Cinema Entertainment விமர்சனம்

‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ திரை விமர்சனம்

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ எனும் திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களையும் கவரும் என்ற படக் குழுவின் நம்பிக்கை வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.

ஊர்வசியின் வீட்டில் ஒரு விநாயகரின் தொன்மையான சிலை இருக்கிறது. அந்த சிலையை அவர் பூஜை அறையில் வைத்து தினமும் பூஜித்து வணங்கி வருகிறார். அவருடைய மகன் பாலு வர்கீஸ்- மாலைக்கண் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞன். இவருக்கு சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால் அதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவை. இந்தத் தருணத்தில் அவருடைய வீட்டில் இருக்கும் தொன்மையான விநாயகர் சிலையை ஒரு கும்பல் இவரிடம் விலை பேசுகிறது. முதலில் தயக்கம் காட்டும் பாலு வர்கீஸ், பிறகு தன் நண்பன் கலையரசனின் உதவியுடன் இதனை விற்று வரும் பணத்தில் வியாபாரத்தை தொடங்க திட்டமிடுகிறார். இவர்களின் திட்டம் பலித்ததா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.




தொன்மையான விநாயகர் சிலையை வைத்து கதையை எழுதினாலும் அதில் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் சுவாரசியமான திருப்பங்கள் எதுவுமின்றி கலை படைப்பு போல் மெதுவாக நகரும் திரைக்கதையால் ரசிகர்களுக்கு சோர்வு தான் உண்டாகிறது.

இரண்டாம் பாதியில் தமிழ் பேசி நடித்திருக்கும் கலையரசன் கதாபாத்திரம்.. திரையில் தோன்றிய பிறகு திரைக்கதை வேகம் பிடிக்கும் என்று நினைத்தால்… அங்கும் இயக்குநர் சோதிக்கிறார்.

சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் - விமர்சனம் | Virakesari.lk

சில நகைச்சுவைகளை குறியீடுகளின் மூலம் உணர்த்தி இருக்கிறார் இயக்குநர். ஆனால் இதனை எல்லாம் கவனித்து சிரிக்கும் அளவிற்கு பார்வையாளர்கள் தயாரில்லை. நாயகன் பாலு வர்கீஸ் பெண் பார்க்க போகும் இடத்தில் பெண்ணின் பெயர் சங்கீதா என்று இருப்பதும், இவர் உங்களை ‘சங்கி’ என்று கூப்பிடட்டுமா? என கேட்பதும், அரசியல் குசும்பு. மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதை இன்றைய இளம் பெண்கள், பெண் பார்க்க வரும் போது எடுத்துக்கொண்ட செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்ய வேண்டாம் என நாசுக்காக மறுப்பதும் இன்ட்ரஸ்டிங். காரில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலையை ஊர்வசி பார்ப்பது.. திருப்பத்தை ஏற்படுத்தினாலும், அதனை இயக்குநர் உதாசீனப்படுத்தி இருப்பது.. என்னவென்று சொல்வது…!




ஊர்வசி வழக்கம் போல் நன்றாக நடித்திருக்கிறார். அவரது கணவராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம்.. இயக்குநர் என்ன சொன்னாரோ.. அதை மட்டுமே செய்துள்ளார். இவர்களின் வாரிசாக வரும் மலையாள நடிகர் பாலு வர்கீஸ்- தமிழ் ரசிகர்களை கவர்வதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அந்த கதாபாத்திரத்திலும் இயல்பாகவும், ஷட்டிலாகவும் நடிக்கிறேன் என்ற பேரில் நடித்து, ரசிகர்களை சோதிக்கிறார்.

மலையாள திரையுலகில் சிறிய சிறிய கதாபாத்திரத்திற்கும் கூட புது முகங்களை நடிக்க வைத்து, ரசிகர்களை வியக்க வைப்பர். ஆனால் அது தமிழில் எடுபடவில்லை என்பதுதான் குறை.

ஒளிப்பதிவு வழக்கம் போல் நேர்த்தியாகவும், உயர்ந்த தரத்திலும் இருக்கிறது. பின்னணி இசை மற்றும் பாடல்களில் மலையாள வாசம் தூக்கல். ஊர்வசி, குரு சோமசுந்தரம், கலையரசன் என தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகம் நடித்திருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் படமாளிகைக்குள் சென்றால்.. ரசிகர்களின் ரத்த அழுத்தத்தை அதிகரித்து வெளியே அனுப்புகிறார்கள்.

சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் – காலாவதியான பொருள் விற்பனையகம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!