Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-5

5

டாக்டர் கிருபாகரன் அட்மிட் ஆகியிருந்த அந்த ஆஸ்பத்திரி இருக்கும் தெருவில் அன்று மட்டும் டிராபிக் நிறுத்தப்பட்டு, வேறு பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தது.

ஆஸ்பத்திரியின் மெயின் கேட் பூட்டப்பட்டு, விக்கெட் கேட் மட்டும் திறக்கப்பட்டிருக்க, அனைவரையும் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தான் செக்யூரிட்டி.

முன்புறமிருந்த விஸ்தாரமான போர்ட்டிகோவின் கீழ் போலீஸ் நிறுத்தப்பட்டிருந்தது.

ஸ்பெஷல் ஆபீஸர் வர்மா அறைக்கு வெளியே நின்றிருந்த காவலர்களின் சல்யூட்டை அலட்சியம் செய்தவாறே டாக்டர் கிருபாகரன் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

“ஸாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ் டாக்டர்!… நீங்க இங்கே சௌகரியமாகத்தானே இருக்கறீங்க?” வர்மா நாசூக்காய் விசாரித்தார்.

“இட்ஸ் ஆல்ரைட்!… ஐ யாம் கொய்ட் ஓ.கே.” என்றார் டாக்டர் கிருபாகரன்.

“டாக்டர் ஒரு சின்ன என்கொயரி!… உங்க கிட்டே சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கு!… இப்ப உங்களுக்கு சௌகரியப்படுமா?”

“நோ பிராப்ளம்… நான் இப்ப நார்மலாய்த்தான் இருக்கேன்!… நீங்க தாராளமா நூறு கேள்விகள் வேணாலும் கேட்கலாம்!” சிரித்துக் கொண்டே சொன்னார் டாக்டர்.

“உங்களைக் கத்தியால் குத்த வந்த அந்தப் பெண்மணி உருது மொழில ஏதோ கத்தியாதை வைத்துப் பார்க்கும் போது இந்த இன்ஸிடெண்ட்ல பாக் ஊடுருவல் இருக்குமோ?ன்னு சந்தேகமாயிருக்கு!… நீங்க கார்கில் போர்ல நம்ம நம்ம ராணுவ வீரகளுக்கு… போர் முனைல வெச்சே மெடிக்கல் டிரீட்மெண்ட் குடுத்ததுல பாக் உங்க மேலே கோபப்பட்டிருக்கும் போலிருக்கு!.. அதான் இந்தக் கொலை முயற்சி!” வர்மா சொல்ல,

“அஃப் கோர்ஸ்… நான் நெனைச்சதைத்தான் நீங்களும் சொல்றீங்க!… மேடைல என்னைக் கத்தியால் குத்திட்டு அந்தப் பெண் உருதுல கோஷம் போட்டப்பவே நான் புரிஞ்சுக்கிட்டேன்… இது யாரோட வேலைன்னு”

“டாக்டர்… என்கொயரின்னு வரும் போது நாங்க சில தேவையில்லாத… சங்கடங்களை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளையும் கேட்டாக வேண்டும் என்கிற நிலையில் இருக்கோம்!..” சொல்லி விட்டு ஒரு சிறிய இடைவெளி கொடுத்த வர்மா, “நீங்க புரிஞ்சுக்குவீங்கன்னு நெனைக்கறேன்” என்றார்.

“நோ பிராப்ளம்… யூ கேன் ப்ரொஸீட்…” என்றார் டாக்டர்.




“டாக்டர்… உங்களுக்கு பர்ஸனலா யாராவது எதிரிகள் உண்டா டாக்டர்?… தொழில் ரீதியா,… அல்லது உறவுக்காரர்கள்… நண்பர்கள் வட்டாரத்துல?”

“மிஸ்டர் வர்மா… கூடிய விரைவில் நான் என்னுடைய எண்பத்திரெண்டாவது வயதைத் தொடப் போறேன்!… பட் ஸ்டில் பேச்சிலர்!… திருமண வாழ்க்கை…. குடும்பம்… குழந்தை குட்டிகள்…ங்கற பந்தங்களில் சிக்காம… முழுக்க முழுக்க மருத்துவத்திற்கே என்னோட முழு வாழ்க்கையையும் அர்ப்பணிச்சு வாழ்ந்திட்டிருக்கேன்!… இப்பவும் ஸ்லம் ஏரியாவுல ஒரு கிளினிக் வெச்சு நடத்திட்டிருக்கேன்… அங்க வர்ற நோயாளிக கிட்டே வெறும் இருபது ரூபாய் மட்டும்தான் வாங்கறேன்… மருந்து மாத்திரையெல்லாம் ஃப்ரீ!… அந்த ஏரியாவுல எனக்குப் பேரே “இருபது ரூபாய் டாக்டர்”… ஸோ… என்னைக் கொல்லும் அளவுக்கு எனக்கு நண்பர்களும் கிடையாது… எதிரிகளும் கிடையாது” என்றார் டாக்டர் சிரித்தபடி.

“ஓ.கே.டாக்டர்!… தேங்க்யூ ஃபார் யுவர் கைண்ட் கோ-ஆபரேஷன்!… ஒருவேளை இன்னும் ஏதாவது தகவல் தேவையிருந்தா… நாங்க உங்களைத் தொடர்பு கொள்வோம்!… தப்பா நினைக்க வேண்டாம்… ப்ளீஸ்” என்று வர்மா சொல்ல,

“ஷ்யூர்…ஷ்யூர்”

வர்மா வெளியேறினார்.

*****

இரவு ஏழு மணி. ஒரு வாரத்திற்குப் பிறகு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்த டாக்டர் கிருபாகரன் பி.பி.ஸி.சேனலில் ஓடிக் கொண்டிருந்த ஒரு மெடிக்கல் ஃபிக்ஷனில் மூழ்கியிருந்தார்.

அவரைத் தொந்தரவு செய்யும் விதமாய் அவரது மொபைல் போன் நாதஸ்வரம் இசைத்தது.

ரிமோட் மூலம் டி.வி.யின் வால்யூமைக் குறைந்த்து விட்டு, அழைப்பை அட்டெண்ட் செய்தார்.

“ஹலோ… டாக்டர் கிருபாகரன் ஹியர்”




“ஹலோ… ஐ யாம்… நித்தியானந்தம்… செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டத் தலைவர்”

“யெஸ்… சொல்லுங்க சார்!… வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?”. டி.வி.யை ரிமோட்டால் ஆஃப் செய்து விட்டு சோபாவில் சாய்ந்தமர்ந்தார் டாக்டர்.

“டாக்டர்… சமீபத்துல திருச்சில நடந்த விபரீதத்தைப் பற்றி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க!ன்னு நினைக்கறேன்” செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கேட்க,

“ம்…ம்… தெரியும் டி.வி.நியூஸ்ல பார்த்தேன்!… முசிறிக்குப் பக்கத்துல கள்ளச் சாராயம் குடிச்சு இருபதுக்கும் மேற்பட்டவங்க இறந்திட்டதா செய்தி பார்த்தேன்!… அதைத்தானே சொல்றீங்க?”

“யெஸ் டாக்டர்!… இப்ப மோர் தேன் தர்ட்டி.. டெத்!… இன்னும் பலர் உயிருக்குப் போராடிட்டிருக்காங்க!”

“இஸிட்…. வெரி பேட்… வெரி பேட்” முகத்தைச் சுளித்துக் கொண்டு சொன்னார் டாக்டர்.

“டாக்டர் எங்களோட ரெட் கிராஸ் சொஸைட்டிக்கு இந்த சிச்சிவேஷன்ல உங்களோட சர்வீஸ் தேவைப்படுது!.. அதனால நாங்க உங்க கிட்ட ஒரு பெரிய ஹெல்ப் கேட்கறோம்!… எங்க கூட நீங்களும் ஸ்பாட்டுக்கு வரணும்!… அங்க உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கற ஜனங்களுக்கு டிரீட்மெண்ட் குடுக்கணும்!… அப்படியே எங்க ஆட்களையும் கைட் பண்ணனும்!… ப்ளீஸ்…” ரெட்கிராஸ் சொஸைட்டியின் தலைவர் கெஞ்சலாய்க் கேட்க,

“ஷ்யூர்!… எப்பக் கிளம்பணும்னு சொல்லுங்க… நான் ரெடி” என்றார் டாக்டர்.  அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி.  பிறர்க்கு உதவி செய்வதென்று வரும் போது அவர் தன்னுடைய உடல் நலத்தைக் கூட பெரிதாக நினைக்க மாட்டார்.

“இன்னும் ஒரு மணி நேரத்துல எங்க கேப் அங்க வரும் டாக்டர்!… நீங்க கொஞ்சம் ரிலாக்ஸாவே கிளம்பலாம்!… கேப் வெய்ட் பண்ணும்”

“ஓ.கே!… ஓ.கே!… நான் ரெடியாயிடறேன்”  சொல்லி விட்டுக் காலை கட் செய்த டாக்டர் “மள…மள”வென்று செயல் படத் துவங்கினார்.  கிளினிக்கிற்குப் போன் செய்து தேவையான மருந்துகளையும், மருத்துவக் கருவிகளியும் கொண்டு வர ஏற்பாடு செய்தார்.

தன் பி.ஏ., வாசுகியின் மொபைலுக்கு கால் செய்து தன்னுடைய புரோக்ராமைச் சொன்னார்.

“டாக்டர்… உங்க உடல் நிலை இன்னும் நார்மலுக்கு வரலை… சொல்லப் போனா நீங்களே இன்னும் டிரீட்மெண்ட்லதான் இருக்கீங்க!…” நிஜ அக்கறையோடு சொன்னாள் அவள்.

“தேங்க்ஸ் ஃபார் யுவர் கர்ட்டஸி… பட் நான் போயே ஆகணும் வாசுகி!… ஏற்கனவே முப்பது பேர் இறந்திட்டாங்களாம்… இன்னும் பல பேர் உயிருக்குப் போராடிட்டிருக்காங்களாம்!…”

எதிர் முனையில் ஒரு சிறிய அமைதி, “ஓ.கே.டாக்டர்… போயிட்டு வாங்க!.. எப்பக் கிளம்பறீங்க?”

“இன்னும் அரை மணி நேரத்துல அவங்க வேன் இங்க வந்திடும்”

“டாக்டர்… இப்ப இருக்கற சூழ்நிலைல நீங்க அங்க போய்த்தான் ஆகணுமா?… சமீபத்துலதான் ஒரு கொலை முயற்சில தப்பிச்சிருக்கீங்க… அங்கேயும்… அந்த மாதிரி ஏதாச்சும்….”வாசுகி இழுத்தாள்.

“ஹா…ஹா…ஹா…” என்று சிரித்தவர்,  “ரொம்ப சந்தோஷப்படுவேன்… ஏன்னா… நான் மருத்துவப்பணியில் ஈடுபட்டிருக்கும் போதே மரணிப்பதை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமா நினைப்பேன்” என்றார்.

“டாக்டர் உண்மையில் உங்களை நினைக்க ரொம்பப் பெருமையா இருக்கு!… எனிவே டேக் கேர்…”

“தேங்க்யூ… தேங்க்யூ” என்றபடி இணைப்பிலிருந்து வெளியேறியவர் வாசலில் வாகனம் ஏதோ வந்து நிற்பதைப் போல் ஓசை கேட்க, எழுந்து சென்று ஜன்னல் வழியே பார்த்தார்.  ஒரு வெண்ணிற வேன் ரெட் கிராஸ் சிம்பலுடன் கேட்டிற்குள் நுழைது போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்தது.

அதே நேரம், காலிங் பெல்லும் ஒலித்தது. போய்க் கதவைத் திறந்தார்.

இரண்டு வெள்ளுடை ஆசாமிகள்.

“ஓ… நீங்க வந்திட்டீங்க… ஆனா எங்க கிளினிக்கிலிருந்து இன்னும் வேன் வரலையே” நெற்றியை ஒரு விரலால் தேய்த்தபடியே மொபைலை எடுத்தார்.  “ராகவ்… நம்ம வேன் கிளம்பிடுச்சா?… இன்னும் இல்லையா?… அப்ப அங்கியே இருக்கச் சொல்லு!… ஏன்னா ரெட் கிராஸ் வேன் வந்தாச்சு… நாங்க அங்க வந்து அந்த வேனிலேயே மெட்டீரியல்ஸைக் கலெக்ட் பண்ணிக்கறோம்” சொல்லி விட்டு லைனைக் கட் செய்தார்.




அந்த ஆட்கள் இருவரையும் வேனுக்கே போகச் சொல்லி விட்டு, அவசர அவசரமாய் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார்.

வேன் கேட்டுக்கு வெளியே செல்லும் போது,  “கொஞ்சம் ஸ்லோ பண்ணுங்க” என்றார்.

கேட்டிலிருந்த வாட்ச்மேனிடன் தகவல் சொல்லி விட்டு, “ஓ.கே…. போகலாம்” என்றார்.

வேன் வெளியேறியதும் கேட்டை உள்புறமாய் பூட்டி விட்டு, தனது கூண்டிற்குள் சென்று, எஃப்.எம்.மை ஆன் செய்தான் வாட்ச்மேன்.

“மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்” இளையராஜா தேனிசை இழைய விட்டார்.

அந்தப் பாட்டு முடிந்து, அடுத்த பாடலாய் “ராகங்கள் பதினாறு உருவான வரலாறு” என்று எஸ்.பி.பி. ஆரம்பித்த போது…

கேட்டுக்கு வெளியே ரெட் கிராஸ் சிம்பலுடன் இன்னொரு வெண்ணிற வேன் வந்து நின்று ஹார்ன் அடித்தது.

எஃப்.எம்.மை ஆஃப் செய்து விட்டு கேட்டருகே வந்த வாட்ச்மேன், “என்ன?” என்று கேட்க,

“கேட்டைத் திறப்பா… டாக்டர் வரச் சொல்லியிருக்கார்” என்றான் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவன்.

“டாக்டர் வீட்டில் இல்லையே… இப்பத்தான் வெளிய போனார்”

“என்னது?… டாக்டர் இல்லையா?… இப்பத்தான் எங்களை வரச் சொல்லி போன்ல சொன்னார்” வேனிலிருந்து இறங்கி வந்தான் அவன்.

“அப்படியா?… நீங்க எங்கிருந்து வர்றீங்க?”

“ரெட் கிராஸ் சொஸைட்டி… செஞ்சிலுவைச் சங்கம்”

வாட்ச்மேனின் அடிவயிற்றில் லேசாய் புளி கரைக்க ஆரம்பித்தது.  “என்னது? செஞ்சிலுவைச் சங்கமா?… என்னப்பா… இப்பத்தானே உங்க வேன் வந்து அவரைக் கூட்டிக்கிட்டுப் போச்சு”

“என்னய்யா விளையாடறியா?… நாங்க இப்பத்தானே வர்றோம்… எங்களோட மத்த வேனெல்லாமே திருச்சி போயாச்சு… இந்த ஒரு வேன்தான் இப்ப இங்க இருக்கு”

தன் கண்களைப் பெரிதாக்கி யோசித்த வாட்ச்மேன், “அய்யய்யோ… ஏதோ தப்பு நடந்திருக்கு…” பதறியபடி கூண்டிற்குள்ளிருந்த தனது மொபைலை எடுக்க ஓடினான். 

அதே நேரம், டாக்டரை ஏற்றிச் சென்ற வேன் பாலக்காடு சாலையில் மதுக்கரையைத் தாண்டிப் பறந்து கொண்டிருந்தது.

பின் இருக்கையில் மயக்க நிலையில் கிடந்தார் டாக்டர் கிருபாகரன்.




What’s your Reaction?
+1
7
+1
8
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!