Serial Stories

நந்தனின் மீரா-34

34

தகிக்கும் என் சூரியக்கனவுகளில்
குளிக்கும் நிலவென நீ புகுந்தென்
பசலை களைந்த பொழுதுகளில்
பறிபோன கவலையின்றி
பரிமளிக்கிறது
என் யவ்வனம் .

” ஐய்யோ …கண்ணை கொண்டு பார்க்க முடியவில்லையே… ” மிருணாளினி தொடர்ந்து சிரிக்க தீர்க்கமான பார்வையோடு அவளை நெருங்கினான் நந்தகுமார் .

கைகளை மார்போடு கட்டிக்கொண்டு ஊசி போன்ற பார்வையால்  அவளை நேருக்கு நேர் பார்த்தான் .மிருணாளினியால் அதிக நேரம் அவனை பார்க்க முடியவில்லை .சிறிது சிறிதாக சிரிப்பு தேய்ந்து மறைந்து தலை குனிந்தாள் .

” சை …” ஒற்றை வார்த்தைதான் .அதில் அத்தனை வெறுப்பு .நந்தகுமார் கோபமாக பார்த்திருந்தாலோ , பேசியிருந்தாலோ …மிருணாளினி அவனுக்கும் மேலாக எகிறியிருப்பாள் .ஆனால் இந்த ஒற்றை வார்த்தை …அது காட்டிய வெறுப்பு …உள்ளுக்குள் நொறுங்கினாள் .

” போகலாமா மீரா …” என்ற போது நந்தகுமாரின் குரலில் அளவற்ற காதலும்  , பாசமும் வந்திருந்தது .திரும்பியவன் விழுங்கும் பார்வையுடன் தன்னை பார்த்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து விழிகளை உயர்த்தி என்னவென்றான் .

ஒரு பேரனாக தன் பாட்டிக்குரிய சடங்குகளை முடித்துவிட்டு தலைமுடியையும் , மீசையையும் நம் சடங்குகளுக்கேற்ப கொடுத்துவிட்டு ஒரு முழுமையான ஆணாக கம்பீரமான புதிய தோற்றத்தில் நிமிர்ந்து நின்ற தன் கணவனை பெருமிதமாக விழியகற்றாமல் காதலாக பார்த்தபடியிருந்தாள் மீரா .

மனைவியின் காதல் பார்வையை உணர்ந்த நந்தகுமார் மின்னல் மின்னும் கண்களுடன் அவளை நெருங்கினான் …

” இந்த மாதிரி நேரத்தில் இப்படி தனியாக ஸ்கூட்டியில் வரலாமா …? ” செல்லமாய் கடிந்து கொண்டு அவள் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டான் .




” போகலாம் …” வாசல் வரை போய் நின்றவன் திரும்பி …
” இனி எங்கள் வீட்டு பக்கம் வர வேண்டிய தேவை உனக்கு இருக்காது .தனசேகரிடம் நான் ஒன்றும்  சொல்லமாட்டேன். ” அழுத்தமாக மிருணாளினியின் நிலைமையை அவளுக்கு உணர்த்திவிட்டு வெளியேறினான் .

தன்னை  கவனமாக ஸ்கூட்டி ஓட்ட வைத்து பொக்கிசமாக காத்தபடி பின்னால் வரும் கணவனை ஸ்கூட்டி கண்ணாடி வழியாக பார்த்தபடியே  வந்தாள் மீரா .

வீட்டு மனிதர்களை தவிர மற்றவர்கள் போய்விட்டிருக்க வெறிச்சிட்டிருந்தது வீடு .இரவு முழுவதும் தூங்காததால் ஆங்காங்கே சுருண்டு தூங்கி கொண்டிருந்தனர் .

” என்னம்மா இப்படி சொல்லாமல் , கொள்ளாமல் எங்கே போனாய் …? வயிற்றுப் புள்ளைக்காரியை காணோமேன்னு நான் பதறிட்டிருக்கேன் .” சுந்தரி படபடக்க …

மாமியாருக்கு அவளின் அண்ணன் மகளை விளக்கி விடும் முடிவோடு வாயை திறந்த மீராவை கைகளை பற்றி தடுத்தான் நந்தகுமார் .

” அம்மா ஒன்றுமில்லை .பாட்டியை நினைத்து மனது சரியில்லாமல் மீரா பார்கில் போய் உட்கார்ந்திருந்தாள் .நான் போய் அழைத்து வருகிறேன் .இப்போது நாங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறோம் .ஏதாவது குடிக்க தருகிறீர்களா …? “

” இதோ தருகிறேன்பா …” சுந்தரி அடுப்படியினுள் செல்லவும் தன்னை கேள்வியாய் நோக்கிய மனைவி பக்கம் திரும்பியவன் ….

” அம்மாவுக்கு மிருணாளினியை பற்றி இப்போது தெரியவேண்டாம் மீரா .அம்மா மிகவும் வருத்தப்படுவார்கள் .பிறகு சொல்லிக் கொள்ளலாம் …” கெஞ்சலாய் கேட்டான் .

சம்மதமாய் தலையசைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள் மீரா .எதிரே அமர்ந்திருந்த கணவனை பார்த்தவளின் மனதில் குறும்பு தலை தூக்கியது .

மெல்ல தன் இருக்கையிலிருந்து எழுந்து கணவனருகில் வந்து நின்றவள் அவன் முகத்தை பற்றி  குனிந்து அவனது மொட்டைத்தலையில் அழுத்தமாக இதழ் குறுகுறுக்க முத்தமிட்டாள்.

” இப்போ ரொம்ப அழகாய் இருக்கீங்க …” கிசுகிசுவென சொன்னவள் மீசை எடுத்த அவனது மோவாயை ஆட்காட்டி விரலால் வருடிவிட்டு அடுத்த முத்தத்தை தாடி எடுத்த தாடையில் பதித்தாள் .

” இந்த முத்தம் ஓ.கேவா …? ” என்றவளை இழுத்து மடியில் அமர்த்தியிருந்தான் நந்தகுமார் .

” ம் ….அதே முத்தம் .நீ முதலில் கொடுத்த அந்த முத்தம் .என் மனைவியின் காதல் பொங்கும் முதல் முத்தம் …” மெல்லிய குரலில் அரற்றியபடி அவளை இறுக அணைத்தான் .

வேகமாக இதழை நோக்கி முன்னேறிய போது …

” நந்து ஆரஞ்சு இருந்தது .பிழிஞ்சிட்டேன் .வெயிலுக்கு அதுதான் சரி .சீனி போடவா …? ” உள்ளிருந்து சுந்தரி குரல் கொடுக்க , மீரா அவசரமாக நந்தனின் மடியிலிருந்து சரிந்து பக்கத்தில் அமர்ந்தாள் .

” வேண்டாம்மா …ஏற்கெனவே நிறைய தித்திப்பு இதிலும் சீனி …வேண்டாம்  …” தன் இதழ்களை மடித்து கடித்தபடி மனைவியின் இதழ்களை பார்த்தான் .

மீராவின் உடல் சூடாகி சிலிர்த்தது .எழுந்த கொள்ள போனவளை பற்றியிழுத்து அருகேயே அமர்த்திக்கொண்டான் .

அம்மா கொண்டு வந்து கொடுத்த ஜூஸை அவசரமாக குடித்துவிட்டு …

” கொஞ்சம் படுக்கிறேன்மா …” அம்மாவிடம் கூறிவிட்டு வரும்படி ஒரு அழைப்பை மனைவிக்கு அனுப்பி விட்டு போனான் .

” கொஞ்ச நேரம் நீயும் படும்மா ….” சுந்தரி சொன்னதும்  மீராவும் அறையினுள் நுழைந்தாள் .

உடனேயே கணவனின் வேகமான அணைப்பில் சிக்கிக்கொண்டாள் .

என்ன செய்வது …எப்படி செய்வது என புரியாமல் அவனும் …எப்படி ஏற்பது …எப்படி தடுப்பது என தெரியாமல் அவளும் ஒருவரையொருவர் அணைத்தபடி தங்கள் அன்பையும் , பாசத்தையும் இதழ்களால் ஒருவர் மீது ஒருவர் கண்டபடி பரிமாறிக் கொண்டனர் .

” என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் ஏன்டி அவளை பார்க்க போனாய் …? ஆத்திரத்தில் அவள் ஏதாவது செய்திருந்தால் ….???? ” மீராவின் தலைமுடியில் கையை விட்டு பிடித்தபடி செல்லமாக அவளை உலுக்கினான் .

” அதனால்தானே நீங்கள் பின்னாலேயே வந்து அவளை கண்டுகொண்டீர்கள் .”

” நான் முன்பே மிருணாளினியை உணர்ந்துதான் இருந்தேன் மீரா .அவளது சுயநலத்தை , அலட்சியத்தை …அதிக ஆசையை ….”

” பிறகு எப்படி அவளை திருமணம் செய்ய சம்மதித்தீர்கள் …? “

” அம்மாவிற்காக….எனக்கு நினைவு தெரிந்து அம்மா அவள்தான் உன் மனைவி என எனக்குள் பதித்துவிட்டார் .அதனால் உள்மனம் ஒப்பவில்லையென்றாலும் அவளை மனைவியாக நினைக்க முயற்சித்தபடி இருந்தேன் …”

” அம்மாவிற்காக இப்படியா உங்கள் மனதிற்கு பிடிக்காத வாழ்வென்றாலும் வாழ தயாராவீர்கள் …? “




” எனக்கு அப்போது வேறு வழியில்லையே மீரா .ஏனென்றால் நான் அப்போது உன்னை பார்த்திருக்கவில்லையே ….”

கணவனின் குறும்பு பதில் தேன் மழையாய் சொரிய …” ம்க்கும் நீங்கள் நிமிர்ந்து என் முகம் பார்க்கவே ஒரு வாரம் ஆனது ….” சிணுங்கினாள்.

” ஏய் …பொய் சொல்லாதே .உன்னை பெண் பார்க்க வந்தபோது உன்னை பார்க்கவில்லை …? உண்மையில் அப்போது உன்னை தனிமையில் சந்தித்து உன்னை பிடிக்கவில்லையென கூறும் எண்ணத்தில் இருந்தேன் .ஆனால் உன்னை பார்த்ததும் மனப்பாடம் பண்ணி கொண்டு வந்திருந்த வார்த்தைகள் எல்லாம் மறந்து போனது .சத்தமில்லாமல் திருமணத்திற்கு தலையசைத்து விட்டு வந்துவிட்டேன் …பாட்டிக்காக , அப்பாவிற்காக , அம்மாவிற்காக என சொல்லிக்கொண்டேன் .அப்போது அப்படித்தான் நினைத்தேன் …”

” அப்போதே நீங்கள் என்னை விரும்ப ஆரம்பித்து விட்டதாக சொல்கிறீர்களா …? “

” ஆமாம் …இதை இப்போது தைரியமாக சொல்வேன் ஆனால் அப்போது …என்னை எனக்கே தெரியவில்லை .நான் காதலை அறியாதவன் மீரா .பாட்டி ,அம்மா , அக்கா , தங்கையென பெண்கள் சூழ இருந்தது என் வாழ்வு .பெண்களை …அவர்கள் அன்பை , பாசத்தை …முழுமையாக அறிந்து வளர்ந்தவன் நான் .ஆனால் காதலை அறியாதவன் …வருங்கால மனைவியென ஒரு அழகு பெண் என்னுடனேயே பழகி வந்த போதும் அவள் மூலமாக கூட காதல் எனக்கு அறிமுகமாகவில்லை ….என் வீட்டு பெண்களை போல் அவளும் எனக்கு ஒரு பெண் அவ்வளவுதான் ….”

” அவளை காதலிக்கவே இல்லையென்றால் …அவளை நினைத்து என்னை ஏன் ஒதுக்கினீர்கள் …? “

” நான்தான் அவளை காதலிப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன் .அவளை காதலித்து விட்டு எப்படி உன்னோடு வாழ முடியும் …என என்னை நானே கேட்டுக்கொண்டேன் …உன்னை ஒதுக்கி வைத்தேன் ….”

” நீங்களும் உங்கள் காதலும் …இப்படியா என்னை படுத்துவது ….” செல்லமாய் சிணுங்கினாள் .

” ஒரு வழியாக இந்தக் காதல் என் மீது கருணை வைத்து என்னை எனக்கு உணர்த்தும் நாள் வந்தது மீரா …” நந்தகுமாரின் கை மீராவின் முக மச்சத்தை ரசனையாய் வருடியது .

” நான் உங்களை அணைத்து நின்றேனே …அன்றுதானே …? ” மீரா ஊகித்து கேட்டாள்.

” இல்லை மிருணா என்னை அணைத்து நின்ற போது ….” நந்தகுமாரின் பதிலில் மீரா திடுக்கிட்டாள் .




What’s your Reaction?
+1
18
+1
24
+1
1
+1
0
+1
2
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
15 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!