Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-15

15

 தாரிகாவினால் கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டிருந்தவன் அபிஷேக். சுகந்தியின் அத்தை மகன். அனந்தநாயகி வீட்டு தோப்பிற்கு பக்கத்து தோப்பு அபிஷேக் வீட்டு தோப்பு என்பதனை விசாரித்து தெரிந்து கொண்ட தாரிகா ,   முதலில் நேரடியாக அபிஷேக்கை சந்தித்துப் பேச இருந்த திட்டத்தை மயில்வாகனனின் இடையூறால் மாற்றிக் கொண்டு, அனந்தநாயகியின் தோப்பிற்கு வந்திருந்தாள். உடன் சுகந்தியை அழைத்து வருவது தான் சரியான பலனை கொடுக்கும் என்றுதான் அவளையும் நைச்சியமாக கூட அழைத்து வந்திருந்தாள். சரியான நேரம் பார்த்து சுகந்தியுடன் தோப்பிற்குள்ளும் நுழைந்து விட்டாள். பொத்திப் பொத்தி வைத்து கொண்டிராமல் இப்போதாவது   புரையோடிப் போய் கிடக்கும் புண்ணினை அறுத்தால்தான்  அது ஆறும் என்ற மனக்கணக்குடன் அவள் இதனை செய்து இருந்தாள்.

” இந்தக் கிராமத்து வெகுளி ஜனங்கள் போல் நீங்கள் இல்லை.  நிறைய படித்து இருக்கிறீர்கள். இரண்டு டிகிரிகள் வாங்கி இருப்பதாக கேள்விப்பட்டேன் .நீங்களும் இந்த பட்டிக்காட்டு குட்டையில் மூழ்கி சிறு பெண் ஒருத்தியை பகடைக் காயாக வைத்து விளையாடுவீர்களா  மிஸ்டர் அபிஷேக் ? “

”  அட பாருடா அந்த மேன்மை பொருந்திய தர்மராஜா வீட்டிலிருந்து ஒரு நியாயமான நியாயம் கேட்கும் பெண் ? ” தாடையை தடவியபடி அலட்சியமாக பேசிய அபிஷேக்கின் குரலில் நிறைய நக்கல் இருந்தது.

” மிஸ்டர் ஒழுங்காக பேசுங்கள் .நான் யார் என்று தெரியும் இல்லையா ?  தர்ம ராஜாவின் மருமகள். மயில்வாகனனின் மனைவி. ”   நெஞ்சை நிமிர்த்தி திமிராக பதில் அளித்தாள்.

” அந்த மயில்வாகனன் திடீரென்று இழுத்துக் கொண்டு வந்த பெண்தானே?  எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் தான் அவருடைய மனைவியா?”ஆச்சரியம் போல் காட்டி கேட்டான்.

”  வாயை மூடுங்கள் .என்னுடைய சம்மதத்துடன் தாலி கட்டிக் கூட்டி வந்த அவருடைய மனைவி நான்.  எனக்கு அந்த மரியாதையை கடுகளவும் குறையாமல் நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும்”




” மரியாதையா?   அதை கொடுக்கும் நாகரீகம் அந்த தர்மராஜா குடும்பத்திற்கே கிடையாதே .எங்களிடம் இருந்து மட்டும் அதனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் ? “

” நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும் .  எங்கள் வீட்டுப் பெண் சுகந்தி உங்களுக்குத் தேவையாக இருக்கிறாள் அல்லவா ? அப்போது எங்களுக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும் ” ஆணித்தரமாக இருந்தது தாரிகாவின் பேச்சு.

” உங்கள் வீட்டுப் பெண்ணா ? அவள் எங்களுக்கு உரியவள். எங்கள் வீட்டுப் பெண். அவளை நாங்கள் யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்.”   இதனை கூறிக்கொண்டு உரிமையோடு மார்தட்ட வேறு செய்தான். அவனது இந்த ஆவேசம் தாரிகாவிற்கு பார்க்க சுவாரஸ்யமானதாக இருந்தது.

” எங்களைப் பார்த்தால் உங்களுக்கு கேலியாக தெரிகின்றதா  ?  அந்தக் குடும்பமே மகா மட்டமான குடும்பம். அந்த மயில்வாகனன் சரியான திமிர்பிடித்தவன். அவனுடன் காலம் முழுவதும் வாழ்வது என்பது முடியாத காரியம். நீங்கள் அவனை விட்டு அந்த குடும்பத்தை விட்டு உங்கள் சென்னைக்கே ஓடி விடுங்கள்.”

” இலவசமாக ஆலோசனை மையம் வைத்திருக்கிறீர்களா?  நான் ஆலோசனை கேட்டு வந்தேன் என்று நினைத்தீர்களா ? ” அலட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக தாரிகா கேட்ட பாங்கு அபிஷேக்கிற்கு எரிச்சலை தூண்ட அவன் சட்டென்று தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஒரு ரிவால்வரை எடுத்தான்.

 உடனே அதனை தாரிக்காவின் நெற்றியில் பதித்தான்.  “உடனடியாக இங்கிருந்து ஓடிவிடு.  இல்லாவிட்டால் மூளை சிதறிவிடும். “

உதவியை எதிர்பார்த்து பரபரப்புடன் விழிகளை சுற்றிப்பார்க்க ,  சுகந்தி இருவரால் இழுத்துச்செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள் . ” அபிஷேக் நீங்கள் செய்வது அநியாயம். முதலில் சுகந்தியை விடச் சொல்லுங்கள். நாம் பேசலாம் “

” உன்னிடம் என்ன பேச்சு ? ஒரே அடி மூளை சிதறப் போகிறது பார் .  “சொன்னபடி துப்பாக்கியை அபிஷேக அடிக்க உயர்த்த  பட்டென அவன் கையில் இருந்த துப்பாக்கி தூரப் போய் விழுந்தது.

” துப்பாக்கி தூக்கியவன் எல்லாம் ஹீரோ கிடையாதுடா.   என்னுடைய கம்பிற்கு முதலில் பதில் சொல்லு ”  அவன் துப்பாக்கியை தட்டி விட்டபடி கையில் கம்புடன் நின்றவன் மயில்வாகனன்.

அபிஷேக் தரையில் விழுந்த துப்பாக்கியை எடுக்க பாய ,  மயில்வாகனன் கம்பை சுழற்றியபடி அவன்மேல் சராமரியாக அடிகளை கொடுக்க ஆரம்பித்தான். ” டேய் …”  அபிஷேக் உதவிக்காக ஆட்களை அழைக்க சுகந்தியின் பின்னால் போய்க் கொண்டிருந்த ஆறு பேரும் அவளை விட்டுவிட்டு இங்கே ஓடி வர ஒரு பத்து நிமிடங்களுக்கு அந்த இடமே சண்டையும் புழுதியும் ஆக இருந்தது . தன் கையில் இருந்த ஒற்றை கம்பி னாலேயே அனாயாசமாக கை கம்புகளையும்  , துப்பாக்கியையும் அரிவாள்களையும் தட்டி தூர விழ வைத்திருந்தான் மயில்வாகனன் .

தொடர்ந்து சுற்றி நின்ற அனைவரையும் தலை,  உடல் ,கால் ,கை என்று தாக்க ரத்த காயத்துடன் அவர்கள் அனைவரும் விலகி ஓடினர். கடைசியாக அபிஷேக்கின் உச்சந் தலையில் ஓங்கி ஒரு அடி. கண்கள் சொருக அவன் மயங்கி விழுந்தான்.

 வாவ் …செம …சூப்பர் ….  போன்ற பாராட்டுக்களுடன் விசிலடிக்கும் ஐடியாவும் தாரிகாவிற்கு இருந்தது. வாய் நிறைய பாராட்டு வார்த்தைகளுடனும் முகம் நிறைய பரவசத்துடனும் எழும்பிக்கொண்டிருந்த புழுதி அடங்கியபின் மயில்வாகனன் பக்கம் அவள் திரும்பிய போது உற்சாகம் வடிந்து ஊசி குத்தப்பட்ட பலூனாக அவள் முகம் சுருங்கியது அங்கே சுகந்தி வழக்கம் போல் தன் மாமனின் மார்பில் தஞ்சம் புகுந்து இருந்தாள் .” உன்னை நாங்கள் அப்படி விட்டுவிடுவோமா ?  ”  தேற்றிக் கொண்டிருந்தான் அந்த மாமன். பற்களை நற நறத்தபடி தாரிகா இருவரையும் பார்க்க, சுகந்தியை தேற்றியபடி  மயில்வாகனன் அவளைப் பார்த்து என்னவென்று புருவம் உயர்த்தினான்.

” போடா ”  அவனுக்கு தெரியும் படி உதட்டை மட்டும் அசைத்து விட்டு டக் டக் என்று முன்னால் வேகமாக நடந்தாள் தாரிகா . சுகந்தியை தன் அணைப்பில் வைத்தபடியே மயில்வாகனன் அவள் பின்னே வந்தான். அவனது ஒரு கை எச்சரிக்கையுடன் கம்பை சுற்றியபடி இருந்தது.

” ஏய் உனக்கு அறிவில்லையா?   கொஞ்சம் கண் அசந்தேன் மயிலு. உடனே பக்கத்து தோப்பிற்குள் புகுந்து விட்டாள். பதறியபடி வந்தாள் அனந்தநாயகி.

” பரவாயில்லை அக்கா. அவளுக்கு தெரியாது இல்லையா ?  இப்போது நான் இருவரையும் வீட்டிற்கு கூட்டி போகிறேன் ” சொல்லி விட்டு எடுத்தான்.

” செம சண்டை மாமா. என்னமா கம்பு சுத்தறீங்க ? ”   மாமனை சிலாகித்த படி சுகந்தி வந்த அந்த ஜீப் பயணம் முழுவதும் தாரிகாவிற்கு கருவேலம் முட்களின் மேல் அமர்ந்து பயணித்த உணர்வை கொடுத்தது.

 இவனை யார் இங்கே வரச் சொன்னது?   அதிலும் இப்படி யார் சண்டை போடச் சொன்னது ?  என்னுடைய திட்டம் முழுவதும் பாழ். இவன் மீண்டும் மீண்டும் சுகந்தியின் மனதில் ஹீரோவாகவே பதிந்து கொண்டு இருக்கிறான். ஆத்திரத்துடன் ஜீப்பின் சீட்டை ஓங்கி குத்திக் கொண்டாள்.

” உன்னுடைய நோக்கம் தான் என்ன ? ” தமயந்தி நேரிடையாகவே தாரிகாவிடம் கேட்டாள். கோபப் பார்வையுடன் தர்மராஜனும் குதறல்  பார்வையுடன் சங்கரேஸ்வரியும்  நின்றிருக்க  தாரிகா வீட்டில் உள்ள அனைவரின் முன்பும் குற்றவாளியாக தலை குனிந்து நிற்க வைக்கப்பட்டிருந்தாள் .

” சுகந்தியை அவளுடைய அப்பாவுடன் சேர்ப்பது ”  தயக்கமின்றி கணீரென்ற குரலில் சொன்னாள்.

” ஐயோ அண்ணா பார்த்தீர்களா ?  நான் சொல்வது சரியாகிவிட்டது இல்லையா ? பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள் சங்கரேஸ்வரி.

” இது என்ன முட்டாள் தனம் மருமகளே  ? ”  இந்த மருமகளை தர்மராஜா இதற்கு முன்பும் உச்சரித்திருக்கிறார். அதில் அன்பும் வாஞ்சையும் நிறைந்திருக்கும். ஆனால் இப்போது வெறுப்பும் கோபமும் இருந்தது. இப்போதைய இந்த அழைப்பை தாரிகா கொஞ்சமும் விரும்பவில்லை. இந்த வீட்டில் எனக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தவர் இவர் ஒருவர் தான். இவரின் வெறுப்பையும் சம்பாதிக்க வேண்டுமா அவள் மனம் கலங்கியது.

ஆனால் அவளுடைய வாழ்வை பார்த்தால் சுகந்தியின் நிலைமை …?  அதனை அப்படியே விட்டு விட அவள் விரும்பவில்லை.  எனவே தலை நிமிர்த்தியே பதிலளித்தாள்.




”  மாமா நீங்கள் தர்மவான்.  ஒரு குழந்தை மீது அம்மாவிற்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை அப்பாவிற்கும் இருக்கும் அல்லவா ? சுகந்தியின் அப்பா என்ன பாவம் செய்தார் ? பிறந்ததிலிருந்து சுகந்தியை ஏன் அவரிடமிருந்து பிரித்து வைத்திருக்கிறார்கள் ? “

” அவருக்கும் நம் குடும்பத்திற்கும் ஒத்துவரவில்லையேம்மா?”

”  சுகந்தியின் அப்பாவிற்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஏன் ஒத்துப் போகவேண்டும் மாமா ? சுகந்திக்கும் அவள் அப்பாவிற்கும் தானே ஒத்துப்போக வேண்டும் “

” என் மகளுக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை.  இனியும் ஒத்துப் போகாது . என் மகளை அவரிடம் அனுப்ப மாட்டேன். ”  சங்கரேஸ்வரி கத்தியபடி ஓடிச்சென்று சுகந்தியை அணைத்துக்கொண்டாள்.

” இதனை நீங்கள் சொல்லக்கூடாது சித்தி . சுகந்தி தான் சொல்லவேண்டும்  “

சுகந்தியும் அன்னைக்கு ஈடாக அலறினாள். ”  இல்லை எனக்கு பிடிக்கவில்லை என் அப்பாவிடம் நான் போகமாட்டேன் “

தர்மராஜா இப்போது…  என்பது போன்ற கேள்வி பாவத்துடன் தாரிகாவை பார்க்க அவள் தோல்வியுடன் தலை குனிந்தபடி மாடி ஏறினாள் .

இரவு உறக்கம் வராமல் பாயில் புரண்டு கொண்டிருந்தாள்.   மயில்வாகனன் அன்று மிகவும் தாமதமாகவே வீடு திரும்பினான். அவன் உள்ளே நுழைந்ததும் தூங்குவது போல் விழிகளை இறுக்கி மூடிக் கொண்டாள். உடலை சுத்தம் செய்து கொண்டு அவன் கட்டிலில் ஏறிப் படுத்தான் லேசாக தொண்டையை செருமினான். கீழே பேசிக்கொண்டிருந்தபோது சத்தமின்றி ஓரமாக நின்று கொண்டான்.  இப்போது இவன் பங்குக்கு ஆரம்பிக்கப் போகிறான் . அட போங்கடா உங்கள் ஒவ்வொருவருக்கும் விளக்கம் சொல்லியே நான் ஓய்ந்து விடுவேன் எரிச்சலுடன் சுவர் பக்கம் திரும்பிப் படுத்தாள்.

” இன்று ஏன் இப்படி செய்தாய் தாரிகா ?  இதெல்லாம் நீ முன்பே திட்டமிட்டு செய்தது போல் தெரிகிறது ஏன் இப்படிச் செய்தாய்?

உனக்கு மட்டும் சொன்னால் புரிந்து விடவா போகிறது என்று நினைத்தபடி கண்களை இறுக மூடிக் கொண்டாள் .

“தாரிகா உன்னிடம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் ”  இப்போது அவனது குரல் சற்று உயர்ந்து ஒலித்தது .

“எனக்கு தூக்கம் வருகிறது”   இப்படி பதில் சொன்ன மறுகணமே கட்டில் மேல் வேகமான அசைவு கேட்டது.  சரிதான் நிச்சயம் அடிக்கத்தான் போகிறான் ..நினைத்துக்கொண்டிருக்கும்போதே மயில்வாகனன்னது  வலது கையை கீழே நீண்டு தாரிகாவின் இடையை சுற்றி வளைத்து அவளை அலேக்காக கட்டிலுக்கு தூக்கி கொண்டு , பின் இரு தோள்களையும் பற்றி தனக்கு நேராக கட்டிலில் தூக்கி தாங்கி நிறுத்தியது.

” ஏண்டி இப்படி செய்தாய் ? “

 அவனது செயலிலும் கேள்வியிலும் உறைந்திருந்த தாரிகாவினால்  இமைகளை சிமிட்டுவதை  தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை. இவன் ஏன் இப்படி இருக்கிறான் ?  தன் முழு உடல் எடையை  இரு கைகளால்  தாங்கி நின்ற மயில் வாகனனை பிரமிப்புடன் பார்த்தாள்.  இப்படித்தான் அடிக்கடி ஹீரோயிசம் செய்து அந்த சிறு பெண்  சுகந்தியின் மனதையும் கெடுத்து வைத்திருக்கிறான் கோபத்துடன் அவனை பார்த்தாள்.

 ” இப்போ எதுக்கு புருவம்  சுருங்குது ? ”  கேட்டதோடு சுருங்கிய புருவத்தை ஒரு விரல் நீட்டி அவன் தொட முயல , இதனால் அவன் கை பேலன்ஸ் இழந்து தாரிகா பொத்தென அவன் மார்பில் விழுந்தாள்.

டிக் டிக் என தன் காதுக்குள் கேட்ட அவன் இதயத்தின் ஓசையில் தன்னை மறந்து தாரிகா விழி மூட ஒரு நொடி தயங்கிய மயில்வாகனனின் கைகள் திடுமென அவளை சுற்றிவளைத்து தன்னோடு இறுக்கியது.




What’s your Reaction?
+1
22
+1
14
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!