Serial Stories நீயில்லாமல் வாழ்வது லேசா!

நீயில்லாமல் வாழ்வது லேசா!-9

9

சீச்சி! என்ன கேவலம்! தொழில் முக்கியம்தான். அதற்காக இந்த அளவு ஒருவன் தரம் தாழ்ந்து இறங்குவானா?

சஷ்டிகாவால் நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை. யாரோ துரத்துவதுபோல் வேகமாக அங்கிருந்து ஓடி வந்தவள், உட்காரக் கூட முடியாது பதட்டமும் கோபமுமாக அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தாள். இப்படித்தான் உன் தொழிலை நீ காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா? அவ்வளவு கேவலமானவனா நீ? வாய்விட்டு வி.கே.வி&யை திட்டித் தீர்த்தாள்.

ஒரே ஒருமுறை அவன் கேட்ட விபரங்களை கொடுத்திருக்கலாமோ! அப்படி கொடுத்திருந்தால் இவன் இப்படி கீழிறங்கியிருக்க மாட்டானே! என்று நினைத்துவிட்டு, ஓங்கி தன் தலையிலேயே கொட்டிக் கொண்டாள். அவனை சொல்லிவிட்டு இப்போது நீ தரம் தாழ்ந்து யோசிக்கிறாயே சஷ்டி! தன்னைத்தானே சாடிக் கொண்டாள்.

என்ன மனிதர்கள் இவர்கள்! எல்லோரும் தொழிலுக்காக, பணத்துக் காக என்ன வேண்டுமானாலும் செய்வார்களா? சுமேரியா மேலும் மிகுந்த ஆத்திரம் வந்தது. அதெப்படி இவ்வளவு நாட்களாக பிடிக்காத ஒருவனிடம் முத்தம்.. அப்படியெல்லாம் நடந்துகொள்ள முடிகிறது? வெகு நேரம் தவித்து குழம்பி பயங்கரமாக தலை வலிக்க ஆரம்பிக்க உடல் சோர்ந்து படுக்கையில் விழுந்தாள். ஏனென்று தெரியாமல் கண்ணீர் வடிய துவங்க மெல்ல விசித்தபடி தூங்கிப் போனாள்.

மறுநாள் காலை காலிங்பெல் அலறும் சத்தத்தில் சிரமப்பட்டு விழி விரித்தவள் தள்ளாடி எழுந்து கதவைத் திறந்தாள். “என்ன, நைட் ரொம்ப ஓவராக குடித்துவிட்டாயா? இப்போதுதான் எழுந்தாயா?” கேட்டபடி வெளியே நின்றிருந்தாள் ஜெர்சி.

வெறுப்பாக முகத்தை சுளித்த சஷ்டிகா, “நான் ஜூஸ் மட்டும்தான் குடித்தேன்” என்றாள்.

“பிறகு ஏன் இன்னமும் படுக்கையிலேயே இருக்கிறாய்? இன்னும் அரைமணியில் மீட்டிங்கில் இருக்கவேண்டும். சீக்கிரம் கிளம்பு..”

மீட்டிங்.. அந்த வி.கே.வி முகத்தில் விழிக்க வேண்டும். கூடவே சுமேரியாவையும். ம்கூம்.. இந்த இருவரையும் இப்போதைக்கு பார்க்கும் எண்ணம் சஷ்டிகாவிற்கு இல்லை.

“இன்று எனக்கு உடம்பு சரியில்லை மேடம். ஃபீவர் போல் தெரிகிறது. நான் வரவில்லை!”

அவளை ஏற இறங்க பார்த்தவள், “ஒரு நாள் பார்ட்டியை தாங்க முடியவில்லை, நல்ல ஆளைப் பிடித்து வேலைக்கு சேர்த்தார்கள்” என்று முணுமுணுத்தபடி போய்விட்டாள்.

தலைபாரம் குறையும் வரை ஷவரில் சுடுநீரடியில் நின்ற சஷ்டிகா, தனக்கு மிகப் பிடித்த சுடிதார் ஒன்றினை எடுத்து அணிந்து கொண்டாள். மறக்காமல் துப்பட்டா போட்டுக் கொண்டவளின் மனம் ஒருவகை திருப்தியுற்றது.

‘உன் இயல்புக்கு இந்த வேலை சரி வராது’ என்று வி.கே.வி அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. மற்றவற்றில் எப்படியோ, இதில் அவன் சொன்னது சரிதான். இந்த இடம் எனக்குரியது அல்ல. சென்னை சென்றதும் வேலையை ரிசைன் செய்துவிட்டு என் சொந்த ஊருக்கே, அந்த வேலனின் காலடிக்கு சென்றுவிட வேண்டும்.

இந்த முடிவு எடுத்த பிறகு மூச்சு விடுவதற்கு கொஞ்சம் சுலபமாக இருப்பது போல் சஷ்டிகாவிற்கு தோன்றியது.

வி.கே.வி இருக்கமாட்டான் என்பதனால் சுதந்திரமாக சிறிது நேரம் பால்கனியில் அமர்ந்திருந்தவள், கண்களில் பட்ட பக்கத்து பால்கனி மனதை பிசைந்துகொண்டே இருக்க, கீழே வந்து கார்டன் புல் தரையில் நடக்கத் துவங்கினாள்.

“ஹாய்..” என்றபடி அவளுடன் வந்து சேர்ந்துகொண்டான் முரளிதரன். இன்னமும் கை, கழுத்து முகத்தில்கூட ப்ளாஸ்திரிகள் தெரிய, உதடுகள் தடித்து வீங்கியிருந்தன. ஒரு மாதிரி தாங்கி நடந்தான். தள்ளிப் போடா என சொல்ல அவனது தளர்ந்த தோற்றம் தடுக்க, முகத்தை திருப்பிக் கொண்டு தனது பாதையை மாற்றினாள் சஷ்டிகா.

பிடிவாதமாக அவளைத் தொடர்ந்தவன், “ஸாரி சஷ்டிகா..” என்க தலையசைத்து ட்டு நகரப் போனவளின் வேகத்திற்கு கால்களை எட்டிப் போட்டு உடன் நடந்தான். “நேற்று பார்ட்டியில் நடந்ததை பார்த்தாயா? இந்தியா முழுவதும் பிசினஸ் வட்டாரங்களில் அந்த வி.கே.வி – சுமேரியா பெயர் நாறுகிறது.இரண்டு பேரும் என்னென்னவோ செய்து கான்ட்டிராக்டை பிடித்து விட்டார்கள் என்று எல்லா ஸ்டேட் கம்பெனிகளும் பேசிக்கொள்கிறார்கள். இந்த கான்ட்ராக்டிற்காக அவர்கள் எந்த அளவிற்கு கீழிறங்குவார்கள் என்பதனை நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்..”

“நீங்கள் சொல்வது எதையும் மறுப்பதற்கில்லை மிஸ்டர். ஆனால், இதையெல்லாம் நீங்கள் சொல்கிறீர்களே என்றுதான் எனக்கு கொஞ்சம் சிரிப்பு கூட வருகிறது!”

முரளிதரன் அவளை குரூரமாக பார்த்தான். “எனக்கு ஒரு சந்தேகம் சஷ்டிகா. நீ சுமேரியாவிடம் வேலை செய்கிறாயா அல்லது அந்த வி.கே.வி&யிடமா? வி.கே.வி&க்காக சுமேரியாவிடம் வேலை பார்ப்பதாக ஒரு தகவல் பேசப்படுகிறது. சுமேரியாவைவிட வி.கே.வி யுடன் தான் உன்னை அதிகமாக பார்க்க முடிகிறது. உனக்காகத்தானே வி.கே.வி அன்று என்னை அப்படி பாய்ந்து பாய்ந்து அடித்தான்?”

“ஷட் அப் அன்ட் கெட் அவுட்” சஷ்டிகா கத்த, “என்ன..?” என  எகிறினான் அவன்.

“வாயை மூடிக்கொண்டு உன் வேலையை பார்த்துக்கொண்டு போ என்றேன்” என்றாள் சஷ்டிகா அவனது தாய் மொழியில். வேக மூச்சுடன் அவளை முறைத்தபடி போனான் அவன்.

அதுவரை உடலிலும் குரலிலும் இருந்த நிமிர்வு இப்போது போய்விட, சஷ்டிகாவின் நடை தளர்ந்தது.

“பாப்பா..” பின்னால் கேட்ட குரலில் மனதில் ஒரு ஆறுதல் பரவியது. இப்போது அவள் இருக்கும் நிலைமையில் ஒரு இரண்டு வார்த்தைகளேனும் ஆறுதலாய் பேசுவதற்கு ஒரு ஆள் தேவை. அதனை நிச்சயம் வஜ்ரவேல் தருவார் என்று நம்பி திரும்பிப் பார்த்தாள். திகைத்தாள்.

இவர் வஜ்ரம் அங்கிள்தானா! முதன்முதலில் அவரை திருச்செந்தூர் கோயிலில் பார்த்தபோது காடாய் வளர்ந்திருந்த தலைமுடியும், தாடியுமாக கிட்டத்தட்ட பரதேசி கோலத்தில் இருந்தார். ஆனால் அவர் கண்கள் மட்டும் தீட்சண்யமாய் இருந்தன. வார்த்தைகள் இல்லாமல் அந்தக் கண்களே அவளிடம் வாத்சல்யமும், பரிவுமாய் நிறைய விஷயங்களை பேசி விட்டன.

பிறகு விரதம் முடிந்து அவர்கள் வீட்டிற்கு வந்தவர் குளித்து தாடியை மளித்து, தலை முடியையும் ஒழுங்காக வெட்டிக்கொண்டு பேண்ட் சர்ட்டுடன் வந்தபோது சஷ்டியால் அவரை அடையாளம் கண்டு கொள்ளவே முடியவில்லை. அந்த அளவு ஒரு ஹை க்ளாஸ் சொசைட்டி ஆளாக மாறி இருந்தார். இதுதான் அவருடைய அன்றாட தோற்றம், மிகப்பெரிய செல்வந்தர் என்று சந்திரகுமார் அவரை அறிமுகம் செய்தார்.




அன்று வஜ்ரவேல் சஷ்டிகாவிடம் கேட்ட கோரிக்கை அவரது மகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது.”சந்திராவிடம் கேட்டேன், அவன் உன் விருப்பம்தான் என்று கூறிவிட்டான். அதனால்தான் நேரடியாக உன்னிடமே கேட்கிறேன்..”

கோயிலில் விரதத் தோற்றத்தில் அவரிடம் சஷ்டிகாவிற்கு தோன்றியிருந்த நெகிழ்வு, இந்தப் பணக்கார தோற்றத்தில் மறைந்து போயிருந்தது. உண்மையாக சொல்வதென்றால், ஒருவகை பயம் வந்திருந்தது.

“எனக்கு வேலை கிடைத்திருக்கிறது. நான் இரண்டு வருடமாவது வேலை பார்க்க வேண்டும் அங்கிள்..” என்று அவள் சொல்ல, எங்கே வேலை என்னவென்று விசாரித்தவர், “அந்த வேலை வேண்டாம், நீ சென்னையில் எங்கள் கம்பெனிக்கு வேலைக்கு வந்துவிடு” என்றார்.

இதென்ன நோக்கம்போல் அவருடைய தேவைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார் என முகம் சுளித்தவள், “இல்லை அங்கிள். நான் ஒத்துக் கொண்டு விட்டேன். இனி மாறுவதாய் இல்லை” என்று உறுதியாக பேசி அவரை அனுப்பினாள்.

இப்போதும் அடிக்கடி தந்தை மூலமாக அவளை தனது கம்பெனி வேலைக்கு அழைத்துக்கொண்டே இருந்த வஜ்ரவேல் இங்கே பெங்களூரிலும் அவளை தொடர்ந்து வந்து சந்தித்தபோது பேசியதும் வேலை விஷயமாகத்தான். ஆரம்பத்தில் திருமண விஷயம் பேசியதை சஷ்டிகாவே மறந்து போயிருந்தாள்.

வி.கே.வி அவர் யார் என்னவென்று துருவிய போதுதான், முதலில் அவர் கேட்ட விஷயம் நினைவு வர, அவனை கடுப்பேற்றுவதற்காகவே திருமணம் என்று சொல்லி வைத்தாள்.

அந்தப் பணக்கார,தோரணையான வஜ்ரவேலா இவர்? ஏன் இப்படி சோர்ந்து தெரிகிறார்? முதல் நாள் காபி ஷாப்பில்  பார்த்தபோது கூட கம்பீரமாய் நிமிர்வாய் இருந்தாரே! எப்போதும் போல் பாசமாய் பேசினாரே! தன்னையறியாமல் இரண்டு எட்டு எடுத்து வைத்து அவர் கை பற்றினாள்.

“அங்கிள் நன்றாக இருக்கிறீர்களா? சோர்வாக தெரிகிறீர்களே?”

வஜ்ரவேல் மெல்ல தலையசைத்தார். “உடம்பிற்கு ஒன்றும் இல்லை பாப்பா. மனதுதான் ஓய்ந்து விட்டது!”

தனது சோகத்தையே அவரும் பிரதிபலிப்பதாய் தோன்ற, அவர் கைப்பற்றி அழைத்துச் சென்று ஓரமாய் கிடந்த கிரானைட் பெஞ்சில் அமர வைத்தாள். “என்ன அங்கிள், எவ்வளவு பெரியவர் நீங்கள்! உங்கள் தொழிலால் எத்தனை குடும்பத்தை பாதுகாத்து வருகிறீர்கள்! நீங்களே இப்படி சோர்வடையலாமா?”

” உண்மைதான்டா! எத்தனையோ குடும்பங்களுக்கு வாழ்வளித்து வருகிறேன். ஆனால், என் குடும்பத்தை வகைப்படுத்த ஆளில்லாமல் போய்விட்டது!” அவர் குரல் கரகரக்க, சஷ்டிகாவுக்கு மனம் பிசைந்தது.

“எதற்கும் கவலைப்பட வேண்டாம் அங்கிள், எல்லாமே நல்லபடியாகவே முடியும்!”

“பாப்பா, நாம் இங்கிருந்து போய்விடலாமாடா? சென்னை கூட வேண்டாம். அம்மன்புரம் போய்விடலாம். கொஞ்ச நாட்கள் உங்கள் வீட்டில் இருந்துவிட்டு வருகிறேன். எனக்கு மனதே சரியில்லை!”

“என்ன விஷயம் அங்கிள்?” ஆதரவாய் அவர் தோள் வருடினாள்.

வஜ்ரவேல் இமைக்காமல் அவள் முகத்தையே பார்த்திருந்தார். “கெட்டதிலும் ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்பார்கள். எனக்காக பார்த்து உன்னை இதற்குள் இழுத்துவிடாமல் இருந்தேனே, அந்த மட்டும் அந்த வேலவன் என்னை காப்பாற்றி விட்டான்!”

“என் சம்பந்தப்பட்ட விஷயமா? என்ன அங்கிள்?” சஷ்டிகா குழப்பமாய் பார்த்தாள்.

“என் மகன்..” கசந்த குரலில் சொன்னவர், நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டுக் கொண்டார். “எப்போதும் எனக்கு அடங்குபவன் இல்லை. அவன் அம்மா இறந்த பிறகு எனக்கும் அவனுக்கும் மன இடைவெளி ரொம்பவே அதிகமாகி விட்டது. எந்த அளவு என்றால், நான் வைத்த பெயரென்று அந்தப் பெயரையே பயன்படுத்தாமல் இருக்கும் அளவு! அப்பா என்று என்னை வாய் திறந்து அழைக்காத அளவு!”

சஷ்டிகா அவரை பரிதாபமாக பார்த்தாள். தாய், தந்தை வைத்த பெயரையே பயன்படுத்தாத மகன், அப்பா என்றே அழைக்காதவன்.. ப்ச்.. பாவம் இவர்!

“அந்த முருகன் பெயர் என்று பிறந்த குழந்தையை முருகன் திருவடியிலே போட்டு, கனகவேல் என்று ஆசையாக பெயர் சூட்டினேன். அவன் பள்ளி பருவத்திலேயே அந்தப் பெயர் அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டது, பெயரை மாற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பான். அப்போது அவன் அம்மா அவனை சமாதானப்படுத்தி வைத்தாள். ஆனாலும், கனகவேல் என்பதை கே.வி என்று சுருக்கிக் கொண்டான். பணத்திலே பிறந்து வளர்ந்த வசதியான வீட்டு பையன்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வீக்னஸ் உண்டு. என் மகனுக்கும்.. தொழிலில் ஆர்வம், இல்லையில்லை.. வெறி!

ஆரம்பத்தில் அவன் தொழிலுக்குள் வந்தபோது ‘இதெல்லாம் உனக்கு தெரியாது..’ என்ற ரீதியில் நான் சில விபரங்கள் சொல்லப் போக, என்னைப் போட்டியாக நினைத்துக்கொண்டு ஒதுக்கினான். அவனாகவே நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டான். அத்தோடு எங்கள் குடும்பத் தொழிலோடு வேறு சில தொழில்களையும் ஆரம்பித்தான். எல்லாமே வெற்றிகரமான தொழில்கள்தான்.தொட்டது எல்லாம் வெற்றியாக.. அது அவனுக்கு ஒரு கர்வத்தை, போதையை கொடுத்தது. ‘என்னால் முடியாதது எதுவுமில்லை. எப்படியும் எல்லாவற்றையும் சாதிப்பேன்’ என்ற இறுமாப்புடன் இருந்தான்..

சமீப காலமாக அவன் தொழில் வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் நிலைக்கு இறங்கத் துவங்கினான். அதில் ஒன்றுதான், இந்த செல்போன் கம்பெனி கான்ட்ராக்ட். இதற்காக இறுதி வாய்ப்பாக அவனுக்கு போட்டியாக எதிர் நிற்கும் கம்பெனி எம்.டி&யுடன் திருமணம் என்பது வரை  சென்னையிலேயே முடிவெடுத்து விட்டான். நான் மறுக்க மறுக்க அவனுள் வேகம் கூடிக் கொண்டே போனது..”

சஷ்டிகா வஜ்ரவேல் சொல்லிக் கொண்டிருந்ததை நம்ப முடியாமல் கேட்டிருந்தாள். அவள் மனதிற்குள் பல எரிமலைகள் வெடிக்க தயாராக குமுறிக் கொண்டிருந்தன.




இந்த உங்கள் குணம் கெட்ட மகனைத்தான் என் தலையில் கட்ட நினைத்தீர்களா? அவள் மனக்கேள்வியை கண்களில் உணர்ந்து கொண்ட வஜ்ராயுதம், “அப்படியில்லை பாப்பா. அந்த முருகன் சந்நிதியில் சஷ்டி விரத வேளையில் உன்னைப் பார்த்துமே நீ எங்கள் குடும்பத்திற்கு வர வேண்டிய பெண்ணென்று எனக்குள் ஒரு குரல் கேட்டது. எனது மகனை வழிப்படுத்த உன்னால்தான் முடியுமென தோன்றியது. அதனால்தான் திருமணம் வேண்டாம் என்று நீ மறுத்தாலும், ‘என் மகனிடம் வேலை பார்க்கவாது நீ வா’ என்று அழைத்தேன். அருகிலேயே இருக்கும்போது உன் நேர்மையும், நெறியும் என் மகனை மாற்றுமென நம்பினேன்..”

‘ஆஹா.. அப்படி மாறக் கூடியவனா அவன்!’ என நினைத்தவள், “அங்கிள் இவர்.. வி.கே.வி, உங்கள் மகனா?” எனக் கேட்டாள்.

“வெரி குட்” படபடவென்று கைதட்டல் பின்னிருந்து கேட்க.. இருவரும் திரும்பி பார்த்தனர். வி.கே.வி நின்றிருந்தான்.

“என்னைக் கவிழ்ப்பதற்கு அடுத்த சதி திட்டம் தயாராகிறது போலவே?” கோப மூச்சுடன் இவர்களை நெருங்கி வந்தவன், மதம் பிடித்த யானையை நினைவுபடுத்தினான்.




What’s your Reaction?
+1
30
+1
20
+1
2
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!