Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-2

2

ஊருக்கு வெளியே இருந்த அந்த சுடுகாட்டின் நீண்ட காம்பௌண்டு சுவரின் வெளிப்புறம் நின்று கொண்டிருந்த அந்த இருவரில் ஒருவன் லுங்கியும், கலர் பனியனும் அணிந்திருக்க, அவனுடன் நின்றிருந்த ஆள் நெஞ்சு வரை தொங்கும் கருப்பு வெள்ளை தாடியுடன், பெண்கள் அணியும் நைட்டி போன்ற நீண்ட கருப்பு அங்கியும் அணிந்திருந்தான்.  

அவன் கழுத்தில் சின்னச் சின்ன மண்டையோடுகளைக் கோர்த்தாற்போல் ஒரு மாலை.  நெற்றியில் ரத்தச் சிவப்பில் குங்குமப்பட்டை. அடர்த்தியான புருவங்களை மேல் நோக்கி முறுக்கி, பார்க்கவே அச்சம் தரும் தோற்றத்தில் இருந்தான். தோற்றம்தான் அப்படியென்றால் பெயரும் அப்படியே.  “காயாக்குருதி”

 “தாஸ்… உன்னால இதைச் செய்ய முடியுமா?… முடியாதா?… அதைச் சொல்லு முதல்ல” வெண்தாடிக்காரன் தனது கட்டைக் குரலில் மிரட்டலாய்க் கேட்க,

 “மந்திரவாதி சாமீ…. நானும் அந்தக் “குடுகுடுப்பை ராஜய்யன்”னைப் பார்க்கறதுக்காகவே தெனமும் இந்தச் சுடுகாட்டுல வந்து ராத்திரி பூராவும் உட்கார்ந்திட்டுப் போறேன்.. அவன் இங்க வர்றதேயில்லை” லுங்கிக்காரன் சொன்னான்.

“பொய் சொல்லாதே தாஸ்… அவன் இங்கிருந்துதான் ஊருக்குள்ளார குறி சொல்லப் போறான்… எனக்கு உறுதியாத் தெரியும்” 

 “என்ன சாமீ சொல்லுறீங்க… நாந்தான் இங்கியே உட்கார்ந்திட்டிருக்கேனே… என்னைத் தாண்டி அவன் எப்படி இந்தச் சுடுகாட்டுக்குள்ளார வர முடியும்… போக முடியும்?”

 “ஹும்… உனக்கு அந்தக் குடுகுடுப்பை ராஜய்யனைப் பத்தித் தெரிஞ்சது அவ்வளவுதான்!… அவன் சாதாரண ஆளில்லை!… உன் கண் எதிரிலேயே உன் பார்வையை மங்க வைத்து விட்டு நழுவி விடுவான்” தாடி மந்திரவாதி சொல்ல,

 “என்ன சாமீ… என்னால இதையெல்லாம் நம்ப முடியலை சாமி” இடவலமாய்த் தலையாட்டிச் சொன்னான் லுங்கி ஆசாமி.

 “தாஸ்… என்னோட அவசரமும்… அவஸ்தையும் புரியாம நீ பாட்டுக்கு சாதாரணமா பேசிட்டிருக்கே… அவன் கையிலிருக்கற அந்தக் குட்டிச்சாத்தானை நீ என்கிட்டக் கொண்டு வந்து குடுக்கற வரைக்கும் எனக்கு நிம்மதியே இல்லையப்பா” மந்திரவாதி காயாக்குருதி குரல் கம்மிச் சொல்ல,

 “இல்ல சாமீ… நான் தெரியாமத்தான் கேட்குறேன்… நீங்க எவ்வளவு பெரிய மந்திரவாதி… அந்தப் பயல் ஒரு சாதாரண குடுகுடுப்பைக்காரன் அவனைப் பார்த்து நீங்க ஏன் சாமி இப்படி பயந்துக்கறீங்க?”

 அதைக் கேட்டு, “ஹா….ஹா…”வென ஓங்கிச் சிரித்த மந்திரவாதி, “அப்பனே…நான் அஞ்சுவது அந்தக் குடுகுடுப்பைக்காரனுக்கல்ல… அவன் கையிலிருக்கும் குட்டிச்சாத்தானுக்கு!…அது சாதாரண குட்டிச்சாத்தான் இல்லை!…”

இடையில் புகுந்த தாஸ், “ஓ… ரொம்ப பயங்கரமான குட்டிச்சாத்தானோ?” கேட்க,

 “இல்லை… ரொம்ப நல்ல குட்டிச்சாத்தான்”

 “என்னது நல்ல குட்டிச்சாத்தானா?… அப்புறம் ஏன் அதைக் கண்டு பயப்படறீங்க?”

 “அதை வெச்சு… நல்லது மட்டும்தான் செய்ய முடியும்!… யாரையாவது கொல்லச் சொன்னா… அது கொல்லாது!… அதேமாதிரி  “எங்காவது போய் கொள்ளையடிச்சிட்டு வா”ன்னு சொன்னா… அது செய்யாது!… சாகப் போற ஒருத்தரைக் காப்பாத்தச் சொன்னா… காப்பாத்தும்!… பசியா இருக்கறவனுக்கு  “சாப்பாடு போடு”ன்னு சொன்னா போடும்”

 “ஆஹா… மந்திரவாதி சாமி… நீங்க சொல்றது… ரொம்ப வித்தியாசமான விஷயமாயிருக்கே?… எனக்குத் தெரிஞ்சு குட்டிச்சாத்தான் அப்படின்னா… அது பயங்கரமான… கொடூரமான வேலைகளை மட்டும்தான் செய்யும்… என் வாழ்க்கையிலேயே இப்பத்தான் இப்படியொரு நல்ல குட்டிச்சாத்தான் பற்றிக் கேள்விப்படறேன்!… ஆமாம்.. அது மட்டும் ஏன் அப்படி மாறிச்சு?” தாஸ் குறுக்குக் கேள்வி கேட்டான்.

 “கேரளாவுல ஒரு மலையாள மந்திரவாதி அதை உருவாக்கியிருக்கான்!… மற்ற குட்டிச்சாத்தான்களை விட இதுக்கு அதிக பலமும்… சக்தியும் இருக்கு!,,, அது மட்டும் என் கைக்கு கிடைச்சா… நான் அதை அப்படியே கெட்ட குட்டிச்சாத்தானா மாத்திடுவேன்”

 “என்ன மந்திரவாதி சாமி?… கெட்ட வேலைக செய்யுற குட்டிச்சாத்தான்க தான் நிறைய இருக்கே?.. அதுல ஒண்ணை நீங்க பிடிச்சுக்க வேண்டியதுதானே?… அதை விட்டுட்டு இதே வேணும்ன்னு ஏன் அடம்பிடிக்கறீங்க?”

 “சொன்னேனில்ல… இதுக்கு மற்ற குட்டிச்சாத்தான்களை விட பலமும் சக்தியும் அதிகம்ன்னு… இதை மட்டும் கெட்ட வேலைகளுக்கு பயன்படுத்தினா… இந்த ஊருக்கு… ஊருக்கென்ன… இந்த நாட்டுக்கே அதிபதியாயிடலாம்” சொல்லும் போதே மந்திரவாதியின் கண்களில் பேராசை ஒளி வீசியது.

மந்திரவாதியை மேலிருந்து கீழ் வரை பார்த்த தாஸ், “மந்திரவாதி சாமீ… மொதல்ல நீங்க நல்லவங்களா?… கெட்டவங்களா?… அதைச் சொல்லுங்க” கேட்டான்.

 “டேய்ய்ய்ய்ய்… பாத்தியா? கொஞ்சம் நெருங்கிப் பேசினா… என்னையே தப்பா பேசறியே” மந்திரவாதி விழிகளை உருட்டிக் கொண்டு சொல்ல,

 “சரி… சரி… விடுங்க… இப்ப நான் என்ன பண்ணனும்… அதைச் சொல்லுங்க மொதல்ல”

 “ம்ம்ம்… வர்ற சனிக்கிழமை அமாவாசை!… கண்டிப்பா அந்த குடுகுடுப்பைக்காரன் குறி சொல்லப் போவான்… அன்னிக்கு அவன் போனதும் நீ.. குட்டிச்சாத்தனை எடுத்திடு… என்ன?” மந்திரவாதி தெளிவாகச் சொல்ல,

 “ம்…”என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் தாஸ். 

*****

கணவன் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக பீரோவைத் திறந்து அதனுள்ளே இருப்பவைகளை ஆராயத் துவங்கினாள் சுமதி.

மூன்று அடுக்குகளில் தன் கணவர் குமரேசனின் முதல் மனைவியின் புடவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, “அதான் ரெண்டாவது மனைவி வந்தாச்சல்ல?… இன்னும் எதுக்கு இந்தப் புடவைகளை புதையலை பூதம் காத்த மாதிரி காத்துக்கிட்டிருக்கார்?” தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அப்போது, குமரேசனின் கனைப்பொலி கேட்க, திரும்பிப் பார்த்தாள். “என்ன சுமதி… பீரோவுல என்ன பார்த்திட்டிருக்கே?”

 “அது…வந்து… என்னோட நகைகளை இதுல வெச்சிடலாமா?ன்னு பார்த்திட்டிருக்கேன்” பொய்யைச் சொன்னாள்.

 “அய்யய்ய… உங்க வீட்டிலிருந்து உனக்கு புது பீரோ வாங்கிக் குடுத்திருக்காங்க… அதுல வைக்காம இந்த பழைய பீரோவுல ஏன் வைக்கறே?”

 அவர் அப்படியொரு கேள்வி கேட்பார், என்று எதிர்பார்க்காத சுமதி திணறினாள்.  “அது… வந்துங்க… இந்த பழைய பீரோவோட ஸ்ட்ராங் புது பீரோவுல இல்லை…” அடுத்த பொய்.

 “ம்ம்.. நீ சொல்றதும் சரிதான்!… இப்ப வர்ற பீரோவெல்லாம் சும்மா லேசான தகடுல செய்யறாங்க!.. காகிதமாட்டம் இருக்கு…” என்று சொல்லி விட்டு சுமதி வீட்டிலிருந்து வந்திருந்த அந்த பீரோ அருகே சென்று அதை ஆராய்ந்தார் குமரேசன்.

அப்போது தயக்கமாய் அந்த அறைக்குள் வந்த சரவணன், “அப்பா…. அப்பா” என்று சன்னக் குரலில் அழைக்க,

 “என்னப்பா?” என்று அன்பொழுகக் கேட்டவாறே அவனருகே சென்று குனிந்தார்.

சரவணன் அவர் காதில் எதையோ சொல்ல, “தாராளமா எடுத்துக்கோ” என்றவாறே மீண்டும் பீரோவின் அருகில் வந்து, அதனுள்ளிருந்து மஞ்சள் நிறக் காட்டன் புடவையை எடுத்துக்காட்டி, “இதுவாப்பா?” சரவணனைப் பார்த்துக் கேட்டார் குமரேசன்.

அவன் மேலும் கீழுமாய்த் தலையாட்ட, அந்த மஞ்சள் நிறப் புடவையை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தார்.

அதை வாங்கிய சிறுவன் அதன் வாசனையை முகர்ந்தவாறே அங்கிருந்து நகர்ந்து விட, அந்த நிகழ்வை முகத்தைச் சுளித்தவாறே பார்த்துக் கொண்டிருந்த சுமதி, “என்னங்க நடக்குது இங்கே?” கேட்டாள்.

 “அதுவா?” என்று கேட்டவாறே கட்டிலில் அமர்ந்த குமரேசன், “சரவணன் எப்பவுமே அவனோட அம்மா பக்கத்துல படுத்துத்தான் தூங்குவான்…. ராத்திரி நேரத்துல அவன் அயர்ந்து தூங்கிய பிறகு அவள் நகர்ந்து விட்டால் கூட ரெண்டே நிமிஷத்துல கண்ணு முழிச்சிட்டு, “அம்மா…. அம்மா”ன்னு கத்துவான்.




 

“அதெப்படி அவனுக்குத் தெரியும்?” சுமதி தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள்.

 “அதான் ஹை லைட்டே… நாம சரவணனை சின்னப்பையன்னு நெனைக்கறோம்… ஆனா அந்தச் சின்னப்பயல் கிட்டே நம்ம யாருகிட்டேயுமே இல்லாத ஒரு ஸ்பெஷல் சக்தி இருக்கு… அதை அதீத சக்தின்னு கூடச் சொல்லலாம்” சொல்லி விட்டு குமரேசன் சஸ்பென்ஸாய் நிறுத்த,

புருவங்களை நெரித்துக் கொண்டு, “அதென்ன ஸ்பெஷல் சக்தி?” கேட்டாள் சுமதி.

“நுகரும் சக்தி”

குமரேசன் அப்படிச் சொன்னதும், அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்த சுமதி, “அப்படின்னா… மோப்ப சக்தியா?… அது நாய்களுக்கு மட்டும்தானே இருக்கும்?” என்றாள்.

“ஆமாம்… ஆண்டவன் அந்த நாய்களுக்கு குடுத்திருக்கற அந்த அபூர்வ சக்தி எந்த மனுசன்கிட்டேயுமே இல்லை!… அதனால் பெரிய பெரிய குற்றங்களை இன்வெஸ்டிகேட் பண்ணும் போது… முதலில் நாயை முன்னாடி அனுப்பறாங்க!… அது குடுக்கற தடயத்தில் பல கேஸ்கள் ஈஸியா முடியுது தெரியுமா?”

 “ப்ச்…” சலித்துக் கொண்டாள் சுமதி.

 “எங்க சரவணனிடம் அந்த அபூர்வ சக்தி இருக்குது தெரியுமா?… அவன் தூங்கும் போது கட்டிப் பிடிச்சிட்டுத்தூங்கற புடவையிலிருந்து அவனோட அம்மா வாசத்தை அப்படியே சுவாசிச்சிட்டு… சந்தோஷமாய்த் தூங்குவான்” 

 “ஹய்யோ… இதெல்லாம் சைக்காலஜி ஃபீலிங்ஸ்… அவன் மனசு அம்மா நம்ம பக்கத்துல இருக்காங்க!ன்னு நெனச்சா அவன் மூக்குக்கு அம்மாவோட வாசனை தெரியும்… உண்மையிலேயே வாசனை இருக்காது அது ஒருவித மாய உணர்வு”

 “நீ சொல்றதும் உண்மைதான்… ஆனா சரவணன் விஷயத்துல அது பொய்… இப்பவே அவனுக்கு ஒரு டெஸ்ட் வெச்சு அதை நிரூபிக்கறேன் பார்க்கறியா?”

கண்களை இடுக்கிக் கொண்டு சுமதி பார்க்க,

 “ம்ம்ம்ம்… “ என்றவாறு சுற்றும் முற்றும் பார்த்த குமரேசன்,  “அது உன்னோட பேக் தானே?” என்று சுவரோரம் வைக்கப்படிருந்த ஒரு லெதர் பேக்கை காட்ட,

 “ஆமாம்”

“அதுக்குள்ளார என்ன வெச்சிருக்கே?ன்னு சரவணனுக்குத் தெரியுமா?”

 “அதெப்படித் தெரியும்?… எங்கம்மா எனக்குன்னு என்னென்னவோ போட்டுத் திணிச்சு வெச்சிருக்கு”

 “ஸோ… அதுக்குள்ளார என்ன இருக்கு?ன்னு உனக்கே தெரியாது… அப்படித்தானே?”

மேலும், கீழுமாய்த் தலையாட்டினாள் சுமதி.

 “இப்ப பாரு” என்ற குமரேசன், அறைக்கு வெளியே பார்த்து, “சரவணா… சரவணா” என்று அழைக்க,  அவன் கையில் பாட புத்தகத்தோடு வந்து நின்றான்.

 “சரவணா…வாப்பா…வந்து இங்க படுத்துக்கோ” கட்டிலில் கொஞ்சமாய் இடம் விட்டார்.

 “இல்லை… நான் படிக்கணும்”

 “அப்புறமா போய்ப் படிக்கலாம்… மொதல்ல இங்க வந்து படு”

 அதற்கு மேலும் தந்தையின் பேச்சை மீற முடியாத சரவணன் வந்து படுக்கப் போக, “சுமதி… அந்த பேக்கை எடுத்து தலைக்கு வெச்சுக்கக் குடு” என்றார்.

சுமதியின் சுவரோரமிருந்த அந்த பேக்கை எடுத்துத் தர, அதை சரவணனின் தலைக்கு தலையணையாக்கினார் குமரேசன்.

சிறிது நேரம் வேறு விஷயங்களைப் பேசி விட்டு, “சரிப்பா… நீ போய் படி” என்று குமரேசன் சொன்னதும் உடனே எழுந்து நகரப் போன சரவணனை, “சரவணா கொஞ்சம் இரு” என்று சொல்லி நிறுத்தி, “ஆமாம்… இந்த பேக்குக்குள்ளார என்னென்ன இருக்கு… சொல்லு பார்க்கலாம்” புன்னகையோடு கேட்டார்.

பொதுவாகவே தனது தந்தை அதுபோல் தன்னைச் சோதனை செய்யும் போதெல்லாம் குஷியாகிவிடும் சரவணன் அப்போதும் குஷியானான்.




 “வந்து…. வந்து…. முறுக்கு, அதிரசம், ரசகுல்லா… அப்புறம்….. ஒரு சின்ன கப்புல கொஞ்சம் நெய், அப்புறம்…. காய்கள்”

 “காய்கள்ன்னு மொத்தமா சொன்னா எப்படிப்பா?… என்னென்ன காய்கள்ன்னு சொல்லு” குமரேசன் கேட்க,

  “ஒரு முழு அரசாணிக்காய், வாழைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய்… அவ்வளவுதான்”

 “போ சுமதி… போய் அந்த பேக்கைத் திறந்து பாரு” குமரேசன் சொன்னதும்  “விருட்”டென எழுந்து போய், பேக்கைத் திறந்து உள்ளேயிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைத்தாள்.

சரவணன் சொன்ன வரிசை மாறாமல் அப்படியே இருந்தன பொருட்கள்.

வியப்பால் விழிகளை விரித்தாள் சுமதி.

“என்னமோ சொன்னே?… இப்ப என்ன சொல்றே?” புருவங்களை உயர்த்திக் கேட்டார் குமரேசன்.

 “உண்மையிலேயே ரொம்ப ஆச்சரியமாய் இருக்குங்க….” என்று வெளியில் இயல்பாய்ச் சொன்னாலும் உள்ளுக்குள்  “தாயில்லாப் பிள்ளைக்கு இப்படியொரு அபூர்வ சக்தியா?” பொறாமைப்பட்டாள்.

“சரவணா அப்படியே சித்தி பக்கத்துல போ” என்று குமரேசன் சொல்ல, தயங்கித் தயங்கிச் சென்றான்.

“சுமதி… அவன் நெத்தில ரெண்டு புருவங்களுக்கும் மத்தில என்ன தெரியுது உனக்கு?” கேட்டார்.

கூர்ந்து பார்த்த சுமதி, “ஏதோ த்ழும்பு மாதிரித் தெரியுதே!… சின்ன வயசுல அடிகிடி பட்டிடுச்சோ?” கேட்டாள்.

 “அதெல்லாம் ஒண்ணுமில்லை… அது அவன் பிறப்பிலேயே வந்தது… நல்லாப் பாரு… அது என்ன வடிவத்துல இருக்கு?”

இரு கண்களையும் இடுக்கிக் கொண்டு பார்த்த சுமதி, “அந்தக் காலத்துப் படங்கள்ல பானுமதி… சாவித்திரி… சரோஜா தேவியெல்லாம் வெச்சிருப்பாங்களே நீளவாக்குல ஒரு ஒரு பொட்டு…. தீபம் எரியற மாதிரி….”

 “கரெக்ட்… கரெக்ட்… இப்பத்தான் சரியான இடத்துக்கு வந்திருக்கே… உண்மையில் அவன் நெற்றியில் இருப்பது இயற்கையாவே அவனுக்கு அமைந்திருக்கும் ஞான தீபம்… அந்த ஞானத்துலதான் இப்ப இதை உனக்கு செஞ்சு காட்டியிருக்கான்!… உண்மையைச் சொல்லணும்னா.. அவன் தெய்வக் குழந்தைடி”

தன் மகனை அவர் புகழ்ந்து கொண்டே போக, அவளுக்குள்ளிருந்த சிறுவன் மீதான வெறுப்பும் மேலும் மேலும் அதிகரிக்கத் துவங்கியது.




What’s your Reaction?
+1
6
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!