gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/யார் வியாசர்?

மகாபாரதத்தை    எழுதியவர் வியாசர் என்பது பொதுவாக அனைவருக்கும் தெரியும். ஆனால் வியாசர் யார்?

வியாசர் விஷ்ணு புராணத்தை  எழுதியவரும், ஒரு மாமுனிவருமான பராசரரின் புதல்வர்.

அந்தணரான பராசரருக்கும், சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர் வியாசர் (சாதிகள் பற்றிப் புராணங்களில் கூறப்படுவதற்குக் காரணம், அப்போது கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாதி முறையை நியாயப்படுத்துவதற்காக அல்ல, கலப்புத் திருமணம் என்பது ஒரு பொதுவான நிகழ்வாக இருந்திருக்கிறது என்பதையும், வியாசர் போன்ற மகான்கள் கலப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்கள் என்பதையும் காட்டுவதற்காகத்தான் என்பது பொதுவான கருத்து).

பராசரரால் எழுதப்பட்ட விஷ்ணு புராணம் புராணங்களில் முதலில் எழுதப்பட்டதாகவும், முதன்மையானதாகவும்  கருதப்பட்டு, ‘புராண ரத்னம்’ என்று வழங்கப்படுகிறது.




மகாபாரதம் எழுதிய விநாயகர் | Vinayagar Wrote mahabharata

வியாசர் நான்கு வேதங்களைத் தொகுத்தவர். வேதங்கள் காலமற்ற படைப்புகளாகக் கருதப்படுகின்றன. பல்வேறு காலங்களில்,பெயர் தெரியாத பல அறிஞர்களால் அவை உருவாக்கப்பட்டுள்ளன. அவை வாழ்க்கை மற்றும் பிரபஞ்சத்தின் பல்வேறு அம்சங்களைப்  பற்றிய அறிவைத் தங்களுக்குள் கொண்டிருக்கின்றன.

வியாசர் பரந்து கிடந்த வேதங்களைத் தொகுத்து, அவற்றை  ரிக், யஜூர், சாம, அதர்வ என்று நான்கு பிரிவுகளாக வகுத்தார். இதனால், அவர் வேத வியாசர் என்றும் அழைக்கப்படுகிறார். ‘வியாச’ என்ற சொல்லுக்கே பிரித்தல் அல்லது வகுத்தல் என்று பொருள். தமிழில் வியாசம் என்ற சொல் கட்டுரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதும் இந்தப் பொருளின் அடிப்படையில்தான்.




 

வியாசர் பிறந்தது ஒரு தீவில். அதனால் இவருக்கு ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்ற பெயரும் உண்டு. ‘கிருஷ்ண’ என்றால் கருப்பு, ‘த்வைபாயனர்’ என்றால் தீவில் பிறந்தவர் (சம்ஸ்கிருதத்தில் த்வீபம் என்றால் தீவு).

வியாசர் என்பது தொகுப்பாளர் என்ற பெயரில் வழங்கப்படும் பொதுப் பெயர் என்பதால் (பல வியாசர் இருந்திருக்கிறார்கள்), மகாபாரதத்தில் இவர் பெயர் பெரும்பாலும் கிருஷ்ண த்வைபாயனர் என்றே வருகிறது.

மகாபாரதத்தைத் தவிர, பாகவதம் (பகவானின்அதாவது விஷ்ணுவின் கதை) என்ற புராணத்தையும் வியாசர் எழுதி இருக்கிறார்.

வியாசரின் தந்தை பராசரர் எழுதிய விஷ்ணு புராணம் விஷ்ணுவின் பெருமை மற்றும் அவரை வழிபடுவதற்கான வழியைப் பற்றிப் பேசுகிறது. வியாசர் எழுதிய பாகவதம் விஷ்ணுவின்  அவதாரங்களைப் பற்றிக் கூறுகிறது.

பாகவதத்தை எழுதியவர் வியாசர் என்றாலும், அதை எடுத்து இயம்பியவர் அவர் மகன் சுகர். இவரும் ஒரு மாமுனிவர்தான். ஒரு பெரிய முனிவரான பராசரர் தந்தையாகவும், ஒரு பெரிய முனிவரான சுகர் தனயனாகவும் அமையப்பெற்று, தானும் ஒரு பெரிய முனிவராக வாழ்ந்த பெருமை வியாசருக்கு உண்டு.,




பாரதம், பாகவதம் தவிர, வியாசர் பதினைந்து பிற புராணங்களையும் எழுதியுள்ளார். பராசரர் எழுதிய விஷ்ணு புராணம், வியாசர் எழுதிய 17 புராணங்கள் ஆகியவை சேர்ந்து மொத்தம் 18 புராணங்கள்.

இந்தப் பதினெட்டு புராணங்கள், ராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்கள், நான்கு வேதங்கள் மற்றும் உபநிஷதங்கள் ஆகியவை இந்து சமயத்தின் அடிப்படை நூல்களாக விளங்குகின்றன. (பகவத் கீதை மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளதால்,அதை இங்கே தனியே குறிப்பிடவில்லை. கீதையும் ஒரு அடிப்படை நூல்தான் என்பது அனைவரும் அறிந்ததே.)

இந்து மதத்தின் தத்துவ நூல்களில் ஒன்றான  ‘பிரம்ம சூத்திரம்’ என்ற நூலையும் வியாசர்  எழுதியுள்ளார். பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கம் எழுதிய சங்கரர், ராமானுஜர், மத்வர் மூவரும் அளித்த மாறுபட்ட விளக்கங்கள்தான் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்ற மூன்று தத்துவங்கள் பிறக்க வகை செய்தன.

மகாபாரதத்தில் வியாசர் ஒரு பாத்திரமாக உலா வருகிறார். அவர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் தாத்தா.

மகாபாரதத்தை மனதில் உருவாக்கியபின், வியாசர், அதைத் தன்னுடைய சீடர்களுக்கு அதை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதைப் பற்றி யோசித்துக்  கொண்டிருந்தார்.

அவர் இந்தக் காப்பியத்தைத் தன் மனதில் வடித்து விட்டார்.  ஆனால் அவர் அதற்கு இன்னும் அது ஒரு உறுதியான வடிவம் கொடுக்கவில்லை.

இதற்காக, வியாசர் பிரம்மாவின் வழிகாட்டலை வேண்டினார்.

பிரம்மா அவர் முன் தோன்றியதும், வியாசர் அவரிடம், ​​”இறைவன், வேதங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றின் சாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு கவிதை நூலை நான் உருவாக்கியிருக்கிறேன், இது இந்த வையத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றியும், போர், அரசியல் மற்றும் ஆட்சி நடத்தும் கலை, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், கடவுளை அடைவதற்கான வழி ஆகியவை பற்றியும் விரிவாகப் பேசும்” என்றார்.

“வியாச முனிவனே! உன் படைப்பு வரவிருக்கும் எல்லாக் காலங்களிலும் நிலைத்து நிற்கும். இதை எழுத நீ விநாயகரின் உதவியை நாட வேண்டும்” என்று அருளினார் பிரம்மா..

பிரம்மாவின் யோசனைப்படி மகாபாரதத்தை எழுத விநாயகரின் உதவியை நாடினார் வியாசர் .

“இடைவெளி விடாமல் நீ கதையைச் சொன்னால்  நான் எழுதிக் கொண்டே வருவேன்” என்றார் விநாயகர்.

இதை ஒப்புக் கொண்ட வியாசர், “ஆனால், ஒவ்வொரு செய்யுளின் பொருளையும் புரிந்து கொண்டபின்தான் நீங்கள் அதை எழுத வேண்டும்” என்று பதில் நிபந்தனை விதித்தார்.

இவ்வாறு உலகின் முதல் மிகப் பெரிய நூல் பதிப்பு நிகழ்வு தொடங்கியது!

விநாயகர் கேட்டுக் கொண்டபடி, வியாசர் நிறுத்தாமல் செய்யுட்களைச் சொல்லிக் கொண்டே வருவார்.

ஆனால், தனக்கு நேரம் தேவைப்படும்போது, வியாசர் கடினமான செய்யுட்களைச் சொல்வார். அவற்றை எழுதுமுன் அவற்றின் பொருளை விநாயகர் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அடுத்து வர வேண்டிய செய்யுட்களை வியாசர் தன் மனதில் உருவாக்கிக் கொள்வார்.

விநாயகர் பனை ஓலைகளில் வேகமாக எழுதிக் கொண்டிருந்தபோது, அவர்  எழுத்தாணி உடைந்து விட, எழுந்து சென்று வேறொரு எழுத்தாணியை எடுத்து வர நேரமில்லாததால், அவர் தனது ஒரு தந்தத்தை உடைத்து, அதன் கூரான முனையால் எழுதத் தொடங்கினார் என்று ஒரு கதை உண்டு!

விநாயகர் மகாபாரதத்தை மேரு மலையில் எழுதினார் என்றும் கூறப்படுவது உண்டு. இது இரண்டு விஷயங்களை உணர்த்துவதாகப் புரிந்து கொள்ளலாம்.




1) மகாபாரதம் மிக நீளமானது. அதை எழுத மேரு மலையின் பக்கவாட்டுப் பகுதிகளைப் போன்ற ஒரு பெரிய பரப்பு தேவைப்பட்டது. .

2) மகாபாரதம் கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது என்பது இந்தக் காவியம் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதைக் குறிக்கிறது .

வியாசர் படைத்த காவியத்தில் 600,000 செய்யுள்கள் இருந்தன. அவற்றில் 100,000 மட்டுமே நாம் வாழும் பூவுலகில் உள்ளன. மீதமுள்ள 500,000 செய்யுள்கள் தேவ லோகம், பித்ரு லோகம் (நம் முன்னோர்கள் வாழும் உலகம்) போன்ற பல உலகங்களுக்கு அளிக்கப்பட்டு விட்டன.

இந்தக் காவியம் பல்வேறு வழிகளில் பரவியது. வியாசர் முதலில் இதைத் தனது மகனான சுகருக்கும், பின்னர் தன் மற்ற சீடர்களுக்கும் உபதேசித்தார்.

அர்ஜூனனின் பேரனான ஜனமேஜயனால் நிகழ்த்தப்பட்ட சர்ப்ப யாகத்தில் ஒரு பெரிய கூட்டத்தின் முன்பு  மகாபாரதத்தை வைசம்பாயன முனிவர் எடுத்துரைத்தார்.

இந்தச் சொற்பொழிவைக் கேட்ட உக்ரஸ்ரவர், நைமிசாரண்யத்தில் தவம் செய்து வந்த துறவிகளுக்கு இந்தக் காவியத்தை உபதேசம் செய்தார்.

உக்ரஸ்ரவரை சில துறவிகள் அணுகி அவர் சென்று வந்த இடங்கள் பற்றிய விவரங்களைக் கேட்பதில்தான் மகாபாரதம் துவங்குகிறது.

ஜனமேஜயரின் சர்ப்ப யாகத்தில் வைசம்பாயனர் மகாபாரதக் கதையை விளக்கிச் சொன்னதைத் தான் கேட்டதை உக்ரஸ்ரவர் கூறியதும், துறவிகள் ஆவல் கொண்டு, அந்தக் கதையைத் தங்களுக்கும் சொல்லும்படி கேட்க, அவரும் அவர்களுக்கு மகாபாரதக் கதையை விரிவாகச் சொல்கிறார்.

நூல் பதிப்பாளரின் ஒப்புதலுக்காக நூலின் சுருக்கத்தைச் சமர்ப்பிப்பது போல், மகாபாரதத்தின் சுருக்கத்தை 150 செய்யுட்களில், நூலின் துவக்கப் பகுதியில் வியாசர் எழுதியுள்ளார்!




மகாபாரதக் கதையை  இந்த 150 செய்யுட்களிலிருந்தே முழுமையாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், மகாபாரதத்தை துரித உணவு போல் வழங்குவது சரியாக இருக்காது என்று நான் கருதுவதால், இந்தச் சுருக்கக் கதையை நான் இங்கே எழுதவில்லை.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் (கௌரவர் என்ற சொல்லில் வரும் கௌ என்ற எழுத்து cow என்ற ஆங்கிலச் சொல் போல் உச்சரிக்கப்பட்ட வேண்டும், கௌரவம் என்ற சொல்லில் வரும் கௌ போல் இல்லை) இடையே குருக்ஷேத்திரம் (ஹரியானாவில் இன்று உள்ள குருக்ஷேத்திரம்தான் இது என்று கருதுவோர் உண்டு) என்ற இடத்தில் நடந்த போரை, கௌரவர்களின் தந்தையான கண் பார்வை இல்லாத திருதராஷ்டிரருக்கு அவருடைய தேரோட்டியும், ஆலோசகருமான சஞ்சயர் விவரித்தார்.

சஞ்சயர் ஞானக்கண் பெற்றவர் என்பதால் அவரால் திருதராஷ்டிரரின் அரண்மனையிலிருந்தபடியே போர்க்களக் காட்சிகளைத் தன் மனக்கண்ணால் காண முடிந்தது.

துரியோதனன், துச்சாதனன் உள்ளிட்ட  திருதராஷ்டிரரின் புதல்வர்கள் போரில் மடிந்த நிகழ்ச்சிகளை  திருதராஷ்டிரருக்கு சஞ்சயர் கூற வேண்டியிருந்தது.

தன் மகன் துரியோதனனின் மரணத்தைப் பற்றிய செய்தியைக்  கேட்டதும், திருதராஷ்டிரர், தான் செய்த தவறுகளையும், செய்யத் தவறிய விஷயங்களையும்  குறிப்பிட்டுச் சொல்லி வருத்தப்படுகிறார்.

ஒவ்வொன்றாகப் பல சம்பவங்களைச் சொல்லி, அப்போதெல்லாம் தான் தனது புதல்வர்களைத் தீய பாதையில் செல்வதிலிருந்து தடுத்திருந்தால், தன்  மகன்களை இழந்திருக்க வேண்டியிருக்காதே என்று புலம்புகிறார்

‘அப்போதே நினைத்தேன்,’  ‘அப்போதே நினைத்தேன்,’ என்று அடுக்கடுக்காக அவர் சொல்லிப் புலம்புவது நம் அனைவருக்கும் ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் பல சமயங்களில் சில துல்லியமான விஷயங்களை நாம் உணர்ந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டு விரும்பத்தகாத விளைவுகளை அனுபவிக்கிறோம். திருதராஷ்டிரரின் புலம்பல் இதைத்தான் உணர்த்துகிறது.

மகாபாரதம் 18 பர்வங்களாக (பகுதிகள் அல்லது தொகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது:

1. ஆதி பர்வம்

2. சபா பர்வம்

3. வன பர்வம்

4. விராட பர்வம்

5. உத்யோக பர்வம்

6. பீஷ்ம பர்வம்

7. துரோண பர்வம்

8. கர்ண பர்வம்

9. சல்ய பர்வம்

10. சௌப்திகா பர்வம்

11. ஸ்ரீ பர்வம்

12. சாந்தி பர்வம்

13. அனுசாஸன பர்வம்

14. அஸ்வமேதிகா பர்வம்

15. ஆஸ்ரமவாசிக பர்வம்

16. மௌஸல பர்வம்

17. மகாப்ரஸ்தானிகா பர்வம்

18. ஸ்வர்க்க ஆரோஹண பர்வம்

மகாபாரதத்தின் முடிவில் வரும் கிருஷ்ணனின் கதையான ஹரிவம்சம் , மகாபாரதத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் இது பர்வங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!