு இல்ல …? ” கண்ணாடியில் தன்னைத்தானே சிலாகித்துக்கொண்டாள் .

கணவனின் காதல் தந்த இனிய நினைவில் மிளிர்ந்த அவள் முகம் மிக அழகாக நீரில் மிதக்கும் செந்தாமரையாக மாறி ஜொலிக்க ஆரம்பிக்க …திடீரென இவள் ஏன் இவ்வளவு அழகாக தெரிகிறாள் …புரியாத புதிர்க்கு விடையறியாது …

” ஏய் வெளியே போடி …” கத்தினாள் மிருணாளினி .

” பேசி முடித்து விட்டாயானால் நாம் போகலாம் மீரா….” வெளியிலிருந்து வந்த குரல் நந்தகுமாருடையதே …

எதிர்பாரா அவன் வரவில் திக்கென்ற மனதுடன் திரும்பிப் பார்த்தனர் இருவரும் .

பார்த்ததும் …” ஐயோ அத்தான் இதென்ன கோலம் …? ” விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள் மிருணாளினி .




What’s your Reaction?
+1
24
+1
30
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
21 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!