Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-3

3

அழகான திட்டமிடல்களும், நிறைவான வார்த்தைகளுமாக திருமணம் பேசி விட்டு மாப்பிள்ளை வீட்டினர் விடை பெற்று சென்றனர். பரமேஸ்வரன் தன் சகோதரியின் கையை நெகிழ்வுடன் பற்றிக்கொண்டார். “ரொம்ப நன்றி அக்கா! எவ்வளவு அழகாக திட்டமிட்டு கல்யாணம் ஏற்பாடுகளை பேசினீர்கள். நிறைய விஷயங்கள் எனக்கு தெரியவில்லை. சின்ன சின்ன இடங்களை கூட கவனித்து நீங்கள் தான் தெளிவாக பேசி முடித்திருக்கிறீர்கள்”

 கற்பகவல்லிக்கும் நெகிழ்வுதான். “என்னடா  தம்பி இது ! உனக்கு நான் செய்யாமல் எப்படி! என் மகள் அஞ்சனாவிற்கு என்றால் செய்ய மாட்டேனா! எழிலும் என் மகள் போலத்தானே”

 அஞ்சனா எழில்நிலாவை விட இரண்டு வயது மூத்தவள். ஒரு வருடமாக அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தும் அமையாமல் இருந்தது. ” இல்லை அக்கா,இன்று உங்கள் மகளை விட என் மகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள்.மிகவும் சந்தோசம் அக்கா”

 ஒரு வினாடி கற்பகவல்லியின் முகம் வாடினாலும் மீண்டும் மலர்ந்தது. “தம்பி அஞ்சுவிற்கு என்று பிறந்தவன் இங்கே பக்கத்தில்தான் இருப்பானாக இருக்கும்.என்ன பிரச்சனை என்றால் அவன் அவளை இன்னமும்  பார்க்கவில்லை. பார்த்துவிட்டால் உடனே தூக்கிக்கொண்டு போய் விட மாட்டானா!பிறக்கும் போதே முடிச்சு போட்டுவிட்டு கடவுள் சும்மா விடுவாரா என்ன !” கற்பகவல்லி சொன்ன விதத்தில் எல்லோருக்குமே சிரிப்பு வந்தது.

 “ஆனால் எழில் அப்படி இல்லை பாரேன், அவள் திருமணத்திற்கு நாம் எல்லோரும் கொஞ்சம் உழைக்கத்தான் வேண்டும். அந்த வகையில் இவ்வளவு சீக்கிரம் அவளுக்கு திருமணம் கூடி வருவதே நல்ல நேரம்தான். நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் உன் உடல் நிலையை மட்டும் கவனத்தில் வைத்துக் கொண்டு அமைதியாக இரு. நானும் உன் அத்தானும் சேர்ந்து இந்த திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி தருகிறோம்”

 ஆதரவாக  தன் தலையை வருடி விட்டுப் போன அக்காவின் அன்பு செய்கையில் அவளது பேச்சில் இருந்த சிறு குத்தலை கவனிக்காமலேயே விட்டார் பரமேஸ்வரன். ஆனால் அதனை உணர்ந்து கொண்ட எழில்நிலாவின் முகம் வாடியது. மீண்டும் அவளுள் அந்த சந்தேகம் எழுந்தது. அந்த நித்யவாணன் எப்படி அவளையே பெண் பார்க்க வந்தான்? எப்படி திருமணத்திற்கு சம்மதம் சொன்னான்? அறுவடை நடந்து முடிந்த வயல்வெளி போல் அவள் மனம் வெறிச்சிட்டு இருந்தது.

வீட்டினரின் திருமண பேச்சுக்களுக்கு உரிய நேரம் தலையாட்டி கொண்டிருந்தாலும் இந்த திருமணம் நடக்க போவதில்லை என்றே அவளுக்கு தோன்றிக்கொண்டிருந்தது . யாருடைய கைபேசி அலறினாலும் நித்யவாணனே போன் போட்டு திருமணத்தை நிறுத்த சொல்லப்போவதாக எண்ணினாள் 

கண்ணாடி முன்னால் அமர்ந்து தன்னைத்தானே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த போது “அடி அறிவுகெட்டவளே!”அவளை சாடியது மனசாட்சி .திருதிருவென விழித்தாள் எழில்நிலா . 

“அன்றும் இப்படித்தானே “பே”ன்னு அவன் வாயை பார்த்துக் கொண்டிருந்தாய் ?நல்லா ஆசை காட்டிட்டு உன்னை ஏமாத்தலை அவன் ?” சீறியது மனசாட்சி. மறுக்க முடியவில்லை அவளால் .ஆனால் வீட்டினரின் ஏற்பாடாக தற்செயலாக இந்த திருமண ஏற்பாடு நிகழ்ந்தாலும் அவன் ஏன் தன்னை மணக்க சம்மதித்தான் ?

ஒரு வேளை …உண்மையாகவே தன்னை அப்போதே காதலித்தானோ ?மெல்ல தனக்கு சாதகமாக எண்ணவோட்டத்தை ஓட்டி,வான் நிலவுக்கு எழில்நிலவு முயன்று கொண்டிருக்கையில் சம்மட்டியாய் அவள் தலையில் விழுந்தது அந்த அடி . 

மனசாட்சிதான்.”எத்தனை பட்டாலும் உனக்கு புத்தி வராதுடி .அடிக்கடி அன்று நடந்ததை மறந்துடுவாய்”

*சரிதான் ஒரு நிமிடம் நான் தன்வயமிழந்து விட்டேன்” என கண்ணாடி பார்த்து கூறிக் கொண்டிருந்தவளை வினோதமாக பார்த்து சென்றாள்  அஞ்சனா .

“வராத வாழ்க்கை வந்துடுச்சுன்னு இந்த மேடத்திற்கு பைத்தியம் முத்திடுச்சு” புலம்பியபடி போனவளிடம் அப்பட்டமான பொறாமை.

 அசடு வழிய அவளை பார்த்தபடி அவசரமாக அறைக்குள் நுழைந்து கொண்ட எழில்நிலா,  தனது போனை எடுத்து அவன் நம்பரை தேடினாள்.”நித்ய நிலா” என்ற பெயர் கண்ணில் பட்டு  தொண்டை அடைக்க செய்தது . நித்யமாய் தன் வாழ்வில் வலம் வரப் போகிறவன் என்ற கனவோடு தன் பெயரோடு அவனுடையதையும் இணைத்து போனில் பதிவேற்றி வைத்திருந்தாள்.அப்போது அவள் மூளையில் உறைக்கவில்லை, நிலா நித்தமும் பூரணமாக வானில் வராது என்று.




அதே நம்பர்தானா இல்லை என்னை ஏமாற்றவே அந்த நம்பர் வைத்திருந்தானா ? நெஞ்சப் படபடப்போடு நம்பரை அழுத்தினாள் . இரண்டாவது ரிங்கிலேயே போன் எடுக்கப்பட்டு “ஹலோ” என்ற அவனது கம்பீர குரல் சிறிது கவனம் கலந்து ஒலித்தது .

“வந்து நான்தான் …”இழுத்தாள் .எதிர்முனையில் பேச்சு… ஏன் மூச்சே இல்லை .

“இங்க பாருங்க,உங்களுக்கே தெரியும் ,நம்ம ரெண்டு பேருக்குள்ள ஒத்து வராது.நான் உங்க டேஸ்டுக்கு ஏற்றவள் இல்லை. அதனால் இந்த திருமணத்தை நிறுத்திடுங்க” படபடவென ஒப்பித்தவள் சிறிது நிறுத்தி கவனித்த போது போன் தொடர்பு நின்றிருந்தது .

என்ன இது கட்டாயிடுச்சு?அவன் கேட்டானா .?இல்லையா … ?மீண்டும் முயன்றாள் .தொடர்பு எல்லைக்கு வெளியே என்றது போன் . 

அதன் பின் இரண்டொரு தடவை அவனை தொடர்பு கொள்ள முயன்றாள் .முடியவில்லை . வேண்டுமென்றே தவிர்க்கிறான் .தாலி கட்டும் கடைசி நிமிடத்தில் கண்டிப்பாக கல்யாணத்தை நிறுத்த போகிறான் என்றே நெஞ்சுக்குள் ரயில் ஓட்டிக்கொண்டிருந்தாள் . அவள் மனதிற்குள் அன்று அவன் வஞ்சினமாய் உரைத்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தன.  இப்படித்தான் பழி வாங்க போகிறானா?

ஊர் கூடி நிற்கும் நேரத்தில் இந்த பொண்ணை எவன் கல்யாணம் செய்வான் என்று அவன் சொல்வது போல் ஒரு தோற்றம் தோன்ற தனக்குள் குறுகினாள் எழில்நிலா.முகம் வாடியே வீட்டிற்குள் வலம் வந்தாள்.

அன்று மாப்பிள்ளை வீட்டில் இருந்து கல்யாண பட்டு எடுக்க சென்னையிலிருந்து  கிளம்பி வந்தனர். எழில்நிலாவையும் வற்புறுத்தி உடன் அழைக்க, நிற்கப்போகும் திருமணத்திற்கு எதற்கு இத்தனை செலவு என்று எண்ணியபடி விதியே என உடன் போனாள். 

நித்யவாணன் சென்னையிலிருந்து வரவில்லை. அவன் வரமாட்டான் நிறுத்தப் போகும் திருமணத்திற்கு பட்டெடுக்க அவன் வரப்போகிறானாக்கும்… உள்ளுக்குள் புலம்பியபடி வண்ண வண்ணமாக தன் முன் பிரித்து காட்டப்பட்ட புடவைகளை விழித்து பார்த்தபடி இருந்தாள். 

 முதலில் நல்ல வேளை அவன் வரவில்லை என்று எண்ணிய மனம் இப்போது வந்திருக்கலாமே… என்று எண்ணத் தொடங்கியிருந்தது. அவனை பார்க்க வேண்டும் என்றெல்லாம் இல்லை,போனை எடுக்க மாட்டேனென்கிறான்.மெசேஜை பார்த்தாலும் பதில் சொல்வதில்லை.நேரில் வந்தானானால் அவனிடம்  புரியும்படி பேசி திருமணத்தை நிறுத்த சொல்லத்தான்…தனது எதிர்பார்ப்பிற்கு ஒரு சமாதான முலாம் பூசிக் கொண்டாள்.

 போன் செய்யலாமா? பலமுறை போனை எடுத்து பார்த்துவிட்டு வைத்தாள். “என்ன அண்ணி, யார் போனை எதிர்பார்க்கிறீங்க?” குறும்பாக கேட்டாள் சித்ரா, நித்யவாணனின் தங்கை. சித்ராவை மணம் முடித்து கொடுத்திருப்பதும் சென்னையில்தான்.

 “அதெல்லாம் ஒன்றும் இல்லை,ஒரு முக்கியமான போன் கால்..”

“ம்…ம்… ரொம்ப முக்கியம்தான்” சித்ரா கண்களை சிமிட்ட இப்போதுதான் அவள் சொல்ல வருவது எழில்நிலாவிற்கு புரிந்தது.

 ஆஹா உன் அண்ணன் அப்படியே என்னிடம் காதலில் உருகி விட்டாலும் எண்ணியவளுள் பெரிதாய் ஓர் ஏக்கம் உருவெடுத்தது. அந்த ஏக்கம் கொடுத்த ஆத்திரத்தில் இனி உனக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை என்று எழுதி பெரிதாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்துடன் வாட்சப்பை திறந்தாள்.

” இதைப் பாருங்கள் அண்ணி” சித்ரா அவள் தோளில் ஒரு புடவையை போட அதன் கணத்தில் போன் தவறி கீழே விழுந்தது. எரிச்சலுடன் தோளில் இருந்த புடவையை தள்ளியவள் “எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. நான் வெளியே நிற்கிறேன். நீங்கள் பார்த்துவிட்டு வாருங்கள்” வெடுக்கென எழுந்து கடைக்கு வெளிப்புறம் நடந்தாள். எல்லோரும் அவளை குழப்பமாக பார்த்தனர்.

” அண்ணன் வராத கோபத்தால் வந்த எரிச்சல்..” சித்ரா சொல்ல ஒருவாறாக மற்ற பெண்களும் அதனை ஒத்துக் கொண்டனர். “எழிலுக்கு இந்த கடையில் எதுவும் பிடிக்கவில்லை, வேறு கடைக்கு போகலாம்” சந்திராவதி கிளம்ப, “அடடா மருமகளுக்கு இப்போதே சப்போர்ட்டை பாருங்களேன்” என்றபடி உடன் கிளம்பினர் உறவு பெண்கள்.

 வேறொரு கடைக்கு சென்றவர்கள் பட்டுச்சேலை செக்சனையே பிரித்துப் போட்டு தலைகீழாக புரட்டிக் கொண்டிருந்தனர். காட்டும் சேலை எல்லாவற்றிற்கும் முகம் சுளித்துக் கொண்டிருந்தாள் எழில்நிலா.

“என்னம்மா இது எதுவுமே பிடிக்கலையா?” சிறு சலிப்புடன் சந்திராவதி கேட்க, “கவலைப்படாதீங்கம்மா இனிமே உங்க மருமகளுக்கு எதைக் காட்டினாலும் பிடிக்கும்” சித்ரா சொல்ல, “அதெப்படி?” சந்திராவதி குழம்ப, “அங்கே பாருங்க” சித்ரா கடை வாசலுக்கு கை காட்டினாள்.

அங்கே கடைக்குள் வந்து கொண்டிருந்தான் நித்யவாணன். ஏதோ பிசினஸ் மீட்டிங்கில் இருந்து அப்படியே கிளம்பி வந்திருக்க வேண்டும் ஃபுல் சூட்டில் இருந்தான். அருகில் வரவும் கடையின் ஆட்டோமேட்டிக் டோர் தானாக உள்வாங்கி திறந்து கொள்ள, ஒரு ராஜகுமாரனின் தோரணையுடன்  அவன் உள்ளே வருவதை மெலிதாக வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் எழில்நிலா.

 அவனை முதல் முதலில் சந்தித்த நாள் நினைவில் வந்தது. அன்று கூட இதே போல்தான் அழகாக கம்பீரமாக இருந்து அவளை ஸ்தம்பிக்க வைத்தான்.




What’s your Reaction?
+1
41
+1
18
+1
3
+1
2
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!