Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-12

12

 மழைக்கால தவளையின் ஆரம்ப சத்தத்தைப்போல் மிக லேசாக செல்போன் சத்தம் கொடுக்கும் போதே தாரிகா சட்டெ  ன விழித்துக்கொண்டாள் .போனின் அலாரத்தை ஆப் செய்தாள். தலையை மட்டும் மெல்ல உயர்த்தி பார்த்து மயில்வாகனன் கட்டில் மேல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதிசெய்து கொண்டவள் சத்தமின்றி மெல்ல எழுந்து முன்தினம் எடுத்து வைத்திருந்த பையை கைகளில் எடுத்துக்கொண்டு அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

மரப்படிகளில் சப்தம் எழுப்பாமல் இறங்கினாள்.  அந்தப் படிகளில் முடிவில் சுகந்தி நின்றிருந்தாள். அவள் கையில் ஒரு பை. அவளும் அரவம் காட்டாது இவளைப் போன்று சத்தமின்றி நின்றிருந்தாள். இருவரின் கண்களிலும் ஒருவித சுவாரஸ்யம் .இரண்டு பேரும் சத்தம் எழுப்பாமல் பூனை நடை நடந்து வீட்டின் வாசல் கதவை மெல்ல திறந்து வீட்டை விட்டு வெளியேறினர். வீட்டு காம்பவுண்ட் சுவரை தாண்டி தெருவிற்கு வந்து நான்கு வீடுகள் தள்ளியதும் “ஹேய் ” என கைகளை உயர்த்தி மெலிதாக கூச்சலிட்டாள் தாரிகா.

 ” ஏய் ஏன் இப்படி கத்தி தொலைக்கிறாய்?  யார் பார்வையில் ஆவது பட்டோம் தொலைந்தோம்.” சுகந்தி அவள் கைகளில் மெலிதாக அடித்தாள்.

” என் சுதந்திரத்தை நான் கொண்டாட வேண்டாமா சுகா … சுகந்தி? ”  கேட்டுவிட்டு கண்ணடித்தாள் தாரிகா.

” அதென்ன சுகா சுகந்தி ? “

” அது உன்னுடைய செல்லப்பெயர் தானே? “

” ஆமாம் மாமா மட்டும் தான் என்னை அப்படி கூப்பிடுவார்”  சுகந்தியின் குரலில் உரிமை நிலை நாட்டல்.

” அக்கா மகளும் அவருக்கு மகள் போலத்தானே .   அப்படி கூப்பிடுவதில் தவறு ஒன்றுமில்லை.” தாரிக்காவின் விளக்கத்தில் சுகந்தி மௌனமானாள். எந்தப் பேச்சும் இல்லாமல் சிறிது நேரம் இருவரும் மௌனமாக நடந்தனர் இன்னமும் விடியாத தெருக்கள் வெறிச்சோடி இருந்தன. ஊரை விட்டு தள்ளி வரவர வீடுகளின் நெருக்கம் குறைய மெல்ல சூழ்நிலையில் குளிர் வந்தது .சில்லென்ற காற்று உடலை தழுவ இருவருடைய மன இறுக்கமும் கொஞ்சம் குறைந்தது.




“உன் அப்பாவை நீ கடைசியாக எப்போது பார்த்தாய் சுகந்தி ? ”  மெல்ல கேட்டாள் தாரிகா.

” ஏழு வருடங்களுக்கு முன்பு. நான் ஏஜ் அட்டன் பண்ணியபோது”

” அதன்பிறகு அவர் உன்னை வந்து பார்க்கவே இல்லையா? “

” அப்போதுதான் பெரிய பிரச்சினை ஆகிவிட்டதே.   அப்பா அவருடைய தங்கை மகனை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்து பெரிய சண்டை போட்டு விட்டு போய்விட்டார். இரண்டு குடும்பங்களுக்குள் அதற்குப் பிறகு கொஞ்சம் கூட பேச்சுவார்த்தை இல்லை “

“ம் ”  சுகந்தியின் பேச்சை உள்வாங்கியபடி மணலில் கால்கள் புதைய புதைய நடந்தாள் தாரிகா.

” அதோ ஆறு வந்துவிட்டது “சிறு குழந்தையாய் கைகொட்டி குதித்தாள் சுதந்தி.

ஆம்.  அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஆற்றில் குளிப்பதற்காக தான் வந்திருந்தனர் .அந்த ஊரில் வைகை நதியின் கிளை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. சுகந்திக்கு ஆற்றுக் குளியல் மிகவும் விருப்பமானது .ஆனால் பெரிய பெண் ஆன பிறகு வெளியில் போய் குளிக்க கூடாது என்ற கட்டுப்பாடு அவளுக்கு வீட்டில் விதிக்கப்பட்டிருந்தது. எனவே போகும் போதும் ,வரும் போதும் ஆற்றை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இதனை அவள் தாரிக்காவிடம் பகிர்ந்து கொண்ட போது யாருக்கும் தெரியாமல் போய் ஆற்றில் குளித்து வரலாம் என்ற யோசனையை தாரிகா அவளுக்கு சொல்லி கொடுக்க சரிதான் என்று இருவரும் அதனை செயல்படுத்த வந்துவிட்டனர்.

 சுடிதாரின் மேலே போட்டிருந்த சாலை சுழற்றி தரையில் வைத்துவிட்டு மாற்று உடை கொண்டு வந்து இருந்த பையையும் வைத்து அவை காற்றுக்கு பறந்து போகாமல் இருக்க கொஞ்சம் மண்ணை அள்ளி  அவற்றின் மீது போட்டு விட்டு இருவரும் கைகளை பிடித்துக் கொண்டு ஆற்று நீரினுள் இறங்கினர்.




முதலில் ஜில்லென்று குளிர்ச்சியுடன் உடம்பை நனைத்து வெடவெடக்க வைத்த நீர் நேரம் போகப் போக  உடம்பினுள் சுகமாக இறங்கியது.  இரண்டு பெண்களுமே நீச்சல் தெரிந்தவராக இருந்தபடியால் பயமின்றி ஆற்றின் நடுப்பகுதி வரை நீந்தி சென்று ஆனந்தமாக குளித்தனர் .தாரிகா இதற்கு முன்பு நீச்சல் குளத்தில் மட்டுமே குளித்திருக்கிறாள் . வெதுவெதுப்பாக  குளோரின் வாடையுடன் இருக்கும் அந்த நீரிலேயே பழகியிருந்த அவளுக்கு ஏதோ ஒரு மூலிகை மணத்துடன் ஜில்லென்று இயற்கை சுமந்து இருந்த இந்த ஆற்று நீர் சொல்ல இயலாத ஒரு உன்னத உணர்வை கொடுத்தது.

“இந்தக் குளியலை என்னால் மறக்கவே முடியாது சுகந்தி ”  தாரிகா அனுபவித்து சொன்னாள்.

” என்னாலும் இந்த ஊரையும் இந்த இயற்கையையும் விட்டுப் பிரியவே முடியாது” சுகந்தி உணர்வுபூர்வமாக சொன்னாள்.

” அதனால்தான் படிப்பதற்கு கூட வெளியூர் போகாமல் படிப்பையே விட்டு விட்டாயா? “

” அப்படியும் வைத்துக்கொள்ளலாம் “

 ” அப்படியும் என்றால் அதைத் தவிர வேறு ஏதோ ஒன்றும் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? “

சுகந்தி மௌனமாக நீருக்குள் மூழ்கி குளிக்க தொடங்கினாள். தாரிகா அவள் தோள்களைப் பற்றி எழுப்பினாள்.

”  சுகந்தி என்னை உற்ற தோழியாக நினைத்து உன் மன எண்ணங்களை நீ என்னுடன் தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளலாம்.”

” என் மன எண்ணங்களை உன்னிடம் சொன்னால் நீ தாங்குவாயா ? எனக்கு மயில்வாகனன் மாமாவை திருமணம் செய்துகொண்டு இந்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என்னும் எண்ணம். அதனை உன்னால் நிறைவேற்ற முடியுமா?” சுகந்தி ஆங்காரமாக கேட்டாள்.




சுகந்தியின் முகத்திற்கு நேரான பேச்சு தாரிகாவின் உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் இறங்கியது . அவள் அப்படியே ஸ்தம்பித்து நீருக்குள் நின்றாள். சுகந்தி நீருக்குள் மூழ்கி மீண்டும் குளிக்க தொடங்கினாள். அதிர்ந்து நின்ற தாரிக்காவின் நடு முதுகில் யாரோ ஒரு குத்து வைத்தது போல் ஒரு அதிர்வு.  குனிந்து நீருக்குள் விழுந்தவள் மீண்டும் எழுந்த போது சுகந்தி நீருக்குள் மூழ்கி கொண்டிருப்பதை உணர்ந்தாள். சட்டென மனக்கவலைகளை உதறியவள் சுகந்தியை பிடிக்க முனைந்தாள்.   நீரின் போக்கிற்கு போய்க்கொண்டிருந்த சுகந்தி தாரிக்காவையும் தன்னோடு சேர்த்து இழுத்தாள்.

முன்பே சிறு மன அதிர்ச்சியில் இருந்த தாரிகா சட்டென சுதாரித்துக்கொள்ள முடியாமல் தவித்து சுகந்தியின் இழுவைக்கு தானும் இழுபட்டு நீருக்குள் மூழ்க ஆரம்பித்தாள். உனக்கு நீச்சல் தெரியும் நீச்சல் அடிக்க ஆரம்பி பலவீனமாக தாரிகாவின் மனது மூளைக்கு கட்டளையிட அதனை அவளது கையோ காலோ செயல்படுத்தவில்லை. இனி தான் ஜலசமாதி தான் என்று தாரிகா நினைத்துக் கொண்டிருந்தபோது திடீரென அவளது தலைமுடி வலுவாக பற்றி இழுக்கப்பட்டது. நீருக்கு அடியில் இருந்து அவள் முகம் மேலே வந்து வெளி காற்றை சுவாசித்து மூச்சு வாங்கினாள். மறு நொடியே மீண்டும் நீருக்குள் இழுக்கப்பட்டு அமிழ்த்த முயல பட்டாள்.

” சுகந்தியின் தலைமுடியை பிடி. இழு ”  எங்கோ தூரத்தில் ஒரு குரல் அவளுக்கு மாறி மாறி உத்தரவிட அனிச்சையாக சுகந்தியின் நீளமான தலைமுடியை தன் கைகளில் சுருட்டிக்கொண்டு இழுத்தாள் தாரிகா. அவள் கையோடு சேர்ந்து சுகந்தியும் மேலே வந்தாள். இருவரும் இருவரும் இரண்டே நிமிடங்களில்  ஆற்றின் கரையில் கிடந்தனர். அவர்கள் முன்பு மயில்வாகனன் நின்றிருந்தான் இருவரது கன்னங்களையும்  பட் பட்டென்று தட்டினான். தாரிகாவிற்கு  முதலில் விழிப்பு வந்து விட , சுகந்திக்கு மெல்லத் தான் விழிப்பு வந்தது .

விழித்து எழுந்த வேகத்தில் மாமா என்ற கத்தல் உடன் அவள் மயில்வாகனனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.  அவன் சுகந்தியின் தலையை வருடி சமாதானம் செய்தான் .தாரிகா இருவரையும் வெறிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நீரில் மூழ்க இருந்த இருவரையும் மயில்வாகனன் காப்பாற்றி இருக்கிறான் என்பது புரிந்தது. ஆனால் இவன் ஏன் இப்போது வந்தான் தாரிகா எரிச்சலுடன் இப்படித்தான் நினைத்தாள்.

 ” சுகா அழாதேம்மா ஒன்றும் இல்லை நாம் இப்போது நம் வீட்டிற்கு போய் விடலாம் “அத்தை மகளை சமாதானம் செய்தான் மயில்வாகனன்.  மாமனின் தைரியத்தில் எழுந்து கொண்டவள் தனது பையை தேடி எடுத்தாள். தானும் குனிந்து பையை எடுத்த தாரிகா நிமிர்ந்தபோது மயில்வாகனனின் கண்களை சந்தித்தாள்.




அவனது கண்கள் அப்போது அரையிருளில் மினுங்கியபடி தாரிகாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன.  குனிந்து தன்னை பார்த்துக்கொண்ட தாரிகா உடலோடு மற்றொரு தோல் போல் ஒட்டிக் கொண்டிருந்த தன் உடையை பார்த்தாள். ஈரத்தில் நனைந்து இருந்த அவளது உடை அவள் உடலின் வடிவழகை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி எடுத்துக்காட்டியது.

இதென்ன பார்வை? இவன் என்னைத்தான் பார்க்கிறானா ?  தாரிகா ஒரு கூச்சத்துடன் ம ண்ணில் கிடந்த சாலை தன் தோள்களில் போட்டுக் கொள்ள போனாள் .  தடுத்து அவள் கையிலிருந்த சாலை வாங்கிய மயில்வாகனன் அதில் இருந்த மண் போக அதனை சட்டென்று உதறினான். இப்போது தானே சாலை அவளது தோள்களில் சரியாக போட்டு விட்டான் .இம்மியும் நகராமல் அவனது பார்வை அவள் உடலின் மீது பதிந்து இருந்தது.

” இப்படித்தான் தனியாக வருவீர்களா ?  “அதட்டலாக ஒலித்த குரலுடன் நீண்ட அவனது கை தாரிகாவை தன்னருகே அழைத்து கொள்ளும் எண்ணத்தில் இருந்தது. உடனடியாக அவன் கை வளையத்திற்குள் நுழைந்து கொள்ள தாரிகா தயங்கி நின்றபோது தயக்கமின்றி அங்கே நுழைந்து கொண்டாள் சுகந்தி.

” தெரியாமல் செய்துவிட்டேன் மாமா “மெல்லிய விம்மலுடன் மன்னிப்பு கேட்டாள்.

 ”  சரி வாருங்கள் போகலாம் “மயில்வாகனனின் மற்றொரு கை இப்போது தாரிகாவிற்கு என நீண்டது தாரிகா உதட்டை சுழித்து அதை அலட்சியப்படுத்தி முன்னால் நடக்க துவங்கினாள்.

” இப்படி தனியாக வரக்கூடாது என்று உனக்குத் தெரியாதா சுகந்தி? ”  அதட்டியபடி நடந்த மயில்வாகனனை ஓரக்கண்ணால் பார்த்தாள் தாரிகா.

இவன் ஏன் இப்படி கம்பீரமாக இருந்து தொலைகிறான் .  ஈரம் சொட்டச் சொட்ட குளித்து முடித்து கரையேறிய களிறென நடந்து வந்த மயில்வாகனனை பார்த்து எரிச்சலுடன் நினைத்தாள். இதனால் தானே இவள் இப்படி அவனுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறாள். இதற்கு மேலும் அவர்களை பார்க்க பிடிக்காமல் பாதங்களை அகற்றி வைத்து வேகமாக முன்னால் நடந்தாள்.

நன்றாக விடிவதற்குள் வீட்டிற்குள் நுழைந்து விட்டனர் .” சுகந்திம்மா … அம்மாடி…”  கூச்சலுடன் ஓடிவந்த சங்கரேஸ்வரி மகளை ஆரத்தழுவிக் கொண்டாள்.”  ஈரக் குலையே நடுங்கிடுச்சும்மா.” சங்கரேஸ்வரியின் குரல் உண்மையிலேயே நடுங்கி கொண்டுதான் இருந்தது. தாய் மகளின் பாச பரிமாற்றத்தை பார்த்தபடி தாரிகா மாடி ஏறினாள். அவள் மனதிற்குள் தாயின் நினைவுகள்.

” டிரஸ்சை மாற்றிக் கொள்ள வில்லையா ?   கேட்டபடி அறைக்குள் வந்து நின்றான் மயில்வாகனன். ஈர உடையை மாற்றும் எண்ணம் இன்றி தாரிகா அப்படியே கட்டிலிலேயே அமர்ந்து விட்டிருந்தாள்.

” உன் அம்மா ஞாபகமா ? ”    மயில்வாகனன் அவள் அருகே வந்து நின்று மென்மையான குரலில் கேட்டான். உடலும் மனமும் சோர்ந்து இருந்த அந்த கணத்தில் தாரிகா ஒரு விம்மலுடன் சட்டென்று அவன் மேல் சாய்ந்து விட்டாள். அவள் முகத்தை வெதுவெதுப்பான தனது வயிற்றில் தாங்கிய மயில்வாகனன் மென்மையாக அவள் தலையை வருடி விட்டான்.

” என்ன இது ? சின்ன பிள்ளை மாதிரி …ம் ? ” முகத்தில் வழிந்து கிடந்த அவள் தலைமுடிகளை ஒதுக்கியவன் பின்னலை அவிழ்த்து விட்டான். பீரோவை திறந்து அவளது மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு போய் பாத்ரூமிற்குள் வைத்துவிட்டு அவள் கையை பிடித்து எழுப்பி பாத்ரூமிற்குள் அழைத்துப்போனான்.

” உடைகளை மாற்றிக் கொண்டு வா”  பாத்ரூம் கதவை மூடி விட்டு வெளியேறினான்.

ஈர உடையை களைந்து உடம்பு தலையைத் துவட்டி உலர்ந்த உடைகளுக்கு மாறிய பிறகு உறைந்திருந்த தாரிகாவின் உள்ளம் சிந்திக்கத் தொடங்கியது.  சே என்ன இது அவனிடம் போய் இப்படி பலவீனமாக நடந்து கொண்டேனே என்று நினைத்தவள் மனதில் சற்று முன் ஆற்றங்கரையில் அவன் சுகந்தியை அணைத்து நின்ற தோற்றம் நினைவில் ஆடியது.




” எப்போதும் என்னை வேவு பார்த்துக் கொண்டே பின்னாலேயே வருவீர்களா ? ” பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததும் தனக்காக கட்டிலில் அமர்ந்து காத்து காத்து கொண்டிருந்த மயில்வாகனனை பார்த்துகேட்டாள்.  அவனது கண்கள் கோபத்தால் சிவந்தன.

 ” ஏய் என்னடி பேச்சு திமிராக வருகிறது ? “ஆண் சிங்கமாய் உறுமி நின்றான் அவன்.

” நீ தான் சோறு போட்டு வளர்த்தாயாடா ? ”  வழக்கமான வாய் துடிப்புடன் கேட்டு விட்டவள் அவனது முகபாவனையை கண்டதும் சட்டென வாயை மூடிக்கொண்டாள். ஆனால் அதற்குள் மயில்வாகனன் வெறிகொண்ட முகத்துடன் அவளருகே மிக நெருங்கி இருந்தான்.

” திரும்பவும் டா  …ம் ? ”  கேட்டபடி  அவளது கூந்தலுக்குள் இரு கை விரல்களைச் செலுத்தி அவளைப் பிடித்து உலுக்கினான்.

இல்லை மயங்கிவிடக் கூடாது தாரிகா உறுதியுடன் இரு விழிகளையும் அகல விரித்தபடி நின்றிருக்க அவள் விழிகளுக்குள் தன் விழிகளை செலுத்தி பார்த்தான். தாரிகாவிற்க்கு இப்போதும் மயக்கம் வரும் போலத்தான் இருந்தது ஆனால் இந்த மயக்கம் வேறு விதமாக இருந்தது.  மயங்கி விட்டால் தான் என்ன என்று செல்லமாக அவள் மனது கேட்டுக்கொண்டது. இமை அசைக்கும் பொழுதுதான் மயில்வாகனனின் இதழ்கள் தாரிகாவின் இதழ்கள் மேல் அழுத்தமாக படிந்து சில நொடிகள் நீடித்து பின் விலகியது.

 கண்கள் சொறுக மயக்கத்திற்குள் விழ இருந்தவள் இறுதி நிமிடத்தில் தலையை உதறி தன்னை மீட்டுக் கொண்டாள்.”  எனக்கு உங்களை பிடிக்கவில்லை” அறிவித்துவிட்டு அறைக்கதவை நோக்கி நடந்தாள்.

 ”  இனி என்னை கேட்காமல் வீட்டை தாண்டி கால் எடுத்து வைத்தாயானால் காலை உடைத்து விடுவேன்” அராஜகமாக ஒலித்தது மயில்வாகனனின் குரல்.

 இவன் வைத்த சட்டமா?   நான் உன் அப்பாவிடம் பேசிக்கொள்கிறேன் மனதிற்குள் அவனோடு தர்க்கம் நடத்தியபடி படியிறங்கி கீழே வந்தவளின் முன் முகத்தில் கோபம் காட்டி நின்றிருந்தார் தர்மராஜா.

” என்னம்மா என்ன வேலை செய்து வைத்திருக்கிறாய்?   இனிமேல் எங்களை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறாதே ”  சற்றுமுன் மகன் சொல்லிய அதே செய்திதான் .தகப்பனின் வாயில் இருந்து சற்றே வேறு வார்த்தைகளில் வந்து விழுந்தது. தாரிகாவின் மனம் அனைத்தையும் வெறுக்கத் துவங்கியது.




What’s your Reaction?
+1
17
+1
11
+1
2
+1
0
+1
2
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!