Cinema Entertainment விமர்சனம்

ஷாட் பூட் த்ரீ- விமர்சனம்

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் வெங்கட் பிரபு – சினேகா தம்பதிக்கு ஒரே மகன் கைலாஷ் ஹீட். தாய், தந்தை எந்த நேரமும் பணியில் பரபரப்பாக இருப்பதால், தன்னுடன் பழகுவதற்கும், நேரல் செலவிடுவதற்கும் நாய் ஒன்றை வாங்கி வளர்க்கிறார். அந்த நாய் ஒருநால் காணாமல் போக, தனது நண்பர்களுடன் சேர்ந்து கைலாஷ் நாயை தேடுகிறார். நாய் கிடைத்ததா? இல்லையா? என்பதை சொல்வதோடு, சிறுவர்களின் தேடல் பயணம் மூலம் மனிதர்கள் மீது மட்டும் அல்ல பூமியில் வாழும் அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு செலுத்த வேண்டும், என்ற கருத்தை வலியுறுத்துவது தான் ‘ஷாட் பூட் த்ரீ’.




 

ஷாட் பூட் த்ரீ' படத்தில் கணவன் மனைவியாக நடிக்கும் வெங்கட் பிரபு - சினேகா | Dinamalar

சினேகா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு நடுத்தர வயது பெற்றோர்களாக கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு அளவான நடிப்பு மூலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

கைலாஷ் ஹீட், வேதாந்த், பூவையார் மூன்று சிறுவர்களும், சிறுமி பிரணித்தியும் தங்களது இயல்பான வாழ்வியலை நடிப்பாக வெளிக்காட்டி ரசிகர்களை கவர்கிறார்கள்.

ஏழை வீட்டு பிள்ளையாக இருந்தாலும், நாட்டு நடப்பை நன்கு அறிந்து வைத்திருக்கும் பூவையாரின் வேடமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் சிறப்பு. பாடகியாவதற்கு ஆசைப்படும் பிரணிதியின் நடிப்பில் மட்டும் அல்ல குரலிலும் முதிர்ச்சி தெரிகிறது.




சிறுவர்களின் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்கும் கைலாஷ் ஷீட், குழந்தை அஜித் போல் இருப்பதோடு, தெளிவான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். பல்லுவாக நடித்திருக்கும் வேதாந்த் வசந்த் ஹல்க் போல் பல்க்காக இருந்தாலும், பால் வடியும் முகத்தை வைத்துக்கொண்டு செய்யும் குறும்புகள் மூலம் சிரிக்க வைக்கிறார்.

shot boot three is the first tamil filmவெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர் - Cinemapettai

யோகி பாபு மூன்று காட்சிகளில் வருகிறார். ஆனால், அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விசயம் இல்லாதது பெருத்த ஏமாற்றம்.

சிவாங்கி, சாய் தீனா, இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநர் சுகேஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எளிமையான பணி என்றாலும் கதையின் நோக்கத்தை சிதைக்காமல் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை சுமார் ரகமாக இருப்பதோடு, தேவையில்லாத சத்தங்களை நிரப்பி சில இடங்களில் காட்சிகளை சிதைக்கவும் செய்திருக்கிறது.




 

 

 

சிறுவர்களின் வாழ்க்கை, அவர்களுடைய எதிர்பார்ப்பு மற்றும் விலங்குகள் மீது இரக்கம் காட்டுவது போன்றவற்றை மையப்படுத்தி படம் நகர்ந்தாலும், தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைக்கும் பல பெற்றோர்கள், நிகழ்காலத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போவதால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுகிறது என்ற விசயத்தையும் மேலோட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன்.

விலங்குகளிடம் இரக்கம் காட்ட வேண்டும், அவைகளும் ஒரு உயிர் தான் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் அதற்காக அதிகமாக தெரு நாய்களின் துன்பங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அதே தெரு நாய்கள் மூலம் பல சிறார்கள் மிக கொடூரமாக பாதிக்கப்பட்டதையோ அல்லது விலங்குகள் மீது அக்கறை காட்டும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க என்ன செய்தார்கள்? என்பதையோ எந்த ஒரு இடத்திலும் பதிவு செய்யாதது ஏன்? என்று தான் தெரியவில்லை.




விலங்குகள் மீது இரக்கம் காட்டுவது, சிறுவர்களின் தேடல் பயணம் போன்றவற்றை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் படத்தில் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயையும் நடிக்க வைத்திருக்கிறார். மேக்ஸ் என்ற வேடத்தில் நடித்திருக்கும் அந்த நாயும் சிறுவர்களைப் போல் படத்தில் முக்கியமானதாக இருந்தாலும், அந்த நாய் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதற்கான காட்சிகளும் படத்தில் இல்லை.

வேலை..வேலை…என்று இருக்கும் பெற்றோர்கள், எது கேட்டாலும் கிடைக்கும் ஆனால் பெற்றோர்களின் அரவனைப்பு மட்டும் கிடைக்காமல் ஏங்கும் பிள்ளைகள், அவர்கள் மூலம் சொல்லப்படும் விலங்குகள் மீதான இரக்கம் மற்றும் அக்கறை என படத்தில் பல விசயங்களை சொல்லியிருக்கும் இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன், முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, சில இடங்களில் மேலோட்டமாக பெற்றோர்களுக்கு பாடம் எடுத்து படத்தை கமர்ஷியலாக நகர்த்தியிருந்தாலும், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படத்தை கையாளவில்லை.

மொத்தத்தில், ‘ஷாட் பூட் த்ரீ’ விளையாட்டு பிள்ளைகள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!