gowri panchangam Sprituality

செங்கழுநீரம்மன் கோவில் உருவான வரலாறு

தமிழ்நாட்டின் பழைமையான இந்துக் கோயில்களில் அத்தி சிலைகள் ஒரு மாசு மருவில்லாத புனிதமான மரமாகக் விளங்குகிறது. அத்தி மரத்தில் கடவுள் சிலை வடிப்பதை சைவ, மற்றும் வைணவ ஆகமங்கள் அனுமதிக்கின்றன.

அத்தி மர அற்புத சக்தி அதர்வண வேதத்தில் ஒரு பகுதியில் கூறப்பட்டுள்ளது. அரிச்சந்திரன் தனக்குக் கிரீடமும் மற்றும் சிம்மாசனமும் அத்தி மரத்தில் செய்ததாகக் கூறப்படுகிறது. பழம்பெரும் காலங்களில் நம் முன்னோர்கள் அத்தி மரத்தில் தாயத்து செய்து கழுத்தில் போட்டுக்கொண்டனர். இவை அனைத்தும் ஒரு சுகபோகம் பெற செய்யப்பட்டது.




அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாது என்பது போல சுக்ராச்சாரி மறைந்து நின்று தாக்கக்கூடியவர்.மும்மூர்த்திகளின் ஒரே வடிவமாக பார்க்கப்படும் தத்தாத்ரேயர், அத்தி மரத்திலே வாசம் செய்வதாக குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

தல வரலாறு:

வீராம்பட்டினத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் வீரராகவ செட்டியார் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். ஆற்றில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தி வந்த இவரது மனைவியின் பெயர் புனிதவதி. இருவரும் காலையும், மாலையும் கடவுளை வணங்கி சிவபூஜை செய்து நெறியோடு வாழ்ந்து வந்தனர்.




Sengazhuneer Amman Temple : Sengazhuneer Amman Sengazhuneer Amman Temple Details | Sengazhuneer Amman- Veerampattinam | Tamilnadu Temple | செங்கழுநீர் அம்மன்

ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்த வீரராகவ செட்டியார் ஒருநாள் ஊருக்கு மேற்கே உள்ள செங்கழுநீர் ஓடைக்கு சென்று வலையை வீசினார். பலமுறை வலையை வீசியும் மீன் சிக்கவில்லை, கடைசியில் கடவுளை வணங்கி வலையை வீசி இழுத்தார். வலை எளிதில் வராமல் கனத்தது. பெரிய மீன் சிக்கியது என்று மகிழ்ந்து வலையை கஷ்டப்பட்டு இழுத்துக் கரைக்கு கொண்டு வந்தார். கரைக்கு வந்து வலையை பிரித்துப் பார்க்கையில் மீன் இல்லாமல் பெரிய மரக்கட்டை இருப்பதை அறிந்து மனம் நொந்தார்.

ஏமாற்றமும் துயரமும் கொண்ட வீரராகவ செட்டியார் அதனை வீட்டிற்குக் கொண்டுவந்து கொல்லைப் புறத்தில் போட்டார். ஒருநாள் வீட்டில் அடுப்பு எரிப்பதற்கு வீரராகவ செட்டியாரின் மனைவி காய்ந்த அந்த மரக்கட்டையை கோடாரி கொண்டு பிளந்தார். அடுத்த கணம் அம்மா என்று அலறினார். கோடாரி பட்ட இடத்தில் செங்குருதி குபீரெனப் பாய்ந்து வந்தது.

பதறிய செட்டியாரின் மனைவி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துப் பயத்துடன் கட்டையில் இருந்து ரத்தம் வந்ததைக் கூறினார். செய்தி ஊரெல்லாம் பரவியது. இது பரபரப்பாகப் பேசப்பட்டது. இது தெய்வத்தின் அருளே என உணர்ந்த செட்டியார் அந்த கட்டையை வீட்டிற்குக் கொண்டு வந்து மஞ்சள், குங்குமம், மலர் ஆகியவற்றைச் சார்த்தி வழிபட்டு வந்தார்.

செட்டியார் ஒருநாள் வீட்டில் கனவு கண்டார். கனவில் அன்னை சக்தி காட்சி கொடுத்தார். காட்சி கொடுத்த அன்னை “பரமேஸ்வரி” என்னுடைய அருள் வெள்ளத்தின் அடையாளமாக தெய்வ பக்தி நிறைந்த கட்டை உன்னிடம் வந்தது. அதை எடுத்துச் சென்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமாதியான சித்தரின் பீடத்திற்கு அருகில் என்னுடைய உருவத்தையும் வைத்து செங்கழுநீரம்மன் என்ற பெயர் சூட்டி வழிபட்டு வருவாயாக, உன்னுடைய குடும்பத்தையும் ஊர் மக்களையும் காத்தருள்வேன்” என்று அருள் வாக்கினைத் தந்து அன்னை மறைந்தாள். இந்த செய்தி ஊர்மக்கள் அனைவருக்கும் தெரிய வந்ததும் அன்னை சொன்ன இடத்தைத் தேடிக் கண்டு பிடித்தனர்.




அந்த இடம் புதர்களாலும் செடி, கொடிகளாலும் மண்டிக் கிடப்பதைக் கண்டு இடத்தைச் சுத்தம் செய்ய முற்பட்டனர். திடீரென அந்த இடத்தில் இருந்த புற்றில் இருந்து நாகம் படமெடுத்துச் சீறி வெளியே வந்தது. மக்கள் அஞ்சி நடுங்கினர். சீறி வந்த பாம்பு தன் படத்தைச் சுருக்கி பல முறை தரையில் அடித்து மீண்டும் புற்றுக்குள் சென்று விட்டது. இதனைக் கண்ட மக்கள் அதிசயத்து போயினர்.

இது தெய்வச் செயல் என்று எண்ணிய மக்கள் நாகம் காட்டிய இடமே கோவில் அமைக்க ஏற்ற இடம் என்று கோவில் அமைக்க மண்ணைத் தோண்டினர். தோண்டிய இடத்தில் பூமியின் ஆழத்தில் ஒரு சமாதியின் மேல் பரப்பு தென்பட்டது. சமாதியினைக் கண்ட மக்கள் வியப்பும் மகிழ்வும் கொண்டு அங்கேயே கோவில் அமைத்திட உறுதி எடுத்தனர்.

வீரராகவச் செட்டியாரிடம் சேர்ந்திருந்த மர கட்டையைப் பீடமாக வைத்து அதற்கு மேல் அன்னை சக்தியின் தலை உருவத்தைச் சிலை விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்தனர். செங்கழுநீர் அம்மன் என்று அன்னைக்குத் திருநாமம் சூட்டினார். புற்றில் இருந்து வந்த நாகம் அவ்வப்போது வெளியில் வந்து அன்னையின் தலை உருவத்தைச் சுற்றிவந்து காவல் காப்பது போல் நிற்கும்.

இக் காட்சியை மக்கள் கண்டு பயமும் வியப்பும் கொண்டு வணங்கி வந்தனர். சிறு கூரைக் கோவிலாக உருவாக்கப் பெற்று தலையை மட்டும் வணங்கிய மக்கள் காலப்போக்கில் பெருங்கோவிலையும் அம்மனது முழு வடிவையும் அமைக்க எண்ணினர். தேவதாரு மரத்தால் அம்மையின் முழுஉருவமும் உருவாக்கப் பெற்றது.

அம்மை 4 திருக்கரங்களைக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். உடுக்கை, கபாலம், வாள், கப்பரை ஆகியவை அன்னையின் திருக்கரங்களில் உள்ளன. அருள் பொழியும் கண்களோடு காட்சித்தரும் அன்னை கடலை நோக்கி கிழக்குத் திசையைப் பார்த்து நிற்கிறாள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!