gowri panchangam Sprituality

கருணைக் கடலாய்த் திகழும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்

உலகில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களுக்கும் தலைமைப் பீடமாகத் திகழ்வது காஞ்சி காமாட்சி ஆலயம். காஞ்சியம்பதியை சக்தியின் தலைமைப் பீடம் என்றே போற்றுகிறது காஞ்சி புராணம்.




‘நகரேஷு காஞ்சி’ என்று புராணத்திலும் கோயில்களின் நகரம் என இன்றும் கொண்டாடப்படும் காஞ்சி மாநகரில் நடுநாயகமாக தேவி எழுந்தருளியிருக்கும் ஆலயமாக காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் விளங்குகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சக்திகொண்ட காமாட்சி அம்மன் கோயில் | Virakesari.lk

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் கயிலை மலையில், ஒளிமயமான தூய மணிமண்டபத்தில், முதன்மைப் பொருந்திய சிங்காதனத்தின் மீது, தன் அன்புக்கு உரிய உமாதேவி ஒரு பாகத்தில் இருக்க, வேதங்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தார். தாருகன் அழிவுக்குப் பின்னர் ஈசனும், தேவியும் கயிலை மலையில் தங்களுக்கு என அமைந்த ஏகாந்த மண்டபத்தில் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தேவி விளையாட்டாக ஈசன் முதுகுப்புறம் வந்து அவருடைய கண்களைத் தன் இரு கரங்களில் பொத்தினார். இதனால் உலகம் இருண்டது. இருளையே அறியாத தேவலோகம் ஒளி இழந்தது. எங்கும் இருள் சூழ்ந்ததால் படைப்புத் தொழில் நின்றது. யாகங்கள் தடைப்பட்டன. தவங்கள், தானங்களும் கைவிடப்பட்டன. தெய்வ வழிபாடு அறவே ஒழிந்தது. உயிர்கள் மகிழ்ச்சி இல்லாமல் வருந்தின. அறிவு வளர்ச்சித் தடைப்பட்டது. மறை நூல்கள் மறைந்தன. இருளின் வயப்பட்டு உலகமெல்லாம் மயங்கி நின்றன.

தேவர்களும் முனிவர்களும் தம் காரியங்கள் தடைப்படவே, என்ன ஆகியதோ? என்ன ஆபத்து சூழ்ந்ததோ? எனப் பதைபதைத்து சப்தமிட்டனர். இக்குரல் அன்னையின் திருச்செவியில் ஒலித்தது. உடன் அன்னை தன் திருக்கரங்களை இறைவன் திருக்கண்களிலிருந்து எடுத்தார். உடனே இறைவன் திருக்கண்கள் இரண்டும் ஒளிவீசின, மீண்டும் உலகம் புத்தொளிப் பெற்றது.




சிவபெருமான் தேவியை நோக்கி, நீ எமது கண்களை மூடிய நொடிப் பொழுதில், உயிர்கள் வருந்தி அறங்கள் தடைப்பட்டு பாவம் சூழ்ந்தது. அப்பாவம் நீங்க, நீ பிராயச்சித்தம் செய்தாக வேண்டும் என்றார். அதற்கு வழியையும் கூறினார். தேவி, யாம் எழுந்தருளியிருக்கும் இடத்திலாவது, நம் அடியார் சிறப்புடன் வீற்றிருக்கும் இடத்திலாவது எம்மை வழிபடுவாயாக என்று அருளச் செய்தார். இறைவன் கூறியபடி அன்னை பிராயச்சித்தம் செய்வதற்குப் புறப்பட்டார்.

அன்னை இறைவனிடம் விடைபெற்று முதலில் காசி நகரத்தை அடைந்து, விஸ்வநாதரைப் பணிந்து வழிபட்டு, பின்பு தொண்டை நாட்டில் அமைந்துள்ள காஞ்சியை அடைந்த அன்னை, காஞ்சியில் உள்ள சிவத்தலங்களை முறையாகத் தரிசித்துக் கொண்டு திருவேகம்பத்தை அடைந்தார். அங்கு ஏகாம்பர நாதரைக் கண்களால் கண்டனர். அதன் பிறகு அன்னை பிலாகாசத்தை அடைந்த 32 அறங்களைச் செய்து தவம் இயற்றி, பின்பு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார் என்பது புராண வரலாறு.




தலச்சிறப்பு :

உலக நாயகியான காமாட்சி அன்னை எழுந்து அருள் புரியும் மண்டபம் காயத்திரி மண்டபம் என அழைக்கப்படுகிறது. அம்பிகை அச்சந்நிதியில் தென்கிழக்குத் திசை நோக்கி எழுந்தருளி உள்ளார். அமர்ந்த திருக்கோலத்தில், சுகாசனயோகத் திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்பு வில் முதலான படைக் கருவிகளைக் கரங்களில் கொண்டு பக்தர்களுக்குக் காட்சி அளித்து அருள்புரிந்து கொண்டுள்ளார்.

திருமணமும் குழந்தைப்பேறும் :

காமாட்சிக்கு முன்னால் சாற்றிய மாலையை திருமணமாகாத ஆண், பெண்ணுக்கு அணிவித்தால் அவர்களுக்குத் திருமணம் கைகூடும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு நிர்மால்ய மாலை என்று பெயர்.

காஞ்சி காமாட்சி ஆலயம் சந்தான விருத்தி ஸ்தலமும்கூட. தசரதரின் குல தெய்வம் காமாட்சி என்பதால் புத்திரகாமேஷ்டி யாகத்தை இங்கு நடத்தியதன் பலனாகத்தான் ராம, லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர் பிறந்தனர் என்கிறது புராணம். சந்தான சம்பம் என்று நாபி விழுந்த இடம் உள்ளது. அதனால் இதை நாபிஸ்தலம் என்றும் கூறுவார்கள். இந்த சந்தான சம்பத்தை வணங்கிவிட்டு, அங்கு கொடுக்கப்படும் பிரசாதம் சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!