Serial Stories உள்ளத்தால் நெருங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்-2

2

“வாணி எழுந்து விட்டாளா?” வெற்றாய் ஒலித்த தனசேகரின் குரலில் ஒரு குற்ற உணர்வு அப்பட்டமாய் தெரிய, சுபவாணி லேசாக சிரித்துக் கொண்டாள். இவருக்கு ஏன் இந்த குற்ற உணர்வு ?பாவம் இவர் என்ன செய்வார்!?எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டவள் உடலோடு மனமும் கனத்துக் கிடப்பதை உணர்ந்தாள். 

“இரண்டே இட்லி எப்படிம்மா போதும்?” பரிதவிப்பாய் கேட்ட அம்மாவை புன்னகையோடு சமாளித்து எழுந்தாள்.

அவள் எழுந்து வந்ததிலிருந்தே  ஒரு விரும்பத்தகாத அமைதி வீட்டிற்குள் ஆரம்பித்திருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க கூட அஞ்சி நடமாடிக் கொண்டிருந்த வீட்டினரை புன்னகையோடு பார்த்தபடி கடனென உண்டு முடித்தாள்.

” போகலாமா?” கேட்ட தனசேகரின் குரலில் கரகரப்பு நன்றாக தெரிந்தது.கைநீட்டி அவன் புறங்கையை மெல்ல தொட்டாள். “விடுங்கள் அத்தான். உங்கள் மேல் என்ன தப்பு இருக்கிறது?”

 சட்டென முகம் திருப்பிக் கொண்டு வெளியே போய் நின்று கொண்டான் அவன். அதென்னவோ தங்கள் கலக்கத்தை… கண்ணீரை வெளிப்படையாக காட்டிக் கொள்வதில் இந்த ஆண்களுக்கு அநியாய கூச்சம். தாயிடம், தந்தையிடம், மனைவியிடம், பிள்ளைகளிடம்,சொந்த பந்தங்களிடம் ஒரு பாட்டம் அழுது தீர்த்து விட்டால்தான் என்னவாம்!

இப்படி வெளியே காட்டாமல் உள்ளே அமுக்கி அமுக்கி வைத்திருக்கும் உணர்வுகள்தான் நிறைய அழுத்தங்களை அவர்கள் மனதிற்குள் விதைத்து, வக்கிரவாதிகளாக அவர்களை மாற்றி விடுகிறதோ? ஆண் பிள்ளை அழக் கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்த்த இந்த சமுதாயம் தான் காரணமோ? சம்பந்தமில்லாமல் ஏதேதோ எண்ணம் வந்தது சுபவாணிக்கு.

 ஆழ்ந்த சிந்தனையிலும் புன்னகைத்திருந்த தங்கையின் முகத்தை நம்ப முடியாமல் பார்த்தாள் இந்திரா. “வாணி உனக்கு…” மேலே பேச முடியாமல் தடுமாறிய தமக்கையின் கையை பற்றிக் கொண்டாள் சுபவாணி.




” எனக்கு எந்த வருத்தமும் இல்லைக்கா. நீ போய் உன் கணவரை சமாதானப்படுத்து .பாவம் இரண்டு வாளி கண்ணீர் இந்நேரம் வழிந்திருக்கும்” கிண்டல் போல் பேசி சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்.

அப்பா சிவநேசனோ மகளது முகத்தை பார்க்க கூட கூசினார். இதோ இப்போது கூட அவளுக்கு முதுகு காட்டியபடிதான் கார் சாவியை எடுத்துக் கொண்டிருந்தார். நான்கு பேரும் காரில் ஏறினர். ஏசி யைத் தாண்டி காருக்குள் ஒருவித வெம்மை படர்ந்திருப்பதாக உணர்ந்தாள் சுபவாணி. நால்வரின் மூச்சுக்காற்றுக்கு இவ்வளவு சூடா?

” ஏதாவது பாட்டு போடுங்கப்பா” குரலை மிக உற்சாகமாக வைத்துக் கொண்டாள். சிவனேசன் எஃப் எம் ஐ ஆன் செய்ய ‘மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்ற சொல்லே அறியாதது’ என பாடல் ஒலித்தது.

தனசேகர் சட்டென்று ஆப் செய்தான்.”பாட்டும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் பேசாமல் வாங்க” சிடுசிடுத்தான்.

பாட்டு வரிகள் மனதிற்குள் ஏற்படுத்திய தாக்கத்துடன் பார்வையை காருக்கு வெளியே போட்டாள் சுபவாணி. கோர்ட் வளாகம் கண்ணுக்கு பட, அவர்கள் கார் மெல்ல உள்ளே நுழைந்தது.

தனசேகரும் சிவனேசனும் இறங்க ,அக்காவும் தங்கையும் ஒருவரை ஒருவர் முகம் பார்க்கவும் பயந்து அவரவர் பக்க ஜன்னலில் தீவிரமாய் வேடிக்கை பார்த்திருந்தனர்.

அவர்கள் வக்கீலின் ஜூனியர் நிதானமாக தனசேகர் அருகே வந்தார்.”சார் கேஸ் நம்ம பக்கம் தானே…?” தனசேகர் ஆர்வமாக கேட்க வக்கீல் உதடு பிதுக்கினார்.

” சொல்ல முடியாது சார். நம்ம பக்கம் சாட்சிகள் வீக்கா இருக்காங்க” தனசேகரின் முகம் கோபத்தில் சிவந்தது.

” உங்களுக்கு எத்தனை சாட்சிகள் வேண்டும் சொல்லுங்க சார். நான் கூட்டிட்டு வரேன். ஆனால் கேஸ் மட்டும் நம்ம பக்கம் தான் முடியணும். அதுதான் நியாயம்”

 வக்கீல் சிரித்தார். “எங்க சார்,இந்த காலத்துல நியாயத்துக்கெல்லாம் மதிப்பு? பணத்துக்கும் பதவிக்கும் சட்டமே சலாம் வைக்குது.உங்கள் பக்கம் தான் 100% நியாயம். எனக்கு புரிகிறது.ஆனால் சட்டத்திற்கு தேவை சாட்சிகள் தானே! வாங்க சார் கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்”

மூவரும் பேசியபடி நடக்க காருக்குள் அமர்ந்திருந்த பெண்களுக்கு அவர்கள் பேச்சு தெளிவாக விழ 

சுபவாணியின் கைகள் நடுங்கியது. இந்த கேஸ் தோற்றால் அவள் நிலைமை என்னவாகும்?அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

“வக்கீல் ஏதாவது சொல்வாரு. கவலைப்படாதே வாணி, நம்ம பக்கம் ரொம்ப ஸ்ட்ராங்காகவே இருக்கிறது” இந்திரா தங்கையை தேற்ற முயன்றாள். சுபவாணியின் நினைவுகளோ வேறெங்கோ இருந்தன

“அப்பா அவ்வளவு சம்பாதிப்பார் சுபா. அத்தனையும் அப்படியே கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்து விடுவார். உனக்கு ஒன்று தெரியுமா? எத்தனையோ சொத்துக்கள் எங்களுக்கு இருக்கின்றன. ஒன்று கூட அப்பாவின் பெயரில் கிடையாது. அம்மா பேரிலும் என் பெயரிலும் தான் அப்பா சொத்துக்கள் வாங்குவார். எங்கே வெளியே போனாலும் பட்டும் நகையும் அம்மாவிற்கு தவறாமல் வந்துவிடும். இப்போது அம்மா அப்பாவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பது சும்மா கிடையாது. அப்பாவின் பாசத்தை அவர்கள் உணர்ந்து கொண்டிருப்பதால்தான்.ஆதர்ஷ தம்பதிகள் அவர்கள்” 




ரகுநந்தனின் குரல் சுபவாணியின் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. மாமனாருக்கு சிசுருட்சைகள் செய்தபடி அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த மாமியாரை அவள் ஆச்சரியமாக பார்த்தாள். இப்படி எல்லாம் கணவன் சேவை செய்யும் பெண்கள் இருக்கிறார்கள் என்ன!

 அவளது மன ஓட்டத்திற்கு ரகுநந்தன் கொடுத்த பதில்தான் இந்த விளக்கம். கூடவே குனிந்து அவள் காதுக்குள் “நாம் கூட அப்பா அம்மாவை போல புரிந்து கொண்ட தம்பதிகளாக இருக்க வேண்டும் சுபா* என்று அவன் கிசுகிசுக்க, திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆகி இருந்த புது மனைவியாக சுபவாணிக்கு கணவனது ஆசை மிகச் சரியாகவே பட்டது.

 புன்னகை பூத்த அவள் இதழ்களை கண்டதும் அவள் மடிமேல் பாரமாய் விழுந்தன அவன் கால்கள். “காலெல்லாம் ஒரே வலி. அழுத்தி பிடித்து விடு சுபா”

 நட்ட நடு ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த மாமனாரின் கால்களை தரையில் அமர்ந்து பிடித்துவிட்ட மாமியாரின் நினைவு வர,சுபவாணியின் கைகள் எந்திரமாய் கணவனின் கால்களை பற்றி அழுத்த துவங்கின. அப்பாவைப் போல் நான்கு பேர் வந்து போகும் இடத்தில் அமர்ந்து கொண்டு கால் அழுத்த சொல்லாமல் படுக்கையறைக்குள் தானே கேட்கிறான், என அப்போது கணவனுக்கு ஒரு நியாயத்தை கற்பித்துக் கொண்டது அவள் மனம்.

 “அவர்கள் குடும்பத்திற்கே பெண் என்றால் அடிமை என்ற எண்ணம் தான் அக்கா” மரத்த குரலில் உடன்பிறந்தவளுக்கு சுபவாணி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்த போது,மிகச்சரியாக அவர்கள் காருக்கு அருகிலேயே லாவகமாக வந்து சொருகி நின்றது ஒரு கார். 

அந்த பியர்ல் ஒயிட் எஸ்.யு.வி யை  பார்த்ததும் சுபவாணியின் உடல் நடுங்கத் துவங்கியது.இந்திரா தங்கையின் அருகில் நகர்ந்து அமர்ந்து ஆதரவாக அவள் கையை பற்றி கொண்டாள்.

 வந்த காரின் கதவை திறந்து கொண்டு ஸ்டைலாக இறங்கினான் ரகுநந்தன். அலட்சியமாக காலால் உதைத்து கார் கதவை மூடியவன் கிண்டலாக சுபவாணியை பார்த்தான். நொடியில் அவன் பார்வை பரிவும், பாசமுமாக மாறியது. மெல்ல அவர்கள் காரை நெருங்கிய அவன் கண்களில் காதலும் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது




———–

“இந்தக் காதல் எவ்வளவு உயர்வானது, உன்னதமானது என்று தெரியுமா? காதலிக்கணும் பட்டர். நல்ல அழகா அறிவா குறிப்பா உயரமா ஒருத்தனை பார்க்கணும். ஆசை தீர தீர அவனை லவ் பண்ணனும். கொஞ்சம் காதல் சலித்த பிறகு அவனை கல்யாணம் பண்ணிக்கணும்.கல்யாண வாழ்க்கை சலித்த பிறகு ஒரே ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளனும்.  ரெண்டு பேருமாக சேர்ந்து அந்த குழந்தையை ஆசையா அன்பா வளர்க்கணும். ஆனாலும் விடாமல் இரண்டு பேரும் காதலிச்சுக்கிட்டேடடட இருக்கணும்” தக்ளா இரண்டு கைகளையும் விரித்து விவரித்தபடி இருக்க, அவள் சொன்ன காதலில் சுபவாணிக்கு விரக்தி சிரிப்பொன்று வந்தது.

 கணுக்கால் வரை நீண்ட ஆங்காங்கே பிரில் வைத்த கருப்பு நிற பாவாடையும்,உடம்பை சிக்கென பற்றி இடையை தொட்டும் தொடாமலும் ஏறி இறங்கி, பளிர் பளிரென வெளிர் இடுப்பை மின்னலாய் காட்டும் சார்ட் சோளியும் அணிந்திருந்த தக்ளா, பெங்காலி பெண்.தற்போது சுபவாணிக்காக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தாள்.

“ஏய் தக்காளி போதும் உன் அளப்பை நிறுத்து” ஏனோ சுபவாணிக்கு அவள் விவரித்த காதல், கல்யாண வாழ்க்கையில் குமட்டிக் கொண்டு வந்தது.

“சும்மா இரு பட்டர்.என்னை முழுவதுமாக என் வாழ்க்கை கனவை சொல்ல விடு” தக்ளா தனது அளப்பை தொடர, “ஏய் பேசாமல் இருக்க மாட்டாய்?” சுபவாணி மிரட்ட, இடுப்பில் கை தாங்கி அவளை முறைத்த தக்ளா மிக அழகாக இருந்தாள்.

 கல்லூரி வளாகத்தில் முதன் முதலில் அவளை பார்த்ததும் சுபவாணிக்கு விழிகள் விரிந்து கொண்டன. எவ்வளவு அழகான பெண்! அவள் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த அழகுப் பெண் இவள் அருகே வந்தாள்.

” ஹாய், மை நேம் இஸ் தக்ளா. மே ஐ நோ யுவர் குட் நேம்?” என்க, செக்கச் சிவந்த கொஞ்சம் பூசினாற் போன்ற உடல்வாகுடனும் குண்டு கன்னங்களுடனும் நின்ற பெண் தக்காளி போல் என்று உவமானப்படுத்தும் நியாயத்துடன் இருக்க, “தக்ளாவா? தக்காளியா?” என்றபடி அவளுக்கு கை கொடுத்தாள்.

“தக்காளியா?” கேட்டவளுக்கு விளக்க, தன் அழகைப் பற்றிய மற்றொரு பெண்ணின் புகழ்ச்சியில் லேசாக கன்னம் சிவந்தது தக்ளாவிற்கு.

” என்னை சொல்கிறாயே, நீ மட்டும் குறைவான அழகா? அப்படியே வெண்ணை கட்டி போல் இருக்கிறாய். இனி உன்னை பட்டர் என்று தான் கூப்பிட போகிறேன்” என்றாள் புன்னகையுடன்.

“இன்னமும் ஒரு பைவ் மினிட்ஸ் டைம் கொடு பட்டர். நான் என் கனவை முடித்து விடுகிறேன்” தக்ளா தனது நீள பாவாடையை ஒரு பக்கம் உயர்த்தி, கொஞ்சம் குனிந்து பணிவு போல் காட்டி கேட்டாள்.

“ஏய் தக்காளி, போதும் நிறுத்து. நம்ம அனன்யா மேம் இன்றிலிருந்து லீவில் போகிறார்கள். வா இரண்டு வார்த்தை அவர்களிடம் பேசிவிட்டு வரலாம்” சுபவாணி அவள் கைகளை பற்றி இழுத்துக் கொண்டு நடந்தாள்.




What’s your Reaction?
+1
30
+1
26
+1
1
+1
4
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!