Serial Stories

விநாடி நேர விபரீதங்கள்-3

வினாடி…3

“கண்ணா…கண்ணா..!” 

எங்கோ…ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கண்ணனின் காதுகளில் தாயின் குரல் விழுந்தால்தானே!

மகனைத் தேடிக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்த கனகம் புத்தகத்தின் மேல் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டிருந்த மகனைக் கண்டு மனம் கசிந்தாள்.

“பாவம் படிக்கிற  புள்ள..! இஸ்கோலுக்கும் போயிகினு,நமக்கும்  கூடமாட ஒத்தாசை செஞ்சிகினு, கிடைக்கற நேரத்த வேஸ்ட் பண்ணாம படிக்குது.

ம்..ம் இன்னும் கொஞ்ச நாளு கஸ்டப்பட்டா‌..அப்புறம் வாழ்க்கை பூரா சொகமா இருக்கலாம்.”

மனசுக்குள் நினைத்தவாறு மகனை நெருங்கியவள்..

“கண்ணா…! எத்தினி தபா உன்னைக் கூப்பிடறது? இருளோன்னு மேகம் மூடிகினு வருது. வூட்டாண்ட வந்து படி ராசா!”

தாயின் குரல் வெகு அருகில் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தவன்..

“படிச்ச பாடத்த எல்லாம் மனப்பாடமா சொல்லிப் பாத்துகினு இருந்தனா..நீ கூப்ட்டதே காதுல வுளுவல”

“இப்ப கோபி  வீட்டுக்குப் போயாகணுமே! யூடியூப் ல அப்லோடாகி இருக்கற  புது  வீடியோவ கோபி, பார்த்தி , கார்த்திக் எல்லாம் பாத்திருப்பாங்க. நாமதான் கடைசி. நம்ம கிட்ட தான் ஸ்மார்ட் ஃபோன் இல்லைனு தெரியும்ல இந்தப் பயலுகளுக்கு. க்ரூப் ஸ்டடிக்கு வரச் சொல்லி எவனாவது கால் பண்றானுவளா பாரேன்!  சுயநலவாதிங்க. அவனுங்க மட்டும் என்ஜாய் பண்ணிக்கறானுவ”

மனசுக்குள் பொருமித் தள்ளியவனுக்குத் தன்னிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லையென்ற தன்னிரக்கம் கண்களை  நீர் கொண்டு நிறைத்தது. 

மகனுக்கு டீயைக் கொண்டு வந்து தந்த கனகம்…

“இந்த டீயைக் குடிச்சுட்டு குடை எடுத்துகினு , பஸ்ஸ்டாப்புக்கு போய் அக்காவ இட்டாந்துரு கண்ணு…! இன்னைக்கு அவசரத்துல குடையை மறந்துட்டு போயிட்டா. மழைல நனைஞ்சா அவளுக்கு ஜல்ப்பு புடிச்சிரும். பாவம் சம்பாதிக்கிற புள்ளை.”

“ஹ்க்கும்..இது வேறயா! இந்த அக்காவுக்கு இதே வேலையாப் போச்சு! இன்னைக்கு நாம வீடியோ பாத்த மாதிரிதான். !”

மெர்சலானான் கண்ணன்.




அவன் முகம் போன போக்கைக் கண்ட கனகம்..

“ஏண்டா ‌..மூஞ்சிய மொழ நீளத்துக்குத் தூக்கி வச்சினு கீற?”

“சாயங்காலமா வூட்டாண்ட வாடா. ட்யூசன்ல இன்னைக்கு சொல்லிக் குடுத்த கணக்குப் பாடத்த சொல்லிக் குடுக்கறன்னான் கோபி. அன்னன்னிக்குப் பாடத்த அன்னன்னிக்கே படிச்சாத்தான் பப்ளிக்ல நல்ல மார்க் வாங்க முடியும்?

“ஆமாமா.. நமக்குத்தான் ட்யூசன் வச்சுக்க வக்கில்ல. கோபி சொல்லித் தர்றதையாவது கவனமா கேட்டு மனசுல வச்சுக்க. அந்தப் புள்ள நல்லா இருக்கோணும். நானே போய் உங்கக்காவை இட்டாரேன்”

கனகம் சொல்லி முடிப்பதற்குள் சிட்டாகப் பறந்து விட்டான் கண்ணன்.

வேர்த்து விறுவிறுக்க சைக்கிளில் வந்திறங்கிய கண்ணனைப் பார்த்த கோபியின் அம்மா…

“டேய் கண்ணா..என்னடா உன்னோட ஃப்ரண்ட் ஸ்கூல் விட்டு வந்ததுலருந்து ரூமே கதின்னு கிடக்கிறான். நீ வேற இப்படிப் பரக்கபரக்க ஓடி வர்ற.. என்ன ஏதாவது ப்ரச்னையா?”

“அச்சச்சோ.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை ம்மா! எக்ஸாம் பக்கத்துல வருது. இன்னைக்கு முக்கியமான கணக்குப் பாடத்த ட்யூசன் மாஸ்டர் நடத்துனாப்புலயாம். அத

எனக்கு சொல்லிக் குடுத்தா எனக்கும் புரியும், அவனுக்கு ரிவிசன் பண்ணிக்கிட்டாப்புல இருக்கும்னு வரச் சொன்னான்.அதான் வந்தேன்…!”

கனகத்திடம் சொன்ன அதே பொய் இங்கும் ரிபீட்டானது.

“அட…அட..! எம்மகனுக்குத்தான் எத்தனை பொறுப்புணர்ச்சி!” பொங்கிப் பூரித்தது கோபியின் தாயுள்ளம்.

ஆறு மாதங்களுக்கு முன்பு நீங்கள் கண்ணனைப் பார்த்திருந்தால்…இப்படி ஒரு மகன் நமக்கு இல்லையே என்று ஏங்கிப் போயிருப்பீர்கள்.

கனகம்-சபாபதி தம்பதியருக்கு வெண்மதி தலைச்சன் மகளாகப் பிறந்த பிறகு எட்டு வருடங்கள் கழித்துப் பிறந்தவன் கண்ணன். கனகம் வாடிக்கையாக வீட்டுக்கு வீடு காய்கறி எடுத்துப் போய் விற்று வருவாள். சபாபதி கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாய் வாங்கி சில்லறை வியாபாரம் செய்பவர். 

தம்பியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டே, வீட்டு வேலை, படிப்பு எல்லாவற்றையும் திறம்பட செய்து விடுவாள் வெண்மதி. 

தாயைக் காட்டிலும் தமக்கையின் பாசத்தில் முக்குளித்து வளர்ந்தான் கண்ணன். சும்மாவா சொன்னார்கள் தமக்கை இன்னொரு தாய்க்கு சமம் என்று!

கண்ணனுக்கும், அக்கா வார்த்தையே வேதவாக்கு. அக்காவுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பான். தன்னைப் போலவே தம்பியையும் பொறுப்பாக வளர்த்த வெண்மதி, ப்ளஸ் டூ முடித்ததும் எக்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றில் டெய்லரிங் வேலைக்குப் போனவள்..இப்போது சூப்பர்வைசராகப் பதவி உயர்ந்திருக்கிறாள். அவள் மதிய உணவை மறந்து விட்டாலோ..இல்லை மழைக் காலங்களில் குடையை மறந்து விட்டாலோ..அவள் கம்பெனி வரைக்கும் வேகாத வெயிலிலானாலும், கொட்டுகிற மழையாலும் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருவான். அக்கம்பக்கத்திலும் சரி, கம்பெனியிலும் சரி, இவர்களுடைய பாசப்பிணைப்பு பெருமையான பேசுபொருளாக இருந்தது‌.

கோபியின் வீட்டுக்குக் காய்கறி சப்ளை கனகத்துடையது. அவளால் முடியாதபோது கண்ணன் கொண்டு செல்ல, அவனுடைய பொறுப்பு,பணிவு இதைப் பார்த்து, கோபியை அவனோடு பழக விட்டாள் கோபியின் அம்மா.

இருவரும் எட்டாவது படித்தாலும் கோபி படிப்பது பணக்காரப்பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளி. கண்ணன் படிப்பதோ கார்ப்பரேஷன் பள்ளி. 

கோபியின் மூலம் பழக்கமானவர்கள் தான் கார்த்திக்கும்,பார்த்தாவும். நான்கு பேரும் வளர வளர அவர்களுடைய நட்பும் வேரூன்றி வளர்ந்தது. கண்ணனின் ஏழ்மை நிலைமை நட்புக்கு முன்னால் காணாமல் போனது.

விடுமுறை நாட்களில் நான்கு பேரும் ஒன்றாக விளையாடிக் களிப்பார்கள்.ஒருவருக்குத் தெரிந்த பாடத்தை மற்றவர்களுக்கும் சொல்லித் தருவார்கள். இவர்களுடைய நட்பூ மணம் அவர்கள் குடும்பங்களுக்குள்ளும் பரவ ஆரம்பித்தது.

கார்த்திக்கின் அப்பா மகனுக்கு வெளிநாட்டிலிருந்து ஸ்மார்ட் ஃபோன் அனுப்ப…பார்த்தி,கோபி இருவரும் தத்தம் பெற்றோரை நச்சரித்து தாங்களும் ஃபோனை வாங்கியபோதுதான் கண்ணனுக்குத் தன் ஏழ்மை நிலை முகத்திலறைந்தாற் போல உறைத்தது. விளையாடக்கூட வராமல் நண்பர்கள் மொபைல் ஃபோன் மோகத்தில் மூழ்கியது கண்டு துக்கத்தில் மூழ்கினான் கண்ணன்.




“என்னடா பொல்லாத வாழ்க்கை இது? பெத்தவங்க சம்பாதிக்கிறது வாய்க்கும் வயித்துக்குமே சரியாப் பூடுது. அக்கா சம்பாதனைய அத்தோட கல்யாணத்துக்குன்னு சேத்து வைக்கிறாங்க. அப்ப எனக்குன்னு என்ன இருக்கு? மனம் வெதும்பியவனுக்குப் படிப்பில் ஆர்வம் குறைய ஆரம்பித்தது.

ஒருநாள் காய்கறி கொண்டு வந்த கனகாவிடம், கோபியின் தாய்,

“என்ன கனகா! இப்பல்லாம் கண்ணன் வர்றதேயில்ல. பெரிய மனுசனாயிட்டானாக்கும்?”

“நீங்க வேறம்மா? எப்பப் பாரு எத்தையோ பறி குடுத்தாப்புல மோட்டுவளையப் பாத்துனேகீறான். மொவத்துல ஒரு செழிப்பில்ல, சிரிப்பில்ல. சிநேகிதப் பசங்க யாரும் வெளையாட வாரதில்லைனு அளுவறாப்புல சொன்னான். இதுங்களுக்குள்ள எதுனா ப்ர்ச்னையானு தெர்லயே”

அகஸ்மாத்தாக இதைக் கேட்ட கோபிக்கு அப்போதுதான் 

“அடடா..! மொபைல் ஜோருல கண்ணனை மறந்துட்டமே..! பாவம் அவன்கிட்ட சாதா ஃபோன் கூட இல்லையே”

பச்சாதாப்பட்டவன் அன்று மாலையே கண்ணனை வீட்டுக்கு வரவழைத்தான்.

கண்கள் வெறிக்க மொபைலைப் பார்த்தவனிடம்,

“கண்ணா…வாடா ! இதுல என்னவெல்லாம் இருக்குனு உனக்குக் காட்டுறேன் “

அவன் காட்டிய வீடியோக்கள் கண்ணனைப் பதற வைக்க

“கோபி, இதெல்லாம் தப்புடா, நாம் படிக்கற பசங்க, படிப்புலதான் நம்ம கவனம் இருக்கணும்”

“படிப்பு ஒரு ட்ராக்ல ,பொழுதுபோக்கு ஒரு ட்ராக்ல! எப்பப்பாரு படிச்சிட்டே இருந்தா நமக்கு மூளை கொதிச்சு போயிடும்டா! அப்பப்ப இப்படி ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். இந்த வயசுல அனுபவிக்காம எப்ப அனுபவிக்கிறது?

லைஃப்னா ஒரு த்ரில் வேணும்டா. நீ தினமும் ஸ்கூல் விட்டதும்,படிக்கிறதா சொல்லிட்டு இங்க வந்துரு. நான் புதுப்புது வீடியோவா உனக்குக் காட்டறேன்‌. எக்ஸாம் நெருங்கறப்ப படிச்சிட்டா போகுது‌. நாமதான் நல்லாப் படிக்கிறவங்களாச்சே!”

கோபியின் வார்த்தைகள் மெதுமெதுவாகக் கண்ணனின் மூளையைச் சலவை செய்ய, அவனுடைய  படிப்பு, குடும்பப் பொறுப்புகள் எல்லாம் எங்கோ தூரமாக விலகிச் செல்ல, தன் உடல்,பொருள்,ஆவி அத்தனையையும்

கோபி காட்டும் வீடியோக்களைப் பார்ப்பதற்கென்றே அர்ப்பணித்தான் கண்ணன்.

பொய் பேசியே அறியாதவன், தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனத் தமக்கையால் போதிக்கப்பட்டு ஒழுக்கமாக வளர்க்கப்பட்டவன், வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவன்.. கூடாநட்பினால் கொஞ்சம் கொஞ்சமாக புதைகுழிக்குள் இழுக்கப்பட்டான்.

கார்த்திக் வீ ட்யூப் சானல் ஆரம்பிக்கப் போவதாகச் சொன்ன யோசனை, பார்த்தியின் மூலமாக கோபி,கண்ணனுக்கும் தெரிய வர,அன்றிரவு அவர்கள் நால்வருக்கும் உறங்கா இரவாகிப் போனது.

கோபியின் வீட்டில் இதைப் பற்றி விவாதித்தான் கண்ணன்..! அவனுக்குத்தான் மற்றவர்களைக் காட்டிலும் மூளை கொஞ்சம்..கொஞ்சமென்ன நிறையவே ஷார்ப்பாயிற்றே!

சானல் ஆரம்பிப்பது சாத்தியமா?  பதினெட்டு வயது கூட  நிரம்பாத நமக்கு அதற்கான தகுதி இருக்கிறதா? பெற்றோர் சம்மதிப்பார்களா? இதனால் வரப் போகும் பின்விளைவுகள்..இதைப் பற்றியெல்லாம் யோசித்த  கண்ணன்,

“டேய் கோபி.. மொதல்ல கல்விச் சேனலைத் தொடங்கலாம். இப்ப என்னையே எடுத்துக்கோங்க. ட்யூஷன் போக வசதியில்லாத எனக்கு நீங்க மூணு பேரும் பாடம் சொல்லித் தர்றீங்க. அதையே நம்ம சானல் மூலம் வெளியிட்டா என்னை மாதிரி நிறைய ஏழை மாணவர்கள் பயனடைவாங்களே! 

நல்ல யோசனை டா! இரு .. கார்த்திக்,பார்த்தாவையும் க்ரூப் கால்ல கூப்பிடறேன்.

என்னடா கண்ணா‌..! த்ரில்லரா ஷாட்ஸ் எடுத்து பாப்புலராகலாம்னு நினைச்சா திரும்ப பாடம்,படிப்புனு போரடிக்கற”

சலிப்போடு சொன்ன கார்த்திக்கை வழிமொழிந்தான் பார்த்தி.

“டேய்‌…முழுசா கேளுங்கடா! கண்ணன் சொல்றதுல இருக்கற அட்வான்டேஜ் என்னானு இன்னுமா உங்களுக்குப் புரியல? “

விளக்கினான் கோபி.

“ஆஹா…கண்ணா ! உனக்குள்ள இப்படி ஒரு அசாத்தியத் திறமையா? சூட்சுமக்காரன்டா நீயி! “

கார்த்திக்  கண்ணனை சிலாகித்துப் பாராட்டிய அந்த நொடியில் 

அவன் அறைக்கதவு படபடவெனத் தட்டப்பட்டது.

(விபரீதங்கள் தொடரும்)




What’s your Reaction?
+1
2
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!