gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள் /அருள்மிகு சிவசெண்பகத்தண்ணாயிரம் உடைய அய்யனார் 

நாட்டுப்புறத் தெய்வங்களை வணங்குவதில் ஆர்வம் கொண்ட ஆன்மிக அன்பர்களுக்கு இந்தக் கிராமத்துக் கோயில் ஓர் அமர்க்களமான இடம் என்றால் அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. காவல் தெய்வங்களுக்கான அனைத்து அம்சங்களுடன் கம்பீரமாக காட்சி தருகிறார் இந்த அய்யனார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், எளுவனி  கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. அருள்மிகு சிவசெண்பகத்தண்ணாயிரம் உடைய அய்யனார்  என்பது திருக்கோயில் தெய்வத்தின் பெயர். கிராமத்து தெய்வங்களை வழிபடும் பக்தர்களுக்கு ஓர் அற்புத விருந்து.




அழகான தோற்றம்

இந்தக் கிராமத்தில் நெல், நிலக்கடலை, எள் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. ஏரி மற்றும் குளங்கள் மூலம் நீர்ப்பாசனம் நடைபெறுகிறது. விவசாய காலங்களில் அழகான தோற்றம் கொண்ட எழில்மிகு கிராமம்.

அப்போது இங்கு சென்றால் கோயில் மட்டுமல்லாது கிராம சூழலும் மனதை கொள்ளை கொள்ளும்; இதம் தரும். கோடைகாலங்களில் கடுமையான வெப்பம் இருக்கும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. வெயில் வாட்டி எடுக்கும்.

மாவட்ட தலைநகரான விருதுநகரிலிருந்து 46 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 31 கிமீ தொலைவிலும், மானாமதுரையிலிருந்து 23 கிமீ தொலைவிலும், திருப்புவனம் மற்றும் திருப்பாசேத்தியிலிருந்து 13 கிமீ தொலைவிலும் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

பேருந்து போக்குவரத்தும் குறைவாகவே உள்ளது. அதனால் சொந்த வாகனங்களிலோ அல்லது வாடகை வாகனங்களிலோ இங்கு வருவது நல்லது. கடைகள் எதுவும் இல்லாததால் உணவு குடிநீர் ஆகியவற்றை கையோடு கொண்டு செல்வது நல்லது. கோயிலுக்கு அருகில் வீடுகளும் இல்லை. அதனால் முன்னேற்பாட்டோடுதான் செல்ல வேண்டும்.

இந்தக் கோயில் எளுவனி கிராமத்தில் அமைந்திருந்தாலும்  இது நான்கு கிராம மக்களுக்கு உரிமையான கோயில். எளுவனி கிராமத்துக்கு அருகிலிருக்கும் சேந்தநதி, ஓடாத்தூர், ரெட்டைகுளம் கிராமங்களுக்கும் பாத்தியப்பட்ட கோயில் இது.

கோயிலின் இருப்பிடமே நமக்கொரு உற்சாகத்தைத் தருகிறது. பெரிய சுற்றுச்சுவர் அதன் முகப்பில் சிறிய கோபுரம். கோபுரத்தின் எதிரே நாகலிங்க சுவாமிக்காக சிறிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது.




மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம்
நேர்த்திக்கடன் மண் குதிரைகள்

அதன் அருகே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய மண்குதிரைகள் வரிசையாக நிற்கின்றன. குதிரைகளின் எண்ணிக்கையிலிருந்து இந்த அய்யனார் பக்தர்களுக்கு எவ்வளவு வேண்டுதல்களை நிறைவேற்றியிருக்கிறார் என்பது தெரிகிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த அய்யனார் இருக்கிறார். இவரின் மகிமைகள் பற்றி பெருமை பொங்க பேசுகிறார்கள் சுற்றுவட்டார மக்கள்.

கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் முதலில் நம்மை வரவேற்பது இருபக்கமும் இருக்கும் அய்யனாரின் பெரிய குதிரைகள்தான். முன்னங்கால்களை இரண்டு அரக்கர்கள் தலை மீது வைத்திருப்பது போல் உருவாக்கியுள்ளார்கள்.

குதிரையின் முதுகில் சிறிய சிங்கம் ஒன்று படுத்திருப்பதுபோல் அமைத்திருக்கிறார்கள். அதன் கீழே இசை கலைஞர்கள் வாத்தியம் இசைப்பது போலவும் அமைத்திருக்கிறார்கள்.

முன்பக்க குதிரையின் கீழே ஆக்ரோஷத்துடன் இருக்கும்  அம்மன் சிலையும் இருக்கிறது. இந்த அம்மன் சிலைக்கும் வழிபாடு நடைபெறுகிறது. பக்கவாட்டில் இறவா வரம் பெற்ற மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை தழுவியபடி எமனின் பாசக்கயிற்றில் இருந்து தப்புவதும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் சிறப்பு

பொதுவாக கோயில்களில் முதன்மை தெய்வங்களுக்கு முன் நந்தி அமைப்பது வழக்கம். இங்கு உயரமான ஒரு விளக்குத்தூணும் அதன் கீழே மூன்று நந்திகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன. கூடவே ஒரு யானையும் வணங்குவதுபோல் அமைத்திருப்பது அம்சமாக இருக்கிறது.




சிவசெண்பகத்தண்ணாயிரம் உடைய அய்யனார் யானையுடன் கூடிய மூன்று நந்திகள்
யானையுடன் கூடிய மூன்று நந்திகள்

இதனை கடந்து சென்றால் வாயிற் காப்பாளர்களாக துவார பாலகர்கள் முரட்டு மீசையுடன் கையில் வாள் ஏந்தி நிற்கிறார்கள். இதை பிரமாண்டமாக வடிவமைத்திருக்கிறார்கள். அதனுள்ளே பத்திரமாக வெள்ளை உகா மரத்தின் கீழே அய்யனாரும் மற்ற தெய்வங்களும் வீற்றிருக்கின்றன. இந்த மரம்தான் இந்த ஆலயத்தின் சிறப்பு.

இங்கே அய்யனார் சிறிய கல்லாகத்தான் காட்சி தருகிறார். அதுபற்றி ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. அதைப்பற்றி எளுவனி கிராமத்தில் வாழும் ருக்குமணி பாட்டி இப்படி சொல்கிறார்.

“செண்பக பூ மணம் பூத்து; கண்ணப்ப கோனார் ஆடு மாடு மேய்த்து; இடையிலே இருந்த பால் பானை கால் இடறி தட்டி விழுந்து; பால் கொட்டியது. பெரிய குற்றம் குடும்பத்திலே. தினமும் இப்படி பால் கொட்டுறமே நம்மள திட்டுவாங்களே என்று பயந்துகிட்டு அங்கேயே படுத்துட்டார்.

இரவு கனவிலே அய்யனார் குதிரையில் சவாரி செய்து, ஏய்! ராசா எந்திரி! உனக்கு காட்சி கொடுக்கிறேன் என்று கூறி பிரம்பால் அடித்து எழுப்பினார். அய்யனார் கண்ணப்பக் கோனாருக்கு காட்சி கொடுத்த இடம்தான் இன்று பெரிய கோயிலாக வளர்ந்து நிற்கிறது.” என்று கூறி முடித்தார்.




திருவிழா

சித்திரை, வைகாசி, மாசி, பங்குனி மாதங்களில் செவ்வாய் சாத்தி, குதிரை எடுப்பு திருவிழா நடைபெறுகிறது. அப்போது வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கு இங்கு சில மண்டபங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

மற்ற நாட்களில் திருமணம், காதுகுத்து போன்ற வைபவங்களுக்கு குறைந்த வாடகைக்கு விடுகிறார்கள். கேட்ட வரத்தை உடனே கொடுக்கும் தெய்வம் என்பதற்கான சாட்சியாக பக்தர்கள் செய்திருக்கும் நேர்த்திக்கடன்களே இருக்கின்றன.

நீங்களும் கேட்கும் வரத்தை தரும் இந்த அய்யனாரை வணங்கி அருள் பெறுங்கள். ஒரு நாளில் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவர விரும்புபவர்களுக்கு இந்தக் கோயில் ஓர் அற்புதமான இடம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!