Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-11

11

வீட்டில் போரடித்து அமர்ந்திருந்தவளை பார்த்ததும் புரிந்து கொண்ட தர்மராஜா ” வாம்மா …நம்ம இடங்களையெல்லாம் பார்க்கலாம் ” என அழைத்து வந்திருந்தார் .” சாப்பிட்டாய் தானே ?” என்ற குறிப்பு கேள்வி ஒன்றை கேட்டபடி தான் அந்நேரத்தில் அவரது ஓரப்பார்வை மனைவி தமயந்தி யின் மேல் நிலைத்திருந்தது. தமயந்தி முன்பே குனிந்திருந்த தலையை இன்னும் சற்றுக் குனிந்து கொண்டாள் .

” நூறு குடும்பத்திற்கு கைத்தறி வாங்கிக் கொடுத்திருக்கேன் மருமகளே .  நூலு , சாயம் எல்லாம் வாங்கிக் கொடுத்துடுறது. அவுக நமக்காக நெய்து கொடுக்காக. கூலி கொடுத்துடுறோம். ஏதோ ஓய்ஞ்சி போய்கிட்டு இருக்குற இந்த தொழிலை காப்பாத்த நம்மாலான சின்ன ஒத்தாசை ” தர்மராஜா அவளைக் கூட்டிக் கொண்டு நடந்த தெரு முழுவதும் கடக் கடக்கென தறிகளின் சத்தம். வீடுகளின் முற்றங்களில் சாயமேற்றிய நூல் திரடுகள் காய்ந்தபடி இருந்தன .

” ஒரு சேலை நெய்ய எவ்வளவு கஷ்டப்படுறாங்க மாமா.  நாங்க  அந்த புடவையை கடையில் வாங்கும் போது இது சரியில்லை. அது சரியில்லைன்னு ஈசியாக தூக்கி போட்டு விடுகிறோம்.” வருத்தம் தோய பேசிய தாரிகா சற்று முன்புதான் சில வீடுகளினுள் நுழைந்து தறிகளில் சேலை நெய்வதை பார்த்திருந்தாள் .

” எல்லா வேலைகளிலும் கஷ்டம் இருக்கும் மருமகப் பொண்ணே.  உருவாக்குறவக கஷ்டத்தை  உபயோகிக்கிறவுக புரிஞ்சிக்கிட்டா எல்லா தொழிலும் செழிச்சு நம்ம நாடும் முன்னேறிடும் “

தாரிகா அவரை ஆச்சரியமாக திரும்பி பார்த்தாள் .எவ்வளவு சரியான கருத்து .இந்த ஊரை தாண்டாத இந்த கட்டுப்பெட்டி மனிதர் எத்தனை அழகாக சொல்லிவிட்டார்.  முன்பே அவர் மேல் இருந்த மரியாதை தாரிகாவிற்கு மேலும் பெருகியது. கூடவே தன் தாயின் பேச்சும் நினைவு வர , பவ்யமும் பாசமுமாக அவரை ஏறிட்டாள் .

” ஏன் மாமா …என்னை பெயர் சொல்லிக் கூப்பிடலாமே …? எதற்காக மருமகளேன்னே கூப்பிடுறீங்க ? “

தர்மராஜாவின் முகம் கனிந்தது. ” நீ என் மருமகள் பெண்ணே. என் மகன் மயிலின் மனைவி. என் வீட்டு மகாலட்சுமி.  முன்னே இது நடக்கும்னு நான் எதிர்பார்க்காத நாள் ஒன்று இருந்தது . உன்னை மருமகளாக்கிக் கொள்ள ஆசைப்பட்டு அது நிராசையான நாள். இன்று எங்கூரு முத்தாலம்மன் அருளாள அது நடந்து நீ என் வீட்டு மருமகளாகி விட்டாய். இதை நான் கொண்டாட வேண்டாமா ? முதலில் எனக்கு நானே தெரியப்படுத்திக் கொள்கிறேன். அதுதான் அடிக்கடி  இந்த மருமகளே …”

பெருமிதமும் ,  பரவசமும் போட்டி போட்ட மாமனாரின் முகம் தாரிகாவிற்கு விந்தையாக பட , ” என்ன சொல்றீங்க மாமா ? என்னை மருமகளாக்கிக்க ஆசைப்பட்டீங்களா ? அது நடக்கவில்லையா …? அப்பா மறுத்து விட்டாரா ? ” ஊகித்துக் கேட்டாள்.

” ஏன் அப்படிக் கேட்கிறாய் ? “

” அம்மாதான் உங்கள் மேல் ரொம்ப அபெக்சனாக இருக்கிறார்களே. அப்போது அப்பாதான் மறுத்திருக்கனும். சரிதானே …? ” கேட்டுக் கொண்டிருக்கும் போதே அப்பா மறுத்ததன் பின்னணியில் இருந்திருக்கக் கூடிய நியாயமான காரணம் நினைவில் வந்து மனம் கசந்தது .




” உன் அப்பனை போகச் சொல்லு .மடப்பய …”   தர்மராஜாவின் குரலில் இருந்த நிஜ வெறுப்பு தாரிகாவின் மனதை சுரண்டியது .

அவள்  எப்போதும் அப்பா செல்லம்தான்.  அப்பா என்றால் அவளுக்கு மிகுந்த பிரியம். அப்பாவிற்கோ மகள் மீது உயிர் என்றே சொல்லலாம். தனது அருமை அப்பாவை இவர் மடப்பய என்று சொல்வதா ? ஆட்சேபமாக பார்த்தவளின் தலையை வருடினார் தர்மராஜா .

”  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்லுவாக .அதுக்கு உன் அப்பன்தான் சரியான உதாரணம் “

” என் அப்பா சென்னையில் எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியுமா ?  அவர்கிட்ட பேசுறதுக்கு மந்திரிங்களே அப்பாயின்மென்ட் வாங்கிட்டு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க “

”  ம் …ம் …தெரியும் மருமகளே.அந்த கெத்துதானே அவனை தப்பு தப்பா யோசிக்க வச்சது “

” ப்ச் அப்பாவை தப்பாக பேசினால் எனக்கு பிடிக்காது ”  உத்தரவாக பேசி முகத்தை உர்ரென வைத்துக் கொண்டாள் .

தர்மராஜா அவளது பாவனையில் சிரித்து விட்டார். “ஊருக்குள் உன் அப்பன் பெரிய மனுசன்.வீட்டிற்குள் எப்படியோ ? “

தாரிகா அமைதியாகி விட்டாள் .  இந்த விசயத்தில் அவளால் அப்பா பக்கம் பேச முடியாது. அது அவளது அம்மாவிற்கு செய்யும் துரோகம் .

” அம்மாவிற்கும் , அப்பாவிற்கும் எப்போதும் ஒத்துப் போவதே இல்லை ”  மெல்லிய குரலில் சொன்னவளின் மனதில்  ஏய் ..பட்டிக்காடு என தாயை விளிக்கும் தந்தையின் குரல் நினைவில் பூரானாய் ஊர்ந்தது.

” இதைத்தான் நான் அன்னைக்கும் சொன்னேன். யாரு கேட்டாக ? ”  தர்மராஜாவின் குரலில் இயலாமையின் தவிப்பு .

” உங்களுக்கு அப்பாவை எப்படித் தெரியும் மாமா ? “

” ப்ச் …தெரியும்.அந்தக் கழுதைப்பய பேச்சை பேசாதே மருமகளே “

” நான் அப்பாவோட பெட்” அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாள் இந்த வார்த்தைகளை.

தர்மராஜா நடையை நிதானம் ஆக்கி அவளைத் திரும்பிப் பார்த்தார். மெல்ல மீசையை நீவி விட்டுக் கொண்டார் கடினமாக இருந்த அவரது முகம் அவளை பார்க்க பார்க்க மெல்ல இளகியது .புன்னகைத்தார்.

“பெட் என்றால் செல்லப்பிராணி என்ற அர்த்தம் தானே ?  அதாவது நாம் வீட்டில் வளர்க்கும் நாய் குட்டி பூனை குட்டி போல அப்படித்தானே?  உன் அப்பன் எண்ணமும் அதுதான். மனைவியோ மகளோ அவன் காலைச் சுற்றி வரும் செல்லப்பிராணிகள் தான் அவனுக்கு. நீ மிகச் சரியான வார்த்தைகளை உபயோகித்து இருக்கிறாய் மருமகளே” பாராட்டுகளோடு அவள் தோளை தட்டிக் கொடுத்தார்.

தாரிகா திகைத்தாள் இப்படி அர்த்தம் எடுத்துக் கொண்டால் என்ன செய்வது ? தொடர்ந்து எண்ணத்தை ஓடவிட்டவளுக்கு தனது தந்தையின் குணநலன்கள் மனத்திரையில் ஓடியது.

” ஏய் இதோ இங்கே பாரு இந்த பையன் தான் நம்ம தாருவுக்கு நான் செலக்ட் செய்து இருக்கிறேன். எல்லா விஷயமும் பேசி முடித்து விட்டேன். அடுத்த மாதம் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி ஆயிற்று ”  போட்டோவுடன் பையனின் விபரங்கள் அடங்கிய கவரை அம்மாவின் முன் அப்பா எறிந்த நாள் ஞாபகத்திற்கு வந்தது.

அப்பாவின் இந்த அணுகுமுறை அவளுக்கு அதிருப்தி தான் என்றாலும் அவர் மணமகனாக அவளுக்கு கொண்டு கௌசிக் குறித்து எந்த அசத்தியம் அவளுக்கு கிடையாது .அமெரிக்காவில் எம் எஸ் படுத்திருந்தான்.  மிக உயர்ந்த பணக்கார பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன் திருமணம் முடிந்ததும் அவளையும் அழைத்துக்கொண்டு போய் அமெரிக்காவில் செட்டில் ஆகும் முடிவில் இருந்தான்.

” அந்தப் பையனை உனக்கு பிடித்து இருக்கிறதா தாரு? ”   என்ற சாந்தாமணியின் எதிர்பார்ப்பு கேள்விக்கு  ” சென்ட் பர்சென்ட்  மா”  என தயங்காமல் பதில் சொல்ல அன்று தாரிக்காவால் முடிந்தது.

” எனக்கு லேசாக தலை வலிப்பதுபோல் இருக்கிறது மாமா.  நான் வீட்டிற்கு போய் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளட்டுமா? ” மாமனாரை எதிர்கொள்ளமுடியாமல் இந்த தலைவலி வந்திருப்பதை தாரிக்காவும் உணர்ந்தே இருந்தாள்.

” அனுப்பி விடுங்கள் அப்பா.  பிறகு மயக்கம் போட்டு விழுந்து வைப்பாள் .திரும்பவும் நான் அவளைத் தூக்கிக்கொண்டு திரிய வேண்டும் “பின்னிருந்து வந்த சத்தத்தில் அதிர்ந்து திரும்ப இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி கொண்டு மயில் வாகனன் நின்றிருந்தான்.

“எங்கள் பின்னாலேயே வந்து ஒட்டு கேட்டுக்கொண்டு இருந்தீர்களா ?”  தீப் வெகுண்டு கத்தினாள் .மயில்வாகனனின் முகம் சிவந்து கடுமையாக மாறியது.

” என்னடி சொன்னாய் ஒட்டு கேட்கிறேனா? ”  அறைந்து விடுபவன் போன்ற வேகத்துடன் அவன் முன்வர தாரிகாவிற்கு மயக்கம் வரும் போல் ஆனது.




” டேய் மயிலு சும்மா இருடா. அவன் இப்போது தான் மா வந்தான்.  நாம் பேசுவதை கேட்டிருக்க மாட்டான் “தர்மராஜா மகன் மருமகள்இருவரையுமே சமாதானப்படுத்தினார்.

“மயிலு மருமகளை வீட்டிற்கு கூட்டி கொண்டு போ மகனுக்கு உத்தரவிட்டார்  மயில்வாகனன் முறைப்புடன் போய் ஜீப்பை எடுத்தான்.

இந்த மூஞ்சூறு முகரைக்கு பேரு மயிலாம்  மனதிற்குள் நொடித்தபடி முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு ஜீப்பில் ஏறினாள் தாரிகா. m வீட்டு வாசல் முன் ஜீப்பில் ஏற்பட்ட அதிகப்படி குலுக்கல் மயில்வாகனனே உண்டாக்கியது என்பதில் தாரிக்காவிற்கு எள்ளளவு சந்தேகமும் இல்லை. அந்த குலுக்கல் அவளை ஏறக்குறைய ஜீப்பில் இருந்து கீழே உருட்டியது.  விர்ரென்ற ஓசையுடன் தன்னை கடந்து சென்ற ஜீப்பை கோபமாக முறைத்தபடி தாரிகா நின்றபோது அம்மா என்ற ரகசிய குரல் அவளை பின்னிருந்து அழைத்தது.

” செவ்வரளி,  சம்பங்கி”  ஆவலுடன் அழைத்த தாரிக்காவிற்கு சற்று முன் இருந்த கோபம் மறைந்து போயிருந்தது.

” எங்க வீட்டுக்கு பக்கத்துல இந்த பூ பூத்துக் கிடந்தது அம்மா. உங்கள் ஞாபகம் வந்தது. இதை உங்களுக்காக பறித்து கட்டிக் கொண்டு வந்தோம். வாங்கி வச்சிக்கிறீகளா ? ”  ஆவலுடன் கேட்டனர் அந்த சிறுமிகள்.  அவர்கள் கைகளில் மஞ்சள் கலரில் சரமாக தொடுக்கப்பட்ட ஏதோ ஓர் பூ.

தாரிகா இதுபோல் கலர் பூக்களை சூடிக் கொள்வதில் அவ்வளவாக விருப்பம் காட்ட மாட்டாள்.  இப்போதும் அந்த சரத்தை பார்த்தபடி” என்ன பூ? ” இது என்றாள்.

” மஞ்சள் கனகாம்பரம் அம்மா.  நீங்கள் ஐயாவோடு ஜீப்பில் போகும்போது உங்க டிரஸ்சை பார்த்தோம் .அந்த கலருக்கு மேட்சாக இருக்கும் என்று இந்தப் பூவை பறித்து கேட்டுக் கொண்டு வந்தோம்” அந்தச் சிறுமிகளின் ஆவலை குறைக்க தாரிகாவிற்கு மனம் வரவில்லை.

”  சரி நான் இந்தப் பூவை வாங்கி தலையில் வைத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன் என்னை அம்மா என்று கூப்பிட்டு வயதானவளாக ஆக்கக்கூடாது அக்கா என்று கூப்பிட வேண்டும்”




”  இல்லை அம்மா நாங்கள் எல்லாம் உங்களை போன்ற பெரிய வீட்டுக்காரர்களை சிறுவர்களாக இருந்தால் கூட அம்மா என்றுதான் கூப்பிட வேண்டும் .அதுதான் எங்களுக்கு இடப்பட்டிருக்கும் உத்தரவு கைகளை கட்டிக்கொண்டு கூனி நின்ற படி கூறினர் அச்சிறுமிகள். இது தாரிக்காவும் அறிந்த விஷயம்தான். ஆறுமாத குழந்தைகளை கூட ஐயா அம்மா என்றுதான் இவர்கள் கூப்பிடவேண்டும் இது அந்த கிராமத்தில் எழுதப்படாத சட்டம்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது .என்னை நீங்கள் அக்கா என்று தான் கூப்பிட வேண்டும்.  அப்போதுதான் இந்தப் பூவை நான் வாங்கிக் கொள்வேன்” பேரம் போல் பேசினாள்.

” இந்தப் பூவை வாங்கிக் கொள்ளுங்கள் அ..அக்கா”  தடுமாறி சொன்னார்கள்.  தாரிக்கா மன நிறைவுடன் அந்தப் பூவை வாங்கி தனது தலையிலும் சூடிக் கொண்டாள் செவ்வரளி சம்பங்கியின் முகங்கள் அந்த பூக்களை போன்றே மலர்ந்தன. அன்புடன் இருவரது கன்னங்களையும் வருடிவிட்டு தாரிகா வீட்டினுள் நுழைந்தாள்.

” ஏய் உனக்கு அறிவில்லையா அவர்கள் கூட போய் ஸ்நேகம் பிடித்துக் கொண்டு இருக்கிறாயே? ”  கேள்வி கேட்டுக்கொண்டு நின்றிருந்தவள் சுகந்தி.

”  ஜஸ்ட் ஒரு பிரண்ட்ஷிப் தான் சுகந்தி “சொன்னதோடு தோழமையுடன் லேசாக கண்களை சிமிட்டினாள் .சுகந்தி அயர்ந்தாள்.

சிறிது நேரம் கழித்து தாரிகாவின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சுகந்தி மாடி ஏறி அவளைத் தேடி வந்தாள்.” அவர்கள் கூட எல்லாம் பிரண்ட்ஷிப் வச்சுக்க கூடாது நாம் வேறு அவர்கள் வேறு”  எச்சரிப்பது போல் சொன்னாள்.

” நான் வேறு என்ன செய்வது சுகந்தி ?  இந்த வீட்டில் யாரும் என்னோடு பிரண்ட்ஷிப் ஆக பழக மாட்டேன் என்கிறார்கள்”

தாரிக்காவின் குறி தப்பவில்லை.” ஏன் நான் இல்லை ? ” உடனே சுகந்தி பதிலளித்தாள்.

ஒத்த உணர்வுடைய நட்பை விரும்பும் பருவம் சுகந்தி உடையது.  அதனை முதல் நாள் யோசித்து வைத்திருந்த தாரிகா அதற்கு ஏற்றாற் போல் அவளிடம் பேசி இருந்தாள். இப்போது அவளுக்கு சுகந்தியின் நட்பு எளிதாக கிடைத்து விட்டது. அதோ அந்த செவ்வரளி செவ்வரளி சம்பங்கிக்கும் இந்த சுகந்திக்கும் அதிக வித்தியாசம் இல்லை மனதிற்குள் தனக்குத்தானே கை குலுக்கிக் கொண்டாள். வெளியே சுகந்தியின் கையை குலுக்கினாள்.

“இனிமே நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஓகேவா ? “என்றாள்.  சுகந்தி சந்தோசமாக தலையை ஆட்டினாள்.

மதிப்பிற்குரிய மயில்வாகனன் சாரே இனிமேல் தான் என் அக்கறையைப் பார்க்க போகிறீர்கள். இனிமையாய் ஒரு வன்மத்தை உரைத்துக்கொண்டாள் தனக்குள்.




What’s your Reaction?
+1
18
+1
15
+1
2
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!