Serial Stories நீயில்லாமல் வாழ்வது லேசா!

நீயில்லாமல் வாழ்வது லேசா!-6

6

‘‘நான் வந்து நிற்பதை ஊர் முழுவதும் பரப்பவா?” தன்னை அறியாது கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் சஷ்டிகா.

“ஊர் முழுக்கவா! இல்லையே, நவீனிடம் மட்டும்தான் சொன்னேன். அவன் வேறு யாரிடமும் சொல்ல மாட்டான் பேபி!”

“ஒழுங்காக கூப்பிடுங்கள், இதென்ன உளறல்?”

“அது.. உன்னைப் பார்த்தால் எனக்கு அப்படித்தான், பேபி மாதிரிதான் தெரிகிறது. அதனால் என்னை அறியாமலேயே வாயில் வந்துவிட்டது. ஸாரி பேபி.. ஓ.. உன் பெயர்..”

“சஷ்டிகா” என்றாள் கடுப்புடன்.

“ஓகே சஷ்டிகா!”

“ஹலோ, நான் ‘மெரினாஸ்’ கம்பெனியின் ஸ்டேடர்ஜி மேனேஜர்.. தெரியும்தானே?” கெத்தாக தலையை நிமிர்த்திக் கொண்டாள்.

“தெரியுமே, குட்டிக் குழந்தைகள்கூட யானை மேல் சவாரி செய்வார்கள் என்று தெரிந்துகொண்டேனே!”

“ஹலோ சார், யானையே குட்டி குழந்தைகள் ஏறுவதற்காகத்தான் தெரியுமா?”

“சரிதாங்க மேடம், நான் சொன்னது ஜாலி ரைட் இல்லை.யானையை ஓட்டுவது!” என்றவன் சட்டென குரலை தணித்து, “வேண்டாம் சஷ்டி, சுமேரியா யானை. உன்னால் மேய்க்க முடியாது. நீ விலகி விடு” என்றான்.

“ஸாரி, புரியவில்லை..”

“சுமேரியாவிடம் வேலை பார்க்க வேண்டாம். அவள் கம்பெனி யிலிருந்து விலகிக் கொள் என்கிறேன்!”

“அடப் பார்றா அக்கறையை!” அளவுக்கு அதிகமாகவே ஆச்சரியம் காட்டினாள்.

அவன் முகம் இறுகியது “உனக்குச் சொன்னால் புரியாது. பட்டால்தான் புரியும் போல!”

“சரிதான், பட்டுத் தெரிந்துகொள்கிறேன். இப்போது பேசுவதற்கு வேறு எதுவும் இருக்கிறதா சார்?”

தாடைகள் இறுக,வி.கே.வி கண்ணாடி கிளாசிலிருந்த தண்ணீரை இரண்டு மிடறு நிதானமாக அருந்தினான். புருவங்களை உயர்த்தியபடி காத்திருந்தாள் சஷ்டிகா.

“சுமேரியாவிற்கு ஐபோன் பற்றி வேறு என்னென்ன தகவல்கள் எடுத்துக் கொடுத்தாய்?”

எவ்வளவு தைரியம்! அவனுடைய வெளிப்படையான துணிச்சலை வியக்காமல் இருக்க அவளால் முடியவில்லை.”பாருங்களேன், இந்த உலகில் எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்?” கன்னத்தில் கை வைத்து ஆச்சரியம் காட்டினாள்.

“என்ன மனிதர்கள்?”

“அடுத்தவரின் வேலையை கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சி இன்றி கேட்கிறார்களே!”

“சொல்லாவிட்டால் போ, யாரிடமிருந்து விபரங்களை பெற்றுக் கொள்ள வேண்டுமோ அங்கேயே கேட்டுக்கொள்கிறேன்!”

“அப்படியே செய்யுங்கள் சார். அதுதான் சரியாக வரும். நான் உங்களுக்கு உபயோகப்பட மாட்டேன்!”

“ம்..” என்ற உறுமலுடன் எழுந்தவன், “ஒழுங்காக சாப்பிட்டுவிட்டு வா. அகால இரவில் உனக்கு ஃபுட் ஆர்டர் செய்து கொடுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது!” என்று கூறிவிட்டு போனான்.

சஷ்டிகா விழித்தாள். எனக்கு ஃபுட் ஆர்டர் செய்து அனுப்பியது இவனா? எதற்காக அப்படி செய்தான்? யோசித்தபடி அமர்ந்திருந்தவளின் முன்னால் குழைவான பொங்கல், மொறுமொறு வடை, சட்னி சாம்பாருடன் வைக்கப்பட.. யோசனையை விட்டுவிட்டு உணவில் கவனத்தைச் செலுத்தினாள்.

மீட்டிங் ஹாலில் நவீனன் இவளைப் பார்த்து அறிமுகமாக கையசைக்க, வி.கே.வி&யோ இவள் பக்கமே திரும்பாமல் அமர்ந்து கொண்டான். ‘தெரியாதவன் போலவா காட்டிக்கொள்கிறாய்?’ என மனதிற்குள் கறுவியவள் சுமேரியாவிடம் குனிந்து, “மேடம், இன்று காலை டிபன் சாப்பிடும்போது வி.கே.வி என்னை சந்தித்தார்” என்றாள்.




சுமேரியாவின் கண்கள் இடுங்கின. “என்ன கேட்டான்?”

” உங்களுக்கு நான் என்னென்ன தகவல்கள் எடுத்து கொடுத்திருக் கிறேன் என்று அவருக்குத் தெரிய வேண்டுமாம். நான் சொல்லவில்லை. நான் சொல்லாவிட்டாலும் அவரே தெரிந்து கொள்வாராம்!”

“ஆஹா எப்படியாம்?” சுமேரியா கேட்க, “தெரியவில்லையே!” என்று சஷ்டிகா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “இதோ இப்படித்தான்!” விரிந்த விழிகளுடன் சன்னக்குரலில் சொன்னாள் ஜெர்சி. அவள் பார்வை போன பக்கம் இவர்கள் இருவரும் பார்க்க, வி.கே.வி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“இவன் இப்போது இங்கே ஏன் வருகிறான்?” தலை குனிந்து முணுமுணுத்து விட்டு, “ஹாய் கே.வி..” என உற்சாக குரலில் அவனை வரவேற்றாள் சுமேரியா.

“ஹாய், எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?” கேட்டபடி அவர்கள் அருகில் அமர்ந்தான்.

“ஃபைன்! உங்களுக்கு பிசினஸ் எப்படி போகிறது?”

“வெல் ஃபைன். சுமேரியா எனக்கு ஒரு ஹெல்ப் வேண்டுமே..  ஐபோன் பற்றி என்னென்ன டீடைல்ஸ் சேகரித்து வைத்திருக்கிறீர்கள்? சொல்ல முடியுமா?”

“அதற்கென்ன தாராளமாக! ஜெர்சி.. சஷ்டிகாவின் மெயிலை அப்படியே வி.கே.வி&க்கு ஃபார்வேர்ட் பண்ணு!”

கையில் வைத்திருந்த ஐபாடில் மெயிலை செக் செய்து கொண்டவன், “ஓ.. ரொம்ப தேங்க்ஸ் சுமேரியா, மீட்டிங் முடியட்டும். நாம் நிறைய பேசலாம்” என்று விட்டு எழுந்து போனான். அவ்வளவு நேரம் சஷ்டிகா பக்கம் லேசாகக் கூட திரும்பாமல் இருந்தவன், எழும்போது அவளைப் பார்த்து லேசாக கண் சிமிட்டிவிட்டு போனான்.

அடப்பாவி! தரவே மாட்டேன் என்றதை இப்படி எளிதாக கொத்தாக பிடுங்கிக் கொண்டு போகிறானே! “என்ன மேடம், எல்லா டீடைல்ஸும் கொடுத்துட்டீங்க?”

சுமேரியா தோள்களை குலுக்கிகொண்டாள்.”என்ன பெரிய டீடைல்ஸ்? யாராக இருந்தாலும் நெட்டில் தேடி எடுக்கக் கூடியவை தானே? இப்போது இவற்றை நாம் கொடுத்ததால் நம் மீது அவனுக்கு ஒரு அபிப்ராயம் வந்திருக்கும்தானே!”

யாராலும் எடுக்க முடியுமா? அந்த டீடைல்ஸ்காக தான் போட்ட உழைப்பு நினைவில் வர, சஷ்டிகா முகம் வாடினாள். “அப்படி அவரே எடுத்திருக்க வேண்டியதுதானே? எதற்காக நம்மிடம் கேட்க வேண்டும்?”

“பாவம் அப்படி எடுத்துக் கொடுக்க என்னைப் போல் அவருக்கு ஒரு புத்திசாலியான அசிஸ்டன்ட் இல்லை. பிழைத்துப் போகிறார் போ..” சுமேரியா சொல்ல, சஷ்டிகா கொஞ்சம் சமாதானமானாலும் தன் உழைப்பு போட்டி கம்பெனியின் கைகளில் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அன்றைய மீட்டிங்கில் அனைத்து கம்பெனிகளின் கொட்டேஷன் களை வாங்கிக் கொண்டனர். அவரவர் கொட்டேஷன்களை பற்றிய விவரங்களை தனித்தனியாக அமர வைத்து தெரிந்துகொண்டு அனுப்பினர்.

லஞ்ச் பிரேக்கில் “எனக்கு பசி இல்லை. நான் ரூமுக்கு வரவழைத்து பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன்” சஷ்டிகா சொல்ல, அவளைக் கூர்ந்த சுமேரியா, “பாரு சஷ்டிகா.. அவன் நம் எதிரிதான். ஆனால், இந்தத் தொழில் சம்பந்தமாக அரசாங்கத்திடமிருந்து நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் வருமென்றால், அவனையும் சேர்த்துக் கொண்டுதான் நாம் போராட வேண்டும். போக அவன் இந்தத் தொழிலில் சீனியர், இதோ இப்போது நம் விவரங்களை அவனுக்கு கொடுத்ததுபோல அவனிடம் இருந்தும் தொழில் பற்றிய விவரங்களை நாம் வாங்கிக் கொள்ளலாம். நன்றாக நான் சொன்னதை யோசி. வா ஜெர்சி, நாம் சாப்பிடப் போகலாம்..”

அவர்கள் இருவரும் சென்று விட்டனர். சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்து சுமேரியா சொன்னதை யோசித்துப் பார்த்து, ‘சரிதான், அவர்களுக்கு மேலா நமக்கு தெரியப்போகிறது?’ என்ற முடிவிற்கு வந்த சஷ்டிகா எழுந்து ரெஸ்டாரன்ட்டுக்குப் போக லிப்டிற்குள் நுழைந்தாள். லிப்டிற்கு காத்திருந்த கூட்டத்துடன் போய் நின்றபோது வி.கே.வி&யும் நவீனனும் வந்து நிற்க.. எரிச்சலுடன் லிப்டை தவிர்த்து படிகளில் இறங்கத் தொடங்கினாள்.

முதல் திருப்பத்தில் பின்னிருந்து வேகமாக ஒருவன் வந்து அவள் மேல் உரசியபடி இறங்க, அவனை முறைத்தாள். “ஸாரி மேடம், தெரியாமல் பட்டுவிட்டது..” ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டு வேகமாக இறங்கிப் போனான். படிகளின் அடுத்தத் திருப்பத்தில் போனை கையில் வைத்தபடி நின்றிருந்தவன், சஷ்டிகா அவனைக் கடந்ததும் மீண்டும் அவள் மேல் வந்து உரசினான். இந்த முறை மிக அழுத்தமாக.. கூடவே கையால் அவள் உடலை தடவினான்.

அருவருப்பில் உடல் கூச, “சீச்சீ..” என்று ஓரம் ஒதுங்கியவள்மேல் மீண்டும் மோதினான். “யூ ஆர் சோ ப்ரெட்டி” என்றவன் குடித்திருப்பது இப்போது தெரிந்தது. “தள்ளிப் போ” சஷ்டிகா அவன் தோளைப் பற்றி தள்ள முயற்சித்துக் கொண்டிருந்தபோது கொத்தாக அவன் சட்டை பின்னிருந்து பற்றப்பட்டு தூக்கப்பட்டான்.

சஷ்டிகா திரும்பிப் பார்க்க, வி.கே.வி கோபமாக நின்றிருந்தான்.

“ஏய், எவ்வளவு தைரியம் இருந்தால் என் சட்டையில் கை வைப்பாய்?” தெலுங்கில் குழறியபடி அவன் மீண்டும் வர, சப்பென அவன் கன்னத்தில் அறைந்து தள்ளினான் வி.கே.வி.

“ரூமுக்கு போ..” சஷ்டிகாவை அதட்டிவிட்டு “நவீன்..” என்றான். நவீனன் வேகமாக ஓடிவந்து “வாங்க சஷ்டிகா” என்று இவள் கைப்பிடித்து இழுத்துப் போக, வி.கே.வி அவனை மாறி மாறி அடித்து தள்ளுவதை பார்த்தபடியே போனாள் சஷ்டிகா.

லிப்டிற்குள் அவளை விட்டதும் நவீனனிடம், “நான் போய்க் கொள்கிறேன். நீங்கள் அவரைப் போய் பாருங்கள்” என்றாள். “பத்திரம்” என்று விட்டு வேகமாக போனான் நவீனன்.

சிறிது நேரம் கழித்து அறை காலிங் பெல் அடிக்க, பயத்துடன் கேமராவில் பார்த்து வி.கே.வி நிற்பதை அறிந்ததும் கதவைத் திறந்தாள். வேகமாக உள்ளே வந்து கதவை பூட்டியவன், “அறிவு இருக்கிறதா உனக்கு? நான்கு நாட்களாக ஒருவன் உன்னையே சுற்றிக் கொண்டிருக்கிறானே, அவனை கவனிக்கிறாயா நீ?”




சஷ்டிகா விழித்தாள். “யாரைச் சொல்கிறீர்கள்?”

“மண்டு!” நிஜமாகவே அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தான். “இன்று உன்னை உரசினானே அவனைத்தான், நீ இந்த ஹோட்டலுக்கு வந்த நாளிலிருந்து உன்னை விரட்டிக் கொண்டிருக்கிறான். நீயானால் அவன் பின்வருவதை கவனிக்காமல் தனியாக படிகளில் இறங்கப் போகிறாய்!”

சஷ்டிகாவின் விழிகள் தெறித்துவிடுவது போல் விரிந்தன. “நான் கவனிக்கவில்லையே!”

“தேவையானதை கோட்டை விட்டுவிடு. தேவையில்லாததில் மூக்கை நுழைத்துக் கொண்டிரு..” தொடர்ந்து அவன் திட்டிக் கொண்டிருக்க, கோபத்தில் சஷ்டிகாவும் எகிறினாள்.

“சும்மா என்னையே குற்றம் சொல்லாதீர்கள். இதோ, நீங்கள் கூடத் தான் என்னை கவனித்தபடி இருந்திருக்கிறீர்கள். என் பின்னேயே ஒருவன் சுற்றிக் கொண்டிருப்பதுகூட தெரியும் அளவு உங்கள் கவனம் என் மேல் இருந்திருக்கிறது. இதில் அவனை மட்டும் குற்றம் சொல்வானேன்?”

“ஏய்..” வேகத்துடன் முறைத்தவன் பின் சட்டென தணிந்து, “இங்கே பார் பேபி, இந்த இடங்களிலெல்லாம் பழகுவதற்கு உனக்கு இன்னமும் நிறைய ட்ரெய்னிங் தேவை. இப்போதுதான் முட்டை யிலிருந்து வெளிவந்த கண் முளையா குஞ்சு போல் நீ இருக்கிறாய். பிறகு உனக்கு நானே ட்ரெய்னிங் தருகிறேன். இப்போது இந்த வேலை வேண்டாம். நீ சென்னை கிளம்பு..”

“உங்களிடம் வேலைக்கு வருகிறேன் என்று நான் எப்போது சொன்னேன்?”

“உனக்கு வேலை தருகிறேன் என்று நான் எப்போது சொன்னேன்?” அவன் பதிலுக்கு திருப்ப.. முறைத்தாள்.

“எனக்கு சுமேரியா மேடம் மேல் மிகுந்த அபிமானம். நான் அவர்களை விட்டு போகமாட்டேன்”

“கண்களைத் திறந்துகொண்டே கிணற்றில் குதிப்பேன் என்பவளை என்ன செய்யமுடியும்? எப்படியோ போ!” என்று வெளியேறப் போனவன், “உன் போனை கொடு” என கை நீட்டினான்.

“மாட்டேன்” போனை தனக்கு பின்னால் சஷ்டிகா மறைத்துக் கொள்ள, வலுக்கட்டாயமாக அவள் கையைப் பிடுங்கி போனை வாங்கியவன் ஆன் செய்து, அவள் முகத்திற்கு முன்னால் காட்டினான்.

“மூஞ்சை சுளிக்காதே.. ஓப்பனாகாது!”அதட்டலுடன் அவள் இரு கன்னம் பற்றி நேர் செய்து போனை திறந்தான். அவள் போனிலிருந்து தன் போனுக்கு கால் செய்தவன், “என் பர்சனல் நம்பர். சேவ் பண்ணிக்கோ” போனை மீண்டும் அவள் கையில் திணித்துவிட்டு போய் விட்டான்.

“சரியான ராவடி” எரிச்சலுடன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள் சஷ்டிகா.




What’s your Reaction?
+1
27
+1
12
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!