gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-47 (நமிநந்தியடிகள் நாயனார்)

ஏமப்பேரூர் என்ற ஸ்தலத்தில் அவதரித்த நமிநந்தியடிகள் நாயனார்:
சோழ வளநாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள ஏமப்பேரூர்(தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப்படுகிறது)
என்ற ஸ்தலத்தில் அந்தணர் குலத்திலே, அவதரித்தவர் நமிநந்தியடிகள் நாயனார். அந்தணர் குலம் தழைத்தோங்க அவதரித்த இந்த நாயனார், சிவபெருமானிடம் மாறாத பக்தியும் சிவகைங்கரியத்தில் இடைவிடாத ஈடுபாடும் உடையவராக விளங்கினார். வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள ஆரூர் சிவபெருமானை வழிபட்டு வந்தார். (இங்கு மூலவர் வான்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜன் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டுள்ளார்)




arun kumar🇮🇳 on X: "#திருச்சிற்றம்பலம் இன்று #நமிநந்தியடிகள் நாயனார் #குருபூஜை https://t.co/Kz1cebPMHl" / X

குளத்து நீரால் விளக்கு ஏற்றுதல்:
நமிநந்தியடிகள் நாயனார் தினமும் தன்னுடைய வீட்டில் சிவ வழிபாட்டினை முடித்து விட்டு, அருகிலிருந்த திருவாரூருக்குப் போய் வன்மீகநாதரை வணங்கி, பகலில் சிவாலயத்தில் தொண்டுகள் செய்து, இரவு வீடு திரும்பி சிவவழிபாடு மேற்கொண்டு உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ளது; இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். அங்கு அழகாக விளக்குகள் ஏற்றி, அனைவரும் வந்து வழிபட வகை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.




ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். அப்போது நமிநந்தியடிகள் நாயனார் அரநெறியப்பருக்கு திருவிளக்குகள் ஏற்ற எண்ணி விருப்பம் கொண்டார். அவர் கையில் நெய் இல்லை. அவரின் இருப்பிடமோ தொலைவில் இருந்தது. ஆதலால் திருக்கோவிலின் அருகே உள்ள வீட்டில் நெய்யைப் பெற்று அறநெறியப்பருக்கு திருவிளக்கு ஏற்ற எண்ணம் கொண்டார். அச்சமயத்தில் சமணர்கள் பலர் திருவாரூரில் வாழ்ந்து வந்தனர்.

நமிநந்தி அடிகள் நாயனார்-2

நமிநந்தியடிகள் திருவாரூர் திருக்கோவிலின் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று அறநெறியப்பருக்கு விளக்கு ஏற்ற நெய் கொடுத்துதவுமாறு வேண்டினார். அவர்கள் நெய் கொடுக்க மறுத்ததோடு “உங்கள் இறைவன்தான் கையில் தீயை வைத்துள்ளாரே. அவருக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்? அவ்வாறு விளக்கு ஏற்ற வேண்டுமாயின் நெய்க்குப் பதிலாகத் தண்ணீரைக் கொண்டு விளக்கு ஏற்றுங்கள்.” என்று ஏளனம் செய்தனர். இதனால் வருத்தமடைந்த நாயனார், அறநெறியப்பரின் சந்நிதியை அடைந்து, “இறைவா, சமணர்கள் கூறிய வார்த்தைகளால் என்னுடைய மனம் மிகவும் வருத்த முற்றுள்ளது. இம்மொழிகளைக் கேட்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?” என்று மனதிற்குள் வேண்டினார். அப்போது சிவனார் அசரீரியாக, நமிநந்தி! கவலை வேண்டாம். உன்னைக் கேலி செய்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வை. அவர்கள் சொன்னது போலவே, கோயில் அருகிலுள்ள குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கில் ஊற்று. விளக்கு பிரகாசமாய் எரியும், என்று அருளினார்.

பெருமகிழ்ச்சி அடைந்த நமிநந்தியடிகள் நாயனார், உடனே திருக்குளத்திற்கு ஓடிச்சென்று, ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி திருக்குளத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து விளக்கில் ஊற்றி, திரியை முறுக்கிவிட்டு விளக்கை ஏற்றினார். அதிசயத்திலும் அதிசயம்! விளக்கு பிரகாசத்துடன் எரிந்தது. இதனைக் கண்டு பரவசம் அடைந்த நமிநந்தியார், குளத்து நீரினைக் கொண்டு திருக்கோவில் முழுவதும் விளக்குகளை ஏற்றினார். இரவு முழுவதும் விளக்குகள் எரியும் வண்ணம் எல்லா விளக்குகளிலும் நிரம்ப நீரினை ஊற்றி வைத்தார். இதனைக் கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். நீரால் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்றியதைக் கேள்விப்பட்ட சமணர்கள் வியந்தார்கள். இரவு நெடுநேரம் அறநெறியப்பரின் சந்நிதியில் இருந்துவிட்டு நமிநந்தியார் தமது இருப்பிடம் திரும்பி சிவவழிபாட்டினை முடித்துவிட்டு நித்திரை கொண்டார்.

தியாகராஜர் கோயிலுக்குப் பொறுப்பாளரானார் :
இறையருளால் பல நாட்களாக நமிநந்தியடிகள் நாயனார் நீரால் விளக்கு ஏற்றி, திருவாரூர் கோயிலை ஒளியூட்டினார்.
இதனைக் கேள்வியுற்ற சோழ மன்னன், அகமகிழ்ந்து அவரைத் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குப் பொறுப்பாளராக நியமித்தார். அத்தோடு கோயில் திருப்பணி நடைபெறுவதற்காக வேண்டி பொன்னும் பொருளும் கொடுத்து உதவினார். அடிகளார் எம்பெருமானுக்குப் பெருவிழாக்கள் பல நடத்தி பெருமிதம் கொண்டார்.




27. Naminanthiadigal Nayanar || நமிநந்தி அடிகள் நாயனார் - YouTube

திருவிளையாடலைக் காட்டிய பங்குனி உத்திரத் திருவிழா:
ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவை நமிநந்தியடிகள் நாயனார் முன் நின்று மிக்கச் சிறப்பாக நடத்தி வந்தார். திருவிழாவின் போது, தியாகராஜர் ‘மணலி’ என்ற ஊருக்கு எழுந்தருளுவது வழக்கம். அப்போது அவரை வழிபடத் தொண்டர்களும், அன்பர்களும் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொண்டனர். அவர்களுடன் நமிநந்தியடிகள் நாயனாரும் இவ்விழாவில் கலந்து கொண்டு தியாகராஜரை வழிபட்டார். பின்பு மாலையில் தியாகராஜர் முன்போல திருவாரூர் கோயிலில் எழுந்தருளினார். நமிநந்தியடிகள் நாயனார் நள்ளிருளில், தமது ஊரை அடைந்து, வீட்டிற்குள் நுழையாமல் வெளியிலேயே அமர்ந்தார். மனைவியை அழைத்து, “தண்ணீர் எடுத்து வா. பல தரப் பட்ட மக்கள் கூட்டத்தின் நடுவில் இருந்ததால் குளித்துவிட்டுத் தான் பூஜை செய்ய வேண்டும்” என்றார். மனைவி உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் நமிநந்தியடிகள் நாயனார் சோர்வின் காரணமாகத் திண்ணையில் சற்றுக் கண் அயர்ந்து உறங்கிவிட்டார்.

 

அப்போது கனவில் பேரொளி பொங்கத் தோன்றிய சிவபெருமான், “நமிநந்தியாரே! திருவாரூரில் பிறந்த அனைவருமே சிவகணங்கள் ஆவர். நீங்கள் நினைப்பது போல் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்லர். நீங்களே உங்கள் கண்களால் காண்பீர்!” என்று கூறி மறைந்தார். கண் விழித்து எழுந்த நமிநந்தியடிகள் நாயனார் நடந்தவற்றை மனைவியிடம் கூறி, தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தினார். உடனே வீட்டில் பூஜை செய்யலானர். மறுநாள் பொழுது புலர்ந்தும், எழுந்து வீட்டில் வழிபாடு மேற்கொண்டுவிட்டு திருவாரூர் சென்றார். அப்போது அங்கியிருந்தோர் எல்லோரும் சிவகணங்களாகத் தெரிந்தனர். உடனே நமிநந்தியடிகள் நாயனார் அவர்களை நமஸ்கரித்தார். சில நிமிடங்களில், அவர்கள் சுய உருவம் பெற்றனர். சிவபெருமானின் திருவிளையாடலை நினைந்து மனமுருகினார். சிவபெருமான் என்னுடைய அறியாமையைப் போக்கும் பொருட்டு எனக்கு இவ்வாறு காட்சியளிக்கச் செய்தான்’ என்று எண்ணியபடி திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.




“தொண்டர்களுக்கு ஆணிப்பொன்”:
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நமிநந்தியடிகள் நாயனாருக்குத் திருவாரூரை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. தியாகேசர் பெருமானின் திருவடி கமலங்களிலேயே காலத்தைக் கடத்த எண்ணினார். நாயனார் மனைவியாருடன் ஏமப்பேரூரை விடுத்துத் திருவாரூரிலே குடிபுகுந்து, தம்முடைய திருத்தொண்டுகளைச் செய்துகொண்டிருந்தார். நெடுங்காலம் சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், “தொண்டர்களுக்கு ஆணிப்பொன்” என்று, திருநாவுக்கரச நாயனாராலே, தேவாரப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டார். இவ்வாறு திருவாரூரிலே வாழ்ந்து வந்த நமிநந்தியடிகள் நாயனார் திருப்பணிகள் பல செய்து திருவாரூர் தியாகேசர் திருவடி நிழலையடைந்தார்.

இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!