gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-15 (கணநாதர்)

பழம்பெரும் புகழ் பெற்ற சிவத்தலமான சீர்காழியில் பிறந்த அருளாலர்.அவர் சீர்காழியில் வாழ்ந்த மறையோர்களுக்கு கற்பிக்கும் குருவாகவும்,நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார்.




63 நாயன்மார்கள் | 63 Nayanmarkal | சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பதிகம் | SuntharaMoorthy Swamigal |திருநாவுக்கரசு சுவாமிகள்

கணநாதர் தம்முடைய மரபுக்கு ஏற்ப ஒழுக்கத்தில் சிறந்து, சீர்காழியில் உள்ள தோணியப்பர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு பலவகையான தொண்டுகளைச் செய்து வந்தார். திருக்கோவில், நந்தவனம் மற்றும் தெப்பம் முதலியவற்றை பாதுகாத்து அவ்வப்போது செப்பனிட்டு சிறப்பாக வைத்துக் கொள்வதை தம்முடைய வாழ்நாள் பணியாகக் கொண்டு அவற்றைத் திறம்படச் செய்து வந்தார்.

மேலும் அவர் திருக்கோவிலுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்பி வந்தவர்களை, அவரவர்களுக்கு ஏற்றவாறு தொண்டு செய்யும் வழிமுறைகளை கற்பித்து,சிறப்பாக அத்தொண்டினை நிறைவேற்றவும் செய்தார்.




நந்தவனப்பணி செய்வர்களுக்கு எவ்வாறு செடி கொடிகளைப் பாதுகாத்து வளர்ப்பது என்பதைக் கற்றுத் தந்தார். பூக்களைப் பறிக்கும் முறையையும், அப்பூக்களை மாலையாகத் தொடுக்கும் பணியையும் சிலருக்குக் கற்றுக் கொடுத்தார்.

திருமஞ்சனப் பணி செய்பவர், இரவும் பகலும் ஆலயத்தில் மெழுகுபவர், திருவிளக்கு ஏற்றுபவர், திருமுறைகளை எழுதுபவர் மற்றும் அத்திருமுறைகளை ஓதுபவர் ஆகிய பலவகைத் தொண்டர்களுக்கும் முறையான பயிற்சிகளை தந்ததோடு அவர்களை அச்செயலில் சிறந்து விளங்கும்படி ஊக்குவித்தார்.

இதனால் கணநாதரைச் சுற்றிலும் எப்போதும் தொண்டர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.இல்லறத்தில் வழுவாது நின்று, சிவத்தொண்டில் ஆர்வம் கொண்டு, தொண்டு புரிபவர்களுக்கு ஆதரவும் ஆக்கமும் அளித்து, யாவரும் நன்கு மதிக்க வாழ்ந்தார் கணநாதர்.




அவருக்கு சீர்காழியில் தோன்றிய ஞானக்கொழுந்தான திருஞான சம்பந்தரிடம் அளவற்ற பக்தி உண்டாயிற்று. அவர் ஞானசம்பந்தரின் திருவடிகளை போற்றி வணங்கி வந்தார்.

தொண்டருக்குத் தொண்டராகவும் தொண்டர்களுக்கு நாதராகவும் ஞானசம்பந்தர் பக்தராகவும் வாழ்ந்த இப்பெருமான், சிவனாரின் திருவருளால் திருக்கையிலையை அடைந்து கணநாதராகும் பதவி பெற்றுச் சிறப்படைந்தார்.

இறைவன் மற்றும் அடியவர்கள் பால் கொண்டிருந்த பேரன்பின் காரணமாக கையிலாயத்தில் சிவகணங்களின் தலைமைப் பதவியை இறையருளால் கிடைக்கப் பெற்றவர்.இறைவனின் அருட்பேறு பெற்றதோடு அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராகும் சிறப்பினையும் பெற்றார்.




கணநாத நாயனார் குருபூசை பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

கணநாத நாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.




 

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!