Serial Stories

சதி வளையம் -15

15 கலைடோஸ்கோப் – பாஸ்கர்

தன்யா உடனே எழுந்துவிடவில்லை. கையில் இருந்த உருளையைக் கண்ணுக்கு நேரே பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது என்ன என்பது எல்லோருக்கும் புரிந்தது. ஒருபக்கம் விதவிதமான கோணங்களில் கண்ணாடித் துண்டுகளைப் பதித்து, அதன்முன்னால் பல வண்ணங்களில் சின்னச்சின்னப் பாசிமணிகளைப் போட்டு, அவற்றின் பிம்பம் கண்ணாடிகளில் பலகோணங்களில் பிரதிபலித்து ஒரு அழகிய கோலமாகத் தெரியும் ‘கலைடோஸ்கோப்’ அது. குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்.

“தன்யா!” என்று கூர்மையாக அழைத்தார் போஸ்.

“ஓ, சாரி!” என்று எழுந்துகொண்டாள் தன்யா. முன்னால் போய் நின்று கொண்டாள்.

போஸைப் பார்த்துத் தன் கையிலிருந்த சிலிண்டரை நீட்டினாள். “கலைடோஸ்கோப் பார்க்கறீங்களா சார்?” என்றாள்.

“என்னது இது சிறுபிள்ளைத்தனமா இருக்கு. ஏதாவது சொல்லப் போறீங்களா, இல்லையா?” என்றார் போஸ் சூடாக.

“கூல் இன்ஸ்பெக்டர், கூல்” என்றாள் தன்யா. ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள். கணீரென்ற குரலில் பேச ஆரம்பித்தாள்.

“இன்ஸ்பெக்டர் போஸுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை இங்கே முதலில் சொல்றேன். ஒரு குற்றம் என்பது ஒரு தனிச் சம்பவம் – அதாவது சாலிடரி இன்சிடண்ட் – இல்லே. பல சம்பவங்களின், பல குணாதிசயங்களின் சங்கமந்தான் குற்றத்தில் வந்து முடிகிறது. நாம் அந்தச் சம்பவத்தை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, அதன் உருவம் வேறு மாதிரித் தெரிகிறது – இந்தக் கலைடோஸ்கோப் மாதிரி.”

இப்போது போஸ் ஒரு பெருமூச்சு விட்டார்.

“அப்படியானால் பல்வேறு கோணங்களில் கிடைக்கிற பல்வேறு உருவங்களில் நம்க்கு வேண்டிய பாட்டர்ன் எது? அதை எப்படித் தெரிந்து கொள்வது? அதற்குத் தான் ஒரு குற்றத்தின் முக்கிய உண்மைகளை – ஃபாக்ட்ஸ் – முதலில் சேகரித்துக் கொள்கிறோம். எந்த உருவம் நாம் சேகரித்த அனைத்து உண்மைகளோடும் பொருந்துகிறதோ அது தான் குற்றத்தின் உருவம், குற்றவாளியின் உருவம்!

“நாங்களும் இதைத்தான் செய்தோம். இந்தக் குற்றத்திலிருந்து கிளைத்த பல்வேறு உண்மைகளைப் பட்டியலிட்டுக் கொண்டோம். அதிலிருந்து நாம் அறியாத உண்மைகளைக் கேள்விகளாக்கினோம். அந்தக் கேள்விகளைத்தான் இப்போது தர்ஷினி உங்களுக்குப் பட்டியலிட்டுக் காட்டினாள். இந்தக் கேள்விகளின் பதில்களை நாம் அறியும்போது நமக்கு இந்தக் குற்றத்தின் முழு உருவம் புலப்பட்டு விடும்.

“இந்தக் கேள்விப் பட்டியலின் ஆதி கேள்வி, தர்ஷினியால் கடைசியாகச் சொல்லப்பட்டது. அதாவது இந்த மோதிரம் மறைந்ததில் பாஸ்கருக்குச் சம்பந்தம் இருக்கிறதா, இல்லையா?”

தன்யா சற்று நிறுத்தினாள். எல்லோரையும் ஒரு சுற்றுப் பார்வை பார்த்துக் கொண்டாள்.

“இந்தக் கேஸின் ஆரம்பத்திலிருந்தே எல்லோராலும் சொல்லப்படும் ஒரு விஷயம் – பாஸ்கருக்கு இந்த மோதிரத்தின் சக்தியில் நம்பிக்கை இல்லை, இந்தச் சொத்துக்களில் பெரிதாக விருப்பமும் இல்லை என்பதே.  இது எத்தனை தூரம் உண்மை என்று அறிய, பாஸ்கர் பணிபுரியும் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் சிறு விசாரணை நடத்தினோம். அப்போது தெரிந்தது என்னவென்றால் பத்மா இன்னும் ஒரு மாதத்தில் ஜெர்மனிக்கு அனுப்பப்பட இருக்கிறார், பாஸ்கரும் ஜெர்மனிக்கு மாற்றல் வாங்க அதிதீவிரமாய் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்!”




சுஜாதா முகம் சுளித்தாள்.

“ஆம், அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டுச் சொந்தக் கிராமத்தில் இருக்கும் பூர்வீக சொத்தினை வந்த விலைக்கு விற்றுவிட்டு மறுபடியும் ஸ்டேட்ஸுக்கே ஓட நினைக்கும் இன்றைய இளைஞர்களின் டிபிகல் மனோபாவம்தான் பாஸ்கருக்கு இருந்திருக்கிறது. ஒரு நிலையில் இந்தச் சொத்துக்களை விட்டுக்கொடுக்கும் நிலைக்கே பாஸ்கர் போயிருக்கிறார். 

“இப்போது இரண்டாவது காரணம் – தன் கல்யாணத்தில் விருப்பமில்லாமல் பாஸ்கர் இதைச் செய்திருப்பாரா என்பது. முதல் பார்வையில் இதை மறுத்து விடத்தான் தோன்றும். ஏனென்றால் பாஸ்கருக்குப் பத்மாவின் மீது இருக்கும் லவ் தீவிரமானது, வெளிப்படையானது. ஆனாலும் பார்ட்டி நடந்த அன்று, அவர்களுக்குள் ஏதோ பிரச்சினை முளைவிட்டிருக்கிறது. அது என்னன்னு சொல்லலாமா பத்மா?”

பத்மா தலைகுனிந்தாள். மெதுவான குரலில் சொன்னாள். “பாஸ்கர் இரண்டொரு முறை எங்க வீட்டுக்கு வந்த போது, எங்க வீட்டுக்காரங்க கொஞ்சம் அநாகரீகமா நடந்துக்கிட்டாங்க. கல்யாணம் ஆனபின்னாலும் என் சம்பளத்தை அவர்களுக்குக் கொடுக்கணும்கறதைப் பற்றிக் கொஞ்சம் கறாராகச் சொன்னாங்க. பாஸ்கருக்கு இதெல்லாம் கட்டோட பிடிக்கல்ல. ஏதாவது ஒரு தொகை கொடுத்துக் கல்யாணத்தோடு அவங்களை ஒதுக்கிடலாம்னு சொன்னான். அது எனக்குக் கோபம் வந்துட்டது. அம்மா அப்பா வளர்த்திருந்தா தானே அவங்க அருமை தெரியும்னு பேசிட்டேன். அப்போதைக்கு மன்னிப்புக் கேட்டான்னாலும் பாஸ்கருக்கு மனசுக்குள் ஒரு உறுத்தல் இருந்துக்கிட்டே இருந்தது தெரிஞ்சது …” நிறுத்தி விட்டாள்.

“தாங்க் யூ பத்மா, ஓப்பனா எல்லார் முன்னாடியும் இதைப் பகிர்ந்துக்கிட்டதுக்கு. ஆனா முக்கியமான ரெண்டு விஷயத்தை விட்டுட்டீங்க. ஒண்ணு – பாஸ்கரோட வருத்தத்திற்கு முக்கிய காரணம் உங்க தம்பி பாலாஜியோட காரெக்டர் சரியில்லைங்கறது. அவர் ஒரு தரம் ஜெயிலுக்குப் போனவர்ங்கறதை நீங்க மறைச்சுட்டீங்க. மேலும் பாலாஜி ஒரு கம்பெனில பாஸ்கர் பேரைச் சொல்லிக் கடன் கேட்ட விஷயம் அவருக்குத் தெரிய வந்தது.”

பத்மா குனிந்த தலை நிமிரவேயில்லை. பாலாஜி வேகவேகமாய் நகத்தைக் கடித்தான்.

“இத்தனை இருந்தும் பாஸ்கர் உங்களைத் திருமணம் செய்துகொள்ளும் முடிவிலிருந்து மாறவில்லை. அதற்காக உங்கள் தம்பியிடம் சமாதானம் பேசவும் தயாராக இருந்தார். அப்படிப்பட்டவர் உங்கள் குடும்பத்தின் மேல் ஏன் பழி போடப் போகிறார்?”




ஒரு விநாடி நிறுத்திய தன்யா தொடர்ந்தாள் – “ரெண்டாவதா நீங்க சொல்லாத விஷயம், பாஸ்கர் மனதில் வருத்தம் இருந்தது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்தியது யார் என்ற விஷயம்.”

பத்மா திடுக்கென்று நிமிர்ந்தாள். 

“சொல்லுங்க பத்மா” என்று ஊக்கினாள் தன்யா.

“டாக்டர் திலீப்” என்று தயக்கமாய் ஒப்புக்கொண்டாள் பத்மா.

தன்யா டாக்டர் திலீபை ஒரு வெற்றிப் பார்வை பார்த்தாள். பிறகு “பாஸ்கர் மேலே எங்க சந்தேகம் விழ ஒரு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? அன்று ஹேமா பேசிய பேச்சுத்தான். ‘நான் பார்க்க வேண்டியதைப் பார்த்திருப்பேனே! என்ன ராசா?’ என்று பாஸ்கரைப் பார்த்துத்தான் அவள் பேசினாள். அவள் மறைமுகமாய்ச் செய்தி அனுப்பியது பாஸ்கருக்குத் தான் என்று அப்போது தோன்றியது” என்றாள்.

“நான்சென்ஸ்!” என்று உறுமினான் பாஸ்கர். “எங்கிட்ட பேசற மாதிரி அவ யாருக்கு வேணும்னாலும் செய்தி சொல்லியிருக்கலாமே!”

“கூல் பாஸ்கர். அது எங்களுக்குத் தோணாம இல்ல” என்றதும் பாஸ்கர் அடங்கினான்.

“ஆக, பாஸ்கரைப் பொறுத்தவரை, சில சந்தேகப்படும்படியான பாயிண்ட்ஸ் இருந்தாலும், வலுவான காரணம் எதையுமே கண்டுபிடிக்க முடியாததால அவரை ட்ராப் செய்கிறோம்.” என்றாள் தன்யா. 

“குட்!” என்றான் பாஸ்கர், நிம்மதியாக.




What’s your Reaction?
+1
5
+1
3
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!