Serial Stories காதல் சகுனி

காதல் சகுனி-12

12

எதிர் அறையில் எப்பொழுது அசைவு கேட்கும் என்று காத்திருந்தாள் கிருஷ்ணதுளசி.இரவு 12 மணிக்கு மேல்தான் அஸ்வத் வந்ததற்கான சத்தம் கேட்க எழுந்தாள். காலையில் கதவை அடைத்துக் கொண்டு நன்றாக தூங்கிக் கொண்டிருப்பான் அல்லது இவள் எழுவதற்கு முன்பு எழுந்து வெளியே போயிருப்பான். அடுத்த படத்திற்கான வேலைகள் துவங்கி விட்டதால் மிகவும் பிசியாக இருப்பதாக சுஜாதா சொன்னார். 

“ஹாய் என்ன ரொம்ப பிசியா?” கேட்டபடி அறை வாயிலில் வந்து நின்ற கிருஷ்ணதுளசியை நம்ப முடியாமல் பார்த்தான் அஸ்வத்.

“அட பூமி பக்கம் மாறி சுத்தப் போகுதா என்ன?” கிண்டலாக கேட்டபடி கால் ஷூவை சுழற்றிவிட்டு சாக்ஸை உறுவினான்.

“கொஞ்ச நாட்களாகவே உங்களை பார்க்கவே முடியவில்லை.அதனால்தான் இப்போது பேசலாம் என்று வந்தேன்”

” அடுத்த படம் ஆரம்பித்துவிட்டேன் கிருஷ்ணா.நிறைய வேலைகள் இருக்கிறது .இங்கே சித்தி வீட்டில் வந்து தங்கியதால் நிறைய டென்ஷன் குறைந்து மனம் ரிலாக்ஸாக இருக்கிறது. அடுத்த படத்திற்காக நிறைய புதுப்புது ஐடியாக்கள் வந்திருக்கிறது. ஆறே மாதத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறேன்” படபடவென்று பேசியவனின் வாயை கூர்ந்து பார்த்தாள்.

 அவன் சட்டென எழுந்து அவள் அருகே வந்து முகத்திற்கு நேராக ஊதினான்.”குடிக்கவில்லை போதுமா?”

ஒருவேளை குடித்துவிட்டு வந்திருந்தானானால் போதையில் இருப்பவனிடம் எப்படி பேசுவது என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. ஆனால் அதனை யோசித்து அவன் சந்தேகத்தை போக்கியதில் முகம் கன்றினாள்.

“என்ன விஷயம்?” புருவத்தை உயர்த்தி அவன் கேட்ட விதத்தில் லேசாக நிரஞ்சன் ஜாடை தெரிய, தன் தலையில் மானசீகமாக கொட்டிக் கொண்டாள். அண்ணனின் ஜாடை தம்பிக்கும்.இவன் மேனரிசத்தை பின்பற்றும் ஹீரோவிடமும் அதே ஜாடை. ஆக எல்லோருக்கும் ஆதி மூலம் இதோ இந்த அஸ்வத்தாமன்தான்.

லேசாக தொண்டையை செருமிக் கொண்டு “உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்றாள். உள்ளே வா என்பதாக அவன் கை ஜாடை காட்ட தயக்கத்துடன் மெல்ல அறைக்குள் நுழைந்தாள்.

“பயப்படாதே கூட உட்கார்ந்து தண்ணியடிக்கெல்லாம் கூப்பிட மாட்டேன்” திக்கிட்டு அவனைப் பார்த்தாள். “ஏனென்றால்…” அவன் சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்த, ஆவலுடன் அவனைப் பார்த்தாள்.




” நீ அப்படிப்பட்ட பெண் இல்லை… மிகவும் சுத்தமானவள்…உத்தமி… உன்னை எனக்கு தெரியும்” இந்த ரீதியில் அவனுடைய பதிலை எதிர்பார்த்து காத்திருக்க,பெரும் குறையோடு ஒலித்தது அவன் குரல்.

” நீதான் ஒயின் கூட குடிக்க மாட்டேன் என்கிறாயே! போர்ஸ் பண்ணுவதும் எனக்கு பிடிக்காது! சரி விடு எனக்கு கம்பெனிக்கு வேறு ஆள் இருக்கிறது. ஆனால் என்றாவது கொஞ்சமாக டேஸ்ட் பண்ணியாவது பார்க்கலாம் என்ற ஐடியா வந்தால் முதலில் என்னிடம்தான் சொல்ல வேண்டும் கிருஷ்ணா. நானே உனக்கு பக்கத்திலிருந்து மெத்தட் சொல்லித் தந்து ஹெல்ப் பண்ணுவேன்” என்று முடித்தான்.

 கிருஷ்ணத்துளசிக்கு வந்த ஆத்திரத்திற்கு போடா குடிகாரப்பயலே என்று வைது விட்டு அறைக்குள் ஓடி பூட்டிக்கொள்ள தோன்றியது.ஆனால் பல்லை கடித்து  அடக்கிக் கொண்டு அவனை முறைத்தபடி நின்றாள்.

” அட இன்னமும் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாயா? அப்போ நிஜமாகவே என்னிடம் ஏதோ பேச வேண்டும் போல, அங்கே உட்கார்ந்து சொல் கிருஷ்ணா” எதிர் சோபாவை காட்டினான்.

“நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?” நேரடியாக விஷயத்திற்கே வந்தாள்.

” என்ன…?”

” வந்து உங்கள் தம்பி… நிரஞ்சன் சார்… ரொம்ப வருத்தப்பட்டார். திருமணம் செய்து கொண்டால் அம்மா அப்பா குடும்பம் என்று ஒன்றாக வாழ ஆரம்பித்து விடலாம்தானே?”

அவன் சுற்றும் முற்றும் தலையை உடலை திருப்பி எதையோ தேட, கிருஷ்ணதுளசி திரு திருவென விழித்தபடி பார்த்திருந்தாள்.

“என்றிலிருந்து புரோக்கர் வேலை பார்க்க ஆரம்பித்தாய்? எவ்வளவு தைரியமிருந்தால் எனக்கே பெண்பார்த்துக் கொண்டு வந்திருப்பாய்? உன்னை…” கைக்கு எதுவும் அகப்படாமல் போக, சற்று முன் அவன் கழட்டி வைத்த ஷூவில் ஒன்றை கையில் எடுத்தான்.

 அவளை அடிப்பதற்கு தோதாக உயர்த்தியபடி “ஏய் ஓடிடுடி, இல்ல மூஞ்சி மொகரை பார்க்காம இதாலேயே அடிப்பேன்” ஷூவை அசைத்தான்.

 “என்னது டீயா?” இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு கத்தினாள்.




“ஆமாண்டி நீலி! இனி ஒரு தடவை இது மாதிரி உளறிட்டு என் முன்னால் வந்து நின்றாயானால் நிச்சயம் செருப்படிதான்” வேகத்துடன் அவன் எழுந்து வர,பிறகும் ஏன் அவள் அங்கேயே நிற்கப் போகிறாள்!

 அறைக்கு வெளியே நின்றபடி இரு கைகளையும் உயர்த்தி அவனுக்கு சாபமிட்டாள். “மனுசனாடா நீ ? உன்னையெல்லாம் எவடா கல்யாணம் பண்ணிக்குவா? இந்த காலத்துல, ஒரு மனுசன கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்வதே பெரிய விஷயமா இருக்கு. உன்ன மாதிரி அரக்கன் கூடெல்லாம் குடும்ப நடத்த முடியுமா? நீயெல்லாம் கம்பூன்ற வரைக்கும் கல்யாணம் ஆகாம இப்படியேதான் திரிஞ்சிட்டு இருக்க….”

“அடிங்ங்ங்….” அஸ்வத் குறி வைத்து சுழற்றி விட்ட ஷூ இலக்கு தவறாமல்

இவளை தொட வர, சபதத்தின் கடைசி வார்த்தையை முடிக்காமல் வேகமாக தன் அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிக் கொண்டாள்.

மறுநாள் ஆபீஸில் அவளை ஆவலாக பார்த்த நிரஞ்சனிடம் எரிந்து விழுந்தாள். “கல்யாண பேச்சு பேசினால் உன் அண்ணன் செருப்பை தூக்கிட்டு என்னை அடிக்க வருகிறான்.  என்ன குடும்பம் உங்கள் குடும்பம்…?”

நிரஞ்சன் திக்கென விழித்து தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான் “போச்சு இனிமேல் என்ன செய்வேன்?”

“என்னவோ பண்ணிக்கோங்க, இன்னொரு தடவை என்னை மட்டும் அந்த ராட்சசன் கிட்ட பேச அனுப்பாதீங்க”

கிருஷ்ணதுளசி தெளிவாக பேசிய பிறகும் நிரஞ்சன் அவளை தேடி வீட்டிற்கே வந்து நின்றான்.”நீங்கள் பேசவில்லை என்றாலும் ஏதாவது ஐடியாவாது கொடுங்களேன் துளசி”

“அப்படி என்ன உங்களுக்கு அண்ணன் திருமணத்தில் ஆர்வம்?”

” அது…வந்து…இதனால் எங்கள் குடும்பம் ஒன்று சேருமே”

“அப்படி என்றால் ஒன்று செய்யுங்கள். முதலில் உங்கள் அம்மாவை அப்பாவையும் கூட்டி வந்து சுஜாதா ஆன்ட்டியிடம் பேசுங்கள்.எனக்கு தெரிந்து உங்கள் அண்ணனின் வீக் பாயிண்ட்  ஆன்ட்டிதான்.அவரை சமாதானப்படுத்தி விட்டீர்களானால் மற்ற எல்லாம் சரியாக நடக்கும்”

 நிரஞ்சன் மறுநாளே அவன் அம்மா காஞ்சனாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டான். அக்காவும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சில நிமிடங்கள் நின்றிருக்க “நாங்கள் வேண்டுமானால் வெளியே போய் விடவா?” என்றான் நிரஞ்சன் கிண்டலாக.

“சொல்லிக் கொண்டே நிற்காமல் போயேன்டா” காஞ்சனா சொல்ல கிருஷ்ணதுளசியும் நிரஞ்சனும் வெளியே வந்து விட்டனர்.

“இன்னமும் அப்படியே அம்மன் போல் அதே அழகுடன் இருக்கிறாய் அக்கா” சுஜாதா காஞ்சனாவின் கைகளை பற்றிக்கொள்ள காஞ்சனா ஆச்சரியமாக தங்கையை அளந்தார்.

” என்ன சுஜா இப்படி மாறிவிட்டாய்? சுடிதார் பாப் பட்… எப்படி இவ்வளவு மாடர்னாக மாறினாய்?”

 காஞ்சனா கழுத்தில் கொத்து நகைகளும் காது, மூக்கில் மின்னும் வைரங்களுமாக இருந்தார்.சுஜாதா லாங் ஸ்கர்ட் டாப்பும்,பாட்டியாலா பேன்டும்,கழுத்தில் மெல்லிய சங்கிலி,காதுகளில் பொட்டாக தோடுமாக இருந்தார்.

குனிந்து தன் தோற்றத்தை பார்த்துக்கொண்ட சுஜாதா பெருமையாக புன்னகைத்தார். “இதெல்லாம் அச்சுவால்தான். அவன் இங்கே வந்து தங்கிய இந்த மூன்று மாதத்தில் என்னை இப்படி மாற்றியிருக்கிறான். நான் யோகா கிளாஸ் போகிறேன், ஸ்விம்மிங் போகிறேன் செஸ் கூட கற்றுக் கொள்கிறேன். அடுத்த வாரம் பியானோ கிளாஸ் சேர்த்து விடுவதாக சொல்லியிருக்கிறான்.போன மாதம் எனக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட்.அந்த கால் வலி கூட ஒரே வாரத்தில் போய்விட்டது. வீட்டிற்குள்ளேயே இருக்கக் கூடாது வெளியே போ என்று என்னை அச்சுவும்,கிருஷ்ணாவும் விரட்டிக் கொண்டே இருப்பார்கள். இப்போதெல்லாம் எனக்கு இடுப்பு வலி, மூட்டு வலில்லாம் வருவதே கிடையாது தெரியுமா!”

காஞ்சனாவின் கண்கள் பனித்தது. இவற்றையெல்லாம் அஸ்வத் அவருக்கும் சொல்லியிருக்கிறான். ஆனால் சிறுபிள்ளை பேச்சென்று அவற்றை நிராகரித்து பரம்பரை கௌரவம் என்று பட்டையும் வைரத்தையும் சுமந்து கொண்டு கழுத்து வலி முதுகு வலி என்று ஓய்ந்து போய் கிடக்கிறார்.

“சுஜா நீ ஏன் இங்கே தனியாக இருக்க வேண்டும்? எங்களோடு வந்துவிடேன்”

சுஜாதா சிரித்தார் “உங்கள் வீட்டில் இருந்து பியானோ கிளாஸ் போக முடியுமா அக்கா?” 

காஞ்சனா வெடித்த விம்மலுடன் தங்கையை கட்டிக்கொண்டு அழுதுவிட்டார்.




What’s your Reaction?
+1
42
+1
21
+1
1
+1
2
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!