Serial Stories நீயில்லாமல் வாழ்வது லேசா!

நீயில்லாமல் வாழ்வது லேசா!-13

13

‘‘என்ன மெரினாஸ் கம்பெனி மேடம் என்ன சொல்லி அனுப்பினார்கள்?” கிண்டலாக கேட்டபடி கனகவேல் தோரணையாக சோபாவில் அமர, அவன் அருகே ப்ரெட்ரிக் அமர்ந்துகொண்டான்.

சஷ்டிகா கனகவேலை வெறித்து பார்த்தாள். நீ மனிதனா? மிருகமா? அந்த அனல் பார்வையை மேலே வந்து ஒட்டிய தூசு போல் அலட்சியம் செய்த கனகவேல், “ப்ரெட்ரிக்.. சஷ்டிகா மேடம் என்ன சொல்கிறார்கள்?” என்று கேள்வியை ப்ரெட்ரிக்கிற்கு மாற்றினான்.

“பாவம் கே.வி, அவர்களுக்கு நமது நட்பு மிகவும் அதிர்ச்சி. வாங்க சஷ்டிகா ட்ரிங்ஸ் எடுத்துக்கோங்க” டீப்பாயில் இருந்த விஸ்கியை மூன்று கண்ணாடி கோப்பைகளில் ஊற்றினான் ப்ரெட்ரிக்.

“கே.வியும் நானும் ஃப்ரெண்ட்ஸ்தான். ஆனாலும், எங்கள் கம்பெனி கான்ட்ராக்டை வாங்குவதற்கு சில விதிமுறைகள் உண்டு. அது சரியாக இருந்தால், கே.வி&க்கு கான்ட்ராக்ட் கொடுப்பதில் ஒன்றும் பிரச்னை இல்லை என்று முன்பே சொன்னேன். எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. அந்த சுமேரியா இடையில் வந்து விட்டாள். உனக்குத் தெரியுமா சஷ்டிகா, பெங்களூர் வந்த அன்று இரவே என்னை அவள் இந்த அறையில் சந்திக்க வந்தாள். நான் மறுத்து அனுப்பி வைத்தேன். இன்று உன்னை அனுப்பி இருக்கிறாள். ஆனால், உன்னை மறுக்க எனக்கு மனம் வரவில்லை. எங்கள் நிர்வாக குழு வேல்ஸ் கம்பெனிக்கு கான்ட்ராக்ட் கொடுக்கும் முடிவிற்கு வந்த பிறகு வி.கே.வி எனக்கு கொடுத்த கிஃப்ட் நீ. உன்னை விட எனக்கு மனம் இல்லை..”

ப்ரெட்ரிக் பேசிக்கொண்டே போக சஷ்டிகா தன் உறை நிலையிலிருந்து மீளாமல் நின்றாள். அவள் பார்வை கனகவேல் மேலேயே ஆணி அடித்தது போல் நின்றிருந்தது. நீயா? நீயா? மீண்டும் மீண்டும் கேட்ட அவள் பார்வை கேள்வியை அலட்சியம் செய்து விஸ்கியை எடுத்து அருந்திக் கொண்டிருந்தான் கனகவேல்.

“நீ சுமேரியாவிடம் இல்லை, வி.கே.வி கட்டுப்பாட்டில்தான் இருந்தாய் என்பதற்கு இதோ இப்போது நீ இங்கே என் அறையில் நின்றிருப்பதே சாட்சி. வி.கே.வி எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டான். நாம் இப்போது என்ஜாய் பண்ணலாம் பேபி, கமான்..” ப்ரெட்ரிக் கிளாஸில் இருந்த விஸ்கியை முழுவதுமாக தொண்டைக்குள் கவிழ்த்து விட்டு எழுந்து அவளை நோக்கி வந்தான்.

சஷ்டிகா இருப்பிடத்தை விட்டு சிறிதும் அசையவில்லை. அவள் அந்நேரம் நிராதரவாய் இருந்தாள். ஆனால், ஏனோ தப்பிச் செல்லும் எண்ணமின்றி இருந்தாள். பார்வை கனகவேல் மேலேயே இருந்தது. கனகவேல் எதிர்ப்புற சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

“நீ ரொம்பவும் அழகு பேபி..” ப்ரெட்ரிக் அவள் தோள் தொட, அப்போதும் சஷ்டிகா அசையவில்லை. பார்வை மாறவும் இல்லை.




ப்ரெட்ரிக் இரு கைகளையும் அவள் இரு தோள்தொட்டு தன் பக்கம் இழுத்தான். “நீ வைத்திருக்கும் பூவின் மணம் அப்படியே கிறக்குகிறது பேபி”  அவள் கற் பாறையாய் நிற்க, கனகவேல் முகம் இறுகியது. தாடை கடினமானது.

அவனது கையில் வைத்திருந்த கண்ணாடி டம்ளர் ஒரே அழுத்தலில் நொறுங்கியது. “நோ ப்ரெட்ரிக், ஸ்டாப் இட்..” கத்தியவன் ஒரு வெறியோடு டீபாய் மேலிருந்த தம்ளர்களையும் விஸ்கி பாட்டிலையும் கீழே தள்ளினான்.

“ஏய் வி.கே.வி.. என்ன ஆச்சு? ஏன் விநோதமாக நடந்து கொள்கிறாய்?” கேட்டபடியே ப்ரெட்ரிக் சஷ்டிகாவை அணைக்க முயல, வேகமாக எழுந்து வந்த கனகவேல் அவன் சட்டையை கொத்தாக பிடித்து தூக்கி சஷ்டிகாவிடமிருந்து பிரித்து சுவற்றின் மேல் மோதி தூக்கி நிறுத்தினான்.

“தொடாதே.. அவளை தொடாதே.. அவள் எனக்குரியவள்!”

“ஓ.. இந்த பேபியை நீ..”

“அவளை அப்படி கூப்பிடாதே. பெயர் சொல்லு.. ஒழுங்காக கூப்பிடு..”

“சரி, சரி.. என்னை தயவு செய்து கீழே இறக்கி விடு நண்பா” புன்னகையுடன் இரு கைகளையும் இறைஞ்சலாக உயர்த்தி கேட்டான் ப்ரெட்ரிக்.

சட்டென கனகவேல் தன் பிடியை எடுக்க பொத்தென கீழே விழுந்தவன், “அம்மாடி” என்றபடி இடுப்பை பிடித்துக்கொண்டு எழுந்தான். எரிமலையாய் நின்றவனின் தோளில் தட்டினான்.

“சுமேரியா அவளுடைய செகரட்டரியை உனக்கு அனுப்பி வைக்கும் யோசனையில் இருக்கிறாள். மறுக்காமல் ஏற்றுக்கொள் என்று என்னிடம் நீ சொன்னபோதே உன் கண்களில் இருந்த கலக்கத்தை தெரிந்து கொண்டேன் கே.வி. எனது 15 வயதிலிருந்து நான்கு காதல்களை கடந்து வந்து ஐந்தாவதாக ஆறு மாதங்களுக்கு முன்புதான் எனது உண்மையான காதலியை கண்டுபிடித்தேன். விரைவிலேயே நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். காதல் வயப்பட்டவர்களையும், காதலையும் ஒரு பார்வையிலேயே உணர்ந்து கொள்ள என்னால் முடியும். உன்னைவிட ஐந்து வயது சீனியர் என்ற முறையில் சொல்கிறேன் ப்ரெண்ட், எப்போதும் பணம், தொழில் என்று எந்திரமாக இருக்காதே. காதலும், குடும்பமும்தான் நம்மை உயிர்ப்போடு வாழ வைக்கும். இப்போது உன் காதலியை அழைத்துப் போ..”

ப்ரெட்ரிக் சொல்ல, “ஸாரி ஃப்ரெண்ட்” என அவன் தோளணைத்து விடுவித்தான் கனகவேல்.

சஷ்டிகா பக்கம் திரும்பியவன் திகைத்தான். இங்கே நடந்தவற்றால் பாதிக்கப் படாமல் அவள் இன்னமும் அப்படியே வெறித்தாற் போன்றே நின்றிருந்தாள்.

“வா பேபி போகலாம்” அவள் தோளணைத்து வெளியே கூட்டி வந்தான். சாவி கொடுக்கப்பட்ட பொம்மைபோல் உடன் நடந்து வந்தவளை கவலையாக பார்த்தவன், தனது அறைக்கே அழைத்துச் சென்றான்.




What’s your Reaction?
+1
31
+1
14
+1
2
+1
2
+1
0
+1
1
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!