Serial Stories காதல் சகுனி

காதல் சகுனி-7

7

கிருஷ்ணதுளசி ஸ்கூட்டியை நிறுத்தும் சத்தம் கேட்டு வேகமாக உள்ளிருந்து வெளிவந்தார் சுஜாதா. “ஆன்ட்டி எனக்கு ஆபீஸ் ஒர்க் நிறைய இருக்கிறது” அவர் முகத்தை பார்க்காமலேயே சொல்லிவிட்டு படபடவென்று படியேறி விட்டாள்.

 அறைக்குள் வந்தவளின் அலுவலக கோபம் தீரவில்லை. கைகளை பிசைந்தபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். எவ்வளவு பேசி விட்டான்?

 நிரஞ்சன் சொல்வதிலும் ஓரளவு உண்மை இருந்ததுதான். தென் மாவட்டத்தின் சிறு சிறு கிராமங்களில் இருந்து சென்னைக்கு ஐடி கம்பெனி வேலைக்கு என்று வந்தவர்கள் தோழிகள் மூவரும். இந்த ஒற்றுமைதான் அவர்கள் நட்பிற்கு காரணம். அந்த அலுவலகத்தில் திக்கு தெரியாமல் திகைத்து நின்றவர்களை ஊக்கம் கொடுத்து வேலைகள் சொல்லிக் கொடுத்தது முதலில் நிரஞ்சன்தான்.

” கிராமம் என்றால் ஒன்றும் தெரியாதா என்ன?  உண்மையில் கிராமத்தவர்களுக்கு இருக்கும் தெளிவு எங்களைப் போன்ற சிட்டி வாழ் மக்களுக்கு இருப்பதில்லை” என்பது போல் நிறைய ஆறுதல் வார்த்தைகளை அப்போதெல்லாம் சொல்வான்

 பிறகு நீலவண்ணனிடம் அவர்களை ஒப்படைத்தான். அவ்வாறு ஒரு வருடமாக வேலையை கற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக ரொம்பவே  முன்னேறி வந்திருக்கின்றனர். எல்லாம் சரிதான் ஆனால் அதனை இப்படி எடுத்துக்காட்டி பேசுவதென்றால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ரஞ்சனியும் பிரியாவும் உடனே தழைந்து போய்விட்டனர்.

” ஆமாம் சார் எனக்காக நீங்கள் நிறைய செய்திருக்கிறீர்கள் உங்களுக்கு வேலை பார்ப்பதில் நாங்கள் நேரம் காலம் பார்க்க கூடாதுதான்” என்று விட்டனர்.

” மேடம் எப்படி?” சிறு கிண்டலுடன் நிரஞ்சன் கேட்க

” எனக்கு நன்றாகவே டிரெய்னிங் கொடுத்து விட்டீர்கள் சார். உங்கள் இடத்தில் இருந்து இந்த கம்பெனியை நிர்வகிக்க கூட இப்போது எனக்கு தெரியும்” வாய் துறுதுறுக்க வார்த்தைகளை கொட்டி விட்டு விடு விடு என்று வந்துவிட்டாள் கிருஷ்ணதுளசி்.

 நிச்சயம் அவன் கொதித்துக் கொண்டிருப்பான். வேலையை விட்டே எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மூன்று வருட அக்ரீமெண்ட் இருக்கிறது. இருந்தாலும் கம்பெனியின மேனேஜிங் டைரக்டர் நினைத்தால் எதையும் செய்யலாம்தானே!

 ஒரு வருடத்திற்கு முன்பு போல் இப்போது, வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற தடுமாற்றம் அவளிடம் இல்லைதான். ஆனாலும் இன்னொரு வேலை கிடைக்கும் வரை சமாளிக்க வேண்டுமே! குழம்பியபடி நடந்து கொண்டிருந்தவள் அறைக் கதவு தட்டும் சத்தத்திற்கு எரிச்சலானாள்.




வெளியே அஸ்வத் நின்றிருந்தான். கதவு நிலையில் சாய்ந்து கைகட்டி கொண்டு அவன் நின்றிருந்த தோரணை அந்த ஹீரோவை நினைவுபடுத்த தலையை குலுக்கி கொண்டாள். ஆக அந்த ஹீரோவை இவன் காப்பியடிக்கவில்லை. இவனுடைய பாடத்தைத்தான் அந்த ஹீரோ உள்வாங்கி நடித்து இருக்கிறான். மூலப்பொருள் இவன்தான். இந்த உண்மை தெரியாமல் அந்த ஹீரோவின் பின்னால் போய்க்கொண்டிருக்கும் பிரியா, ரஞ்சனியை நினைத்து இவளுக்கு பாவமாக இருந்தது.

“ஆபீஸில் என்ன பிரச்சனை?” அஸ்வத் கேட்ட கேள்விக்கு திகைத்தாள். இவனுக்கு எப்படி தெரியும்?

“ஒரு பிரச்சனையும் இல்லை. உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்கள்”

தாடியை தடவியபடி யோசனையாக அவளைப் பார்த்து “ம்”  என்றான். இந்த பாவனைக்கு அவனிடமிருந்து விழிகளை அவசரமாக திருப்பிக் கொண்டு “சரிதான் போடா” என வாய்க்குள் முணுமுணுத்தாள்.

” என்ன பிரச்சனை என்றாலும் சொல். சரி செய்து விடலாம்”

பெரிய உலகை காக்க வந்த பரம்பொருள், எல்லாவற்றையும் சரி செய்து விடுவார், மனதுக்குள் கடுத்தவள்,”எல்லாவற்றையும் சரி செய்து விடுவீர்களா டைரக்டர் சார்.எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டுமா? உங்களுக்கு c தெரியுமா? c++…Java…Python…? கோடிங் போடுவீங்களா?”

“ஐய்யய்யோ நீ என்ன பேசுகிறாய்னே புரியலையே…

 சரி சரி உனக்குத்தான் எல்லாமும் தெரியும். இப்போது வா, கீழே போகலாம்” இயல்பாக கைநீட்டி அவள் கையை பற்ற வெடுக்கென உதறினாள்.

“எவ்வளவு அநாகரீகம்? இப்படித்தான் ஒரு பெண்ணின் கையை அவள் அனுமதியில்லாமல் தொடுவீர்களா?” அஸ்வத் ஆச்சரியமாக அவளை பார்த்தான்.

“என்ன கிருஷ்ணா நீ எந்த நூற்றாண்டில் இருக்கிறாய்? ஒரு பெண்ணும் ஆணும் நட்புடன் கைத்தொடுவதில் தவறா?”

” தவறில்லை ஆனால் அதற்கு அந்தப் பெண்ணிற்கு பிடித்தம் இருக்க வேண்டுமில்லையா?”

 அஸ்வத் இரு கைகளையும் உயர்த்தினான் “ஓகே நான் தொடுவது உனக்கு பிடிக்கவில்லை என்றால் தொடவில்லை. இன்று கோதுமை பரோட்டா செய்து இருக்கிறேன். வா சாப்பிடலாம்”

 “அன்று நீங்கள் செய்த சமையலை அறிவில்லாமல் சாப்பிட்டுவிட்டேன். எப்போதும் அப்படியே சாப்பாடு என்றால் பின்னால் ஓடி வருவேன் என்று நினைத்தீர்களோ?”

“ஹே கிருஷ்ணா என்ன ஆயிற்று உனக்கு? என்ன பேசினாலும் தவறாகவே எடுத்துக் கொள்கிறாய். சுஜா உன்னிடம் பேசுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் என்று கூப்பிட்டேன்”

“ஆன்ட்டியும் நீயும் சேர்ந்து என்னை சமாதானப்படுத்தும் எண்ணம் தானே? நான் சமாதானமாக போவதில்லை. இன்னமும் கோபமாகத்தான் இருக்கிறேன் என்று உன் டார்லிங்கிடம் போய் சொல்” படக்கென்று கதவை மூடிக்கொண்டாள்.

அதன் பிறகு வந்த நாட்களிலும் சுஜாதாவின் முகம் பார்க்காமலேயே வெளியே கிளம்பி போனாள். அஸ்வத் இருக்கும் பக்கம் கூட திரும்புவதில்லை. அலுவலகத்தில் அவள் நினைத்து பயந்தது போல் இல்லாமல் நிரஞ்சன் அதன் பிறகு அவளிடம் எதுவும் பேசவில்லை.

ஆனால் வீட்டிற்கு கொடுக்கப்படும் வேலைகள் அவளுக்கு தரப்படவில்லை. டீம் மெம்பர்ஸ் ஐ விசாரித்ததில் அவளுக்கு மட்டுமே வேலைகள் தரப்படவில்லை என்பது தெரிய வந்தது. வெளிப்படையாகவே அலுவலகத்தில் அவள் ஒதுக்கப்பட்டாள்.




 ஆக அந்த அலுவலகத்தில் அவளுடைய நாட்கள் எண்ணப்படுவதை உணர்ந்தாள். விரைவிலேயே வேறு வேலை தேட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் அதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கினாள்.

அப்ளை பண்ணிய வேலை ஒன்றிற்கான இன்டர்வியூ மறுநாள் இருக்க அதற்கான தயாரிப்புகளில் இருந்தாள் கிருஷ்ணதுளசி. கதவு தட்டப்பட எல்லாம் அந்த எதிர் 

அறைக்காரனாகத்தான் இருக்கும். நேரம் காலம் தெரியாமல் கதவை தட்டுவான். தீப்பெட்டி கொண்டா… சிகரெட் கொண்டா… என்று. இன்னமும் கூட உட்கார்ந்து தண்ணியடிக்க கூப்பிடவில்லை, அது ஒன்று தான் மிச்சம்.

 மனதிற்குள் அஸ்வத்தாமனை தாளித்து கொட்டியபடி கதவை திறந்தவள் திகைத்தாள். சுஜாதா வாசலில் நின்றிருந்தார்.மாடி ஏறி வந்த இளைப்பு அவர் மூச்சில் தெரிந்தது.”ஆன்ட்டி நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்?” கவலையோடு அவரது கையை பற்றி உள்ளே அழைத்தாள்.

“என்ன செய்வது, நீதான் கீழே வருவதே இல்லை. என் முகம் பார்ப்பது கூட இல்லை. நான் என்ன செய்யட்டும்?”

” அதெல்லாம் ஒன்றும் இல்லை ஆன்ட்டி. ஆபீஸில் கொஞ்சம் பிரச்சனை. அதுதான்…”

” சும்மா மழுப்பாதே கிருஷ்ணா! எனக்கு உன்னை தெரியும்.நீ ரொம்பவும் ரோசக்காரி. அஸ்வத் பற்றி நான் உன்னிடம் மறைத்து விட்டதாக நினைக்கிறாய். அதனால் என்னை தவிர்க்கிறாய்”

உண்மையே என்றாலும் அதனை சுஜாதாவின் முன் வெளிக்காட்ட தயங்கி விழிகளை நகர்த்தியவள் எதிர் அறை வாசலில் சலனத்தை கண்டு கொண்டாள். இவன் உள்ளிருந்து கொண்டு ஆன்ட்டியை ஏவி இருக்கிறான். ராஸ்ஸ்ஸ்ஸ்க்க்கல்… கோபத்தில் கிருஷ்ணதுளசியின் மூக்கு விடைத்துக் கொண்டது.

” எனக்கு ஒரு இன்டர்வியூ இருக்கிறது ஆன்ட்டி. நீங்கள் வீட்டிற்குள் இருங்கள்,  நானே உங்களை வந்து சந்திக்கிறேன்” அவரைத் தாங்கி நடத்திக் கொண்டு வந்து கீழே விட்டுவிட்டு மேலே வந்தவள் சாத்தியிருந்த எதிர் அறைக் கதவை தட்டி சப்தித்தாள்.

 அவனது அறை எப்போதும் வந்தார் போவார் வரும் திறந்தார் மடம் போல் விரியத்தான் கிடக்கும். இவள்தான் அறைக்குள் எந்நேரமும் பூட்டிக் கொள்வாள்.

“கற்பழிக்கனும்னு நினைக்கிறவனுக்கு இந்த கதவெல்லாம் ஒரு பொருட்டா என்ன?” ஒரு நாள் மாடிப்படியில் இறங்கிக்கொண்டிருந்தவளை கடந்து இறங்கியவன் முணுமுணுத்தபடி செல்ல, திக்கிட்டு நின்று விட்டாள் கிருஷ்ணதுளசி்.

 கடகடவென இறுதிப்படியை அடைந்தவன் நின்று திரும்பி இவளை பார்த்து கண் சிமிட்டி விட்டு போனான்.பாவி! என்னவெல்லாம் பேசுகிறான்? கிருஷ்ணதுளசியின் மனது கொதித்தது. 

பிறகொருநாள் “இந்த ஏரியாவில் சிகரெட் எங்கே கிடைக்கும் கிருஷ்ணா?” கேட்டபடி ஒருக்களித்து சாத்தியிருந்த இவள் அறைக்கதவை திறந்து கொண்டு அவன் உள்ளே நுழைய முயல “அங்கேயே நில்” கத்தினாள்.” வாசலைத் தாண்டி உள்ளே வந்தாயானால் நடப்பதே வேறு” 

தூக்கிய காலை தூக்கியபடி அப்படியே ஒற்றைக் காலில் நின்றான் அவன். “இப்போது இந்த காலை கீழே வைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா?” பரிதாபம் போல் முகத்தை மாற்றிக் கொண்டான்.




ஆத்திரத்துடன் எழுந்து வந்தவள், அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வைத்திருக்கும் பட்டன் குடையை எடுத்து அவன் நெஞ்சில் வைத்து அழுத்தி அவனை வெளியே தள்ளினாள்.”ஒரு எட்டு உள்ளே எடுத்து வைக்கக் கூடாது” ஒற்றை விரலாட்டி எச்சரித்தாள்.

” சரி” பணிவு போல் கைகட்டி வாய் பொத்திக் கொண்டான்.

” உங்களுக்கு என்னைப் பார்த்தால் கேனச்சி மாதிரி தெரிகிறதா? எப்போது பார்த்தாலும் தீப்பெட்டி, சிகரெட் என்று…”

” இதில் என்ன இருக்கிறது கிருஷ்ணா? ஆன்லைனில் சிகரெட் ஆர்டர் செய்யலாம் என்றால் கொண்டுவர ரொம்ப லேட் ஆகுமாம். எனக்கு, உடனே வேண்டுமே… தெரு முனையில் ஒரு பெட்டி ஷாப் பார்த்தேன். அங்கே கிடைக்குமா?”

“நான் வேண்டுமானால் போய் வாங்கி வந்து தரட்டுமா?” கிண்டலாக கேட்டாள்.

” நல்ல ஐடியா. செய்யேன். நான் வெளியே போனால் கூட்டம் கூடிவிடும்.மாஸ்க் போட்டு முகம் மறைத்து என்று நிறைய வேலைகள் பார்க்க வேண்டும்”

 பெரிய செலிபிரட்டி இவன்… எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை சிகரெட்டு வாங்கி வரச் சொல்வான்! அன்று கையில் இருந்த குடையால் அவன் மண்டையை பிளக்கும் வேகம் வந்தது கிருஷ்ணதுளசிக்கு.

இன்றோ தன் இடம் தேடி வந்தவளை

“நானெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டேன் கிருஷ்ணா, உள்ளே வா”

என்று தைரியம் சொல்லி அழைத்தான். 

ஆனால் அறைக்குள் நுழைபவளை அணைத்து கொள்ளும் நோக்கத்துடன் இரண்டு கைகளையும் விரித்தாற் போல் வைத்திருந்தான். 




What’s your Reaction?
+1
41
+1
18
+1
2
+1
6
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!