Serial Stories

நந்தனின் மீரா-22

22

பிடறிக்குள் புதைந்த பெருவிரல்
சொல்கிறது
உன் பேரன்பின் பேரிரைச்சலை ,
சத்தங்களற்ற அச்சந்திர கணங்களில்
சகடையாய் உருளுது பேதையின் பெண்மை.

முதல் நாள் திவ்யாவின் பங்சன் முடிந்ததும் வெற்றிலை போட்டுக்கொண்டு வம்பை ஆரம்பித்தாள் உறவுப் பெண் ஒருத்தி ….

” என்ன சுந்தரி …உன் மருமகள் பம்பரமா சுத்தி வேலை செய்யுறாளே .கல்யாணம் முடிச்சு மூணு மாசமாகலை , அதுக்குள்ளே நல்லா டிரெயினிங் கொடுத்திட்ட போல ….”

அந்தப்பெண்ணின் மருமகள் எருமைக்கு சொந்தக்காரி போல ….டிவியை விட்டு நகராமல் நடுவீட்டில் உட்கார்ந்திருக்கும் ரகம் . சிட்டாக பறந்து வேலை செய்து கொண்டிருந்த மீராவை பார்த்ததும் சுந்தரி மேல் பொறாமை அப்பெண்ணிற்கு …

” நானா …? நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை அக்கா .சொல்லாமலேயே புரிந்து செய்வாள் என் மருமகள் …” சுந்தரியின் குரலில் பெருமிதம் .

,” ம் ….உன் அண்ணன் மகள் மிருணாளினியை முடித்திருந்தால் இதை விட சுறுசுறுப்பாப செய்திருப்பாள் .சொந்தமில்லையா ….ஓடி ஒடி செய்தாலும் இவள் அந்நியம்தானே …அது சரி …மூணு மாசமாச்சே ஏதும் விசேச செய்தி சொன்னாளா உன் மருமகள் …? “

” இ…இல்லை …”

” ஏன் …புருசன் பொண்டாட்டிக்கிடையே எந்த பிரச்சினையும் இல்லையே ….”

” அ…அதெல்லாம் …இல்லை ….”

” இல்லைன்னா ….பின்னே ஏன் லேட்டாகுது .எதுக்கும் உன் மருமகளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் செக் பண்ணிடு .இதையெல்லாம் ஆரம்பத்திலேயே பார்த்திடனும் ….” ஏதோ தன்னால் முடிந்த நெருஞ்சியை வீசி விட்டு ஆசுவாசமாய் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவ தொடங்கினாள் அந்த பெண் .

” அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா ….அடுத்து நாம் சந்திக்கும் போது நான் நிச்சயம் உங்களுக்கு நல்ல செய்தி சொல்லுவேன் ….” சுந்தரியின் பார்வை சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த மீராவிடமும் , ஹோட்டல் பாத்திரங்களை ஒதுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்த நந்தகுமாரிடமும் இருந்தது .

சற்று முன் கண்ட மொட்டை மாடி காட்சியில் உடல் கொதித்துக் கொண்டிருந்த மீராவிற்கு இந்த பேச்சு மிகுந்த அசூசையாக இருக்க வேகமாக அந்த இடத்தை விட்டு நகன்றாள் .

ஆக , இவன் அம்மாவின் அந்த வாக்குறுதிக்காக இதோ இப்போது இப்படி வந்து நிற்கிறான் .இல்லையென்றால் முன்தினம் வரை கொஞ்ச காலம் போகட்டும் என்றவன் …மொட்டை மாடியில் பழைய காதலியை அணைத்து நின்றவன் …இப்போது மனைவியுடன் கட்டிக் குலாவ எப்படி வருவான் …?




ஆழ்ந்த யோசனையுடன் நின்றிருந்த மீராவின் உடலில் அனல் பறக்கும் தீப்பொறியொன்று ஊர்வது போன்றதொரு உணர்வு …ஆனால் ஜில்லென்று நகர்ந்து பரவியது அந்த தீத்தீண்டல் .

மெல்ல தன்னை மறந்து கொண்டிருந்த மீராவின் உடல் , ஒரு அத்துமீறல் தொடுகையில் இயல்பான பெண்ணின் விழிப்புடன் மீண்டு கொண்டது .தொடுவது கணவனேயானாலும் …முழுதும் அவனுடன் மனம் ஒன்றாத இந்த பொழுதில் தன்னை எளிதாக மீட்டுக் கொண்டாள் மீரா .

” வேண்டாம் …விடுங்க ….”

” ஏன் …மீரா …? ”  இம்மியும் விலகும் எண்ணம் நந்தகுமாரின் குரலிலோ , உடலிலோ இல்லை .

” இ…இப்போ …வேண்டாம் .விடுங்க ….”

” பிறகு எப்போ ….ஏற்கெனவே நிறைய நாள் பிரிந்திருந்து விட்டோம் மீரா . இன்னும் தள்ளியிருக்க முடியாது .,” நந்தகுமார் தீவிரமானான் .

” நா …நான் யோசிக்க வேண்டும் ….பிறகுதான் ….” சிரமப்பட்டு அவனை தள்ள முயன்றாள் .

” இப்போது என்ன யோசனை …? ” கொஞ்சம் தன் பிடியை தளர்த்திக் கொண்டு கேட்டவனின் குரலில் எரிச்சல் .

அந்த தளர்ச்சியை பயன்படுத்தி அவனை உந்தித் தள்ளிவிட்டு ஓடிப்போய் சன்னல் திண்டில் அமர்ந்து கொண்டாள் மீரா .படபடத்த தன் நெஞ்சை  நீவி விட்டு தன்னை தானே சமாளித்துக் கொள்ள முயன்றாள் .

கைகளை கட்டிக்கொண்டு அவள் செய்கைகளை பார்த்தபடியே சொல்லு என்பது போல் நின்றிருந்தான் .

” நா …நான் …எ..எனக்கு கொஞ்சநாள் டைம் வேண்டும் …”

” எனக்கு டைம் வேண்டியிருந்தது போலவா …? “

” ஏன் உங்களுக்கு மட்டும்தான் அப்படியா …? எனக்கு அது போன்ற நேரங்கள் தேவைப்படாதா …? “

” அதற்கு ஒரு காரணம் வேண்டுமில்லையா …? “

காரணம் …நந்தகுமாரின் டைம் கேட்டலுக்கு ஒரு காரணம் இருந்தது .அது மிருணாளினி. மீராவின் டைம் கேட்டலுக்கும் அதே காரணம்தான் .ஆனால் அதை மீராவால் வெளியே சொல்ல முடியாது .

நந்தகுமார் ஆமாம் …அப்படித்தான் …இப்போது அம்மாவிற்காவது நாம் இல்லற வாழ்வை ஆரம்பிப்போமென்று விட்டானால் ….முதலிலேயே அப்படி ஒரு வாழ்விற்கும் தயாராக இருந்தவன்தானே அவன் …???

எனவே …

” காரணம் எனக்கும் இருக்கும் .அதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை …” ஜன்னல் வழியே வெளியே இருளை பார்த்தாள் .

” ஓஹோ …அப்போது காரணத்தை எனக்கு சொல்ல மாட்டாய் …,” அவளருகே வந்து சன்னலை பிடித்தபடி நின்றவனை அண்ணாந்து பார்த்து எச்சில் விழுங்கினாள் .சமனமாகி இருந்த இதயம் மீண்டும் குதிரையாக தொடங்கியிருந்தது .எச்சில் விழுங்கினாள் .

அவள் முகத்தருகே குனிந்தான் ” உன் காரணத்தை யோசித்து தயார் செய்து வை .நாளை கேட்பேன் ..அது வரை …ம் ….குட்நைட் ” போனால் போகிறது போ …என குழந்தையை பார்க்கும் தகப்பன் பார்வையுடன் போய் படுத்துவிட்டான் .

உடனே தூங்கியும்விட்டான் .கொஞ்சமாவது சலனமிருக்கிறதா பார் …எப்படி நிம்மதியாக தூங்குகிறான் .அது சரி மனதில் ஏக்கமோ …எதிர்பார்ப்போ இருந்தால்தானே துக்கம் கெட …? ஆனால் எனக்கு ஏன் தூக்கமே வந்து தொலைய மாட்டேங்குது …புரண்டு புரண்டு படுத்து ரொம்ப நேரம் உறங்காமல் கிடந்தாள் மீரா .

” பின்னால் நிற்கும் ஸ்கூட்டி யாருடையது ..? ஓடும் நிலைமையில்தானே இருக்கிறது …? ” ஊடுறும் கணவனின் பார்வையை திசை மாற்ற , அவன் தட்டில் பரிமாறியபடி கேட்டாள் .

” அது மாளுவோடது .இப்போ சும்மாதான் இருக்கு .நல்லா ஒடுகிற கண்டிசன்தான் .ஏன்  கேட்கிறாய் ..? “

” எனக்கு வேண்டும் . ஒரு ப்ரெண்டை பார்க்க போக வேண்டும் .”

” நீ ஸ்கூட்டி ஓட்டுவாயா மீரா …? “




” காலேஜுக்கு ஸ்கூட்டியில்தான் போனேன் ….”

ஸ்கூட்டியை வெளியே எடுத்து துடைத்து மிதித்து ஸ்டார்ட் பண்ணினான் .அவளிடம் கொடுத்து …

” அந்த தெரு முனை வரை ஓட்டிக்கொண்டு போய் திரும்பி வா .ஹாரன் , ப்ரேக் எப்படியிருக்கிறதென்று சொல்லு …” என்றான் .

மீரா தெரு முனை வரை ஓட்டிப்போய் வந்து நிறுத்தினாள் .

” ஹாரன் கொஞ்சம் சவுண்ட் கம்மியா இருக்கு.ப்ரேக் கரெக்டா இருக்கு ….” என்றபடி இறங்கியவள் அவன் பார்வையில் முகம் சிவந்தாள் .

நடுத்தெருவில் வைத்துக்கொண்டு என்ன பார்வை இது ….?

” இந்த ஸ்கூட்டி உனக்கு அழகாக பொருந்தியிருக்கிறது மீரா .ஓட்டும் போது பார்க்க ரொம்ப நன்றாயிருக்கிறது …”

” நன்றி …மத்தியானமா ப்ரெண்டை பார்க்க போய்விட்டு வருகிறேன் ,”  முணுமுணுத்து விட்டு ஸ்கூட்டியை உள்ளே தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தினாள்.

” ம் …அம்மாவிடம் சொல்லிவிட்டு போ ….”

எனக்கும் தெரியும் போடா …சும்மா …சும்மா …அம்மா ….

மனதிற்குள் அவனை திட்டி தீர்த்தாள் .

மதிய சமையலை முடித்துவிட்டு , சுந்தரியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் .

அன்று பார்த்த தெருவை யோசிக்காமலேயே கண்டுபிடிக்க முடிந்தது . அந்த வீட்டை … வாசல் செம்பருத்தி , கதவின் பச்சை கலர் பெயின்ட் ..எதிர்ப்புறமிருந்த வேப்பமர பிள்ளையார் என யோசித்து நினைவு கூட்டினாள் .

இந்த வீடாகத்தான் இருக்கும் …யோசனையுடனேயே அந்த பிள்ளையார் கோவிலின் பின்னே மறைந்து நின்றாள் .அரை மணி நேரமானது .தப்பான விலாசத்தில் நிற்கிறோமோ …என்ற அவளது குழப்பத்தை ….இல்லை என சொன்னபடி பைக்கில் வந்தான் குமரேசன் .

சரியாக அந்த வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே போய்விட்டான் .மதிய உணவிற்காக அவன் இந்நேரம் வருவான் என்று கணித்து …எதிர்பார்த்துதான் வந்திருந்தாள் மீரா .

ஆனாலும் நெஞ்சம் படபடத்தது .இதுவரைதான் யோசித்திருந்தாள் .இனி என்ன செய்வது …? போய் கதவை தட்டலாமா …? அதற்கு மீராவிற்கு தைரியம் வரவில்லை .

தொய்ந்து போன மனதுடன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.கண்ணால் பார்த்தாயிற்று …யாரிடம் சொல்ல …? என்ன நடவடிக்கை எடுக்க …? கை ஸ்கூட்டியை ஓட்ட நினைவுகள் குழம்பிக்கொண்டிருந்தன.

” மீரா ….” பின்னால் அழைத்த சத்தத்திற்கு ஸ்கூட்டியை ஸ்லோ செய்து நிறுத்தினாள் .

நந்தகுமார்தான் . அங்கிருந்த மெக்கானிக் ஷாப் வாசலில் நின்றிருந்தான் .

” இந்தப்பக்கம்தான் உன் ப்ரெட்ண் வீடு இருக்கிறதா …? ” பக்கத்தில் வந்தான் .

” ஆமாம் .நீங்கள் இங்கே எங்கே …? “

” இந்தப் பக்கம் ஒரு வேலையாக வந்தேன் .என் பைக் பஞ்சர் ஆகிவிட்டது .பஞ்சர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .கொஞ்சம் வெயில் குறையவும் கிளம்பியிருக்கலாமே …பார் முகமெல்லாம் கருத்து சோர்ந்து தெரிகிறாய் ….” அக்கறையாய் பார்த்தான் .




என் சோர்வுக்கு காரணம் வெயில்ல்ல…மனதில் நினைத்தபடி பேசாமல் நின்றாள் மீரா .

” சரி …வா என்னை நம் கடையில் இறக்கி விட்டு விடு …” சட்டென அவள் ஸ்கூட்டியின் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான் .

” அண்ணே பஞ்சர் பார்த்துட்டு வண்டியை என் கடையில் கொண்டு வந்து விட்டுடுங்க …ம் வண்டியை எடு மீரா….”

” நீங்க ஓட்டுங்களேன் .நான் பின்னால் உட்கார்ந்துக்கிறேன் …” மீரா திணறினாள் .

” ம்ஹூம் ..நீ வண்டி ஓட்டுவதை நான் பார்க்கவேண்டும் .ம் ஸ்டார்ட் பண்ணு “

பின்கழுத்தை  வருடும் அவன் மூச்சுக்காற்று மிக மிக சூடாக இருக்க இந்த அனலடிக்கும் வெயில் காரணமோ …?இந்த சுடு காற்றுக்கு குளிர் கண்டாற் போல் உடம்பு ஏன் நடுங்குகிறது ….? நடுங்கும் கைகளை கட்டுப்படுத்த முயன்றபடி ஆக்ஸிலேட்டரை திருகினாள் மீரா .




What’s your Reaction?
+1
25
+1
25
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
13 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!