Cinema Entertainment விமர்சனம்

’சிறகன்’ திரைப்பட விமர்சனம்

அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கை காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் மகனை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜீவா ரவியும் அவருடன் இருந்த ஜூனியர் வழக்கறிஞர் சானுவும்  கொலை செய்யப்படுகிறார்கள். இருவரின் கொலை வழக்கு தொடர்பாக பிரபல வழக்கறிஞர் கஜராஜ் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால்,  சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜிடி கஜராஜை விசாரிக்கையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது.




இதையடுத்து, மூன்று கொலைகள் பற்றி விசாரிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் வினோத், அவ்வபோது மறைந்த தனது தங்கையின் நினைவால் தடுமாறுகிறார். இப்படி பல கதாபாத்திரங்களை சுற்றி வரும் இந்த கொலை வழக்குகளின் பின்னணி என்ன?, எதற்காக இந்த கொலைகள் நடந்தது?, கொலையாளி யார்?  என்பதை பல திருப்பங்களோடு சொல்வது தான் ‘சிறகன்’.

சுயநினைவின்றி கோமாவில் இருக்கும் தனது மகளின் இத்தகைய நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் கஜராஜ், தனது வயதுக்கு ஏற்ற முதிர்ச்சியை நடிப்பிலும் வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். மகளின் நிலையைப் பார்த்து கோபம் கொண்டாலும் தனது செயலில் நிதானத்தை வெளிப்படுத்தி அவர் காட்டும் புத்திசாலித்தனம் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

தொடர் கொலைகள் ஒரு பக்கம், இறந்த தங்கையின் நினைவு மறுபக்கம் என்று பயணிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வினோத் ஜிடி, எம்.எல்.ஏவாக நடித்திருக்கும் ஜீவா ரவி, ஆனந்த் நாக், கஜராஜின் மகளாக நடித்திருக்கும் பெளசி ஹிதாயா, கர்ஷிதா ராம், பள்ளி மாணவராக நடித்திருக்கும் பாலாஜி, எம்.எல்.ஏவின் உதவியாளராக நடித்திருக்கும் பூவேந்தன், மாலிக், சானு என்று படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் சிலர் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், திரைக்கதையோடு அழுத்தமான தொடர்புடையவர்களாக பயணித்து மனதில் நின்று விடுகிறார்கள்.




க்ரைம் திரில்லர் படத்திற்கு ஏற்ப காட்சிகளை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சேட்டை சிக்கந்தர். ராம் கணேஷ்.கே இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பு பெண்ணின் கொலை, எம்.எல்.ஏவின் மகன் மாயம், எம்.எல்.ஏ கொலை, கஜராஜ் மகளின் பாதிப்பு, பள்ளி மாணவர்களின் தகாத செயல் என்று படத்தில் ஏகப்பட்ட கிளை கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் இருந்தாலும், வழக்கமான பாணியில் சொல்லாமல், வித்தியாசமான முறையில் அதே சமயம் கிளைக்கதைகளை ஒரு மையப்புள்ளியில் சேர்ப்பதை நேர்த்தியாக மட்டும் இன்றி எந்தவித குழப்பமும் இன்றி சொன்னதில் வெங்கடேஷ்வராஜ்.எஸ், இயக்குநராக மட்டும் இன்றி படத்தொகுப்பாளராகவும் கவனம் ஈர்க்கிறார்.

படத்தின் முதல் பாதியில் என்ன நடக்கிறது? என்ற கேள்வியோடு ரசிகர்களை சற்று குழப்பமடைய செய்தாலும், இரண்டாம் பாதியில் அனைத்து கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் பதிலும், விளக்கமும் அளிக்கும் இயக்குநர் வெங்கடேஷ்வராஜ்.எஸ், இறுதியில் முடிவற்ற தொடர்ச்சி மூலம் படத்தை முடித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்.

மொத்தத்தில், ‘சிறகன்’ க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் பட ரசிகர்களுக்கானவன்.

 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!