gowri panchangam Sprituality

காக்க காக்க கனகவேல் காக்க-14 (எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில்)

இந்தக் கோவில் திருவாரூர் மாவட்டம் எண்கண் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது ஒரு சிவ ஆலயம். இருந்தாலும் முருகனுக்கு என்று இந்த கோவிலில் தனிச்சிறப்பு உண்டு.திருப்புகழில் அருணகிரிநாதர் இந்த கோவிலைப் பற்றியும், இந்த கோவிலில் உள்ள முருகப்பெருமானின் சிறப்பைப் பற்றியும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எண் என்பது 8 என்ற கணக்கை குறிக்கின்றது. நான்கு தலைகளை கொண்ட பிரம்மனுக்கு எட்டு கண்கள். பிரம்மன் சிவனை நினைத்து இத்தலத்தில் வழிபட்டதால் இதற்கு எண்கண் என்ற பெயர் வந்தது.




தல வரலாறு

படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா, பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தினை மறந்துவிட்டார். அந்த சமயத்தில் முருகன் பிரம்மனிடம், பிரணவ மந்திரத்திற்கு அர்த்தத்தை கேட்க பிரம்மன் சிக்கலில் சிக்கிக்  கொண்டார். இந்த மந்திரத்தின் அர்த்தம் மறந்ததன் காரணமாக முருகனின் கோபத்திற்கு ஆளாகி விட்டார் பிரம்மன். பிரணவ மந்திரத்தின் அர்த்தம் மறந்ததற்கு தண்டனையாக பிரம்மன், முருகனால் சிறையில் அடைக்கப்பட்டார். பிரம்மனின் படைக்கும் தொழிலை முருகனே செய்து வந்தார்.




பிரம்மன் தனது படைக்கும் தொழிலை முருகனிடமிருந்து திரும்ப பெற்றுத்தருமாறு, சிவபெருமானிடம் வேண்டுதல் வைத்து, பூஜித்து வந்தார். பிரம்மனின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமான், பிரம்மன் முன்னே தோன்றினார். முருகனை  அழைத்த சிவபெருமான் படைக்கும் தொழிலை பிரம்மனிடமே தருமாறு கூறினார். ஆனால் முருகனோ, ‘பிரணவ மந்திரத்தின் சிறப்பினை அறியாத பிரம்மனிடம் படைத்தல் தொழிலை கொடுப்பது சரியல்ல’ என்று மறுத்துவிட்டார்.

சிவபெருமானுக்கு, முருகன் பிரணவ மந்திரதை உபசரித்தது போல், பிரம்மனுக்கும் முருகனே பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை உபசரிக்க வேண்டும் என்று சிவபெருமான் முருகனிடம்  கூறினார். சிவபெருமான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  முருகன் பிரணவ மந்திரத்தின் மகிமையையும், அர்த்தத்தினையும் பிரம்மனிடம் உபதேசம் செய்தார். பின்பு படைக்கும் தொழிலானது பிரம்மனிடம் அளிக்கப்பட்டது‌. பிரம்மா தனது எட்டுக் கண்களால் சிவனைப் பூஜித்ததால் இந்த தலத்திற்கு பிரம்மபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. முருகனால் இந்த உபதேசம் பிரம்மனுக்கு உபதேசிக்கப்பட்டு இத்தலத்தில் முருகன் உற்சவராக காட்சியளிக்கின்றார்.




வியாழக்கிழமை தோறும் இங்குள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி விரதம் இருந்து வழிபட்டால் குரு தோஷம் இருந்தால் நீங்கிவிடும். மாணவர்களுக்கான கல்வி தடைகளும், தோஷங்களும் இத்தலத்தில்  உள்ள குரு பகவானால் நீக்கப்படுகிறது.

 

கோயில் அமைப்பும் சிறப்பும்:

இரண்டாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இத்தலத்தில் பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு சிவபெருமான் அருள்பாலிக்கிறார், இத்தலத்து விநாயகர் நர்த்தன கணபதி என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் பெரிய நாயகி என்ற பெயரால் போற்றப்படுகிறார்.




சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். இம்மூன்று சிலைகளையும் ஒரே சிற்பி வடித்தார் என்பது தனிச்சிறப்பு. இத்தலத்தைப் போற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் இயற்றியுள்ளார்.

பலன்கள்:

கண் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம். செவ்வாய் கிழமையில் இங்குள்ள முருகனை தரிசித்து வந்தால்  உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபட்டால் பதினாறு செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இந்தத் தலத்தில் வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களுக்கு, திருமண தடை நீங்கும். குழந்தை வரம் கிடைக்கும். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

தங்கள் பிராரத்தனைகள் நிறைவேறவும், நிறைவேறிய பின்னரும் பக்தர்கள் தேன், பால், நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், தயிர், நெய், பழரசம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். மேலும், முடி காணிக்கை, காவடி எடுத்தல் நிகழ்வும் நடைபெறுகின்றன. விவசாயிகள் தங்களின் விளைச்சல் தானியங்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!