Serial Stories

சதி வளையம்-23 (நிறைவு)

23 நன்றி, மீண்டும் வருக!

இடம்: சதுரா டிடக்டிவ் ஏஜன்சி ஆபீஸ்

காட்சி 1

“தன்யா, உன்னை அறையப் போறேன். என்னமோ மேஜர் கமல் மேல சந்தேகம் இருந்த மாதிரி சீன் போட்டுக்கிட்டே இருந்த நீ?” என்றான் தர்மா.

“நான் அப்படி எப்போ சொன்னேன்? ஆனா அவரைப் பார்த்தால் எனக்கு வேறு ஒரு சந்தேகம் தோணிச்சு. அவரோட அமைதியில ஒரு அசாதரணம் இருந்தது. ஏதோ புயலில் அடிபட்ட மாதிரி இருந்தார் அவர். இந்த அமைதிக்கு உள்ளே ஏதோ குமுறல் இருக்க வேண்டும். சாதாரணமாய்க் குடும்பத்தில் ஏதாவது குழப்பம் இருக்கும், அதனால் இப்படி இருக்கார்னு நினைக்க முடியல, ஏன்னா அவரும் சுஜாதாவும் ரொம்ப ஒத்துமையான, சந்தோஷமான தம்பதிகள்னு எல்லோரும் சொன்னார்கள். ஆக, இந்த மோதிரத் திருட்டில் சுஜாதாவிற்குச் சம்பந்தம் இருப்பதால்தான் அவர் இப்படி இருக்கிறார்னு உடனேயே நான் நினைச்சுட்டேன். ஆனா சுஜாதாவை நாம சந்தேக லிஸ்டிலிருந்து விலக்க வேண்டி வந்தது. அதோட மேஜர் கமல் மோதிரம் காணாம போகிறதுக்கு முன்னாடிலேர்ந்தே இப்படித்தான் இருக்கிறார்னும் புரிஞ்சது.

“நீண்ட விசாரணைக்குப் பிறகுதான் வாசு ஜெயில்லேர்ந்து வெளியில் வந்ததுலேர்ந்து மேஜர் கமல் இப்படி இருக்கார்னு புரிஞ்சது. வாசு தன் மனைவிக்கு ஒரு மோசமான இன்ஃப்ளுயன்சா இருப்பான்னு அவர் பயந்திருக்கார். பயந்ததில் தப்பும் இல்ல. நடுவில் இந்தத் திருட்டு, கொலை விவகாரம் வேற. மேஜருக்கு எதுவும் தெரியலைன்னாலும் அவரால ஓரளவு கெஸ் பண்ண முடிஞ்சிருக்கு. அது அவர் கவலைகளை அதிகமாக்கி இருக்கு” தன்யா பேசி நிறுத்தினாள்.

“அவர் ரொம்பப் பாவம்” என்று உண்மையான அனுதாபத்தோடு சொன்னாள் தர்ஷினி.

========================

காட்சி 2

“அச்சா, என்னை மன்னிச்சுடுங்க. இனிமே உங்களுக்கு நல்ல பிள்ளையா இருப்பேன். அணிமங்கலத்துக்கு நல்ல வாரிசாகவும் இருப்பேன்” என்று உணர்ச்சியுடன் சொன்னான் விஜய்.

“வளரே சந்தோஷம். எல்லாம் சொன்னபடி செய்தால் சரி” என்றார் சதானந்தன், பெருமூச்சுவிட்டு.

ஆனால் அவர் முகத்தில் என்றுமில்லாத ஒரு ஆனந்தம் இருந்தது.




====================

காட்சி 3

“தன்யா, என்னமோ முதல் கேள்வி, அதுக்கு நான் தான் பதில் சொன்னேன்னு என்னமோ சொன்னியே, அது எனக்குப் புரியவே இல்லை” என்றான் தர்மா.

“தர்ஷினி இந்த வழக்கின் கேள்விகளைச் சொன்னாளே, அதில் முதல் கேள்வி என்னன்னு யோசிச்சுப் பாரு. மோதிரம் எங்கே? இதிலே தான் வழக்கே ஆரம்பிச்சுது. ஆனா போகப்போக நாம இதை மறந்துட்டோம். யாரு திருடினா, யாரு கொலை செய்தான்னே யோசிச்சிண்டிருந்தோம்.

“எனக்கு ஓரளவு பிக்சர் கிடைத்தாலும், மோதிரம் எங்கேன்னு தெரியவே இல்ல. நாம பண்ணின ஸர்ச், போலீஸ் பண்ணின ஸர்ச் எதிலும் அது அகப்படல. அப்போதான் நீ ரொம்ப கெட்டிக்காரத்தனமா எங்களுக்கு வழிகாட்டின. புரியலையா? அன்னிக்கு எங்க ஷாப்பிங் சாமானையெல்லாம் பார்த்துட்டு நீ என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா? இப்பல்லாம் தங்கத்தோட டிசைன்ல கவரிங் வறது. தங்கம் கவரிங் மாதிரி இருக்கு. ஒண்ணும் கண்டுபிடிக்க முடியல… அப்படின்னு சொன்னே. அப்போ எனக்கு சுஜாதா காண்பித்த பஞ்சலோக நகைகள் ஞாபகம் வந்தது. அதிலே ஒரு பச்சைக்கல் செட்டிலே இரண்டு மோதிரம் இருந்தது. அப்பவே நான் ‘ஒரு செட்டில் எதுக்கு ரெண்டு மோதிரம்’ என்று லேசாய் யோசிச்சேன். ஆனா அதோட முக்கியத்துவம் நீ பேசினபோதுதான் தெரிந்தது. மோதிரத்தின் மேல்பாகத்தைப் பஞ்சலோகம் வைத்து மூடி, சும்மா ஒரு பச்சைக்கல்லைப் பதிச்சிருக்கா சுஜாதா! அதை அப்படியே ஒரு பச்சைக்கல் செட்டோட சேர்த்து வெச்சுட்டா! அப்பாடி! என்ன ப்ரில்லியண்ட் பாரு!” ஆச்சரியமாய்ச் சொன்னாள் தன்யா.

“ஆனா நீ அதை விட ப்ரில்லியண்ட்” என்றாள் தர்ஷினி. அவள் சொல்லியது தன்யாவைப் பார்த்து அல்ல, தன்னைப் பார்த்துத்தான் என்பது தர்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“அதில் என்ன சந்தேகம்? தர்மா ஒரு ஜீனியஸ்” என்றாள் தன்யா.

“அப்படியா?” என்று கேட்டான் தர்மா.

=====================

காட்சி 4

டாக்டர் திலீப் உள்ளே வந்து மௌனமாய் நின்றார்.

“திலீப், உனக்குக் கொஞ்சம் அட்வைஸ் பண்ண விரும்பறேன்” என்று கடுமையாய் ஆரம்பித்தான் தர்மா. “நீ பத்மாவை விரும்பறேங்கறதுனால, பாஸ்கர்-பத்மா கல்யாணத்தை நிறுத்த நீ பண்ணின தேர்ட் ரேட் ட்ரிக்ஸ்… சே! அவமானமாய் இருக்கு எனக்கு.”

திலீப் தலைகுனிந்தார்.

“மோதிரம் காணாமப் போனபோது, இதைப் பாலாஜி எடுத்திருப்பானோன்னு பாஸ்கர் யதார்த்தமாய் உன் கிட்டச் சொன்னதை நீ பத்மா கிட்டச் சொல்லியிருக்கே. அதுக்கும் முன்னாடி பாலாஜியைப் பத்தி பாஸ்கரும் சதானந்தனும் பேசினது, பாஸ்கர் பாலாஜி மேல் கோபப்பட்டது, அவங்க அம்மா அப்பா பக்கம் பேசினதுக்காகப் பத்மா மேல் வருத்தப்பட்டது எல்லாத்தையும் பத்மா கிட்டப் போய்ச் சொல்லி அவங்க கோபம் குறையாம இருக்கும்படியாகப் பார்த்துக்கிட்டே!”




திலீப் குனிந்த தலை நிமிரவில்லை.

“ஆனா நீ பணத்திற்காகத் துரோகம் பண்றவன் இல்லே. அந்தக் கதையை நான் நம்பமாட்டேன். நீ அந்த அரக்கில்காரனைத் துரத்தியது நிஜம்! அப்புறமும் உன் மனசு சபலப்படல. என் கிட்டயாவது சொல்லு. அன்னிக்குப் பாஸ்கர் ரூமுக்கு ஏன் போனே நீ?”

திலீப் மெதுவாய்ச் சொன்னார். “அங்கே பத்மாவோட ஃபோட்டோ ஒண்ணு இருக்கு. ரொம்ப அழகான போஸ். இனிமே பத்மா எனக்குக் கிடைக்க மாட்டான்னு தோணி, அவ ஞாபகார்த்தமா அந்த ஃபோட்டோவையாவது எடுத்து வெச்சுக்கலாம்னுதான் போனேன். மேஜர் கமல் வந்தவுடனே பயந்து ஒளிஞ்சுக்கிட்டேன். அவர் போனதும் நானும் வெளியே போயிட்டேன்.”

“இந்த விவகாரம் வந்ததும் உனக்குத் திருப்பி நம்பிக்கை வந்திருச்சாக்கும்! அதான் இந்தத் தகல்பாஜி வேலைகளா?”

திலீப் மௌனமாய் நின்றார்.

“இங்கே பாரு, நீ படிச்சவன், ஒரு பொறுப்புள்ள டாக்டர். அந்தப் பொசிஷனுக்குத் தகுந்தபடி நடந்துக்க. உன்னோட அண்டர்கிரவுண்ட் வேலைகளால உன்மீதே திருட்டுப் பழி, கொலைப் பழி எல்லாம் விழ இருந்தது! நல்லவேளை தப்பிச்சே! இனிமே இதெல்லாம் வேணாம். உன்னை விரும்பற ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்க” என்று முடித்தான் தர்மா.

“சரி, தர்மா. புத்தி வந்தது” என்றார் டாக்டர் திலீப்.

காட்சி 5

பாஸ்கரும் பத்மாவும் உள்ளே வந்தார்கள். பாஸ்கர் ஒரு ‘செக்’கை மேஜை மீது வைத்தான்.

“அது ஃபீஸ்” என்றான். “அப்புறம் இது …” மூன்று அழகான தங்க மோதிரங்கள் ஜொலித்த டப்பாக்களை மேஜை மீது வைத்துவிட்டு “எங்க பிரசண்ட், மனமார்ந்த நன்றிகளோட” என்றான்.

“நன்றி, குறிச்ச நேரத்தில கல்யாணம் நல்லா நடக்கட்டும். நாங்களும் வரோம்” என்றாள் தன்யா பாட்டி மாதிரி.

“கல்யாணம் முடிஞ்சதும் நாங்க ஜெர்மனி புறப்படறோம்” என்ற பாஸ்கர் தொடர்ந்தான். “மூன்று வருடத்தில் திரும்ப வந்திடுவோம். இங்கே ஃபார்ம்ஸ் வாங்கி நவீன விவசாயம் பண்ணப் போறோம். சுஜாதா என்ன தப்புப் பண்ணியிருந்தாலும் அவ என்னைப் பத்திச் சொன்ன வார்த்தைகள் செருப்பாலடிச்ச மாதிரி இருந்தது. அது தான் இந்த டிசிஷன்” என்றான்.

“மகிழ்ச்சி. எல்லாருக்கும் இந்த விழிப்புணர்ச்சி வரணும். வாழ்த்துகள்” என்றான் தர்மா, நிறைந்த மனதுடன்.

======================

காட்சி 6

“கங்கிராட்ஸ், டிடக்டிவ்ஸ்! அசத்திட்டீங்க போங்க!” என்று உற்சாகமாக உள்ளே நுழைந்தார் போஸ்.

“என்ன சார், எவ்வளவு உதவி பண்ணியிருக்கோம், இப்படி வெறுங்கையோடவா வருவீங்க?” என்று பொய்க்கோபத்தோடு கேட்டாள் தர்ஷினி.

“யார் சொன்னது வெறுங்கையோட வந்திருக்கேன்னு? வாரண்டோட வந்திருக்கேன். உங்களையெல்லாம் அரெஸ்ட் பண்ணி… எங்க வீட்டுக்குக் கூட்டிப் போகப் போறேன். இன்னிக்கு அங்கே உங்களுக்கு விருந்து, என் அக்கா கையால” என்றார் போஸ்.

“மத்தியானம் நாங்களே வரோம், சார்! விலங்கு மாட்டி இழுத்துக்கிட்டுப் போயிடாதீங்க” என்று சிரிப்புடன் சொன்னாள் தன்யா.

போஸ் மூன்று பேர் கையையும் குலுக்கிவிட்டுக் கிளம்பினார்.

“அடிக்கடி வாங்க சார்” என்றாள் தன்யா.

“கட்டாயம். இனிமே சிடுக்கா ஏதாவது கேஸ் இருந்தா உங்க கிட்டத் தள்ளிடுவேன்” என்று சொல்லிச் சிரித்தவாறே போனார் போஸ்.




============================

காட்சி 7

“தர்ஷ், இந்தக் கேஸ் நல்லபடியா முடிஞ்சது. இனி அடுத்த கேஸ் என்னன்னு யோசிக்கலாம் வா!” என்றாள் தன்யா.

“ஏதாவது துப்புத் துலங்காத பழைய வழக்கை எடுத்து விசாரிக்கலாமா?” என்றாள் தர்ஷினி.

தர்மா அங்கே இருந்ததையே மறந்துவிட்டு அவர்கள் சர்ச்சை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

“ஈச்வரோ ரக்ஷது” என்று பெருமூச்சு விட்டான் தர்மா.

ஆனால் அவன் முகத்திலும் மனத்திலும் பெருமையும் ஆனந்தமும் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது.

(சுபம்)

 




What’s your Reaction?
+1
5
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!