gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள் /அடர்ந்த வனத்தில் கிருஷ்ணர் புரிந்த அதிசய போர் – மகாபாரத கிளை கதை

ஒரு முறை ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர் மற்றும் அர்ஜுனன் ஆகிய மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது நேரங்கடந்து நள்ளிரவாகிவிட்டதால், மூவரும்  ஒரிடத்தில் தங்கி உறங்கி விட்டு, விடிந்த பின் செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.

காட்டில் கொடிய மிருகங்கள் இருக்கும் காரணத்தினால், மூவரும் ஒரே நேரத்தில் உறங்கக்கூடாது என்று, ஜாமத்திற்கு ஒருவர் உறங்காமல் மற்ற இருவருக்கும் காவல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி முதலில் அர்ஜுனன் காவல் இருக்க ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்க ஆரம்பித்தனர்.




அப்போது திடீரென ஒரு புகை மண்டலம் தோன்றியது .அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிவந்தது . அகன்ற நாசியும் , கோரப் பற்களும் , பெரியக்  கண்களுமாக இருந்தது அவ்வுருவம். ஒரு மரத்தடியில் பலராமரும், ஸ்ரீகிருஷ்ணரும் தூங்குவதையும் , அவர்களுக்கு அர்ஜுனன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் அவ்விருவரின் அருகில் சென்றது.

அதைக் கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அந்த உருவத்தைத் தடுத்தான். அப்போது அவ்வுருவம், அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும், அதற்கு நீ எனக்கு உதவ வேண்டும் என்று அர்ஜுனனிடம் கேட்டது. அதைக் கேட்டு மிகுந்த கோபம் கொண்ட அர்ஜுனன் அவ்வுருவத்தைத் தாக்கினான்.




arjunan

அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக , அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதாகியது .அர்ஜுனன் இன்னும் மிகுந்த ஆக்ரோஷத்தோடு அதனுடன் சண்டையிட்ட போது, அதன் வடிவம் பூதகரமாகியது.அர்ஜுனனை பலமாகத் தாக்கி விட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமத்திற்கு காவலிருப்பது பலராமர் முறை என்பதால், அவரை எழுப்பி விட்டு அர்ஜூனன் உறங்க ஆரம்பித்தான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி, அர்ஜுனனிடம் கூறியது போலவே பலராமரிடமும் கூறியது.

அதைக் கேட்டு கோபம் கொண்ட பலராமரும் அதனுடன் கடுமையாகச் சண்டையிட்டார். அவ்வுருவம்மும் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின்பு அர்ஜுனனைத் தாக்கியதைப் போலவே, பலராமரையும் கடுமையாகத் தாக்கி விட்டு , மறைந்தது அவ்வுருவம்.

மூன்றாம் ஜாமம் காவலிருப்பது ஸ்ரீகிருஷ்ணரின் முறையாவதால், அவரைக் காவலுக்கு எழுப்பி விட்டு பலராமர் படுக்கச் சென்றார். இப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா பலமாகச் சிரித்தார்.




krishnar

” ஏன் சிரிக்கிறாய்” ?! எனக் கேட்டது அவ்வுருவம். “உனது தூக்கிய பற்களும், பெரிய முட்டைக் கண்களையும் கண்டு தான்” என சிரிப்பை அடக்க முடியாமல் கூறினார். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அவ்வுருவம் ஸ்ரீகிருஷ்ணருடன் சண்டை போட்டது.

கிருஷ்ணரோ புன்னகையை மாறாமல் அக்கொடிய உருவத்துடன் சண்டையிட்டார் . கிருஷ்ணர், சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்து கொண்டே போனது. இறுதியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.

ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுதும் விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் உறக்கத்திலிருந்து எழுந்தனர்,. இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும், அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பின்னர் பெரிதாகியதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர் தனது துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, “நீங்கள் இருவரும் நேற்று ஜாமத்தில் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இது தான்” எனக் கூறினார். “நீங்கள் இருவரும் அதனுடன் சண்டையிடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள்”.




krishnar

உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும்,வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால், இதன் பலமும்,வடிவமும் குறைந்து கொண்டே வந்து பின்பு ஒரு புழுவாக மாறி விட்டது”. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு, புன்னகையோடு வெளியேறி விலகிச் சென்று விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.

“கோபத்தைக் குறைப்பவனே ஞானி ” என்ற உண்மையை எடுத்துக்காட்டினார் .ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் வாழ்வின் பல சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் இப்படித் தான் நாமம் பல விஷயங்களில் எதிர் வினையாற்றாமலிருந்தாலே, அவ்விஷயம் மிகப்பெரிய பிரச்சனை ஆகாமல் பிசுபிசுத்துப் இந்த புழுப் போல் ஒன்றும் இல்லாமல் போய் விடும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!