Cinema Entertainment விமர்சனம்

’கும்பாரி’ திரைப்பட விமர்சனம்

பெற்றோர் இல்லாத விஜய் விஷ்வா மற்றும் நலீப் ஜியா, சிறு வயது முதல் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து ஒன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள். விஜய் விஷ்வா மீது நாயகி மஹானாவுக்கு காதல் மலர்கிறது. இந்த காதல் விவகாரம் மஹானாவின் அண்ணன் ஜான் விஜய்க்கு தெரிய வர, அவர் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, விஜய் விஷ்வாவை மிரட்டுகிறார். நண்பனை மிரட்டும் ஜான் விஜயை எதிர்க்கும் நலீப் ஜியா, விஜய் விஷ்வா மற்றும் மஹானாவுக்கு திருமணம் செய்து வைப்பேன், நான் உயிருடன் இருக்கும் வரை அதை யாராலும் தடுக்க முடியாது, என்று சவால் விடுகிறார்.




அதன்படி, நண்பனின் திருமண ஏற்பாடுகளை நலீப் ஜியா கவனிக்க, மறுபக்கம் தங்கையை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற முயற்சியில் ஜான் விஜய் ஈடுபடுகிறார். இதற்கிடையே, நலீப் ஜியா திடீரென்று காணாமல் போகிறார். அவரை ஜான் விஜய் தான் கொலை செய்திருப்பார், என்று நினைத்து விஜய் விஷ்வா நீதிமன்றத்தில் முறையிடுகிறார். ஆனால், நலீப் ஜியா காணாமல் போனதற்கு ஜான் விஜய் காரணம் அல்ல என்பது தெரிய வருகிறது. நலீப் ஜியா என்ன ஆனார்?, அவர் சொன்னது போல் நண்பன் விஜய் விஷ்வாவுக்கு திருமணம் செய்து வைத்தாரா?, இல்லையா? என்பது தான் ‘கும்பாரி’ படத்தின் கதை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நண்பனை கும்பாரி என்று அழைப்பார்களாம். ஆனால், படம் என்னவோ நட்பை விட காதலை பற்றி தான் அதிகம் பேசுகிறது. அதனால் ‘கும்பாரி காதல்’ என்று தலைப்பு வைத்திருக்கலாம்.

கும்பாரி என்ற தலைப்பில் இருக்கும் வித்தியாசத்தின் ஒரு சதவீதம் கூட  கதை மற்றும் திரைக்கதையில் இல்லை. காதல் மற்றும் நட்பை மையமாக கொண்டு கதை நகர்ந்தாலும் கதையை படமாக்கிய விதம் அதற பழசாக இருப்பதோடு, சினிமா பற்றிய எந்த ஒரு விசயமும் தெரியாதவர்கள் படம் எடுத்தது போல் இருக்கிறது.

பட்ஜெட் படங்களுக்கு ஏற்ற நாயகன் என்ற முத்திரையை பெற்றிருக்கும் நடிகர் அபி சரவணன் தனது பெயரை விஜய் விஷ்வா என்று மாற்றிக்கொண்டது போல், கதை தேர்விலும் சற்று கவனம் செலுத்தினால் அவரது சினிமா பயணம் தொடரும். அப்படி செய்யாமல், பட வாய்ப்பும், அந்த படத்தில் தனக்கு ஜோடியும், அவருடன் நெருக்கமான காட்சிகளும்  இருந்தாலே போதும், என்ற நோக்கத்தில் பயணித்தால் நிச்சயம் அவரது படங்கள் பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் மட்டும் தான் ஓடும்.

இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் நலீப் ஜியா, புது வரவாக இருந்தாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மஹானா சஞ்சீவி, காதல் மலர்ந்த ஒரே நாளில், காதலனை திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து அதற்காக அவருடன் பயணிப்பது நம்பும்படி இல்லை என்றாலும், அந்த வேடத்திற்கு ஏற்றபடி நிறைவாக நடித்திருக்கிறார்.

நாயகியின் அண்ணனாக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கமான தனது ஓவர் ஆக்டிங் மூலம் சில இடங்களில் படத்திற்கு பலமாகவும், பல இடங்களில் பலவீனமாகவும் பயணித்திருக்கிறார்.




காமெடி வேடத்தில் நடித்திருக்கும் ஜாங்கிரி மதுமிதா, ஜான் விஜயையே மிஞ்சும் அளவுக்கு, ஓவராக நடித்திருக்கிறார்.

பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், செந்தி குமாரி, காதல் சுகுமார் என அனுபவம் உள்ள நடிகர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை.

எழுதி இயக்கியிருக்கும் கெவின் ஜோசப், சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க முயற்சித்திருக்கிறார். அதற்காக அவர் தேர்வு செய்த  கதை எதுவாக இருந்தாலும் அதை சொல்லும் விதத்தில் சற்று வித்தியாசத்தை காட்டியிருந்தால் படம் ரசிக்கும்படி இருக்கும். ஆனால், மனுஷன் ஒரு காதல் கதையை எப்படி எல்லாம் சொல்ல கூடாதோ அப்படி எல்லாம் சொல்லி சொதப்பியிருக்கிறார். அதுவும், காமெடி என்ற பெயரில் அவர் வடிவமைத்த காட்சிகளும், வசனங்களும் சுத்தமாக எடுபடவில்லை.

படத்தில் ரசிக்கும்படியாக இருப்பது லொக்கேஷன்கள் மட்டும் தான். கன்னியாகுமரி மாவட்டத்துடன் கேரளாவின் அழகிய பகுதிகளில் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரசாத் ஆறுமுகம், திரைப்படங்களில் அதிகம் பார்த்திராத லொக்கேஷன்களை தேடிப் பிடித்து காட்சிப்படுத்தியிருக்கிறார். ஜெயபிரகாஷின் இசையில் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய பாடலை, அதே மாவட்டத்தின் பேச்சு தமிழை கொண்டு வடிவமைக்கப்பட்ட விதம் புதிதாக இருக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும்படி இருப்பதோடு பின்னணி இசை சுமார் ரகமாக இருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘கும்பாரி’-யால் திரையரங்குகளில் ஒப்பாரி சத்தம் கேட்பது நிச்சயம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!