Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-10

10

 தாரிகாவின் மனம் விழிப்புக்கு வந்ததுமே விழி திறக்காமல் அவள் கைகள் தேடியது  அவளது உதடுகளைத்தான் . முகம் தடவி , மூக்கு வருடி இதழ்களை கண்டு கொண்டவள் , நிம்மதி மூச்சுடன் விழி திறக்க கண்களுக்கு நேராக தெரிந்த அவனது  சிடுசிடு அருகாமை முகத்திற்கு வாய் திறந்து அலற நினைத்து அவனது எச்சரிக்கை பார்வையில் மனத்தை மாற்றிக் கொண்டு வேகமாக வாயை தன் கைகளால் பொத்திக் கொண்டாள் .

 இதனால் இரண்டு நன்மைகள் அவளுக்கு .சமய சந்தர்ப்பம் தெரியாமல் வந்து விழுந்து விடும் அவளது அதிகபட்ச வார்த்தைகளை மறைத்து விடலாம் .கொய்யாவை கவ்வ காத்திருக்கும் அவனது அணில் பார்வையிலிருந்து உதடுகளை காத்துவிடலாம். கூடுதல் பாதுகாப்பாக பொத்திய கைகளுக்குள் உதடுகளை உள் மடித்து வேறு வைத்துக் கொண்டாள் .

” போதும் கையை எடு ” அவனது சிடுசிடுப்புக்கு பயம் வந்தாலும் ,  கையை எடுக்க துணியவில்லை அவள் .

” ஏய் நான் முன்னாலேயே சொல்லியிருக்கிறேன்டி ,  உன்னைக் கற்பழிக்கும் ஐடியா எதுவும் எனக்கு கிடையாது . சும்மா நம்பியாரை பார்ப்பது போல் என்னைப் பார்க்காதே , கையை எடுடின்னா …” பேசிய வேகத்திலேயே அவள் வாய் மறைத்திருந்த கையை பிடுங்கிப் போட்டவனின் பார்வை உள் மடிந்திருந்த அவள் இதழ்களில் இன்னமும் சினம் சுமந்தது.

” என்னடி இது …? ” பட்டென இதழ்கள் அவனிரு விரலால் சுண்டப்பட ,  அதற்கு மேல் பொறுக்க முடியாத தாரிகா வாய் திறந்தாள் .

” இதென்ன அராஜகம் …? எதற்கு  இத்தனை ” டி ” …?  உங்கள் வீட்டு வேலைக்காரியா நான் ? பதிலுக்கு பதில் நானும் பேசுவேன் “

” என்ன பேசுவாய் ? “

” நீங்க ” டி ” சொன்னா நான் ” டா ” சொல்லுவேன் “

அவன் கண்கள் கூர்மையாக அவள் மேல் படிந்தது. ” சொல்லுடி ”  அனுமதி வழங்கிய அவன் குரலில் ஏதோ இருந்தது .

தொண்டை நனைக்க எச்சில் விழுங்கிய தாரிகா மெல்ல வாய் திறக்க ,  அவன் கண்கள் இப்போது அவள் இதழை மொய்த்தன .

” கொஞ்ச நேரம் முன்னால் ஜீப்பில் போகும் போது …” டா ” தானே சொன்னாய் ? ”  அவன் யோசனையோடு தாடை வருட , தாரிகாவின் மூச்சோட்டம் நின்றது .

இவன் இப்போது என்ன சொல்ல வருகிறான் …அவள் ” டா ” சொன்னால் ,  அவன் …மேலே யோசிக்க பயந்தவளுக்கு தலை சுற்றி மீண்டும் மயக்கம் வருவது போலிருந்தது . பட்டென அவளது நாடியை மேல் நோக்கி தட்டி , இன்னமும் திறந்தே நின்ற வாயை மூடியவன் , கூடவே தலையிலும் ஒரு தட்டு வைத்தான்.

”  திரும்பவும் மயங்கித் தொலையாதே .சும்மா உன்னைத் தோளில் சுமக்க என்னால் முடியாது “

அப்படியானால் ஜீப்பில் மயங்கியவளை தோளில் தூக்கிக் கொண்டுதான் வந்தானா ? ஐய்யோ …இதை இந்த வீட்டில் யார் யாரெல்லாம் பார்த்தார்களோ ?




”  ஊரே பார்த்தது .ஒரு தடவைன்னா தெரியாது .தடவைக்கு தடவை பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்தால் ஊர் பூராவும் தெரியத்தானே செய்யும் “

நான் இவ்வளவு பலவீனமானவளாக எப்போது ஆனேன் ?  தாரிகாவின் இதயம் தன்னிரக்கத்தில் துவண்டது.  கல்லூரியில் நடக்கும் நியாயமான போராட்டங்கள் ஆகட்டும் வாலாட்டும் சக மாணவர்களை உடனடியாக தண்டிப்பது ஆகட்டும் எல்லாவற்றிலும். தாரிகாவே முதல் ஆளாக நிற்பாள். தைரியமான இரும்புப் பெண்மணி என்று கல்லூரியில் பெயர் எடுத்தவள்.இதோ இவனை பார்த்த நாளிலிருந்துதான் இப்படி ஆகி விட்டாள்.

” என்னை நீங்கள் பலவீனப்படுத்துகிறீர்கள் ” குற்றச்சாட்டு பார்வை வைத்தாள்.

” நீயும் …என்னை …” அவனது பதிலுக்கு பதில் தெரியாமல் வார்த்தைகள் தேடினாள் .

” பலவீனங்களும் , பலங்களும் ஒரே தட்டில் இருக்கும் ஒரே குணங்கள்தாம்.  நாம் அவற்றை உபயோகிக்கும் இடத்தையும் , தன்மையையும் பொறுத்தே அவை பலம் , பலவீனமென  மாறுபடுகின்றன ” அவன் குரலில் வேகமோ , கோபமோ இல்லை .ஏதோ விளக்கத் துடிக்கும் துடிப்பு .

 அந்த துடிப்பு தாரிகாவிற்கு பிடித்தமாக இருந்த கணத்தின் முடிவில் பிடித்தமற்றதாகவும் மாறியது .அவள் ஆயாசமாக கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். “நான் தூங்கவேண்டும் .”

” ம் …”  என்றபடி எழுந்து கொண்ட மயில்வாகன்னின் குரல் சிங்கத்தின் உறுமலை போல் அவளுக்கு தோன்றியது .

மயங்கி விழுந்தவள் என்ற பரிதாபத்தில் பகலில் அவளுக்கு கட்டிலை கொடுத்தாலும், இரவில் தானே கட்டிலை ஆக்ரமித்துக் கொண்டான் மயில்வாகனன் . பகலில் தூங்கி விட்டதாலும் பழக்கமற்ற பாய் படுக்கையிலுமாக உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் தாரிகா .

ஆழ்ந்த மூச்சுடன்  தூங்கிக் கொண்டிருந்தவனை எரிச்சலாகப் பார்த்தாள். பெண் ஒருத்தியை தரையில் உருட்டி விட்டு விட்டு  இவனுக்கு எப்படி இப்படி தூங்க முடிகிறது? விதானத்திற்குப் போன பார்வையில் சான்ட்லியர் பட்டது.  அன்று அவர்கள் முதலிரவின் போது அது ஆன் செய்யப்பட்டது தான். பிறகு ஆப் பண்ணியே வைக்கப்பட்டிருந்தது.

திடுமென ஒரு குறும்பு தோன்ற எழுந்து போய் அந்த சாண்டில்யர் சுவிட்சை ஆன் செய்தாள்.  பளீரென அறைக்குள் பரவிய வெளிச்சத்தில் எழுந்து கொண்ட மயில்வாகனன் கண்களை துடைத்துக்கொண்டு அவளை முறைத்தான் .சரி தான் போடா என்று சொல்லும் ஆசை தான் அவளுக்கு .ஆனாலும் அவன் அதற்கு கொடுக்கும் பதிலடியே எண்ணிப்பார்த்து அனிச்சையாக தன் வாயை மூடிக் கொண்டாள். அதைப் பார்த்ததும் அவனது முகம் மேலும் கடுத்தது.

 “ஏய் என்னடி பண்ற ?”எரிச்சலாக குரல் கொடுத்தான்.

அவனது டி யை கணக்கிட்ட போதும் பதில் பேச முடியாமல் உதடுகளை மடித்து கொண்டவள் ” சும்மா லைட்டைப் போட்டு பார்த்தேன் “என்றாள்.

“இப்படி நடு ராத்திரியில் பேய் மாதிரி அலைவாயா? ” எரிச்சல் மூட்டினான்.

” எனக்கு தூக்கம் வரவில்லை” தலையை குனிந்து கொண்டு முணுமுணுத்தாள்.

” வந்து படுத்து கண்களை மூடிக்கொண்டால் தூக்கம் தானாக வரும் வா வந்து படு “அதட்டினான்.

லைட்டை ஆப் செய்து விட்டு  வந்து படுத்த தாரிகாவிற்கு தூக்கம் துப்பரவாக வரவில்லை. மனம் அன்று பகலில் நடந்த சம்பவங்களுக்கு போனது.  தமயந்தி அந்த சிறுமிகளிடம் காட்டிய கடினம் நினைவிற்கு வந்தது .கட்டிலில் படுத்திருந்த மயில்வாகனனை ஏறிட்டாள்.

தாழ்ந்த ஜாதி என்று சிலரை ஒதுக்குகிறார்களே இதுதான் உங்கள் கிராமத்தின் பண்பாடா ?”  என கேட்டாள்.

”  யார் ?  யாரை ? ” அலட்சியமாக வழிந்தது அவனது குரல்.

 ” அந்தச் சின்னப் பொண்ணுங்க செவ்வரளியையும் சம்மங்கியையும் . ஒதுக்கியது உங்கள் அம்மா “

” ம் .  தப்புதான் ஆனால் இவற்றையெல்லாம் நாம் மாற்ற மாற்ற நினைப்பது கொஞ்சம் கடினமானது. இங்கே அப்படியே பழகிவிட்டார்கள்  இவற்றை மாற்ற சில தலைமுறைகள் கூட ஆகலாம்”




” ஆனால் மாற்றி விடலாம் தானே?  மாற்ற வேண்டும் தானே? “

” ஆமாம் மாற்றத்தான் வேண்டும்”  அவனது இந்த ஒப்புதலே தாரிகா விற்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது.

” அந்தப் பொண்ணுங்க கரிமூட்டம் என்று ஏதோ சொன்னார்கள் .அப்படி என்றால் என்ன ? “

” அது ஒரு தொழில்.  தரிசு நிலத்தில் வெட்டியாக வளர்ந்து கிடக்கும் கருவேல மரங்கள் போன்ற மரங்களை வெட்டி வந்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மூட்டம் போட்டு எரிய வைத்து கரித்துண்டுகள் ஆக மாற்றுவது. இதற்குத்தான் கரிமூட்டம் என்று பெயர் இந்த கரித்துண்டுகளை அவர்கள் விலைக்கு விற்பார்கள். இதுதான் அவர்களது தொழில் ” மயில்வாகனன் விளக்கினான்.

தாரிகா விழிகளை விரித்தாள் .” இப்படி ஒரு தொழிலா?”

“ம் .  இவர்கள் ஆதியில் விவசாயிகள் தான் மழை பொய்த்து விவசாயம் அழிந்து போனதும் வேறுவழியின்றி இந்த தொழிலை கையில் எடுத்துக் கொண்டுள்ளனர்”

“ப்ச். பாவம் இல்ல? “

“ம் . பாவம்தான் தூங்கு “

” இவர்களுக்கு நாம் ஏதாவது செய்யலாமே ? “

” செய்யலாம் செய்யலாம் தூங்கு காலையில பேசலாம்”

தாரிகாவிற்கு தூக்கம் வர மறுத்தது .  கரியை அப்பியது போல் கருப்பாக இருக்கும் அந்தச் சிறுமிகளின் நினைவு வந்தது . நெருப்பிலேயே வெந்து வெந்து அல்லவா இப்படி கரித்துண்டுகள்  போலவே அந்த சிறுமிகளும் மாறிவிட்டார்கள்.

”  படிக்கும் வயது அந்த சிறுமிகளுக்கு .இந்த வயதில்  இப்படி ஒரு கொடுமை அவர்கள் வாழ்வில் .நாம் ஏன் அவர்களைப் படிக்க வைக்கக் கூடாது? “

” வைக்கலாம் தான் . ஆனால் அதெல்லாம் பெரிய வேலை.  இதற்கு முதலில் அவர்கள் சம்மதிக்க வேண்டும் .நமக்கு பொருளாதாரம் வேண்டும் எல்லாம் சேர்ந்து ஒத்து வர வேண்டும்”

 இந்த விஷயத்தில் மயில்வாகனன் சற்று அலட்சியம் காட்டுவதாக தாரிகாவிற்கு தோன்றியது. அது சரி இவர்கள் வீட்டு பெண்ணையே இவர்கள் படிக்க அனுப்ப மாட்டார்கள். வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள்.  ஊர் பெண்களின் படிப்பை பற்றி இவர்களுக்கு எங்கே கவலை இருக்க போகிறது என்று நினைத்துக் கொண்டாள். அந்தக் கணத்தில் அவள் மனதில் வந்து நின்றவள் சுகந்தி தான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் இரண்டு வருடங்களாக அவள் வீட்டில் இருப்பதை அறிந்திருந்தாள்.




”  சுகந்தியின் படிப்பு அவளது மனம் சம்பந்தப்பட்டது அதில் நாங்கள் ஏதும் சொல்வதற்கில்லை” தன் மன ஓட்டத்திற்கு பதில் போல் ஒலித்த மயில்வாகனனின் குரலில் திடுக்கிட்டாள்.

”  அவளுக்கு நல்லது செய்யும் நிலையில் இருப்பவர்கள் நீங்கள்தானே நீங்கள்தானே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் ? “

” நாங்கள் செய்வது நல்லது ஆனாலும் அதனை அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே. நான் அத்தையை சொன்னேன்.”

” ஏன் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் ?”

” முதலில் நாங்கள் நல்லது தான் செய்கிறோம் என்பதை உணர வேண்டும் அல்லவா ? “

” அதனை நீங்கள் தானே அவர்களுக்கு உணர வைக்க வேண்டும் “

” அத்தை விஷயம் இருபுற கூர்மையான கத்தி அவர்களை கையாள்வது மிகவும் கடினம் “

”  உங்களுக்கு அக்கறை இல்லை என்று சொல்லுங்கள் குற்றத்தை அவர்கள் மேல் சுமத்தாதீர்கள்”

விருட்  என்ற சத்தம் கட்டில் மேல் கேட்க தாரிகா கொஞ்சம் பயந்து போனாள் மயில்வாகனன் தான் அப்படி சட்டென்று திரும்பி இருந்தான். இருட்டிலும் அவன் கண்கள் ஒளிர்ந்தன.

”  மதிப்பிற்குரிய மேடம் தாரிகா அவர்கள் தாங்களே அந்த அக்கறையை முயலலாமே ” அவனது நக்கல் பேச்சில் தாரிகாவிற்கு கோபம் வந்தது.

” நிச்சயம் நான் முயலத்தான் போகிறேன்.”  சொல்லிவிட்டு போர்வையை முகத்திற்கு மேலே மூடிக்கொண்டு தூங்கத் தொடங்கினாள்.

” வாழ்த்துக்கள் “மயில்வாகனனின் குரல் போர்வைக்கு வெளியே மெலிதாகக் கேட்டது.




What’s your Reaction?
+1
19
+1
14
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!