Serial Stories

மயங்கினேன் மன்னன் இங்கே – 18

18

அவள் தந்தை ஊரை விட்டு போகும் முனபு ராயரம்மாவைத்தான் பார்த்து விட்டு போயிருக்கிறார் .இரண்டே வருடங்களில் திரும்பி வந்து விடுவேனென சொல்லி விட்டே சென்றிருக்கிறார் .அவர் சொன்ன சொல் மீறுகிறவர் இல்லை . நாட்கள் தப்பானாலும் ,தேவையான  பணம் சம்பாதித்து முடித்ததும் நிச்சயம் மீண்டும் வருவார் எனபது கோமதியின் இருபது வருட கால  நம்பிக்கை .இருபது வருடங்கள்  நாற்பதானாலும் தாயின் நம்பிக்கை போகாது என்பதனை அன்னையின் மேல் சிறு பரிதாபத்துடன் உணர்ந்து கொண்டாள் சஷ்டி.

நாராயணன் கோமதியிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ளாமலேயேதான் ஊரை விட்டு போயிருக்கிறார் .அதற்கு காரணம் அப்போது நாராயணனுக்கு கோமதியின் தந்தை மேல் இருந்த கோபம் .உங்களுக்கு தேவை பணம்தானே ..?சம்பாதித்து கொண்டு வந்து தருகிறேன் பாருங்கள் …என்று அவரிடமும் சவால் விட்டு விட்டுத்தான் நாராயணன் போயிருக்கிறார் .

அவ்வளவு வெறியும் , வேகமும் உடையவர் .உடனே பணம் சம்பாதிக்க வெளிநாடு போனவர் , நிச்சயம் சில வருடங்களிலேயே தேவையான பணத்தை சம்பாதித்திருக்கவே செய்வார் .அதை எடுத்துக் கொண்டு இங்கே வந்திருக்கவும் செய்வார் .இங்கே …இப்போது அவரை பற்றிய விபரங்களை பாட்டியும் , ராயரும் மறைக்கிறார்களென்றால் , சஷ்டியின் மனதில் ஏதோ நெருடலாக இருந்த்து .




கை நடுங்க கார் ஓட்டிய சாலப்பனின் காரோட்டம் இப்போது அவள் மனதை நடுக்கவில்லை .அவள் மனம்தான் நடப்பவற்றை நம்ப முடியாமல் ஸ்தம்பித்து போய் கிடக்கிறதே …எந்திரமாக காரிலிருந்து இறங்கியவள் வீட்டிற்குள் யோசனையுடனேயே நுழைந்தாள் .

ஹாலில் வீட்டினர் அனைவரும் உட்கார்ந்து ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருக்க , சஷ்டியின் கவனம் அங்கே பதியவில்லை .அவள் தன் போக்கில் மாடிப்படி பக்கம் திரும்ப ” மலர் …இங்கே வாடி …”அழைத்தாள் சொப்னா .அவளது குரல் காதில் கேட்டும் கருத்தில் பதியாது போக , சஷ்டி அடுத்த எட்டு எடுத்து வைக்க …

” சஷ்டி …” இப்போது அழுத்தமாக அழைத்தது திருமலைராயன் .

இந்த அழைத்தல் சஷ்டியின் பிரமையை கலைக்க அவள் மெல்ல திரும்பி பார்த்தாள் .இவன் முதலில் என்னை மலர் என்றுதானே அழைத்துக் கொண்டிருந்தான் .சஷ்டி என எப்போதிருந்து அழைக்க ஆரம்பித்தான் .சஷ்டி என அவளை அழைப்பது அவள் அம்மா மட்டுமே .வெளியே , நணபர்கள் எல்லோருக்கும் அவள் மலர்தான் .சஷ்டி என்ற பெயர் அவர்களுக்கு ஒரு வகையில் அசௌகரியத்தை கொடுக்கலாமாக இருக்கும் .ஆசையாக பெற்றெடுத்து பெயர் வைத்த கோமதிக்கு மகளை அப்படி அழைப்பதே பிடிக்கும் .அன்னையின் இந்த உரிமையை மற்றவர்களுக்கு தரப் பிடிக்காமல் சிலரிடம் சஷ்டியே மலர் என்று கூப்பிடுங்கள் என்று விடுவாள் .

அப்படி அவள் தன் தாய்க்கு மட்டுமே எனக் கொடுத்த உரிமையை இவன் எப்போது எடுத்துக் கொண்டான் …? அவனைப் பார்த்தபடியே அவர்கள் அருகே வந்தாள் .

” வா சஷ்டி .இதனை சாப்பிட்டு பார் …” சொன்னபடி சுவாதீனமாக அவள் கையை பற்றி இழுத்து அவளை தன் அருகே அமர்த்திக் கொண்டான் .அம்மா , பாட்டி , தங்கையென உறவுகளும் , இன்னமும் வேலையாட்களும் இருக்கும் இடத்தில் இவன் இப்படி தன் கணவன் உரிமையை வெளிப்படையாக காட்ட வேண்டுமா …ஒரு வேளை  அப்படி காட்டுவதினால் இவனுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா ..?

குழம்பிக் கொண்டிருந்த சஷ்டியின் வாயில் எதுவோ திணிக்கப்பட , அந்த உணவுப் பொருள் நெய் வாசமும் , கறிச்சுவையுமாக இருக்க , ” என்ன இது …? ” திணறினாள்.

” இது பொட்டிச்சோறு சஷ்டி . காரைக்கால் ஸ்பெசல் …நீ சாப்பிட்டிருக்க மாட்டாயேடா …சாப்பிட்டு பார் .எவ்வளவு ருசியென்று தெரியும் …” சுற்றியிருப்பவர்களை பற்றிய தயக்கமின்றி இன்னொரு கவளம் அள்ளி மனைவியின் வாயில் திணித்தான் திருமலைராயன் .




அப்போது அவன் முகத்தில் ஒரு புது வகை உணவுப் பண்டத்தை ,அவர்கள் பக்கத்து பாரம்பரியத்தை மனைவிக்கு அறிமுகப் படுத்தும் ஆர்வம்  இருந்த்து .வாயினுள் ஊட்டிய போது , அவள் உதட்டை பிறரறியாமல் மென்மையாக வருடிய அவனது ஆட்காட்டி விரல் அவளுக்கு பிரதயேகமாக நான் உன் கணவன் என்ற செய்தியை சொன்னது .

இவனதான் சற்று முன் டிரைவரிடம் என்னைக் கண்காணிக்க  சொல்லி பேசியவனா …?தோளுரசி அமர்ந்தபடி அவளை சீண்டிக் கொண்டிருந்தவனின் கணவன் குறும்பில் அவ்வளவு நேரமாக தன்னை படுத்திக் கொண்டிருந்த   உள் மன சந்தேகங்கள் மறைவதை உணர்ந்து திடுக்கிட்டாள் சஷ்டி .இப்படி எனை மறக்கத்தான் …இவன் அடிக்கடி இப்படி நடந்து கொளகிறானா …? அவனது அருகாமையை விட்டு நகர்ந்து அமர்ந்து கொண்டாள் .

” அதென்ன பொட்டிசோறு …?” கணவன் பக்கம் திரும்பாமல் கேள்வியை தன் அன்னைக்கு கொடுத்தாள் .அவள் பார்வை அங்கே வைக்கப்பட்டருந்த ஓலைப் பெட்டிகளின் மீது விழுந்த்து .பனை ஓலை பெட்டிகளின் உள்ளே சூடான சோறும் ,மேலே கறித்துண்டுகளும் தெரிந்தன .நாவின் சுரப்பிகளை தூண்டும் நல் வாசனை அந்தப் பொட்டிகளிலிருந்து மிதந்து வந்து கொண்டிருந்த்து .

” இது நம் பகுதகளில் விருந்துகளில் செய்யப்படும் ஒரு வகை சாப்பாடும்மா .வடித்த சோற்றில் நெய் ஊற்றி கிளறி சுடச்சுட இந்த ஓலைப்பெட்டிகளில் போட்டு அதன் மேல் கறிக் குழம்பை ஊற்றி அதன் சாறு பெட்டியின் கீழ் வரை இறங்கும் வரை காத்திருந்து , நெய் மணமும் , கறிக் குழம்பின் ருசியும் , பனை ஓலைப் பெட்டியின் வாசமும் கலந்து சாப்பிடும் ஒரு வகை சாப்பாடு .தேவாமிர்தமாக ருசிக்கும் .இன்னமும் கொஞ்சம் சாப்பிடும்மா …” பேச்சியம்மா மருமகளுக்கு விளக்கினாள் .

” ஓ …இதுவும் ஒரு வகை கல்யாண விருந்து சாப்பாடா …? “

” கல்யாணத்திற்கு என்றில்லைம்மா .அவரவர் வீட்டு விசேசம் எதுவாக இருந்தாலும் , வீடுகளில் இதனை செய்வார்கள் . நெருங்கிய சொந்தங்களுக்கு கொடுத்தும் விடுவார்கள் .இது கூட நம் சொந்தக்கார்ர் ஒருவர் வீட்டு விசேசத்தின் போது செய்து நமக்கு கொடுத்து விட்டதுதான் .சிலர் கோவிலில் நேர்ந்து கொண்டு நேர்த்திக் கடனாக கூட இந்த பொட்டிச்சோறு செய்து எல்லோருக்கும் கொடுப்பார்கள் ” பாட்டி விளக்கினார.

” ஆமாம் சஷ்டி .நான் கூட உன் அப்பா திரும்பி வந்த்தும் ஆயிரம் பேருக்கு பொட்டிசோறு சமைத்து போடுகிறேன் என்று நம் ஊர் ஆயிரம் காளியிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன. ” கோமதி சொல்ல திடுமென அந்த இடம் அமைதியானது .

சஷ்டி ஓரக் கண்ணால் கணவனையும் , பாட்டியையும் பார்க்க அவர்கள் முகம் ஒளியிழந்து இருந்த்து .ஆக …அப்பா விசயத்தில் இவர்களிடம் ஏதோ ஓர் ரகசியம் இருக்கிறது .அவர்கள் நிலையை தன் மன ஏட்டில் குறித்துக் கொண்டாள் சஷ்டி .

” என்னிடம் எதையாவது மறைக்கிறீர்களா பாட்டி …? ” அன்று மாலை பாட்டியின் அறைக்கு போய்  தனது தாக்குதலை நேரடியாகவே தொடங்கினாள் .

பாட்டியம்மா தன் கண்களை சுருக்கி அவளை பார்த்தார் .கடுமையாக  புருவங்களை நெரித்தார் .




” நானா …? நீதான் நிறைய மறைத்தாய் .நீ கோமதியின் மகள் என்பதை மறைத்தாய் .என் பேத்தியை ஏமாற்றி என்  பேரனின் கல்யாணத்தை நிறுத்த வந்தாய் ….”

சஷ்டி பாட்டியை முறைத்தாள் .” உங்கள் பேரன் கல்யாணத்தை நிறுத்தியது நானா …? “

” அது யாராகவும் இருந்து விட்டு போகட்டும் .உனக்கு அந்த எண்ணம் இருந்த்தா …இல்லையா …? “

பாட்டியும் , பேரனுமாக பல நாட்களாக திட்டம் போட்டு தாங்கள் ஏற்பாடு செய்த திருமணத்தை தாங்களே நிறுத்தி விட்டு , இப்போதென்னவோ நானே நிறுத்தியது போல் இந்த பாட்டியின் பேச்சை பார் …சஷ்டி பல்லை இறுக்கி கடித்து ஆத்திரத்தை அடக்கினாள் .

” என் அப்பாவின் கடன் பத்திரம் எனக்கு வேண்டும் பாட்டி …” உறுதியான குரலில் கேட்டவளை அலட்சியமாக பார்த்தார் பாட்டி .

” உன் அப்பனுக்கு கொடுத்த கடனையெல்லாம் நான் பத்திரத்தில் எழுதி வைத்துக் கொள்ளவில்லை .எல்லாம் வாய் பேச்சுதான் .பத்திரமெல்லாம் இல.லை …”

” பொய் .அன்று பத்திரம் பரண் மேல் இருப்பதாக சொன்னீர்களே …? “

” அது …சும்மா சொன்னேன் .கடன் கொடுத்தவள் நான் .நானே சொல்கிறேன் .பத்திரமென்று ஒன்று கிடையாது “

சஷ்டிக்கு ஆத்திரம் பொங்கியது .” பாட்டீ …ஏன் இப்படி செய்கிறீர்கள் …? உங்களிடம் ஏதோ தப்பு இருக்கிறது …? நீங்கள் என் அப்பாவின் விசயம் எதையோ மறைக்கிறீர்கள் …”

” ஆமா உன் அப்பன் பெரிய ராயர் மகன் .அவன் ராச ரகசியத்தை நான் உன்கிட்ட மறைக்கிறேன் …” அதி அலட்சிமான பேச்சுடன் பாட்டி மெல்ல அறையை விட்டு வெளியேற முயல  , தன் அப்பாவை பேசிய அலட்சிய பேச்சும் , நழுவப் பார்த்த செய்கையுமாக சஷ்டியின் கோபம் உச்சந்தலைக்கு ஏறியது .அவள் தன் நிதானத்தை கை விட்டாள் .

” நாங்கள் பெரிய ராயர் குடும்பமென்று சொன்னோமா …? எங்களுக்கு வாழ்க்கை கொடுங்களென்று நானோ …அம்மாவோ உங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றோமா …? எதற்கித்தனை அலட்சியம் …? எனக்கு உங்கள் மேல் சந்தேகமாக இருக்கிறது .நீங்கள்தான் என் அப்பாவை ஏதோ செய்திருக்கிறீர்கள் .சொல்லுங்கள் பாட்டி .என் அப்பாவை என்ன செய்தீர்கள் …? உங்கள் கடனை திருப்பித் தரவில்லை என்று அவரைக் கொன்று விட்டீர்களா …? ” பேசப் பேச அதுவே உண்மையென சஷ்டிக்கு தோன்றத் தொடங்க , அவள் பாட்டியின் தோள்களை பிடித்து உலுக்க தொடங்கினாள் .

திடுமென இத்தனை ஆக்ரோசத்தை சஷ்டியிடமிருந்து எதிர்பாராத பாட்டி திகைத்து நின்றார் .அவரது வயோதிக உடல் சஷ்டியின் வாலிப உலுக்கலை தாங்க முடியாமல் துவளத் துவங்கியது .தற்செயலாக பாட்டியின் அறைக்குள் வந்த திருமலைராயன் இந்த நிகழ்வில் அதிர்ந்தான் .இரண்டே எட்டில் அவர்கள் அருகில் வந்தவன் , சஷடியின் கரங்களில் இருந்து பாட்டியை விடுவித்தான் .

பாட்டியின் தோள் சுற்றி ஆதரவாக அணைத்துக் கொண்டு , சஷ்டியை பிடித்து தள்ளினான் .அந்த தள்ளலில் தடுமாறிய சஷ்டி கால் பிரண்டு கீழே விழப் பார்த்து கடைசி நொடியில் கட்டிலை பிடித்து நின்றுகொண்டு அவனை வெறித்தாள் .




” ஏய் லூசாடி நீ … பாட்டியை ஏன் இப்படி வதைத்துக் கொண்டிருக்கிறாய் …? “

” நானா …அவர்தான் என்னை …ஆனால் நீங்களும் அவர் பக்கம்தானே …? அவர் பேசுவதைத்தானே நீங்களும் கேட்பீர்கள் …? அது படித்தானே நடப்பீர்கள் .அவர் கல்யாணம் பேசு என்றால் பேசுவீர்கள் .நிறுத்து என்றால் நிறுத்துவீர்கள் .அவள் வேண்டாம் இவளை கல்யாணம் செய்து கொள் என்றாலும் தலையாட்டுவீர்கள் . உங்கள் பாட்டி சொன்ன சொல்லிற்காக நீங்கள் காதலித்த பெண்ணையே விட்டு விட்டு என் கழுத்தில் தாலி கட்டியிருக்கிறீர்களே …பாட்டிக்காக என்னை வேவு பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களே .உங்களிடம் நான் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும் .?என் அப்பாவை என்ன செய்தீர்கள் …? ” மனக் கொதிப்பு எல்லாம் வார்த்தைகளாக வழிந்த்து சஷ்டிக்கு .

அவளது ஒவ்வொரு வார்த்தைக்கும் திருமலைராயனின் முகத்தில் உக்கிரம் ஏறிக் கொண்டே போனது .

” வேவு பார்க்கிறேனா …? யாரைப் பார்த்தடி இந்த வார்த்தை பேசுகிறாய் …? ” திருமலைராயன் கோபத்துடன் அவள் கூந்தலை பற்றினான் .

” இந்த ஊர் ராயரிடம் தான் கேட்கிறேன் . என் அப்பாவை பற்றிய என் விசாரிப்புகளை நீங்கள் வேவு பார்க்கவில்லை …? இதெல்லாம் எதற்கு …? என் அப்பாவை என்ன செய்தீர்கள் …? “சஷ்டி துணிந்து அவன் சட்டையையே பிடித்தாள் .

பாட்டியின் முகம் கோபத்தில் ஜொலிக்க , விபரம் அறிந்த நாளிலிருந்து ராயர் என்ற கௌரவத்துடனேயே இருந்து வந்தவனுக்கும் இது அவமரியாதையாக தோன்ற பட்டென கை நீட்டி அவள் கன்னத்தில் அறைந்தான் .




” முட்டாள் .யாரிடம் என்ன பேசுகிறாய் …? உன் அப்பா துபாய் போன ஆறு மாத்த்திலேயே ஒரு ஆக்சிடென்டில் செத்து போய்விட்டார் .இந்த தகவல் அப்போதே பாட்டிக்கு தெரிய வந்துவிட்டது . அவர் யாருக்கும் இதனை சொல்லாமல் மனதிற்குள் புதைத்து வைத்துக் கொண்டிருந்தார். இங்கிருந்தே நிறைய பணம் செலவு செய்து அங்கேயே உன் அப்பாவை நல்லடக்கம் செய்தார் .உன் அம்மாவை உடனடியாக கண்டு பிடிக்க முடியவில்லை .உங்கள் இருப்பிடத்தை கண்டு பிடித்த  போது , பாட்டியின் மனது மாறிவிட்டது .உன் அம்மாவிற்கு உடனே இந்த துக்க செய்தியை சொல்லி ஏன் அவரையும் நோகடிக்க வேண்டுமென , அமைதியாக இருந்துவிட்டார் .இருபது வருடம் கழித்து நீ எங்களை பழி வாங்கவென வந்து நிற்கிறாய் .அந்த பிரச்சனையை சமாளித்து இன்னமும் உன் அம்மாவை வருத்தப்படுத்த விரும்பாமல் அவர்கள் காலம் வரை உன் அப்பா வருவாரென்ற நம்பிக்கையுடனேயே அவர் இருக்கட்டுமென நாங்கள் நினைத்தால் , நீ அறிவில்லாமல் பெருச்சாளி போல் எல்லாவற்றையும் குடைந்து கொண்டு இருக்கிறாய் .அதனை தடுத்தால் எங்களுக்கு கொலைகார பட்டம் …எங்கள் குடும்பத்திறகு அவதூறு …சீச்சி என்ன பெண்ணடி நீ …? ” 

திருமலைராயன் பேசப் பேச சஷ்டி கண்கள் சொருக அப்படியே தரையில் சரிந்து விழுந்தாள் .




What’s your Reaction?
+1
17
+1
22
+1
1
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!