Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு-8

8

“ஆனியன் ஊத்தப்பம் நல்லாருக்கா… “

ஒரு துண்டு விண்டு வாயில் போட்டுக் கொண்டாள் எஸ்தர்.

“ஆஹா…விபாவுக்கு தான் தெரியும் …எங்கே எது நல்லாருக்கும்னு..”

வினயா அவளை பார்க்க…

“சரி..சரி,.அவனை பத்தி பேசல இனிமே..சில பேரை பிடிச்சுட்டா…அவங்களை பத்தி பேசிக்கிட்டே இருக்க தோணுது..

ஆனால் மத்தவங்களுக்கு அதுவே போரடிக்கும்நு புரியரதில்லே..”

நாம் பார்த்த அந்த பார்வை எஸ்தரை காயப் படுத்தி விட்டது என்பதை உணர்ந்த வினயா,பேச்சை மாற்ற,.

“அப்படில்லாம் ஒண்ணும் இல்லக்கா..நானும் ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி நல்ல ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டு…

நல்லா இருக்கறதில்லேனு சில வருஷமா சாப்பிடறதில்லே…ஆனால் இன்னிக்கு நல்லா இருக்கு… உங்களுக்கும் பிடிக்குமா??”

“ஆமாம் ரொம்ப பிடிக்கும்.சவுத் இந்தியன் வெஜ் ல எனக்கு பிடிச்சதே இது தான்..”

சாப்பிடும் ஐடெம் மட்டுமில்லே, நமக்கு பிடிச்ச எதுவுமே நாமே விலக்கி வெச்சாலும் ஒரு நாள் தேடி வரும்..”

“நீ திரும்ப படுத்துக்கோ…”

“விடிகாலை 3 மணிக்கு போயிடுமாம்.அது வரை கொஞ்சம் கண்ணை மூடறேன்..”என்பவளின் போன் ஒலித்தது..

” சாமுவேல் தான்.. “

என வினயாவை பார்த்து கண்ணடிச்சுட்டு போர்வைக்குள் நுழைந்து கொண்டாள் எஸ்தர் .

வினயா மேலே ஏறி உட்கார்ந்து கொண்டு,

மொபைலில் வாட்சாப், முகனூல் , இன்ஸ்டா எல்லாம் பார்த்து பிடித்ததற்கு பதில் பதிவிட்டு தூங்கலாம் என படுத்தால்

பல்லிடுக்கில் நெருடியது ஆனியன் துண்டு..

 நெடுனாட்கள் கழித்து சாப்பிட்டதால் வெங்காய ஊத்தப்ப வாசனை லேசாக வாயில் வர சாய்ந்து உட்கார்ந்து செல்லை மீண்டும் உயிர்ப்பிக்க,

ஏதோ ஒரு பத்திரிக்கையில் போன மாதங்களில் நடந்த ஐஐடி சாரங்க் நிகழ்ச்சி பற்றியும் படங்களும் வந்திருந்தது..

மீண்டும் பழைய நினைவுகள்..

******†************†*************

வினயா வை கிண்டல் செய்து தோழிகள் சிரிக்க வினயாவும், அந்த அவனும், நேரே பார்த்துக் கொள்ளவும்..

வினயாவிற்கு சட்டென வெட்கம் வந்து திரும்பி விட்டாள்..

அந்த அவன்…..இவள் காலையில் பாடிய ‘வசீகரா’வை ரசித்து பேசி விட்டு சென்றவன்.

“அட …நல்லா தான் இருக்கான்….”

“நாந்தான் அப்போ படபடப்பில் சரியா பார்க்கலை..”

“சீ..மோசம் டீ..நீங்கல்லாம் ..நான் தெரியாம சைட் அடிக்கலாம்னா , இப்படி காட்டி கொடுத்திட்டீங்களே..”

“நாங்க சிரிச்சத்துல தான் அவன் உன் மூஞ்சையே பார்த்தான்..இல்லனா உன்னையெல்லாம் அவன் கண்டுக்க மாட்டான்..”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே..அவன் என் கிட்டே காலைலயே நான் பாடின பாட்டு நல்லா இருந்துச்சுனு வந்து சொல்லிட்டு போனான்..”

“பார்றா…இவளை..”

“பாராட்டினானாம்.இப்போ இவங்க பார்த்து கிட்டாங்களாம்..ஆஹா…காதல் வந்திருச்சாம்..”

“போடி..போய் வேற எவ கிட்டயாவது ரீல் சுத்து..”

வினயாவிற்கு கொஞ்சம் அவமானம் ஆகி விட்டது போல உணர்ந்தாள்.

இப்படி, கூட இருப்பவர்களின் பேச்சுக்கள் , செயல்கள் தான் பெண்களின் மனத்தில் ஆண்களை உட்கார வைக்கும் தருணம்.

அந்த இளம் வயது ” பிரித்வி ராஜ்” இடம் போய் ஏதாவது பேசி,

இவளுகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என நினைத்தாள்…

கவுண்டரில் போய் காபி வாங்கி வருகையில், பின்னாடி டேபிளில் அவன் இல்லை..எழுந்து போய் விட்டிருந்தான்.

லேசாக ஏமாற்றத்தில் உட்காரப் போக, யாரோ அவளது இருக்கையை எடுத்து போனது தெரியாமல் பின்னால்…..

“ஏய்ய் ..ஏய்ய்..”. என்று இவளின் தோழி குரல் கொடுக்கு முன் நிலை

தடுமாறி பின்னாடி வந்த “அவனின்” மேல் காபி மொத்தமும் இருவர் மீதும் கொட்டியது..

வினயா மொத்தமாக அவன் மேல் விழுந்திருந்தாள்..

அவன் கையிலிருந்த தட்டும் வெங்காய ஊத்தப்பமும் சிதறி கீழே இருந்தது…

அவளின் உடல் மொத்தமாக ஒரு ஆண்மகனின் மேல் ..

எந்த இசை அமைப்பாளரும் ரீ ரெகர்டிங் செய்யாமலே வினயாவின் மனதில் மத்தள சத்தம் எழுந்தது .

அவனுக்கும் இது புது உணர்வு போல.., எழுந்திருக்கத்

தோன்றவில்லை…

வினயாவின் தோழிகள் இவளை தூக்கினார்கள்.

அவனுடைய கல்லூரியை சேர்ந்த ஒருத்தி அவனையும் கை பிடித்து தூக்கினாள்.

அவனை தூக்கியவளை ஏனோ வினயாவுக்கு பிடிக்காமல் போனது’ .

எல்லோர் எதிரிலும் கீழே விழுந்ததால் ஏற்பட்ட அவமானத்தை விட, அவனின் மேல் விழுந்ததால் மற்றவர்களின் பார்வையில் தென் பட்ட பொறாமைய விட ,வேறு ஏதோ ஒரு இனம் தெரியாத உணர்வு வினயாவை அப்பிக் கொண்டது..

வினயா அவனிடம் , “சாரி..கவனிக்கலை..”

“தட்ஸ் ஆல்ரைட்…”எனக்கு பசிக்குது…போய் இந்த கூட்டத்தில் ஆனியன் ஊத்தப்பம் மீண்டும் எனக்கு வாங்கி வாங்க..உங்க சாரியை ஏத்துக்கறேன்..”

சிரித்துக் கொண்டே போய் டோகன் வாங்க கியூவில் நிற்கையில்,

காதில் யாரோ கிசு கிசுக்கிறார்கள்.

“என்னடி செமயா சீன் போட்ட..” நான் போட்டோ எடுத்திட்டேன்.”

“அடிப் பாவி… அதை அழிச்சிடு..”

“அழிச்சிட்டேன்..ஆனா அதுக்கு முன்னாடி உனக்கு ஃபார்வேர்ட் பண்ணிட்டேன்…”




ஊத்தப்பம் வாங்கி வந்தாள்..அவன்  ஏற்கனவே உட்கார்ந்திருந்தான், இரண்டே சேர்கள் போட்டிருந்த டேபிளில்.

“எஞ்சாய் ” என முணு முணுத்து சென்றாள் தோழி.

“தேங்க்யூ மிஸ்…”

“என் பேர் வினயா… இந்த …..மகளிர் கல்லூரியில் விஸ்காம் ரெண்டாம் வருஷம்..”

அயாம் பாஸ்கர் ராஜ் .. பாதி பேர் பிரித்வி ராஜ் நு நெனச்சு பிரித்வினும் நிறைய பேர் ராஜ் நும் கூப்பிடுவாங்க..

நீங்க எப்படிவேணும்னாலும் கூப்பிடலாம்.”

“ஓகே..பாஸ்…நான் பாஸ் நே “கூப்பிடறேன்.

“சரி..இந்தா வினயா…

நீயும் கொஞ்சம் ஊத்தப்பம் சாப்பிடு..இங்கே ஆனியன் ஊத்தப்பம் ரொம்ப நல்லாருக்கும்.”

“அப்பா..அம்மா வெச்ச இந்த ‘வினயா’ ங்கிற பேரை எத்தனையோ பேர் கூப்பிட்ட போது ஏற்படாத ஒரு இனிமை ‘பாஸ்’ கூப்பிட்ட போது

ஏற்பட்டது போல் இருந்தது..’இது என்ன பிரமையா??? இல்லை எனக்குள் வேறு ஏதாவதா?’

“ஹலோ..என்ன ஒரு வாய் சாப்பிட்டதற்கே சொர்க்கத்துக்கு போய்ட்டா போல் இருக்கே வினயா…”

“ஆமாம் பாஸ்…. சொர்க்கத்திலே இருக்காப்பல தான் இருக்கேன்..”என்றாள் லேசான கண் செருகலுடன்.

“டைம் ஆச்சு… மதியம் போட்டியெல்லாம் ஆரம்பிச்சுடும்.

நீங்க போய் டாப்ஸ் சேஞ்ஜ் பண்ணிட்டு வாங்க.

ட்ரெஸ் கொண்டு வரலேன்னா இங்கே ஷாப்பிங் காம்பிளக்சில் சிம்பிளா டீ சர்ட் கிடைக்கும்.”

“அப்புறம் மீட் பண்ணலாம் பை” என சொல்லி விட்டு ஓட்டமாக ஓடி விட்டான்..

ஆளுயர கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்க, ‘டாப்’சில் காபி சிதறி மாடர்ன் ஆர்ட் போட்டிருந்தது.

“சே இதை கூட இத்தனை நேரம் கவனிக்காம இருந்தேனே ..”

“பாஸ்கர் பார்த்து சொன்னப்புறம் தான் எனக்கே தோணிச்சே..”

“சே..என்ன ஒரு வெட்கம் கெட்ட மனசு…அப்போ பாஸ் காபி கொட்டியிருந்த இடத்தை பார்த்திருப்பானே!!!”

‘பார்க்கட்டுமே..என் பாஸ்தானே..’ என நினத்து உடை மாற்றிக் கொள்ளும் போது தன்னையே மீண்டும் அழகு பார்த்துக் கொண்டாள்.

“என்னாடி..என்ன பேசுனான் அவன் அப்படி?.

உன் கன்னமெல்லாம் சிவந்துருக்கு …வழக்கத்தை விட அதிகமா குழி விழுது…”

வினயா ஒன்றும் சொல்லாமல் அசட்டு புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

மதியம் சில போட்டிகள்…

முடிந்து இரவில் வந்தாள் வீட்டுக்கு.

மனம் எதிலும் லயிக்க வில்லை..

‘இந்த பாஸ் எந்த பிரான்ச், எந்த வருஷம் ஒண்ணும் சொல்லலையே..போன் நம்பரும் கேட்க தோணலை..’

‘வெட்டியா யார் கிட்ட பேச்சு கொடுத்தாலும் ஒண்ணு அவங்க நம்ம நம்பரை கேப்பாங்க ..இல்லே நாம கேப்போம்..’

‘ஆனா முக்கியமான சமயத்தில்  மத்த அவயங்களுக்கு இருக்கும் சூட்சுமம் இந்த வாய்க்கு இருக்காது போல..’

‘இந்த ‘நாக்கு சனியன் ‘அந்த ஆனியன் ஊத்தப்பத்தை அப்படி சப்பு கொட்டி கொண்டு சாப்பிட்டது’ வாயையும் நாக்கையும் கடிந்து கொண்டாள்.

ஆனால் அந்த நாக்கோ..”டீ வினயா…இன்னிக்கு சாப்பிட்ட அந்த பாதி ஊத்தப்பம் உன்னாலே மறக்க முடியாமல் பண்றேன் “என அவளிடம் சவால் விட்டது..

அம்மா, இவள் பேக்கிலிருந்து வழக்கம் போல டிபன் பாக்ஸ் எடுக்கப் போக “என்னடி ட்ரெஸ்லாம் காபிக் கறை.” “லேசில் போகாது..தனியே ஊறவை..” “நாளைக்கு காபி கறை போக ஸ்பெஷல் டிடர்ஜெண்ட் பவுடர் போட்டு தோய்க்கிறேன்..”

“நீ ஒண்ண்ண்…….ணும் பண்ண வேண்டாம்.

நா…னே தோச்சுக்கறேன்.,”

அம்மா இந்த கறையை போக்கிடக் கூடாதே என்ற ஆதங்கத்தில்.

“அதுக்கு ஏண்டி எம் மேல் எரிஞ்சு விழறே..”

“பாவம், அவளுக்கு இன்னிக்கு பிரைஸ் ஏதும் கிடைச்சிருக்காது.”

“போன இடத்தில் ஒண்ணும் பிரைஸ் கிடைக்கலயாம்மா…”

“கவலைப் படாதே..

ஒண்ணு இல்லாட்டி இன்னொண்ணு பெருசா கிடைக்கும். பகவானை வேண்டிக்கோ..”

அப்பா ஆறுதல் சொல்வது போல ஏதோ சொல்லிக் கொண்டே போக,

“இன்னொண்ணு பெரிசா கிடைக்கும் “என்ற வாசகம் வினயாவை யோசிக்க வைத்தது.

வினையா ‘டாப்’சை  காபிக் கறை போகாமல் லேசாக தோய்த்துக் கொண்டு பாத் ரூமில் உலர்த்த , ஹால் டீவியில்,

“கறை நல்லது..” நு விளம்பரம் கேட்டு சிரித்துக் கொண்டே…

‘வசீகரா ‘ பாடலை விசில் அடிக்கத் துவங்கினாள்.

“பார்த்தயா….குழந்தைய கோபிச்சு கிட்டயே.”

“நான் சொன்னதை கேட்டு மனசு லேசாயிடுச்சு பார்…”

“இப்போ சந்தோஷமா சீட்டி அடிச்சுட்டிருக்கு…”

என தன் குழந்தைத் தன்மையை பாராட்டிக் கொண்டு இருந்த அப்பாவை நினத்து சிரித்துக் கொண்டாள் வினயா.

அந்தக் குழந்தைமனசால் குமரியாக மாறி சுமார் எட்டு மணி நேரம் ஆகி விட்டிருந்தது.

“நல்ல வேளை ..அவன் காபி கறை யை போக்குறேன் நு என் மேல தண்ணி வைச்சு துடைக்காம இருந்தானே..”

என நினைக்கையில்…

“இன்னும் பட என்ன இருக்குது,

ஒரு பூக்குவியலே அவன் மேல் விழுந்தது போல விழுந்தோமே…”

“பாஸ் …நல்லாதான் இருக்கு அந்த பேர்…அவன் என்ன நினைச்சு கிட்டிருப்பான்… இப்போ. ..என்னையே நினைப்பானோ..இல்லே தோழிகள் சொன்னது போல இதெல்லாம் ஆண்களுக்கு ஒரு வேளை சகஜமோ??? அதனால் தான் சாப்பிட்டதும் டக்குனு எழுந்து போயிட்டானோ???”

“சே…. டர்ட்டி கேர்ல் டீ நீ ” தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.

“சரி..நாளைக்கு அவனை தேடிப் பிடிப்போம்..நம்ம கூட இருக்கறவளுக கிட்ட கேட்டா மொத்த டீடெய்லும் வாங்கி வந்துருவாளுங்க..

என நினைத்து தூங்கினாள்.

காலையில் சீக்கிரமாக எழுந்து,

வழக்கத்தை விட அதி தீவிரமாக மேக்கப் போட்டுக் கொண்டு கிளம்புகையில திடீர் நினைவு வர காய்ந்தும் காயாமல் இருந்த டாப்சை ,லேசாக ஈரம் போக அயர்ன் செய்து கறை உட்புறமாக இருக்கும் படி மடித்து பீரேவின் கீழே வைத்தாள்.

ஆனால் அவள் மனத்தின் மேலிருந்து கீழ் வரை பாஸ்கர் ஆக்கிரமித்திருந்தான்.

———

அலார்ம் அடித்து வினயாவை நிலைக்கு கொண்டு வந்தது செல் போன் மணி மூன்று ஆகி விட்டது..

 

எழந்து பார்த்தால் ஏற்கனவே எஸ்தர் எழுந்து ரெடியாக இருந்தாள்.

எர்ணாகுளம் வந்து இறங்கி நடைமேடையில் நடக்கும் போது இன்னொரு ஏசி கம்பார்ட்மெண்டில் கதவோரம் சிகரெட் பிடித்துக் கொண்டு சதீஷ் நின்று கொண்டிருந்ததை எஸ்தரும் பார்க்க ,

ரயில் வேகமெடுக்கையில் அவனும் ,இவர்கள் இருவரையும் பார்த்தான்.-




What’s your Reaction?
+1
10
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!