gowri panchangam Sprituality

108 திவ்ய தேச தலங்கள் – 100 | திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில், 100-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. குடவரைக் கோயிலான இத்தலத்தை திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

தல வரலாறு: திருப்பாற்கடலில் திருமால் சயனித்திருந்தார். அப்போது அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகியோர் இடையே தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பேச்சு எழுந்தது. அப்போது ஸ்ரீதேவியின் தோழிகள், “ஸ்ரீதேவி அதிர்ஷ்ட தேவதை. மகாலட்சுமி. அவள் பெயரை முன்வைத்தே பெருமாள் ஸ்ரீநிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்று அழைக்கப்படுகிறார். இவளையே பெருமாள் தன் மார்பில் தாங்குகிறார். தேவேந்திரன் இவளால் பலம் பெறுகிறார், வேதங்கள் ஸ்ரீதேவியை திருமகள் என்று போற்றுகின்றன” என்றனர்.

உடனே பூமாதேவியின் தோழிகள், “இந்த உலகுக்கு ஆதாரமாக விளங்கும் பூமாதேவி மிகவும் சாந்தமானவள். பொறுமையின் சிகரம். பொறுமைசாலிகளை வெல்வது கடினம். இவளைக் காப்பாற்றவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார்” என்று கூறினர்.

நீளாதேவியின் தோழிகள், “நீளாதேவி தண்ணீர் தேவதையாக உள்ளாள். தண்ணீரை ‘நாரம்’ என்று கூறுவதுண்டு. இதனால்தான் பெருமாளுக்கு ‘நாராயணன்’ என்ற பெயர் வந்தது. தண்ணீரை பாலாக்கி, அதில் ஆதிசேஷனை மிதக்கச் செய்து தாங்குபவள் நீளாதேவி. அதனால் நீளாதேவியே உயர்ந்தவள்” என்றனர்.




இப்படியே பேச்சு நீண்டு கொண்டிருந்தது. தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க, ஸ்ரீதேவி, வைகுண்டத்தைவிட்டு புறப்பட்டு, தங்காலமலை பகுதிக்கு (திருத்தங்கல்) வந்து தவம் புரிந்தார். ஸ்ரீதேவியின் தவத்தில் மகிழ்ந்த திருமால், இத்தலத்தில் அவளுக்கு காட்சி கொடுத்து, ஸ்ரீதேவியே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். இதனால் இத்தலம் ‘திருத் தங்கல்’ என்று அழைக்கப்படுகிறார்.

நின்ற நாராயணப் பெருமாள்: மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரன். அவனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருசமயம் கனவில் தோன்றிய ராஜகுமாரன் குறித்து தனது தோழி சித்ரலேகையிடம் கூறி, அவனை சித்திரமாக வரைந்து கொடுக்கும்படி கேட்டாள். பிறகு அவன் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் அநிருத்தன் என்பது தெரியவந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டும் என விரும்பினாள் உஷை.

சித்ரலேகை தோழிக்காக துவாரகாபுரி சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த அநிருத்தனை தூக்கிக் கொண்டு வாணாசுரன் மாளிகைக்கு வந்தாள். கண்விழித்துப் பார்த்த அநிருத்தனுக்கு ஏதும் புரியவில்லை. நடந்தவற்றை அறிந்து உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான்.




 

இதையறிந்த வாணாசுரன், மணம் புரிந்து கொண்டவர்களை கொல்ல முயன்றான். அப்போது அவர்களைக் கொன்றால் பாணாசுரனும் அழிந்து போவான் என்று அசரீரி ஒலித்தது. அநிருத்தனை சிறை வைத்தான் பாணாசுரன். தகவல் அறிந்த கிருஷ்ணர் வந்து வாணாசுரனை வென்றார்.

துவாரகையில் திருமணம் நடத்த முடிவு செய்த கிருஷ்ணர், புரூர சக்கரவர்த்தியின் விருப்பத்துக்காக இருவருக்கும் திருத்தங்கலில் திருமணம் செய்துவைத்து நின்ற நாராயண பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.

திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மாத பிரம்மோற்சவத்தில் 5-ம் நாள் மங்களாசாசனம், கருட சேவை, 9-ம் நாள் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். மேலும் எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவர் என்பது ஐதீகம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!