Cinema Entertainment விமர்சனம்

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அவ்வழக்கில் இருந்து அவரை காப்பாற்றும் முயற்சிகளில் அவரது கட்சி நிர்வாகிகளும், குடும்பத்தினரும் ஈடுபடுகிறார்கள். மறுபக்கம் தீர்ப்பு எதிராக வந்தால், அடுத்த முதல்வர் யார்? என்ற பேச்சும் கட்சியில் நிலவுகிறது. இதற்காக முதல்வர் கிஷோரும் ஆலோசனைகள் மேற்கொண்டு வருவகிறார்.  இந்த கதை ஒரு பக்கம் இருக்க, 14 வருடங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜமீன்தார் மற்றும் எம்.பி ஒருவரை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் சிபிஐ அதிகாரி ஆதித்யா, தனது விசாரணை மூலம் தமிழகத்திற்கு வருவதோடு, அவர் தேடும் பெண் தமிழகத்தில் இருப்பதாக சந்தேகிக்கிறார்.




ஒரு பக்கம், ஊழல் வழக்கில் சிக்கிய தமிழக முதல்வர், மறுபக்கம் தேடப்படும் பெண் கொலை குற்றவாளி, இந்த இரண்டு கதைகளை வைத்துக்கொண்டு, தமிழக அரசியல் சம்பவங்களையும், நக்சல் அரசியலையும் சேர்த்து சொல்வது தான் ‘தலைமைச் செயலகம்’.

இரண்டு மாநிலங்களில் நடக்கும் அரசியல் கதைகளுக்கு இருக்கும் சம்மந்தத்தை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதோடு, விறுவிறுபான முறையில் 8 அத்தியாயங்களாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

தமிழக முதல்வர் அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தும் கிஷோர், மக்கள், கட்சி, குடும்பம் ஆகியவற்றுடன் ஊழல் வழக்கின் தீர்ப்பு போன்றவற்றை எதிர்கொள்ளும் ஒரு அரசியல் தலைவராக வாழ்ந்திருக்கிறார்.

முதல்வருடன் தன்னை தொடர்புபடுத்தி பேசினாலும், அவருடனான தனது நட்பை காட்சிகள் மூலம் ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கும் ஸ்ரேயா ரெட்டி, மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

வடமாநில சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் ஆதித்யா கம்பீரமாக நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத் கதாபாத்திரத்துடன் ஒட்டாமல் பயணித்திருக்கிறார்.

முதல்வரின் நண்பராகவும், கட்சியின் செயலாளராகவும் நடித்திருக்கும் சந்தான பாரதி, நக்சல் கூட்டத்தின் தலைவியாக நடித்திருக்கும் கனி குஸ்ருதி ஆகியோர் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவர்களது நடிப்பு தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.




ரம்யா நம்பீசன், நிரூப் நந்தகுமார், கவிதா பாரதி, ஒய்.ஜி.மகேந்திரன், சாரா பிளாக், தர்ஷா குப்தா, ஷாஜி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் நடிப்பு செயற்கைத்தனமாக இருந்தாலும்,  திரைக்கதையோட்டத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள்.

ஒயிட் ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவும்,  ஜிப்ரானின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் வசந்த பாலன், பல பழைய அரசியல் சம்பவங்களை கருவாக வைத்துக்கொண்டு, அதனுடன் நக்சல் அரசியலை சேர்த்து முழுமையான அரசியல் தொடரை கொடுத்திருக்கிறார். 8 அத்தியாயங்களாக கொண்ட தொடர் என்பதற்காக சில தேவையில்லாத காட்சிகள் திணிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை விறுவிறுப்பாக சொல்வதில் இயக்குநர் வசந்தபாலன் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘தலைமைச் செயலகம்’ பழைய அரசியல் சம்பவங்களாக இருந்தாலும், சமகால அரசியலை சரியான முறையில் காட்சி மொழியில் தந்திருக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!