Cinema Entertainment

நடிகை கே.ஆர்.விஜயா-6

’’வாழ்க்கையில் நம்மை ஆசிர்வதித்து யாரேனும் சொல்லுகிற வார்த்தைகள் அப்படியே பலித்துவிடும் என்பது சத்தியமான வார்த்தை. என்னுடைய முதல் நடன அரங்கேற்றத்துக்கு ஜெமினி கணேசன் சார் வந்திருந்தார். அந்த நடன நிகழ்ச்சி முடிந்ததும், மேடைக்கு வந்து பேசிய ஜெமினி கணேசன், ‘இந்தப் பொண்ணு அவ்ளோ அழகா ஆடினாங்க. முகபாவனைகள் எல்லாம் பிரமாதமா இருக்கு. எனக்கென்னவோ…. இந்தப் பொண்ணு நடிகையா அறிமுகவாங்கன்னு தோணுது. அதுவும் மிகச்சிறந்த நடிகைன்னு பேரெடுத்து புகழடையப் போறாங்க, பாருங்களேன்’ என்று பேசினார். அவர் வாய்முகூர்த்தம் அடுத்த வருடமே பலித்தது. முதல் பட வாய்ப்பு வந்தது. முதல் படத்திலேயே ‘டைட்டில்’ கதாபாத்திரத்தில் நடித்தேன்’’ என்று பெருமிதத்துடனும் நன்றியுணர்வு மாறாமலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.

அப்பா ராமச்சந்திரன் ஆந்திராக்காரர். அம்மா கல்யாணி கேரளம். பிறந்தவுடன் தெய்வநாயகி எனப் பெயரிட்டு வளர்த்தார்கள். சகோதரிகள், சகோதரர் என மிகப்பெரிய குடும்பம். அப்பா செய்து வந்த நகை வியாபாரம் பெருத்த நஷ்டத்தைக் கொடுக்க, கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தார்கள். அதுவும் தமிழகத்தின் மிக முக்கியமான கோயிலாகத் திகழும் பழனிக்கு வந்தார்கள். அப்பாவுக்குக் கோயிலில் வேலை கிடைத்தது. தெய்வநம்பிக்கை கொண்ட தெய்வநாயகிக்கு முருகப்பெருமான் இஷ்ட தெய்வமானது அப்போதுதான்!




சிறு வயதில் இருந்தே, நாடகம், கூத்து, சினிமா என்பதில் அலாதி ஈடுபாடு இருந்தது அவருக்கு. நாடகம் பார்த்துவிட்டு வந்தால், அந்த வசனத்தை ஆக்‌ஷனுடன் நடித்துக்காட்டுவார். ஆடிக்காட்டுவார். பாடிக்காட்டுவார். இதைல்லாம் பார்த்த வீட்டாரும் அக்கம்பக்கத்தினரும் கைத்தட்டி சிறுமி தெய்வநாயகியை ஊக்கப்படுத்தினார்கள். நடனம் கற்றுக்கொள்ளவும் அனுப்பிவைத்தார்கள்.

ஒரு பக்கம் நடனம் கற்கும் வேளையில், இன்னொரு பக்கம் நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அப்படி நடிக்கும்போது, நடிகவேள் எம்.ஆர்.ராதாவைச் சந்தித்தார். அவரின் நாடகக் குழுவிலும் நடிக்கத் தொடங்கினார். எம்.ஆர்.ராதாதான், தெய்வநாயகி எனும் இவரின் பெயர் விஜயா என்று மாற்றினார். அம்மாவின் பெயரையும் அப்பாவின் பெயரையும் கே.ஆர். என்று இனிஷயலாக வைத்துக்கொண்டார். கே.ஆர்.விஜயா என்றானார்.

அதன் பிறகுதான் நடன அரங்கேற்றம். ஜெமினி சிறப்பு விருந்தினர். அவர் கொடுத்த ஆசிகள். அதற்கு அடுத்த வருடமான 1963-ம் ஆண்டே நிறைவேறியது. இயக்குநர் திலகம் என்று போற்றப்படும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘கற்பகம்’ எனும் படத்தில், கே.ஆர்.விஜயா அறிமுகமானார். இதிலொரு ஆச்சரியம்… எந்த ஜெமினி கணேசன் வாழ்த்தி வரவேற்று ஆசி வழங்கினாரோ… அவருடனேயே அமைந்தது முதல் படம்!

முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வழங்கினார் கே.ஆர்.விஜயா. அடுத்து வந்த ‘அக்கா தங்கை’ படத்தில் செளகார் ஜானகியுடன் நடித்தார். நேர்மையும் நியாயமும் கொண்ட விடாப்பிடியான கதாபாத்திரத்தை அட்டகாசமாகச் செய்திருந்தார். இதில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்தார். இதிலும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்த கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்தடுத்த படங்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருந்தன.




இதையடுத்து சிவாஜியுடன் முதன்முதலாக ‘இருமலர்கள்’ படத்தில் ஜோடியாக நடித்தார். பத்மினியும் நடித்திருந்த இந்தப் படத்திலும் அவரின் நடிப்பு பேசப்பட்டது. கே.பாலசந்தர் சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய ஒரே படமான ‘எதிரொலி’ படத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். தவித்து, மருகி, கலங்கி, துடிக்கிற கதாபாத்திரம். சிறப்பாக நடித்திருந்தார். ’திருடன்’, ’தங்கை’, ‘பாலாடை’, ‘நெஞ்சிருக்கும் வரை’ என தொடர்ந்து சிவாஜி படங்களிலும் மற்ற நடிகர்களின் படங்களிலும் நடித்து வந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக, சிவாஜி – பத்மினி ஜோடி போல, சிவாஜி – கே.ஆர்.விஜயா பாந்தமான ஜோடி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ’தங்கப் பதக்கம்’, ‘ரிஷிமூலம்’, ’திரிசூலம்’ என்று சிவாஜியுடன் அதிகம் ஜோடி சேர்ந்த நடிகை என்று கே.ஆர்.விஜயாவுக்குப் பேரும் புகழும் இன்னும் கூடின. அதேசமயத்தில், எம்ஜிஆருடன் ‘விவசாயி’, ‘நல்ல நேரம்’ என்றும் ஜெமினி கணேசனுடன் ‘ராமு’ முதலான பல படங்களிலும் நடித்தார்.

கே.ஆர்.விஜயாவுக்குக் கிடைத்த கதாபாத்திரங்களெல்லாமே கனம் மிக்கவை. ‘தவப்புதல்வன்’ படத்தில் தன் காதலன் சிவாஜிக்கு மாலைக்கண் நோய் இருப்பதால், அவர் படும்பாடு நமக்கு சொல்லிமாளாது. ‘சொர்க்கம்’ படத்தில் தவறான பாதைக்குச் சென்று குடியில் மூழ்குகிற கணவனை வைத்துக்கொண்டு அல்லாடும் கேரக்டரை அட்டகாசமாகச் செய்து நம்மைக் கலங்கடித்திருப்பார் கே.ஆர்.விஜயா. ’தீர்க்கசுமங்கலி’யில் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்தார். அவரது நடிப்பைப் பார்த்து கலங்கிக் கண்ணீர்விட்டார்கள் பெண்கள். தத்ரூபமான நடிப்பும் வசீகரக் குரலும் மிகப்பெரிய பலம் அவருக்கு!




கே.பாலசந்தரின் ‘நாணல்’ படத்திலும் முத்துராமன் ஜோடி. வீட்டுக்குள் புகுந்த சிறைக்கைதிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒவ்வொரு காட்சியும் பதறவைத்துவிடும். பாலசந்தரின் கதை வசனத்தில் உருவான ‘சர்வர் சுந்தரம்’ படத்தில், முத்துராமனுக்கு ஜோடி. ஒருபக்கம் முத்துராமன்… இன்னொரு பக்கம் நாகேஷ்… இவர்களுக்கு மத்தியில் கே.ஆர்.விஜயா தன் தனித்துவ நடிப்பால் மிளிர்ந்து ஒளிர்ந்தார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ‘கற்பகம்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். கே.ஆர்.விஜயாவின் 100-வது படமான ‘நத்தையில் முத்து’ படத்தையும் அவரே இயக்கினார் என்பது பெருமைக்கு உரியதாகவே பார்த்தார் கே.ஆர்.விஜயா.

எந்த நடிகருடன் நடித்தாலும் அந்த நடிகருக்கு அழகான பொருத்தமாகவும் தன் நடிப்பு ஆளுமையை வெளிக்காட்டுவதிலும் கே.ஆர்.விஜயா எப்போதுமே முத்திரை பதித்தார். ’ஊட்டி வரை உறவு’ படத்தில், சிவாஜியுடனும் பாலையாவுடனும் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டியில் சிரித்து ரசித்தார்கள் ரசிகர்கள். ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்று ‘பஞ்சவர்ணக்கிளி’யில் அவர் பாடும் காட்சியையும் அந்தப் பாடல் முழுக்க புன்னகை தவழ அவர் கொடுக்கிற எக்ஸ்பிரஷனையும் மறக்கவே மாட்டோம்.

அதேபோலத்தான், எல்.வி.பிரசாத்தின் ‘இதயக்கமலம்’ படத்தில் இரண்டு விதமான கேரக்டர்களில் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் கே.ஆர்.விஜயா. அவரது நடிப்புக்காகவே படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்த ரசிகர்கள் ஏராளம்.

‘பட்டணத்தில் பூதம்’ படத்திலும் தனித்துத் தெரிந்தார். ஜெய்சங்கர், நாகேஷ், பாலாஜி, ஜீபூம்பா, ஜாவர் சீதாராமன் முதலானோரைப் போலவே தன் நடிப்பில் புது ஸ்டைல் காட்டி ரசித்து நடித்து ஜொலித்திருப்பார்.




சிவாஜியை வைத்து ‘நான் வாழவைப்பேன்’ படத்தையும், ‘நாடகமே உலகம்’ முதலான படங்களையும் சொந்தமாக தயாரித்த அனுபவமும் கே.ஆர்.விஜயாவுக்கு உண்டு. ஒருகட்டத்தில், எம்ஜிஆர் அரசியலுக்குச் சென்றுவிட்டார். சிவாஜி நடித்துக்கொண்டிருந்தாலும் கமல், ரஜினியின் காலகட்டம் வந்துவிட்டது. பக்திப் படங்களுக்கு கே.ஆர்.விஜயாவை அழைத்தார்கள். பாந்தமான முகமும் கருணை கொண்ட விழிகளும் சாந்தமும் வாஞ்சையும் கொண்ட சிரிப்புமாக வலம் வரும் கே.ஆர்.விஜயாவுக்கு அம்மன் வேடங்கள் அவ்வளவு அழகாகப் பொருந்தின. ஏற்கெனவே ‘புன்னகை அரசி’ என்று திரையுலகமும் ரசிகர்கூட்டமும் கொண்டாடிக்கொண்டிருந்தது. இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

இதேசமயத்தில், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அக்காவாக, அம்மாவாக, மாமியாராக என்று அவர் எல்லா நடிகர்களுடனும் நடித்தார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து அங்கேயும் கவனம் ஈர்த்தார். ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த, பி.வாசுவின் ‘சந்திரமுகி’ உள்ளிட்ட எண்ணற்ற படங்களிலும் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்திக்கொண்டே வருகிறார் கே.ஆர்.விஜயா. ’பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் கே.ஆர்.விஜயாவுக்கும் கமலுக்குமான அந்த அன்புதான் கதைக்களமே! கலங்கடித்துவிடுவார் புன்னகை அரசி.

அந்தக் காலத்திலும் சரி… இந்தக் காலத்திலும் சரி… விளம்பரங்களிலும் நடித்து அங்கேயும் தன் தனித்துவத்தை நிலைநிறுத்தினார் கே.ஆர்.விஜயா. இன்றைக்கும் புதிய விளம்பரங்களில், கே.ஆர்.விஜயாவையும் அவரின் புன்னகையையும் பார்த்து ரசிக்கலாம்!




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!