Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே-9

9

 

விழாவிற்கென தன் தாயின் உதவியுடன் சேலை கட்டிக் கொண்டிருந்தாள் சஸாக்கி.. பழக்கமற்ற அந்த உடை அவளுக்கு சும்மாவே எரிச்சலை தந்து கொண்டிருக்கையில் திடுமென உள்ளே வந்து நின்ற பாலகுமரன் நிறைய எரிச்சலை தந்தான்.. தனை மறந்து கத்தினாள் அவள்..

“யாரை வெளியே போ என்கிறாய்..?” கண்கள் சிவக்க பாதங்களை அழுத்தி ஊன்றி நின்றவனை பயத்துடன் பார்த்தாள் சீஸூகோ..

“பாலா அவள் ஏதோ நினைப்பில் பேசிவிட்டாள்.. சிறு பெண்தானே.. ப்ளீஸ்.. மன்னித்து விடுங்கள்..” சீஸூகோ கெஞ்சலாக கேட்க பாலகுமரன் சஸாக்கியை பார்த்தான்.. பட்டென அள்ளி தோளில் போட்டுக் கொண்ட முந்தானையுடன் தலை திருப்பி நின்றாள் அவள்.. அம்மாவின் தணிவு கொஞ்சமும் மகளிடம் இல்லை.. அவள் நின்ற விரைப்பிற்கு போக மாட்டேன்.. என்னடி செய்வாய்..? எனக் கேட்க நினைத்து சீஸூகோவிற்காக அந்த பிடிவாதத்தை மாற்றிக் கொண்டு தன் கையிலிருந்த சேலை பெட்யை கட்டில் மேல் வைத்தான்..

“உங்கள் இருவருக்கும் சேலைகள் இருக்கிறது.. இதை கட்டிக் கொண்டு தயாராகும்படி அம்மா சொன்னார்கள்..” வெளியேறினான்..

“இந்த சேலைக்கேற்ற ப்ளவுஸ் என்னிடம் இல்லை..” பின்னால் கேட்ட சஸாக்கியின் குரலுக்கு..
“ப்ளவுஸ் அதிலேயே இருக்கிறது..” திரும்பா மலேயே பதில் சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
லிப்டில் இறங்கி கீழே வந்தான்.. வாசலில் பெரிதாக கலர் ரங்கோலி போடப்பட்டிருந்தது.. அபிராமிக்கு சிறிதும் இந்த சிறு விழாவில் விருப்பமில்லையென அவனுக்கு தெரியும்.. ஆனாலும் செய்ய வேண்டிய வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டிருக்கும் தன் அன்னையை நெகிழ்வாக நினைத்துக் கொண்டான்..

சர்ரென ப்ரேக்கடித்தபடி ரங்கோலி கலரை சிதறடித்து நின்றது அந்த கார்.. காரை பார்த்ததுமே உதட்டை கடித்து தன்னை தயார் படுத்திக் கொண்டு நின்றான் பாலகுமரன்..

திருக்குமரனும், காயத்ரியும் அதிலிருந்து இறங்கினர்.. கிரிதரனின் தாய் தந்தையர்.. எனக்கெல்லாம் தெரியாது என் வீட்டு மனிதர்களிடம் நீங்களாகத்தான் ஏதாவது சொல்லிக் கொள்ளுங்கள்.. கார்த்திகா கையை தட்டிவிட, இதை என்னவென்று சொல்வ, அபிராமி, பாலகுமரனும் தயங்கி நிற்க, நண்பனுக்கு தோள் குடுக்க கிரிதரன் முன் வந்தான்..

“அம்மா.. அப்பாவிடம் நான் சொல்லிக் கொள்கிறேன் மச்சான்..” என்று பொறுப்பேற்றுக் கொண்டான்..
“வாங்க மாமா.. வாங்க அத்தை..” பாலகுமரன் முறையாக வரவேற்க அவனை உறுத்து பார்த்தபடி வந்தனர் இருவரும்..

“என்ன மாப்பிள்ளை கல்யாண செலவு அம்மாவிற்கு வைக்க வேண்டாமென நினைத்து விட்டீர்களாக்கும்..?” தனது இடது கை வைர மோதிரத்தை வலது கை ஆட்காட்டி விரலால் வருடியபடி நக்கலாக கேட்டார் திருக்குமரன்..

“வளைகாப்பு செலவு கூட மாப்பிள்ளை வைக்கவில்லை பாருங்களேன்.. நேரே மகனுக்கு கயிறு கட்டும் பங்சன்தான்.. கெட்டிக்கார மாப்பிள்ளை..” கணவரின் கேலியை பின் தொடர்ந்தாள் காயத்ரி..

“நான் கெட்டிக்காரன்தான் அத்தை.. இல்லா விட்டால் என் தங்கைக்கு தி கிரேட் பிசினஸ் மேன்.. திருக்குமரன் வீட்டிலிருந்து மாப்பிள்ளை எடுத்திருப்பேனா..? இதிலேயே என் புத்திசாலித் தனத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா..?” பணிவாக கேட்டான்..

காயத்ரி புளகாங்கிதமடைய திருக்குமரன் அவன் தோள்களை தட்டி பலமாக சிரித்தார்..

“விவரமானவர் மாப்பிள்ளை நீங்க.. பிழைச்சிக்குவீங்க.. ஆனால் ஓவர் ஸ்பீடு.. அதை மட்டும் கொஞ்சம் கொறைச்சுக்கோங்க..”

“என்ன மருமகனே ஜப்பான் மட்டும்தான் போனீங்களா.. இல்லை வேறு எந்த நாடும் போயிட்டு வந்தீங்களா..?” அபிராமியின் அண்ணனின் கேலி கேள்வி இது..

“அடுத்து வேறு எந்த நாட்டிற்காகவது போகும் எண்ணமெதுவும் இருக்கிறதான்னு கேளுங்கங்க..” கணவனுக்கு எடுத்துக் கொடுத்தாள் மனைவி..

மென் முகத்துடன் சிரிப்பு மாறாமல் மிக நெருங்கிய இந்த உறவுகளின் கேலிகளை குத்தல்களை தாங்கிக் கொண்டு அவர்களை வரவேற்று அமர வைத்தான் பாலகுமரன்.. இது போன்ற புண்படுத்தும் கேள்விகள் அம்மா பக்கம் பாய்ந்து விடாமல் கவனித்துக் கொண்டான்..




மிக நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கு மட்டுமே இந்த விழா விபரத்தை சொல்லி அழைத்திருந்தாள் அபிராமி.. அதுவும் முதல் நாள் மகனை அழைத்து..

“குமரா இந்த வாழ்க்கை உனக்கு உறுதிதானே..?” எனக் கேட்ட பிறகுதான்..

அவள் அப்படி கேட்ட போது அந்த பெரிய ஹாலில் மற்றொரு ஓரம் கிடந்த சேபாவில்தான் சஸாக்கியும், சீஸூகோவும் அமர்ந்திருந்தனர்.. குழந்தை சீஸூகோவின் மடியில் இருந்தான்..

சஸாக்கி குழந்தைக்கு பாலூட்டும் நேரம் தவிர மற்ற நேரங்களில் குழந்தையை எடுத்துக் கொள்வதே இல்லை.. முழுக்க முழுக்க தன் தாயிடமே கொடுத்து விடுவாள்.. இந்த குழந்தையின் மீது எனக்கு அவ்வளவாக பிடிப்பில்லை என அறிவிக்கும்படியே நடந்து கொள்வாள்..

சில நேரங்களில் சஸாக்கியின் இந்த நடவடிக்கைகள் அபிராமியின் முகம் சுளிக்க வைக்கும்.. மகனின் முகத்தை பார்த்தது தன்னை கட்டுப்படுத்திக் கொள்வாள் அவள்..

“மிக உறுதி அம்மா..” சத்தியம் போல் சொன்ன போது பாலகுமரனின் பார்வை விட்டேத்தியாக எதிரே வெறித்தபடி உட்கார்ந்திருந்த சஸாக்கி மீது இருந்தது..

“நம் சொந்தங்களை அழைத்து இவர்களை அறிமுகப்படுத்தி விடலாமா..?”

“செய்யுங்கம்மா.. குறிப்பாக என் மகனை.. எல்லோருக்கும் அறிமுகம் செய்ய வேண்டும்..” சொன்னபடி எழுந்து சீஸூகோவின் மடியிலிருந்த தன் மகனை பத்திரமாக தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான்..

மிக உறுதியாக தன் எதிர்காலத்தை கோடிட்டு விட்ட மகனை பார்த்தபடி அபிராமி சொந்தங்கள் ஒவ்வொருவருக்காக போனில் தகவல் சொல்ல ஆரம்பித்தாள்..

தொழில் விசயமாக ஜப்பான் சென்ற தன் மகன் அங்கே ஒரு பெண்ணை விரும்பி மணந்து கொண்டதாகவும், அவர்களுக்கு இப்போது குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்த குழந்தைக்கு கயிறு கட்டி பெயர் வைக்கும் விழாவிற்கு வந்து மகனின் குடும்பத்தை ஆசிர்வதிக்கும் படியும் கேட்டுக் கொண்டாள்..

“சரிதானே..?” கேட்ட தாய்க்கு.. “மிகச் சரி..” என தலையசைத்தான் பாலகுமரன்.. முறைப்பாய் பார்த்த சஸாக்கியை அலட்சியம் செய்தான்..

“என்னப்பா குமரா உன் குழந்தையையும், மனைவியையும் எங்களுக்கு அறிமுகப் படுத்த மாட்டாயா..?”
“இன்னமுமா மறைத்து வைப்பாய்..?”

“அட போதும்பா.. எங்கள் கண்களிலும் கொஞ்சம் காட்டு..”

விதம் விதமாக நக்கல் கலந்து கேட்ட உறவுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பல்லை காட்டி சமாளித்து வைத்தான்..




இவர்கள் இருவரையும் அப்போதே வரச் சொன்னேனே.. இன்னமும் என்ன செய்கிறார்கள்.. அவன் பார்வை லிப்ட் இருந்த பக்கம் போய் போய் வந்தது..

“சார்..” ஆச்சரியமான குரல் கேட்க திரும்பினான்.. சாரங்கனும், சரண்யாவும் வீடு பூண்டிருந்த விழாக்கோலத்தை ஆச்சரியமாக பார்த்தபடி நின்றிருந்தனர்.. அவர்களை ஊட்டிக்கு அனுப்பி இருந்தது அப்போதுதான் பாலகுமரனுக்கு நினைவு வந்தது..

“என்ன விசேசம் சார்..?” படபடத்தன அவர்கள் விழிகள்..

“என் குழந்தையின் பெயர் சூட்டு விழா…” பாலகுமரன் நிதானமாக சொல்ல, அவர்கள் அப்பட்டமாக அதிர்ந்தன..

“என்ன சார் சொல்கிறீர்கள்..? இ.. இது எப்படி.. இதற்கு சாத்தியமே இல்லையே..?” சாரங்கன் திணற..

“யா.. யார் சா.. சார்.. அ.. அது..?” சரண்யா திக்கினாள்..

“சஸாக்கி..”

“அவளா..?” திரும்பவும் அவர்களுக்கு அதிர்ச்சிதான்..

“ஆமாம்.. நீங்கள் போய் ஏற்பாடுகளை கவனியுங்கள்..” அவர்களை அனுப்பி விட்டு திரும்பியவனின் முகம் மென்மையானது..

ஹாலின் நடுநாயமாக அமைந்திருந்த அந்த அகண்ட மாடிப்படிகள் வழியாக குழந்தையோடு சஸாக்கியும், சீஸூகோவும் இறங்கி வந்து கொண்டிருந்தனர்..




What’s your Reaction?
+1
23
+1
13
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!