Serial Stories

உள்ளத்தால் நெருங்குகிறேன்-12

12

“சுபா தூக்கம் வரவில்லையா?” இருளை வெறித்தபடி பி.ஜியின் பின்பக்க வராண்டாவில் அமர்ந்திருந்த சுபவாணியை அழைத்தாள் ஸ்வரூபா.

“நீ போய் படுத்துக்கொள் ரூபா. நான் வருகிறேன்”

உள்ளே திரும்ப போன ஸ்வரூபா தயங்கி நின்று “சாப்பிட்டாயா?”என்றாள். அன்று அவளது அண்ணன் அண்ணியை சுபவாணி சமாதானம் செய்து அனுப்பி வைத்த பிறகு ஓரளவு நல்லபடியாகவே நடந்து கொள்கிறாள். ஸ்வரூபாவின் இந்த மாற்றம் சுபவாணிக்குள் மகிழ்வை கொடுத்தது.

” சாப்பிட்டுவிட்டேன் ரூபா. நீ போய் படுத்துக் கொள்.இப்போது வந்து விடுகிறேன்” அவளை அனுப்பி வைத்தாள். ஆனால் கல்லூரியில் இருந்து வந்ததிலிருந்து ஒரு மடக்கு தண்ணீர் கூட குடிக்காமல் இதே இடத்தில்தான் அமர்ந்திருக்கிறாள்.

 அவளது அறைக்கு போனால் எதிர் அறை கண்ணில் படும். அதற்குள் இருக்கும் அவனும் கண்ணில் படலாம். அவன் அறையையே பார்க்க பிடிக்காத போது அவன் முகத்தில் விழிக்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை. நாளை கல்லூரியில் அவன் மூஞ்சியை எப்படி பார்ப்பது? இனி அனன்யா மேடத்திடம் எப்படி பேசுவது? ஆனால் அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள்? முன்பே தெரிந்தவனை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே!

 யோசித்து யோசித்து சுபவாணிக்கு மூளையே குழம்புவது போல் இருந்தது. பி ஜி மெல்ல மெல்ல உறக்கத்திற்கு தயாராக துவங்கியது. எல்லோரும் தூங்கியதும் குறிப்பாக அந்த ரியோ அறைக்குள் போய் பூட்டிக் கொண்டதும் தன்னுடைய அறைக்குள் சென்று முடங்கிக் கொள்ள முடிவெடுத்திருந்தாள்.

” இது என்னுடைய இடம்” பின்னால் கேட்ட குரலில் வெலவெலத்து திரும்பிப் பார்க்க இடுப்பில் கை வைத்தபடி அதிகாரமாக நின்றிருந்தான் ரியோ. பி.ஜியின் பின்வராண்டாவில் இரண்டு மர பென்சுகள் போடப்பட்டிருக்கும். வெளிச்சம் இருக்கும் வரை அந்த இடத்தில் ரிலாக்ஸ் ஆக சிலர் அமர்ந்து இருப்பதுண்டு. இருட்டியபின் பின்பக்கம் யாரும் வருவதில்லை.

 முன்பொருநாள் இதே இடத்தில் ரியோ அமர்ந்திருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அடச்சை இவன் உட்கார்ந்திருந்த இடத்தில் போய் நானுமா…? வேகமாக எழுந்து கொண்டவள் தூசு போல் அமரும் இடத்தை தட்டி விட்டுக்கொண்டாள்.

 கேலியாய் உதட்டை பிதுக்கிய ரியோ ஈரெட்டில் கால்களை அகலமாய் வைத்து வந்து அவள் அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்து கொண்டான். சை…சுபவாணி அசூசையுடன் அவசரமாய்  உள்ளே திரும்ப “அனன்யா  வீட்டிற்கு வந்தாயா?” என்றான் அவன் .

திடுக்கிட்டு திரும்பினாள். பார்வை வெளியே இருளில் இருக்க கேள்வி இவளுக்கு கேட்டிருந்தான்.அங்கே என்னை பார்த்து விட்டார்களா? 

சுபவாணிக்கு சிறு படபடப்பு வந்தது. இரண்டு நொடிகள் தான். உடனே தன்னையே அதட்டிக் கொண்டாள். தப்பு செய்தவர்கள் அவர்கள், நான் ஏன் பயப்படுகிறேன்? தலையை நிமிர்த்திக் கொண்டாள்.

 “பாடம் சொல்லிக் கொடுக்கும் பதவியில் இருப்பவர்களிடம் பொய்யும், பித்தலாட்டமும்…” இருவருக்கும் பொதுவாகவே பேசிவிட்டு நகர்ந்தாள்.

” வெறும் வயிற்றோடு படுக்காதே சுபா. இதை சாப்பிடு” சூடு ஆறாமல் அலுமினிய பாயில்களில் சுற்றி இருந்த சப்பாத்திகளை ஸ்வரூபா கொடுத்த போது ஆச்சரியமாக பார்த்தால் சுபவாணி.

” இது யார் கொடுத்தது ரூபா?”

” நம்ம சைலஜா ஆன்ட்டிதான்.உன் ரூம் மேட் சாப்பிட வரவில்லை, இதை கொண்டு போய் கொடு என்று கொடுத்து விட்டாங்க”




 அட ஆன்ட்டி இதையெல்லாம் கவனிக்கிறார்களா…!பட்டாணி குருமாவை சப்பாத்தி மேல் பரப்பி ரோல் செய்து உண்பதற்கு தோதாக பேக் செய்யப்பட்டிருந்த உணவை சைலஜாவிற்கு நன்றி கூறியபடி சாப்பிட்டு முடித்து படுத்தாள். 

 மறுநாள் காலை கல்லூரிக்கு செல்லாமல் அனன்யாவின் வீட்டிற்கு சென்றாள். நிச்சயம் அனன்யா தனக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் ,உறுதியான மனதுடன் காலிங் பெல் அடித்தாள். நடந்து வந்து கதவை திறந்ததிலேயே அனன்யாவிற்கு லேசாக மூச்சிரைத்தது. எட்டு மாதங்கள் ஆகி விட்டதில் வயிறு நன்றாக வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது.

 அவளது தாய்மை தோற்றத்தில் நெகிழ்ந்து ஆதரவாய் கைப்பற்ற துடித்த மனதை அதட்டி அடக்கியபடி “உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் மேடம்” என்றாள். 

“உள்ளே வந்து உட்கார் சுபா. தக்ளாவையும் வரச் சொல்லி இருக்கிறேன்” 

சுபவாணி ஆச்சரியமாக பார்க்க மெல்ல தலையசைத்தாள்.தக்ளா வந்ததும், இருவரையும் அமர வைத்த அனன்யா முதலில் ஒரு ஸாரியுடன் பேச்சை தொடங்கினாள்.

” நானும் ரியோவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். இருவரும் இதே கல்லூரியில்தான் படித்தோம்.ரியோவின் குடும்பம் பெரிய பின்னணி உடையது.வேலை செய்தாக வேண்டிய நிலைமை அவருக்கு கிடையாது.

 என் வேண்டுகோளுக்காகத்தான் எனது பிரசவ விடுமுறை முடியும் வரை என் இடத்தில் இருந்து இங்கே பாடம் எடுக்க ஒப்புக்கொண்டார்” 

அனன்யா முடிக்க தக்ளா “ஆ” வென வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். “இதனை ஏன் எங்களிடம் மறைத்தீர்கள் மேடம்?” சுபவாணி கேட்க அனன்யா மென்மையாக சிரித்தாள்.

” பெரிதாக ஒரு காரணமும் இல்லை.ரியோ பற்றி நீங்கள் இருவரும் ஏதேதோ யூகித்து பேசப்பேச எனக்கு அதில் ஒரு சுவாரஸ்யம் வந்தது. மாணவர்களின் பார்வையில் இருந்து ஒரு லெக்சரரை பற்றிய கேலி கிண்டல்களை தெரிந்து கொள்ள விரும்பினேன். கொஞ்ச நாட்கள் சென்ற பிறகு ரியோவை பற்றி சொல்லலாம் என்றுதான் கடந்த நான்கு மாதங்களாக அவரைப் பற்றி உங்களிடம் சொல்லவில்லை”

 “ரியோ சாரோட சேர்ந்து படிச்சீங்களா? நீங்க லக்கி மேம்”  தக்ளா சொல்ல சுபவாணி  முறைப்பாகவே முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.

 அவள் கையை பற்றிய அனன்யா “ஒரு பிள்ளைதாய்ச்சி பெண்ணின் அல்ப ஆசை என்று இதனை விட்டு விடேன் சுபா” என்றாள் கெஞ்சுதல் போல்.அதற்கு மேலும் சுபவாணியால் அனன்யாவை ஒன்றும் சொல்ல முடியவில்லை. 

“ஆனாலும் எனக்கு உங்கள் ப்ரெண்டை பற்றி நல்லவிதமாக நினைக்க தோன்றவில்லை” என்றாள்.

 அனன்யா அவளை ஆழ்ந்து பார்த்து மெல்ல புன்னகைத்தாள். “ரியோ மேல் வெறுப்பா? விருப்பமா சுபா?”

” விருப்பமா? அவரைக் கண்டாலே என் உடல் முழுவதும் தகதகவென்று எரிகிறது” 

அனன்யாவின் புன்னகை மாறவில்லை “உனக்கு ஒன்று தெரியுமா தக்ளா?நாம் யாரை மிக அதிகமாக வெறுக்கிறோமோ அவர்கள் மேல் அடிமனதில் ஒரு சின்ன விருப்பம் இருந்து கொண்டே இருக்குமாம். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெறுப்பெல்லாம் மாறி கடைசியில் விருப்பம் மட்டுமே இருக்குமாம்” அனன்யா சொன்னது தக்ளாவிற்கு மட்டுமல்ல சுபவாணிக்குமே புரியவில்லை.

“உங்கள் விளக்கங்கள் ஒன்றும் புரியவில்லை மேடம். நாங்கள் கிளம்புகிறோம்” 

“என்ன அதற்குள் கிளம்பி விட்டீர்கள், வேறு எதுவும் தெரிய வேண்டாமா?” அனன்யா கண் சிமிட்டி கேட்க, “ரியோ சாரை பற்றியா மேடம்?” திறந்த வாயோடு மீண்டும் அமரப்போன தக்ளாவின் கையை பற்றி இழுத்தாள் சுபவாணி.

” தெரிந்தவரை போதும் மேடம். இனிமேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எங்களுக்கு இல்லை. முதல் பாட வேளை முடிந்திருக்கும். அடுத்த பீரியட்யாவது அட்டென்ட் செய்கிறோம்” சுபவாணி சொல்ல, அது ரியோவின் பாடவேளை என்று தக்ளாவிற்கு நினைவு வர, அவளும் உடனே கிளம்பி விட்டாள்.அவர்களை புன்னகையுடன் பார்த்திருந்தாள் அனன்யா.

 இவர்கள் வகுப்பறைக்கு வந்த போது ரியோ வந்து விட்டிருந்தான். வாசலில் வந்து நின்ற இருவரையும் எரிச்சலுடன் பார்த்தான். “இப்படி வந்தால் நான் என்னதான் செய்வது?”

” ஸாரி சார்… ப்ளீஸ் சார்” மன்னிப்பு கடிதம் ஒன்றை தக்ளா எழுத ஆரம்பிக்க, சுபவாணி முறைப்பாகவே நின்றிருந்தாள். ஒரு நொடி அவள் முகத்தில் பார்வையை நிறுத்தியவன் பின் தக்ளாவை “உள்ளே போ” என்று அனுமதி கொடுத்தான். 

“அசைன்மென்டை திருத்தி விட்டாயா?” என்றான்.

” என்ன திருத்த வேண்டும்?” தலை நிமிர்ந்து கேட்டாள்.

” தப்பு தப்பாக நீ செய்து வைத்திருந்த அசைன்மெண்டை சரி செய்து விட்டாயா என்று கேட்டேன்” 

“அதில் திருத்துவதற்கு ஒன்றும் இல்லை சார். நான் சரியாகத்தான் செய்திருந்தேன்” தைரியமாக பதில் சொன்னவளை வகுப்பறையே ஆச்சரியமாக பார்த்தது.




 ரியோவின் கண்களில் சினம் வெளிப்படையாக தெரிந்தது. “அந்த அசைன்மென்டை முடிக்காமல் நீ என்னுடைய கிளாஸ் ரூமுக்குள் வரக்கூடாது”

” ஓகே சார். ரொம்ப நன்றி” சுபவாணி வெளியில் வந்துவிட்டாள்.

” ஏன் சுபா எப்பொழுது பார்த்தாலும் ரியோ சாரிடம் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறாய்?” ரியாஸ் ஜாக்லின் கேத்தரின் எல்லோரும் சுபவாணியிடம் வந்து கேட்டனர்.

” நான் எங்கே சண்டை போடுகிறேன்? அவர்தான் என்னை குறிவைத்து தாக்குகிறார்”

” இது என்னப்பா வம்பு ?அசைன்மென்ட் மாற்றி செய் என்றால் மாற்றி விட்டுப் போயேன். ஏன் அடம் பிடிக்கிறாய்?”

” என் மனதிற்கு சரியென்று படுவதை தானே என்னால் செய்ய முடியும்?”

” தப்பு சுபா, அவர் நமக்கு பாடம் சொல்லித் தருபவர். அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்”

” அதற்கு நான் இன்னும் எலிமெண்டரி ஸ்கூல் படிக்கும் பாப்பா கிடையாது. மாஸ்டர் படித்துக் கொண்டிருக்கும் பெண்.யாராக இருந்தாலும் நியாயமற்ற ஒன்றை செய்ய சொல்லும்போது நிச்சயம் அதனை செய்ய மாட்டேன்” உறுதியாக நின்ற சுபவாணியை எல்லோரும் வியப்புடனேயே பார்த்தனர். 

“எவ்வளவு தைரியமான பெண் நீ …”ஜாக்குலின் வியக்க அந்நேரம் சுபவாணிக்கு தன்னை நினைத்து ஆச்சரியம் வந்தது.

 தைரியமான பெண்ணா நான்? இப்படி ஒரு பாராட்டை இப்போதுதான் பெற்றிருக்கிறாள். எப்படி இந்த தைரியம் எனக்குள் வந்தது! அவள் தன்னைத்தானே ஆராய்ந்து கொண்டிருந்தபோது…

“சரிப்பா ,நீ பாடத்தை பற்றி பேச வேண்டாம், சாரை பார்ப்பதற்காகவாவது கிளாசுக்கு வரலாமே” கேத்தரின் லேசாக கண்சிமிட்ட, 

“நாங்கள் எல்லோரும் அதற்காக மட்டும்தான் இப்போது காலேஜுக்கு வருகிறோம் தெரியுமா? எந்த பீரியடை மிஸ் செய்தாலும் ரியோ சார் பீரியட் மட்டும் மிஸ் செய்வதே இல்லை. அவர் பாடம் நடத்தும் ஸ்டைலுக்காகவே உள்ளே வந்து முன்பே பெஞ்சில் இடம் பிடித்து உட்கார்ந்து கொள்வோம்”

 சுபவாணியின் முகம் கோபத்தில் சிவந்தது.”அந்த ஆளோட மூஞ்சியை பார்க்க பிடிக்காமல் நான் கடைசி பெஞ்சில் போய் உட்கார்ந்து கொள்வேன். உங்களோடு என்னை சேர்க்காதீர்கள். நான் உங்களைப் போல் வழிசல் கேஸ் கிடையாது”

கோபத்திற்கு இந்தி சரளம் உதவாமல் போக,ஆங்கிலத்தில் படபடவென பிறந்த விட்டு,

 அவர்களின் கோப பார்வையை  அலட்சியப் படுத்தி, தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

தோழிக்காக அவர்களை சமாதானம் செய்ய தொடங்கினாள் தக்ளா.

அன்று இரவு அவளுடைய ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மனதிற்கு ஈடாக வெளியேயும் மழை கொட்டிக் கொண்டிருந்தது.

சுபவாணியின் மனம் முழுவதும் ரியோவின் நினைவுகள் நிரம்பி இருந்தன. ஏமாற்றுக்காரன் பற்களை கடித்துக் கொண்டாள். எனக்கு மட்டும் சக்தி இருந்தால் இவனை முதலில் இந்த கல்லூரியை விட்டு அனுப்பி விட்டுத்தான் வேறு வேலையை பார்ப்பேன். பெரிய ஆணழகன் இவனென இவன் பின்னால் ஜொள் விட்டுக் கொண்டு ஒரு கும்பல்…சீச்சி,இனி உன் முகத்தில் விழித்தால் ஏனென்று கேளு…

அவள் தனக்குள் பேசிக்கொண்டிருந்த போது அறைக்கதவு லேசாக தட்டப்பட்டது. ஸ்ரோபா நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு ஒரு கல்யாண விசேஷத்திற்காக சென்றிருந்தாள்.

யார் இந்த நேரத்தில் யோசனையுடன்  கதவை திறக்க வெளியே ரியோ நின்றிருந்தான். முகத்தில் கொஞ்சம் பதட்டம் தெரிந்தது. “என்னுடன் வெளியே வருகிறாயா?” என்றான்.

உடன் சுபவாணியின் மனதில் ஒரு வன்மம் உண்டானது. இந்த வில்லன்  ஏதோ இவனது தேவைக்காக என்னிடம் வந்து நிற்கிறான். இரு கைகளையும் கட்டிக்கொண்டு அலட்சியமாக வாசல் நிலையில் சாய்ந்து கொண்டவள் “முடியாது” என்றாள்.

 “வாணி” அதட்டியபடி அவள் கையை இறுகப்பற்றினான் ரியோ.




What’s your Reaction?
+1
36
+1
24
+1
4
+1
1
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!