pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சைமலை பூவு – 1

1

புத்தர்கள் அடிக்கடி புலப்படுவதில்லை

ஆதி சித்தார்த்தன்கள்தான்

ஆங்காங்கு காணப்படுகிறார்கள் , 

போதிமரத் தேடல்களுக்கு 

முன்னோர் 

தும்பை மதுவுண்ணல் அவர்களில்…




 

கதவை திறந்து கொண்டு வெளியே வந்ததுமே சில்லென்ற குளிர் காற்று உடலை தாக்க ” ஷ்ஷ் ” என்று சிலிர்த்துக்கொண்டாள் தேவயானி .அப்பா என்ன குளிர்… உள்ளங்கைகளை சேர்த்து தேய்த்து உடலை கொஞ்சம் சூடாக முயற்சித்தாள் .ஆனால் அதில் அவளுக்கு பெருமளவு தோல்வியே. அந்த வனத்தின் குளிர் அவள் மேனியை இஷ்டம் போல் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தது.

கனத்த கம்பளியை தோள் வழியாக சுற்றி உடம்பை இறுக்கிக்கொண்டு அவள் கையில் அந்த தடித்த குச்சியை எடுத்துக் கொண்டாள். மற்றொரு கையில் பெரிய துணிப் பையை எடுத்து ஜோல்னா பை போல் இருந்த அதனை தன் தோளில் போட்டுக் கொண்டாள். சத்தமின்றி வீட்டுக் கதவை மூடிவிட்டு படிகளில் இறங்கி தரையில் கால் வைத்தாள்.

பனித்துளிகளை வாங்கி இருந்ததினாலோ என்னவோ புற்கள் ஐஸ் உண்ட கம்பளிகளாய் அவள் உள்ளங்காலை தாக்கின. விர்ரென உச்சந்தலை வரை ஓடிய அந்த பனிக் கூச்சலை விழி மூடி அனுபவித்தவள் நடையை தொடர்ந்தாள் .ஆங்காங்கு எரிந்துகொண்டிருந்த மின்விளக்குகள் பனிப்புகையினூடே மங்கலான ஒளியைச் சிந்த பனியும் இருளும் சூழ்ந்திருந்த அவ்விடம் ஏதோ ஓர் அமானுஷ்ய தோற்றத்தைத் தந்தது.

ஆனால் அந்த தோற்றம் வடிவழகியான அந்த இளம்பெண் தேவயானியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை .அந்த அரைகுறை இருட்டிலும் அவள் அந்தப் பாதைக்கு தேர்ந்தவள் போல் மிக வேகமாக நடந்து வலதுபுறம் மூலையில் இருந்த அந்த சிறு குடிலை அடைந்தாள்

. வெறுமனே தட்டி வைத்து அடைக்கப்பட்டிருந்த அதன் கதவின் மேல் தன் விரல்களால் மெல்ல தட்டினாள்.

” மருதாணி.. ஏய் ..மருதாணி ” மிக மெல்லிய குரலில் அழைத்தாள்.

” இதோ வரேன்கா ” உள்ளிருந்து கேட்டது ஒரு பெண்ணின் குரல். சிறிது நேரத்தில் சின்னதாக ஒரு சிம்னி விளக்கு ஒளியுடன் கதவு திறக்கப்பட அதன்பின் நின்றிருந்தவள்.. சிறு பெண் –  இல்லை சிறுமி என்றே வைத்துக் கொள்வோம் .பதினான்கு பதினைந்து வயது இருக்கலாம். பூ போட்ட பாவாடையும் ஆண் பிள்ளைகள் போடும் காலர் வைத்த சட்டையும் அணிந்திருந்தாள்.

” என்ன அக்கா அதற்குள் விடிந்து விட்டதா  ? ” தூக்கத்தில் கண்களைத் தேய்த்துக் கொண்டாள்.




” மணி நான்கு ஆகிவிட்டது .இப்போது கிளம்பினோம் என்றால்தான் வெளிச்சம் வருவதற்குள் திரும்பி வர முடியும் .சீக்கிரம் வா…”  தேவயானி அவசரப்படுத்தினாள்.

மருதாணி குடிசைக்குள் திரும்பி ஒரு பெரிய மூங்கில் கூடையை எடுத்து தலையில் கவிழ்த்துக் கொண்டாள் .கையில் அந்த சிம்னி விளக்கை எடுக்க முனைய ”  அதெல்லாம் வேண்டாம் .என்னிடம் டார்ச்  இருக்கிறது ” தேவயானி தனது கைபேசியை உயர்த்திக் காட்டினாள்.

கனமான தோல் செருப்புகளை அணிந்திருந்த இருவரும் புறப்பட்டனர் .கால் மணி நேர விரைவு நடை க்குப் பிறகு அந்த குடியிருப்பு பகுதியை தாண்டி மலை மேல் ஏற துவங்கினர் .தேவயானியின் டார்ச்சிலிருந்து வந்த சொற்ப வெளிச்சம் புதர்கள் மண்டிக் கிடந்த அந்த மலைப்பகுதிக்கு போதுமானதாக இல்லை .ஆனால் அதனை பற்றிய கவலையோ பயமோ அந்த இரு பெண்களுக்கும் துளியும் இல்லை.

தன் கையிலிருந்த கம்பினால் புதர்களை விலக்கி வழி செய்து கொண்டு தேவயானி முன்னால் நடக்க அவளை பின்பற்றினாள் மருதாணி.

” ஒரு குச்சியை ஒடித்து கையில் வைத்துக் கொள் மருதா .பூச்சி பொட்டு கிடக்கும் …” தேவயானி எச்சரித்த  பூச்சி பொட்டு …பாம்புகள் தேள் பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் .ஓரமாக உடைந்து கிடந்த சிறு மரக்குச்சி  ஒன்றினை எடுத்து அதன் பக்க குச்சிகளை உடைத்து நீள்மரத் துண்டாக்கி அதனால் தரையில் உரசியபடியே நடந்து தன் பாதையில் சலசலப்பு கூட்டினாள் மருதாணி .இந்த ஓசையில் பாதையை அடைத்து படுத்துக் கிடக்கும் விஷ  ஊர்வன ஓரம் ஒதுங்கிப் போய் விடும்.

தங்கள் பயணத்திற்கான பாதுகாப்புகளை செய்தபடி இருவரும் மேலும் மேலும் மலை ஏறினர். ஏற்றமாக போய்க்கொண்டே இருந்த மலை ஓர் இடத்தில் சற்று அகன்று பரப்பளவாக விரிந்து தென்பட அந்த இடத்தின் நடுவில் போய் நின்றுகொண்டு தேவயானி கண்களை பரபரப்பாக சுற்றிலும் ஓட்டினாள்.

” அக்கா அதோ அமிர்தக்கொடி ” மருதாணி உற்சாகத்துடன் சுட்டிக்காட்டினாள் . தேவயானி வேகமாக அந்த கொடியை அருகில் ஓடிப் போய் பார்த்தாள். சிறிது ஏமாற்றம் அவள் முகத்தில்…

” அமிர்தமே தான் கா .இதோ இலையைப் பார்த்தீர்களா ? தேவயானியின் கை டார்ச்சை தான் வாங்கிக் கொண்டு மரத்தைச் சுற்றி படர்ந்திருந்த அந்த கொடியின் மேல் நன்றாக அடித்து காட்டினாள் மருதாணி .வெற்றிலை போன்ற வடிவமைப்புடன் கூடிய பெரிது பெரிதாக இலைகள் இருந்த அந்த கொடி பசுமை நிறத்தில் தென்றலுக்கு தலையாட்டிக் கொண்டு இவர்களை புன்னகையுடன் பார்த்தது.

” இது அமிர்த கொடி தான் மருதாணி .ஆனால் நான் இது வேப்பமரத்தில் படர்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன் .இந்த மரம் விடத்தேரை போல் தெரிகிறதே ” தேவயானியின் குரலில் மெல்லிய ஏமாற்றம் இருந்தது.

” அட பரவாயில்லை விடுங்க அக்கா .இதுவாவது கிடைத்ததே .முதலில் கிடைத்ததை எடுத்துக் கொள்வோம் .பிறகு வேம்பு சுற்றிக் கிடக்கும் அமிர்த கொடியையும் தேடிப் பார்க்கலாம் ” மருதாணியின் பேச்சு சரியென படவே தன் இடையில் இருந்த சிறு கத்தியை உருவி எடுத்துக் கொண்டாள் தேவயானி .அந்த அமிர்த கொடியை இருகைகளாலும் தொட்டு வணங்கினாள்.

“எங்கள் நோய் தீர்க்க வந்த தாயே .கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் கஷ்டத்தைப் போக்க உன்னை பறித்துக் கொள்கிறேன் .எனக்கு அனுமதி கொடு …” என முணுமுணுப்பாய் வேண்டிக் கொண்டாள் .திடீரென்று எங்கிருந்தோ ஒரு கொத்து காற்று வந்து அவர்கள் மேல் விழ அதில் சிலிர்த்தோ என்னவோ அந்த அமிர்க்கொடி தேவயானியின் கன்னத்தில் படிந்து தழுவியது .இதனையே தனக்கு கிடைத்த சம்மதமாக எடுத்துக் கொண்ட தேவயானி கையில் இருந்த சிறு கத்தியால் அந்த கொடியை அறுக்க துவங்கினாள்.

அந்த மரத்தில் மட்டுமல்லாது அதன் அருகில் இருந்த சில மரங்களிலும் அடர்த்தியாக படர்ந்திருந்த கொடிகளை அவள் அறுத்து தர மருதாணி அவற்றை வாங்கி தான் கொண்டுவந்திருந்த மூங்கில் கூடைக்குள் நிரப்பளானாள்

.

” இன்னமும் கரு நீலி  , சர்க்கரை வேம்பு புலவு  இந்த மூலிகைகளும் வேண்டும் மருதாணி .தேடு …” தேவயானி சொல்ல அவர்கள் மேலும் மலை ஏறத் தொடங்கினார்கள் .புதர்களுக்குள்ளும் பள்ளங்களிலும் தாங்கள் தேடிய மூலிகைகளை கண்டறிந்து கொய்து எடுத்து கூடையிலும் தோள் பையிலுமாக நிரப்பிக் கொண்டனர்.

அமைதியாக இருந்த காட்டில் இப்போது சலசலப்பு எழத் துவங்கியது .பறவைகள் விழித்தெழ ஆரம்பித்து விட அவைகளின் அசைவில் மரங்கள் கிளைகளை ஆட்டி இலைகளில் சலசலப்பு எழுப்பின.




” அக்கா விடியப் போகிறது ” மருதாணி நினைவூட்டவும் தேவயானி தனது மூலிகை தேடலை முடித்துக் கொண்டாள்.

” இப்போது கிளம்பினால்தான் வெளிச்சம் வரும் முன்பு விடுதிக்குப் போக முடியும் ” சொன்னபடி மூலிகைகளை தனித்தனி கட்டுகளாக கட்டி பத்திரப்படுத்தினாள்.

” இவ்வளவு நேரமாக அருவிச் சத்தம் கூட கேட்கவில்லை பார்த்தீர்களா அக்கா ?இரவானால் அருவி கூட தூங்கி விடுவோமோ ? ” 

“முதலில் மலை ஏறும்போது உன்னுடைய கவனம் மூலிகைகளில் இருந்து இருக்கும் .அருவிகளின் சத்தத்தை கவனித்து இருக்க மாட்டாய் .இப்போது வந்த வேலை முடிந்ததும் சுற்றுப்புறம் உன் மனதில் பதிகிறது .சற்று முன்பு பறவைகளின் விழிப்பை கவனித்தாயே ?அதுபோல இப்போது அருவிகளையும் கவனிக்கிறாய். அவ்வளவுதானே தவிர மனிதர்களைப் போல அருவிகள் தூங்குவது இல்லை .”மெல்லிய சிரிப்புடன் சூழலை விலக்கியபடி தலைமேல் கூடையில் பாரம் சுமந்து வந்த மருதாணியின் கைகளைப் பற்றிக்கொண்டு மெல்ல மலை இறங்கினாள் தேவயானி.

“அக்கா எனக்கு நிறைய முடி உதிர்கிறது .உங்கள் தைலம் எனக்கும் கொஞ்சம் தருகிறீர்களா ? “

“உனக்கு இல்லாததா மருதாணி …?இந்த கருநீலி கருகருவென முடிகளை வளர வைப்பதுடன் உடலில் தேய்த்து மசாஜ் செய்து விட்டால் உடல் வலியை போக்கி புத்துணர்வையும் அளிக்கும் .இந்த தைலத்தை தயாரிக்க எனக்கு ஒரு வாரம் ஆகும் .வேலை முடிந்ததும் உனக்கு ஒரு பாட்டிலில் ஊற்றி தருகிறேன். தினமும் மறக்காமல் உபயோகித்து பார் . பிறகு அதன் அருமை தெரியும் ” 

” நம் மூலிகைகளின் அருமைகளை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டுமா அக்கா  ? இந்த அமிர்தகொடியை நிறைய எடுத்துக் கொண்டு இருக்கிறீர்களே ..இது யாருக்காக ? ” 

” நான்காம் எண்  குடிலில் இருக்கும் விஸ்வநாதன் சாருக்காக .இதை எடுத்துக் கொண்டு போகிறேன் .தினமும் அவருக்கு இரவில் காய்ச்சல் வந்து விடுகிறதே .அருவியில் குளித்தால் உடம்பிற்கு எதுவும் வராது என்று சொன்னீர்களே …இந்த காய்ச்சலை என்ன செய்ய …? என்று இரண்டு நாட்களாக புலம்பிக் கொண்டிருக்கிறார் .இந்தக் கொடியின் தண்டை காய்ச்சி கசாயம் வைத்து கொடுத்தால் அவரது காய்ச்சல் நிச்சயம் போய்விடும் .அவருக்காகத்தான் இதனை எடுத்துக் கொண்டு போகிறேன் ” 

” ஒன்பதாவது குடிலில் இருக்கும் தனசேகரன் சாருக்காக சர்க்கரை வேம்பு எடுத்துப் போகிறேன் .பாவம் ஆறு மாதங்களாக கல்லடைப்பால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாராம். சர்க்கரை வேம்பு கசாயத்தை அவருக்கு கொடுத்து ஒரு மண்டலம் தொடர்ந்து குடிக்க சொல்ல வேண்டும் .” 

”   போன வாரம் எங்கள் வீட்டு பாத்ரூமில் வந்த பூரான் குட்டிப்பையன் விநாயக்கை கடித்து விட்டது போல .உடல் முழுவதும் பத்துக்கள் வந்து மூச்சிரைப்போடு் இரண்டு் நாட்கள்  கஷ்டப்பட்டான் .இது போன்ற விஷ முறிவுகளுக்காக ஒரு முன் பாதுகாப்பிற்கு என  புலவு மூலிகையை எடுத்துக் கொண்டு போகிறேன் ” 

தன்னுடைய அன்றைய மூலிகை  சேகரிப்புக்கான விவரங்களை விளக்கியபடி இருவரும் வேகமாக இறங்கி அவர்கள் குடியிருப்பை அடைந்தபோது கீழ்வானம் சிவந்து கீற்றாய் மெல்லிய கதிர் ஒன்று உருவாகத் துவங்கியது.

பசுமை குடில்  என்று அறிவிக்க பட்டிருந்த பெரிய பெயர் பலகை இருந்த பகுதியினுள் நுழைந்து வேகமாக தங்கள  இடம் நோக்கி விரைந்தனர் இருவரும்.

What’s your Reaction?
+1
4
+1
8
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!