gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/காத்தவராயன் காவல் தெய்வமான பின்னணி… நெகிழ்ச்சியூட்டும் காதல் கதை!

காஞ்சியில் அருள்பாலிக்கும் காமாட்சி அம்மன் கோயிலிலும் சரி, கிராமங்களில் அமைந்திருக்கும் காமாட்சி அம்மன் கோயில்களிலும் சரி, முதன்மையான காவல் தெய்வமாக வழிபடப்படுபவன் காத்தவராயன். காத்தவராயனை வழிபட்ட பிறகுதான் காமாட்சி அம்மனை வழிபடவேண்டும் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை. காவல் தெய்வமான காத்தவராயனின் அனுமதி இருந்தால் மட்டுமே காமாட்சி அம்மனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காவல் தெய்வம் ஸ்ரீ. காத்தவராயன் துணை - YouTube




காமாட்சி அம்மன் கோயில்கள் அனைத்திலும் காத்தவராயனை அடையாளப்படுத்தக் கழுமரம் அல்லது பலிபீடம்  அமைக்கப்பட்டிருக்கும். காத்தவராயனை ஒரு கழுமரமாக வைத்திருப்பதன் பின்னணியில், துயரம் மிகுந்த காதல் கதை ஒன்று சொல்லப்படுகிறது.
காத்தவராயன், 14-ம் நூற்றாண்டில் திருச்சிக்கு அருகில் வாழ்ந்திருந்த காவல்காரன். அப்போதே காதலில் புரட்சி செய்து தண்டிக்கப்பட்டவன். மரணத்துக்குப் பிறகு சாமியாகி, பல்லாயிரக் கணக்கான மக்களுக்குக் காவல் தெய்வமாக விளங்குபவன்.

முக்கொம்பு அருகே காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது வாத்தலை கிராமம். இந்தக் கிராமத்தில்தான் காத்தவராயன் கோயில் அமைந்திருக்கிறது. காத்தவராயனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களில் முதன்மையானது இது. இங்கிருந்து பிடி மண் எடுத்துச் சென்றுதான் வேறு ஊர்களில் காத்தவராயனுக்குக் கோயில் எடுப்பிக்கிறார்கள். காத்தவராயன் வாழ்ந்த இந்த ஊர்தான் அவனுக்குப் பூர்வீகம். காத்தவராயன்  கோயிலை அணைத்துச் சென்றபடி ஓடிக்கொண்டிருக்கிறது அய்யாறு. கொல்லி மலையிலிருந்து நீர் திரண்டு வருகிறது என்று கிராமத்தவர்கள் கூறுகிறார்கள். அய்யாறுக்கும், காவிரிக்கும் இடையில் இருக்கிறது கோயில்.




பெரிய முண்டாசு, பார்த்தாலே பயத்தை ஏற்படுத்தும் கண்கள், மிரட்டும் மீசை என்று நின்றுகொண்டிருக்கும் காத்தவராயன், தன் கையில் பூச்செண்டை வைத்திருக்கிறார். அந்தப் பூச்செண்டு காதலின் அடையாளம். அந்தப் பூச்செண்டின் மீது கிளி ஒன்று அமர்ந்திருக்கிறது. அவனுக்கு இரு பக்கமும் இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஒருத்தி சிவப்பு நிறப் பட்டு உடுத்தியிருக்கிறாள். அவள் பெயர் ஆரியமாலா. மற்றொருத்தி கரும்பச்சை நிறப் பட்டு உடுத்தியிருக்கிறாள். அவள் பெயர் ஓந்தாயி. மூவருக்கும் வலப்புறத்தில் பெரியண்ணனும், இடப்புறத்தில் மதுரை வீரனும் காத்தவராயனைப் போலவே முண்டாசு, முறுக்கிய மீசை என்று காவல்காரர்களுக்கு உரிய தோரணையுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரியண்ணன் என்பவன் காத்தவராயனின் மாமன். கழுமரத்தில் காத்தவராயன் தொங்கியபோது அதன் கழுத்துத் தூண்டிலை அவிழ்த்து விட்டவன் இவன் என்கிறார்கள். ஆனால், காத்தவராயனுக்குத் தொடர்பே இல்லாத மதுரை வீரன் அருகில் இருக்கக் காரணம் என்ன? காத்தவராயனைப் போன்றே பஞ்சமர் குலத்தில் பிறந்து உயிர் விட்டவன் இவன்.

யார் இந்தக் காத்தவராயன்? 14 – ம் நூற்றாண்டில் காவல் வீரனாக வாழ்ந்தவன் எதற்காகக் கழுவேற்றப்பட்டான்? பஞ்சமர் குலத்தில் பிறந்த காத்தவராயனுக்கும், ஆரியமாலாவுக்கும் உள்ள தொடர்பு யாது? காத்தவராயனின் கதையைக் கூறினார் கோயில் பூசாரி….




“காத்தவராயன் கழுவேற்றப்பட்ட கதை அவனோட முன் ஜன்மத்தோடு தொடர்புடையது. பார்வதிதேவி,  காமாட்சியா பூமில பிறவி எடுக்கறாங்க. அவுங்களுக்குக் காவல் இருந்தவன் காத்தவராயன். பார்வதி தேவிக்கு உதவி செய்ய சப்த கன்னியர்களும் பிறவி எடுக்கறாங்க. காத்தவராயன் சப்த கன்னியர்கள் மேல காதல் கொண்டுடறான். அதனால, அவன் ஏழு பிறவிங்க எடுத்து, ஒவ்வொரு பிறவியிலும்  சப்த கன்னியரில் ஒருத்தியை காதலிச்சு, கழுவேறனும்ணு பார்வதி தேவி அவனுக்கு சாபம் கொடுத்துவிடுகிறார். அப்படி இந்தப் பிறவியில் சப்த கன்னியர்ல ஒருத்தரான ஆரியமாலா என்பவளைக் காதலிச்சுக் கழுவேறினான். அவரு கழுவேறுன இடத்துக்குப் பேரு பாச்சூர்” என்று தெரிவித்தார்.

பாச்சூர் கிராமம் வாத்தலையிலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிறது. அங்குதான் காத்தவராயன் கழுமரம் ஏற்றப்பட்ட ’கழுமேடை’ இருக்கிறது. காத்தவராயன் ஏறிய 60 அடி கழுமரம் இன்றும் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமியின்போது காத்தவராயன் கழுமரம் ஏறும் விழா நடைபெறுகிறது. இந்த இடத்திலும் காத்தவராயனுக்குக் கோயில் இருக்கிறது. ஆனால், இங்கு எந்தச் சிலையும் காணப்படவில்லை. மாறாக,  பிடி மண்ணையே  காத்தவராயனாக வணங்குகிறார்கள். காத்தவராயனுக்கு நடுகல் ஒன்றையும் நட்டு வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

அங்கே கழுமேடைப் பகுதியைக் காவல் காத்துக்கொண்டிருந்தவரும் நம்மிடம் காத்தவராயனின் கதையைக் கூறினார்…




“சேப்பிள்ளையான்ங்கற நாடுகாவல் அதிகாரியோட வளர்ப்பு மகன், பரிமணம்.  பஞ்சமர் குடும்பத்துல பிறந்து சேப்பிள்ளையால வளர்க்கப்பட்டாரு. பரிமணம்ங்கறதுதான் காத்தவராயனோட பேரு. அப்பாவ மாதிரியே காவல் பணிய செஞ்சிகிட்டு இருந்தான்.  அது மட்டுமில்லாம கின்னரி நாதத்த வாசிக்கறதுல வல்லவன் அவன். அதே காலத்துல ஒரு வேதியருக்கு சப்த கன்னியர்ல ஒருத்தி ஆர்யமாலாங்கற பேர்ல பொறந்திருந்தா. காத்தவராயனோட கின்னரி வாசிப்புல மயங்கிட்ட ஆர்யமாலா, அவனைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டா. மொதல்ல காத்தவராயன் அவளோட காதலை ஏத்துக்கலை. ஆர்யமாலா கட்டாயப்படுத்தவே, வேற வழியில்லாம அவளை அழைச்சிக்கிட்டு ஊரை விட்டே ஓடிவிட்டான்.

பஞ்சமர் குலத்துல பிறந்த ஒருத்தன் வேதியர் பொண்ண கல்யாணம் செஞ்சி அழைச்சிக்கிட்டு போனத பத்தி திருசிரபுரம் (திருச்சி) நாட்டை ஆண்ட ஆரியப் பூராசன்ங்கற அரசன் கிட்ட சொல்றாங்க. அந்தக் கால சாஸ்திரப்படி, ஆரியப் பூராசன் இந்தக் காதலை ஏற்க மறுத்துடறாரு.  காத்தவராயன இழுத்துக்கிட்டு வந்து  கழுவேற்ற சொல்லிடறாரு. காவல் வீரர்களும் அரசனோட கட்டளைய ஏத்துக்கிட்டு காத்தவராயன தேடிக் கண்டுபிடிச்சி வந்து பாச்சூர்ல கழுமரம் ஏத்தி கொன்னுடறாங்க. காத்தவராயன் செத்ததக் கேட்ட ஆரியமாலாவும் மூர்ச்சையாகி விழுந்து செத்துட்டாங்க. இப்போ அவுங்க ரெண்டு பேரும்தான் எங்களுக்குக் காவல் தெய்வங்க…” என்று அவர் ஆவேசம் வந்தவர்போல் கூறினார். பின்னர், அவர் காத்தவராயன் சிலைக்கு முன்பு விழுந்து வணங்கி காலடி மண்ணை நெற்றியில் இட்டுக்கொண்டு அமைதியானார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!