Serial Stories

சரணடைந்தேன் சகியே-8

8

“ஏன்டா நான் இப்போதான் உனக்கு கல்யாணத்திற்கு பெண்ணே பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீ கையில் பிள்ளையோடு வந்து நிற்கிறாயே.. நியாயமாடா இதுன்னு.. உங்க பிள்ளை சட்டையை உலுக்கி கேட்க மாட்டீங்களாம்மா..?” கார்த்திகா பொறுமலுடன் பத்தாவது தடவையாக அம்மாவை கேட்டுக் கொண்டிருக்கிறாள்..

“நல்ல வாசனை வசம்பாக வாங்க வேண்டும் கார்த்தி.. கூடவே கொஞ்சம் ஜவ்வாது பவுடரும்.. டிரைவரை காரை எடுக்க சொல்லு ஒரு எட்டு போய்விட்டு வந்து விடுவோம்..”

“அம்ம்ம்மா..” பல்லை கடித்த மகளின் கன்னத்தில் தட்டினாள்..

“அப்படி மனதில் நினைப்பதை உடனே அவனிடம் கேட்டுவிட முடியாதும்மா.. அவனே சொல்வதாக சொல்லியிருக்கிறான்.. காத்திருப்போம்..”

“இதையே நான் செய்திருந்தால் இப்படி பொறுமையாக இருப்பீர்களாம்மா..?” கேட்டு முடித்த உடனே அவள் உச்சந்தலையில் வலுவாக ஒரு கொட்டு விழுந்தது..

“என்ன பேச்சுடி பேசுகிறாய்..? கொன்று விடுவேன் ஜாக்கிரதை..”

“ம்க்கும்.. எப்போதும் உங்களுக்கு உங்கள் பையன்தான் உசத்தி.. ஏன்னா அவன் ஆண்பிள்ளை.. சை எப்போதுதான் இந்த ஆண் பெண் பாகுபாடெல்லாம் இந்த உலகத்தில் இல்லாமல் போகுமோ.. எல்லா விசயத்திலும் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி..” பேசியபடி போன கார்த்திகா மனதில் இது சம்பந்தமாக ஒரு குழுவை துவக்கி பெண்ணுக்கு சம நீதி வேண்டுமென கேட்டு போராட ஆரம்பிப்போமா என்ற எண்ணம் வந்துவிட்டிருந்தது..அந்த யோசனையில் அம்மாவின் பேச்சை கவனிக்காமல் போக அபிராமி அதற்கொரு தலை கொட்டலை அவளுக்கு தர வேண்டியதாயிற்று..

“ஐய்யய்யோ உச்சந்தலைல ஓட்டை விழுந்துடுச்சே.. இவன் ஊர் ஊராக இல்லை நாடு நாடாக அலைந்து கல்யாணத்திற்கு முன்னாலயே பிள்ளை பெத்ததுக்கு நான் அடி வாங்குகிறேனே..” என அலறிவிட்டு வாயில் வேறு அடி வாங்கினாள்..

“ஏன்டி பிசாசே இப்படியா பேசுவாய்..? ஒழுங்காக பேசுவதானால் பேசு இல்லை வாயை மூடிக் கொண்டு பேசாமல் இரு..”

“அம்மா இது அராஜகம்.. இப்படி அடி வாங்கிக் கொண்டு இங்கே இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. நான் உடனே எங்கள் வீட்டிற்கு போகிறேன்..”

“அப்படியே செய்.. அப்படியே செய்..” வேகமாக தலையாட்டிய அன்னையை ஆத்திரமாக பார்த்தவள்..

“வீட்டிற்கு மருமகள் வந்ததும் மகள் இரண்டாம் பட்சமாக போய்விட்டேனா உங்களுக்கு..” என்றாள்..மருமகளா.. வேலை செய்து கொண்டிருந்த அபிராமியின் கைகள் நின்றன.. அந்த ஒல்லிக்குச்சி உடம்புக்காரி அவளது மருமகளா.. எப்படி எந்த விதத்தில் அவளை அந்த மாதிரி அவளது நட்புக்கள், சொந்தங்களிடையே அறிமுகப் படுத்த போகிறாள்.. பரபரப்பாய் செய்து கொண்டிருந்த வேலைகள் நின்றுவிட அப்படியே நின்றாள் அவள்..




“நீங்க வேணும்னா அவளை உங்க மருமகள்னு சொல்லிக்கோங்க.. எனக்கு யாரோதான்.. அவள் மூஞ்சும் மொகரையும், கண்ணை கொண்டு பார்க்க முடியவில்லை.. இவளையெல்லாம் அண்ணனுக்கு எப்படி பிடித்ததுன்னே தெரியலை.. என்னால் சேர்ந்தாற்போல் இரண்டு நிமிடம் அந்த எலும்பு தட்டிய மூஞ்சியை பார்க்க முடியவில்லை..” பேசிக் கொண்டே திரும்பிய கார்த்திகா குரல் திக்கி நிறுத்தினாள்..

அங்கே அடுப்படி வாசலில் சஸாக்கி நின்றிருந்தாள்.. கார்த்திகாவின் எல்லா பேச்சுக்களையும் கேட்டு விட்டாளென அவளது கண்கள் சொல்லியது.. ஆனால் சிறு அசைவும் காட்டாத முக பாவத்துடன் நின்றிருந்தாள்..

“கொஞ்சம் சுடுதண்ணீர் வேண்டும்..” உலர்ந்த குரலில் கேட்டாள்..

“மாரி சுடுதண்ணீர் ரெடி பண்ணி அவுங்க ரூமில் கொண்டு போய் வை..” வேலைக்காரிக்கு உத்தரவிட்டு விட்டு..

“உங்கள் ரூமில் இன்டர்காம் இருக்கிறதும்மா.. ஒவ்வொரு ரூமுக்கும் ஒரு நம்பர்.. கிச்சனுக்கு நான்கு.. அங்கிருந்து அழுத்தினால் இதோ இங்கே போன் வரும்.. தேவையானதை சொன்னால் அறைக்கே கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள்..” அங்கிருந்த போனை காட்டி அபிராமி விளக்க தலையசைத்து விட்டு திரும்ப போனாள் அவள்..

“நான் பேசியதை கேட்டிருக்க மாட்டாங்கள்ளம்மா..” அம்மாவிடம் சந்தேகம் தீர்த்துக் கொள்ள முயன்றாள் கார்த்திகா..

“நீ பேசியது பக்கத்தில் நின்ற எனக்கே கேட்க வில்லையே.. தூரத்தில் இருந்த அவளுக்கு எப்படி கேட்டிருக்கும்..?” மகளை சமாதானப்படுத்தினாள் அபிராமி..

“முதலில் குழந்தைக்கான சடங்குகளை முடிப்போம்.. பிறகு பேசுவோம்..” என பாலகுமரன் தனது விளக்கத்திற்கான நாட்களை தள்ளி வைக்க, குழந்தைக்கு கயிறு கட்டும் சடங்கை வீட்டோடு எளிமையான ஏற்பாடு செய்தாள் அபிராமி..

“அம்மா நான் சின்னதாக ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமென நினைத்திருக்கிறேன்..” கார்த்திகா அம்மாவிடம் ஆரம்பித்துக் கொண்டிருந்தாள்..

“எதற்குடி..? மாரி சொளவு ரெடி பண்ணு..”

“நான் எவ்வளவு முக்கியமான விசயம் பேசிக் கொண்டிருக்கிறேன்.. நீங்க என்னடான்னா சொளவு தேடிட்டிருக்கீங்களே..?”

“சொளவு குழந்தையை படுக்க வைப்பதற்கு.. அது ஒரு சம்பிரதாயம்.. நீ என்ன சொல்லிக்கொண்டிருந்தாய்..?”

“சங்கம்மா.. இளம்பெண்கள் முன்னேற்ற சங்கம்னு ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்..”

“ஆரம்பிச்சு..”

“என்னை மாதிரி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற எத்தனையோ இளம் பெண்களக்கு உதவி பண்ண போகிறேன்..”

“என்னடி கஷ்டப்படுகிறாய் நீ..?”

“என்ன கஷ்டமில்லை எனக்கு..? பிறந்த வீடும் சரியில்லை புகுந்த வீடும் சரியில்லை.. என்னை யாரும் மதிக்கவே மாட்டேங்கிறாங்க.. எல்லோரும் என்னை ரொம்ப கொடுமைபடுத்துறாங்க..” இமைகளை தேய்த்து, கண்களை சிமிட்டி என அழுவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஆரம்பித்தாள்..

“ஓ.. அப்படியா நீ ஆரம்பிம்மா நாங்க ஹெல்ப் பண்றோம்..” அபிராமி தன் வேலையில் கவனமாக இருக்க கார்த்திகாவிற்கு ஆத்திரம் வந்தது..

“என்னம்மா கார்த்தி எதை ஆரம்பிக்க போகிறாளாம்..?” புன்னகைத்தபடி பாலகுமரன் வந்தான்..

“ஏதோ சங்கம் ஆரம்பித்து பெண்களை முன்னேற்ற போகிறாளாம்.. நீ என்னுடன் வா குமரா..”இருவருமாக போய்விட, கார்த்திகா கொஞ்சம் விழித்து நின்று பிறகு என் பேச்சை கேட்காமலேயே போகிறார்களே என ஆத்திரத்துடன் அவர்களை பின் தொடர்ந்தாள்..

“இந்த சேலை சஸாக்கிக்காக எடுத்தது.. இது அவள் அம்மாவிற்கு.. இதனை அவர்களை கட்டிக் கொண்டு தயாராக சொல்லு..” தனது அறை பீரோவிலிருந்து இரண்டு பட்டு சேலைகளை எடுத்து கொடுத்தாள் அபிராமி..

“நீங்களே கொடுத்து விடலாமேம்மா..”

“அவர்கள் விசயத்தில் நான் இன்னமும் சுமூகமாகவில்லை குமரா.. இது போலெல்லாம் அவர்களை கொண்டாடும் மனநிலை இன்னமும் எனக்கு இல்லை..”கண்டிப்பாக பேசிய அன்னையை ஏறிட்டவன் பெருமூச்சு விட்டான்..

“பிறகு எதற்காகம்மா இந்த பார்மாலிட்டிஸ்..? அவர்களிடம் இருக்கும் எதையாவது கட்டிக் கொள்ளட்டும்..”

“எனக்கென்று சில கடமைகள் இருக்கிறது குமரா.. நான் அதிலிருந்து தவறமாட்டேன்.. நீ இந்த சிறிய விசயத்திலாவது என் பேச்சை கேட்பாயென நினைக்கிறேன்..”வாடிய முகத்துடன் அந்த சேலை பெட்டிகளை அம்மாவிடமிருந்து வாங்கினான்..




“எங்கே பார்க்கலாம்..?” கார்த்திகா வேகமாக அந்த புடவை பெட்டிகளை பிடுங்கினாள்..

“ஏய் கார்த்தி நீயும் நானுமாக நேற்று போய் எடுத்து வந்த புடவைகள்தான்டி..”

“அதுவா இது..? இப்போ வேற மாதிரி தெரியுதேம்மா.. கடைக்காரன் ஏமாத்திட்டான்மா..” கத்தினாள்..

“அதெல்லாம் இல்லை.. அதே புடவைதான் நீ அண்ணனிடம் கொடு..”

“ம்.. அப்படியா..” இழுவை ஒன்றுடன் அந்த புடவைகளை வருடி நின்று இருந்த தங்கையை பார்த்தபடி புன்னகைத்தான் பாலகுமரன்..

“அங்கே ஜவுளிக்கடையில் நிறைய லைட்டை போட்டு ஏமாத்திட்டாங்கம்மா.. பாருங்களேன் ரோஸ் கலர் மாதரி அங்கே பார்த்த ஞாபகம்.. இப்போது பச்சையாக இருகிறதே..”

“ஆமாம் அது டபுள் கலர் சேலை அண்ணனிடம் குடுத்து விடு..”இன்னமும் புடவையை தர மனமில்லாமல் வருடியபடி இருந்த தங்கையை பார்த்த பாலகுமரன்..

“என்ன கார்த்தி இந்த புடவை உனக்கு வேண்டுமா..?” என்றான்..

“ஐ நான் எடுத்துக்கவா..?” குதித்தவளின் தலை மீண்டும் கொட்டுப்பட்டது..

“சஸாக்கிக்கு புடவை எடுக்கிறேன்னு இவள் நேற்றே இவளுக்காக ஐந்து புடவைகளை எடுத்து வந்துவிட்டாள் இப்போது இதையும் கேட்கிறாள்… ஏய் அதை அண்ணனிடம் கொடுடி..”பிதுங்கிய உதடுகளுடன் புடவை பெட்டியை அண்ணனிடம் நீட்டியவள்..

“அம்மா என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணுகிறீர்கள்.. உங்கள் எல்லோரையும் தவிக்கவிட்டு ஒரு நாள் நான் இமயமலைக்கு சாமியாரிணியாக போய்விட போகிறேன் பாருங்கள்..” அழுகை குரலில் சொல்ல,“கார்த்தி என்னடா சொல்ற..? அப்புறம் என் கதி என்னாவது..?” கத்தியபடி வாசலில் வந்து நின்றான் கிரிதரன்..

“வாங்க மாப்பிள்ளை..” அபிராமி வரவேற்க..

“உன் பொண்டாட்டி இமயமலை போக போகிறாளாம்டா.. உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லையே..” கேட்ட பாலகுமரனை முறைத்தவன்..

“அவளில்லாவிட்டால் எனக்கு ஏதடா வாழ்க்கை..?” எனக் காதலோடு கார்த்திகாவை பார்க்க..

“கிரி..” என அவள் நாடகபாணியில் கையை விரிக்க, அம்மாவும் மகனும் ஆளை விடுங்கடா சாமி என வெளியே ஓடி வந்துவிட்டார்கள்..

புன்னகை முகத்தோடு சஸாக்கி அறையின் கதவை லேசாக தட்டி விட்டு “சஸாக்கி” என்ற அழைப்போடு உடனே கதவையும் திறந்து உள்ளே வந்த பாலகுமரன்.

“கெட் அவுட்..” என்ற சீறலுடன் வந்த சஸாக்கியின் குரலில் அதிர்ந்து பின் ஆத்திரத்துடன் கண் சிவந்து நின்றான்.




What’s your Reaction?
+1
16
+1
9
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!