gowri panchangam Sprituality

வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்

அன்னை பராசக்தியின் அவதாரங்களில் முக்கியமானது காளி அவதாரமாகும்.கோவில்கள் அனைத்திலும் மேல் விமானமானது கருவறைக்கு மேல் இருக்கும். ஆனால் திருச்சி உறையூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியம்மன் கோவிலில் மேல் விமானம் இல்லாது மழை, வெயில், பனி என அனைத்தையும் தாங்கி பக்தர்களின் குறைகளையும், நோய்களையும் தீர்த்து மக்களைக் காத்து அருள்புரிகிறாள்.

உறையூர் வெக்காளி அம்மன் கோவிலில் நாளை சதசண்டி பெருவேள்வி | Uraiyur Vekkaliamman temple homam

தல வரலாறு

பராந்தக சோழன், உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ தேசத்தை ஆண்டு வந்தான். அவனது ராஜகுரு சாரமா முனிவர். இவர் மிகப்பெரிய சிவபக்தர். திருச்சி மலைக்கோட்டையில் ஒரு நந்தவனத்தை உருவாக்கி, தாயுமான சுவாமிக்கு பூசை செய்து வந்தார்.

இறைவனுக்காக, அந்த நந்தவனத்தில் ஏராளமான பூச்செடிகளை வளர்த்தார். ஆனால் மன்னன் பராந்தகசோழன் தனது மனைவி புவனமாதேவியின் கூந்தலில் சூட, அந்த பூக்களைப் பறித்து சென்றான். சாரமா முனிவரின் அனுமதி பெறாமலேயே, தினமும் அர்சனின் ஆட்கள் நந்தவனத்திற்கு வந்து பூக்களைப் பறித்துச் சென்றனர். இதை அறிந்த முனிவர், மன்னனிடம் சென்று,”மன்னா. நாடுகாக்கும் தாங்களே இப்படி மலர்களை பறித்துச் செல்வது முறையா” என முறையிட்டார்.மன்னர், முனிவரின் பேச்சை மதிக்கவே இல்லை.

“என் ராணிக்குப் போக மீதி பூக்கள்தான் உனது இறைவனுக்கு” என ஆணவம் கொண்டு திட்டினான். இதனால் மனம் வருந்திய முனிவர், இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாயுமானவன் கடும் கோபம் கொண்டார். கிழக்கு நோக்கி இருந்த அவர், மேற்கு முகமாக உறையூரை நோக்கித் திரும்பி தனது நெற்றிக்கண்ணைத் திறந்தார். உடனே உறையூர் நகர் மீது நெருப்பு மழை பொழிந்தது. மக்கள் பயந்து ஊரைவிட்டே ஓடினர்.

மன்னனின் கோட்டை சிதைந்தது. மண்ணில் ஊரே புதைந்துவிட்டது. வீடுகளை இழந்த மக்கள், இந்த நெருப்பு மழையில் பாதிக்காமல் நின்ற உறையூர் வெக்காளி அம்மனிடம் சென்று தங்கள் வீடுகளை தங்களுக்கு திருப்பி தரும்படி பிரார்த்தனை செய்தனர்.

வெக்காளி அம்மன் கருணை கொண்டு, தாயுமான சுவாமியின் சினத்தை தணிக்க, முழு நிலவாக மாறி அவர் முன்பு தோன்றினாள். அன்னையின் குளிர்ந்த பார்வை கண்டு இறைவன் அமைதி கொள்ள, நெருப்பு மழை நின்றது.

 

இந்த நெருப்பு மழையில் அரசி புவனமாதேவியும் சிக்கிக்கொண்டாள். அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். நெருப்பின் உக்கிரம் தாளாமல், காவிரியாற்றில் சென்று குதித்தாள். காவிரி வெள்ளம் அவளை இழுத்துச்சென்றது. உத்தமச்சேரி என்ற இடத்தில் ஒரு அந்தணர் ராணியை காப்பாற்றிக் கரை சேர்த்தார். அவளை தனது இல்லத்தில் வைத்து பாதுகாத்தார். அங்கே அவளுக்கு,”கரிகாலன்” என்னும் மகன் பிறந்தான்.

புவனமாதேவி வெக்காளி அம்மனின் பக்தை. அதன் காரணமாக அவளைக் கருணையோடு அம்மன் காத்தாள். சோழகுலம் தழைத்தது. அன்று உறையூரைக் காத்த அன்னையை நன்றிப் பெருக்கோடு மக்கள் இன்று வரை வணங்கி வருகின்றனர்.




 

 

கோவில் சிறப்பு:

திருச்சி அருகே உள்ளது உறையூர். இந்த ஊருக்கு வாசபுரி, கோழியூர், மூக்கீச்சுரம் ஆகிய சிறப்பு பெயர்கள் உண்டு. சூரவாதித்த சோழன் உருவாக்கிய ஊர் உறையூர்.

உறையூர் அம்மன் சன்னதியில், வடக்கு நோக்கிய யோக பீடத்தில் அமர்ந்து வெக்காளி அம்மன் கம்பீரமாகக் காட்சி தருகிறாள். ஒரு கரத்தில் திரிசூலம், ஒரு கரத்தில் உடுக்கை, மற்றொரு கரத்தில் பாசம், இன்னொரு கரத்தில் அட்சய பாத்திரம் என நான்கு கரங்களை கொண்டிருக்கிறாள்.

கழுத்தில் திருமாங்கல்யமும், முத்தாரம், அட்டிகை, தலையில் பொன்முடி, கையில் வளையல்கள் அணிந்திருக்கிறாள்.

பீடத்தில் வலது காலை மடித்தும், இடது காலை அசுரன் மீது பதியவைத்தும் அருள்பாலிக்கிறாள். இடுப்பில் யோக பட்டம் அணிந்திருக்கிறாள். இந்த கோயில் விமானம் இல்லாத ஒரு கோயிலாகும். வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள்.




 

 

 

மேற்கூறை இல்லாத அம்மன் கோயில்களில், பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள். ஆனால் வெக்காளி அம்மன் வலதுகாலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரன்மீது பதியவைத்திருக்கிறாள்.

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் 14-ந்தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் | uraiyur vekkaliamman temple therottam on 14th

திருவிழா:

இங்கு ஆவணி மாதத்தில் மகா சர்வசண்டி ஹோமம் கடந்த 23 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சித்திரை மாதம் ஐந்து நாட்கள் விழா, பங்குனியில் பூச்சொரிதல் விழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிசேகம், புரட்டாசியில் நவராத்திரி, தை வெள்ளி, ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்.

மக்கள் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் சீட்டில் எழுதி அன்னை முன்புள்ள திரிசூலத்தில் கட்டி விடுகின்றனர். இதன்மூலம் தங்கள் குறைகள் நிவர்த்தியாகும் என நம்புகின்றனர்.அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடையும் புத்திர தோடமும் நீங்கும்.

அம்மனுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!