gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/காத்தாயி அம்மன் வரலாறு

சித்தாடியின் இந்த  இந்த ஆலய பகுதியில்தான்  முருகப் பெருமான் வள்ளி தேவியை மணந்து கொண்டதாகவும், அதனால்தான் அன்னை காத்தாயி அம்மன் என்ற பெயரில் வள்ளி தேவி இங்கு எழுந்தருளி உள்ளதான கருத்தும் உள்ளது.  இதைப் போலவே ஸ்ரீ லங்காவில் உள்ள கதிர்காம ஆலயம் உள்ள பகுதியில் வள்ளி தேவி முருகப் பெருமானை மணந்து கொண்டதான கதைகளும் உண்டு. ஆகவே  காத்தாயி அம்மனின் திருமண பின்னணியை இங்கு விளக்குவது அவசியம் என்று நினைக்கின்றேன்.




புராணங்களின் கூற்றின்படி ஒவ்வொரு தெய்வமும் பல்வேறு நிலைகளில் அவரவர்கள் பெற்று   இருந்த சாபங்களை களைந்து கொள்ள பூலோகத்தில் பல பிறப்புக்களை எடுத்துள்ளன. அப்படி சாப விமோசனம் பெற வந்தவர்களில் தெய்வீக தம்பதிகளும் உண்டு.  அப்படி வந்தவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட தமது கணவர்களை பிரிந்து வாழ வேண்டி இருந்தது.  இப்படியாக பிறப்பு எடுத்த தெய்வங்கள் சாப விமோசனம் பெற்றவுடன் மீண்டும் அவர்களது கணவர்களை (தெய்வங்கள்) திருமணம் செய்து கொண்ட கதைகள் பல உள்ளன. தெய்வங்களை பொறுத்தவரை விவாகரத்து போன்றவை கிடையாது என்பதினால் மீண்டும் மணம் என்பது என்ன என்றால் சாப விமோசனகளை நிவர்த்தி செய்து கொள்ள  தற்காலிகமாக அவரவர்களை விட்டு விலகி நின்ற ஆண் மற்றும் பெண் சக்திகள் மீண்டும் ஒன்றிணையும் நிலை ஆகும். சாப விமோசனம் அடைந்து அவை மீண்டும் ஒன்றிணையும் நேரத்தில் அதை பரிபூரணமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அதே தெய்வீகத்  தம்பதிகளுடைய பல திருமணங்கள் முன்காட்சிப் பதிவு போல மீண்டும் வெளிப்படுத்தப்பட்டு உள்ளதென்று கற்றறிந்த பண்டிதர்கள் கூறுகின்றார்கள். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.  சாப விமோசனங்களைப் பெற பிரிந்து சென்ற அனைத்து தெய்வீக தம்பதியினரும் மீண்டும் இணைந்தபோது திருமணம் என்ற முன்காட்சிப் பதிவை நடத்திக் காட்டியதற்கான  கதைகள் இல்லை.

சில தெய்வங்கள் மட்டுமே அவற்றை வெளிப்படுத்தி உள்ளன. அதற்கும் ஒரு காரணம் உண்டு. பல முறை சில தெய்வீக தம்பதிகளின் திருமணங்களைக் காண முடியாமல் இருந்த ரிஷி முனிவர்கள் அவர்களது திருமணத்தை தாம் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு  தவம் இருந்தார்கள். அவர்களின் தவத்தை மெச்சி அவர்களுக்கு காட்சி தந்த தெய்வங்கள் அவர்களது ஆசைகளை பூர்த்தி செய்வதாக கொடுத்த வாக்குறுதிகள் பேரிலும், எந்தெந்த பகுதிகளில் பிரிந்து சென்ற தெய்வங்கள் தவத்தில் அமர்ந்திருந்தனவோ அந்தந்த புனிதப் பகுதியிலும் தமது திருமண வைபவங்களை மீண்டும்  நடத்திக் காட்டினார்கள்  என்பதினால்தான் இன்றும் பல ஆலய வரலாறுகளில்  சிவபெருமான் பார்வதி தேவி, முருகப் பெருமான்-வள்ளி தேவி மற்றும் பகவான் மஹாவிஷ்ணு-லட்சுமி தேவி திருமணங்கள் அந்தந்த ஆலயத்தில் நடைபெற்றதான வரலாற்றுக் கதைகள் உள்ளன. இப்படியாகத்தான் பல ஆலய இடங்களில் தெய்வங்கள் தத்தம்  திருமணக் காட்சிகளை மீண்டும் மீண்டும் நடத்திக்  காட்டி உள்ளன. இந்த பின்னணியின் காரணமாகவே சூரனின் வதம் முடிந்ததும் சித்தாடியில் காத்தாயி அம்மனாக வீற்று இருக்கும் வள்ளி தேவியின் திருமணம் முருகப் பெருமானுடன் நடைபெற்றதாக கூறப்படுவதும் ஏற்கத் தக்க கருத்தாகவே உள்ளது.




கிராம தேவதைகள் மற்றும் கிராம தெய்வங்களைக் குறித்த மாறுபட்ட, மேன்மை மிக்க  நாட்டுப்புறக் கதைகளில் அன்னை காத்தாயி அம்மனைக் குறித்த சில கதைகளும் உள்ளன.  பண்டைய காலங்களில் பல கிராம தேவதைகளை வழிபட்டு வந்திருந்த கிராம மக்கள் தமது கிராமங்களை இயற்கை அழிவு மற்றும்  தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக காத்தாயி அம்மனையும் வழிபட்டு வந்திருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாகும். இதன் காரணம் காவேரி டெல்டா எனப்படும் இந்த பகுதியை சேர்ந்த சில கிராமங்களில் காணப்படும்  காத்தாயி அம்மனின் ஆலயங்களே. கிராம ஆலயங்களில் உள்ள அன்னை காத்தாயி அம்மன் கிராம தேவதையாகவே வணங்கப்படுகிறாள். பொதுவாகவே கிராம ஆலயங்களில் ஆகம வழிபாட்டு முறையிலான வழிபாடு இல்லாமல் பொது  வழிபாட்டு முறையே உள்ளது. ஆனால் சித்தாடியில் உள்ள ஆலயத்தில் மட்டும் அன்னை காத்தாயி அம்மன் ஆகம வழிபாட்டு முறையில் வணங்கப்பட்டு வருகின்றாள் என்பது இந்த ஆலயத்தின் தனித் தன்மையைக் காட்டுகின்றது. அதே சித்தாடி கிராமத்தில் உள்ள இன்னொரு சிறிய காத்தாயி அம்மன் ஆலயத்தில் அவள் கிராம தேவதையாகவே காணப்படுகிறாள்.

சோழர்கள் ஆண்ட காலத்தில் அதாவது 1500 வருடங்களுக்கு முன்பாகவே ஆட்சியில் இருந்து வந்தவர்கள் ஆட்சியில்  சில கிராமங்களில் சிறிய அளவிலான அன்னை காத்தாயி அம்மன் ஆலயங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயம் இல்லைதான். சோழ மன்னர்களில் சிலர் அன்னை காத்தாயி அம்மனை தமது குலதெய்வமாகவே வணங்கி வந்துள்ளனர் என்பது அதன் காரணம். முக்கியமாக ராஜராஜ சோழனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மன்னனான விக்ரம சோழன்-I அன்னை காத்தாயி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வந்துள்ளதாகவும், அவளை தமது குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளார் என்பதாகவும் செய்திகள் உள்ளன. இந்த செய்தி சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படும் காட்டுமன்னார் காத்தாயி அம்மன் ஆலய வரலாற்று செய்தியில் இருந்து தெரிய வருகின்றது. அங்குள்ள அன்னை காத்தாயி அம்மன் நின்ற நிலையில் இருக்க, அவளை பூங்குறத்தி என்றும் அழைக்கின்றார்கள்.




அதன் காரணம் அவள் குறத்தி வடிவில் சென்று சோழ மன்னனின் பிரச்னையை தீர்த்து வைத்ததினால் அவளை பச்சைவாழி அம்மனுடன் சேர்த்து பிரதிஷ்டை செய்து வணங்கினாராம். ராஜராஜ சோழனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சில மன்னர்கள் தாம் வழிபட்ட ஆலயங்களில் பச்சைவாழி அம்மன் எனும் காத்யாயினி (பார்வதி அம்மன்)  அம்மனுடன் அன்னை காத்தாயி அம்மனையும் சேர்த்தே  வழிபட்டு வந்துள்ளார்கள்  என்பதான சில குறிப்புக்கள் உள்ளன. பார்வதி தேவியின் பெரும்பாலான தோற்றங்களில் அவள் பச்சை புடவையுடன் காட்சி தந்தே வந்ததினால் அவள் பெயர் பச்சை வாழி அம்மன் என்று மருவி உள்ளதாகவும் தெரிகின்றது.

குழந்தையை கையில் ஏந்தியபடி காட்சி தரும் அன்னை காத்தாயி அம்மனின் கோலத்தின் தத்துவம் என்ன என்பதை ‘எப்படி ஒரு குழந்தையானது மனதில் பயம், காமம், க்ரோதம், மற்றும் பொறாமை போன்றவை இல்லாமல் இயற்கையாக வாழ்கின்றதோ அந்த நிலையில் எந்த ஒரு மனிதன் தன்னை  வைத்திருப்பானோ அவர்களை தனது குழந்தையைப் போல பாதுகாத்து வருவேன் என்பதையே அந்த கோலத்தின் மூலம் அவள் குறிக்கின்றாள்’ என்பதாக பண்டிதர்கள் விளக்குகிறார்கள். இந்த செய்திகள் பலவற்றையும்  முன் காலத்தைய கிராம மக்களின் நாட்டுப்புற பாடல்கள் மூலமும், நாடோடிக் கதைகள்,  கும்மிப் பாடல்கள் போன்றவற்றின் மூலம்  உணர முடிகின்றது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!