gowri panchangam Sprituality

சிவத் தொண்டர்கள்-19 (கலியர் )

புகழ்பெறும் தொண்டைநாட்டினில் எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இப்புகழ் விளங்கும் திருத்தலத்தில் அவதரித்தவர் கலியர்.இவரது பெற்றோர் எண்ணெய் வணிபம் புரிந்து வந்தனர்.சைவ சமயத்தில் ஈடுபட்டு சிறப்புற்று விளங்கிய இச்செம்மல் சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்றார்.




திருத்தொண்டத் தொகை - 72 சிவனடியார்கள் - இனிது

தமது செல்வத்தைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தி வந்தார் கலியர். இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள படம்பக்கநாதருடைய கோயிலில் அகமும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை அல்லும் பகலும் ஏற்றுகின்ற பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார் கலியர்.பக்தியின் திறத்தினை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு அம்மைய்ப்பன் அவருக்கு வறுமையை பரிசாக தோற்றுவித்தார்.

வறுமையையும் ஒரு இறைவனின் கொடையாக எண்ணிய கலியனார் கோயில் திருப்பணிக்காக கூலி வேலை செய்து பணம் ஈட்டுவதில் ஈடுபடலானார்.இவர் தமது குலத்தவரிடம் எண்ணெய் வாங்கி விற்று பொருளீட்டி வந்தார்.செக்கு ஓட்டியும் அன்றாடம் கூலி வாங்கும் தொழிலில் ஈடுபட்டார்.




அதில் கிட்டும் வருவாயைக் கொண்டு கோயிலில் திருவிளக்கேற்றும் திருப்பணியைத் தொடர்ந்து செம்மையாக நடத்தி வந்தார்.சில காலத்துக்குப் பின் அக்கூலி வேலையும் இல்லாமற் போகவே கலியனார் தமது வீட்டிலுள்ள பாத்திர பண்டங்களை ஒவ்வொன்றாக விற்று பொருள் பெற்றார்.

நித்தமும் சிவமயம் என வாழ்ந்த சிவனடியார்கள்… கலியநாயனார், கோட்புலிநாயனார் குருபூஜை சிறப்பு !

இறுதியில் மனையை விற்று, மாண்புடைய இல்லத்தரசியையும் விற்க முன்வந்தார். இல்லத்தரசியாரை பெற்றுக்கொண்டு பணம் கொடுக்க ஆளில்லாமை கண்டு செய்வதறியாது திகைத்தார்.சித்தம் கலங்கினார் பெருமானார்.மன வேதனை தாளாமல் இல்லத்தரசியையும் அழைத்துக் கொண்டு படம்பக்கநாதர் திருக்கோயிலை அடைந்தார். எம்பெருமானின் திருமுன் பணிந்தெழுந்து, ஐயனே! திருவிளக்குப் பணி நின்று விடுமாயின் இவ்வடியேன் வாழ்வது நியாயமன்று. எனவே அடியேன் மால்வதே சிறப்பு என் மனமுருகி வேண்டினார்.




அம்பலத்து ஒளிவிடுகின்ற அகல் விளக்குகளை எண்ணெய் வார்த்து ஏற்ற முடியாது போனால் நான் உதிரத்தை வார்த்து விளக்கேற்றுவேன் என்று மகிழ்ச்சி பொங்க மொழிந்தார். திருவிளக்குகளை முறையோடு வரிசை படுத்தினார். எண்ணெய்க்குப் பதிலாக உதிரத்தைக் கொடுக்க இறைவனிடம் வாக்களித்தமையால் கலியனார் அரிவாள் எடுத்து வந்து தமது கழுத்தை அரியத் தொடங்கினார்.

தம் திருவடியார்களை தடுத்தாட்கொள்ளும் எம்பிரான் சிவபெருமான் எழுந்தருளி கலியனாரது திருக்கரத்தை பற்றிக்கொண்டார். ஆலயத்துள் பேரொளி எழுந்தது. திருவிளக்குகள் அத்துனையும் எண்ணெய் வழியப் பிரகாசமாக ஒளிவீசின.
எங்கும் பிறைசூடிய பெருமானின் அருள் ஒளி நிறைந்தது. கலியனார் கழுத்தில் அரிந்த இடம் நலம்பெற்றது. கலியனாரும் அவரது மனைவியாரும் மெய்யுருகி நின்றனர். சடைமுடிப் பெருமானை அன்னையுடன் விடைமீது எழுந்தருளிய திருக்கோலத்தை கண்டு தரிசித்தனர். கலியனாரும் அவரது மனைவியாரும் எம்பெருமானை நிலந்தனில் வீழ்ந்து பணிந்து வணங்கி எழுந்தனர்.




இறைவன் கலியனாருக்கு பேரின்ப பெருவாழ்வு அளித்து இறுதியில் திருவடிப்பேறு அளித்தார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகும் பெரும் பேற்றையும் வழங்கினார்.

குருபூஜை: கலிய நாயனாரின் குருபூசை ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

கலியநாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!